Saturday, August 08, 2009

1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்

  • மாண்புக்கும் மதிப்பிற்கும் உரிய,

    மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே, வணக்கம்.


மலேசியத் திருநாட்டில் தங்கள் நல்லாட்சியின்கீழ் மனநிறைவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மலேசியக் குடிமக்களில் ஒருவனாக இந்த மடலைத் தங்களுக்கு மிகுந்த உள்ளன்போடு விடுக்கின்றேன்.

தாங்கள் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற நாள் தொடங்கி, நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டு வருகின்றீர்கள். அதற்காக, அடுக்கடுக்காக அருமையான செயல்திட்டங்களை அறிவித்தும் வருகின்றீர்கள். அவையனைத்தும் ஒட்டுமொத்த நாட்டின் பார்வையைத் தங்கள் பக்கம் திர்ப்பி இருக்கிறது என்றால் மிகையன்று.

குறிப்பாக, கடந்த 12ஆம் பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் வரலாறு காணாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்திருப்பதை நாடே அறிந்து வைத்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், எங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையான அனைத்தையும் கடந்த காலங்களில் இயன்றவரையில் தேசிய முன்னணி அரசு செய்திருக்கிறது என்பதை முற்றிலுமாக யாரும் மறுத்துவிட முடியாது.

அதன் தொடர்ச்சியாகத்தான், இப்போதும்கூட (தமிழ்) மக்களின் தேவைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீட்டுக்கொடுப்பதில் தாங்கள் முனைப்புக் காட்டி வருகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்றாகவே அறிந்துள்ளோம். அதற்காக, தங்களுக்குக் கரம்குவித்து மனமார்ந்த நன்றியினைச் சொல்வதற்கும் கடமைபட்டுள்ளோம்.

ஆனாலும், சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பதுபோல, தாங்கள் முன்னெடுக்கும் சில அருமையான திட்டங்களுக்கு நடுவில் சில செயற்பாடுகள் ஓரளவு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன.

அப்படிப்பட்ட பின்னடைவுகளில் ஒன்றுதான், தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் 1மலேசியா வலைப்பதிவில் (Blog 1Malaysia) தமிழுக்கு இடம் இல்லாமல் போனது. 1மலேசியா வலைப்பதிவில் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இடம் கொடுத்திருக்கும் நிலையில் எங்கள் இன்னுயிர்த் தமிழை இடம்பெறச் செய்யாமல் விட்டதைக் கண்டு மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு மிகுந்த பணிவோடு தெரிவிக்க விழைகிறேன்.

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அவர்களே,

கடந்த சில வாரங்களாகத் தமிழ் நாளேடுகளும் இனைய ஏடுகளும் இதன்தொடர்பில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தங்கள் பார்வைக்கு இப்போது வந்திருக்கும் நிலையில், விரைந்து இதற்கான தீர்வுகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. தங்கள் மீது இருக்கும் அந்த உயர்ந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் மனத்தில் கணத்தோடும் ஓர் எதிர்பார்ப்போடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

கணினி இணையத் தொழில்நுட்பத் துறையில் மற்றைய மொழிகளுக்கு நிகராக எங்கள் தமிழும் வளர்த்திருகிறது என்ற தகவலைக் கண்டிப்பாகத் தாங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இத்தனைக்கும், உலகம் முழுமைக்குமே கணினி இணையத் துறையில் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் மலேசியா இருந்திருக்கிறது என்பது நமது நாட்டுக்குப் பெருமைதரும் செய்தியாகும். நளினம், முரசு, தமிழா முதலான தமிழ் மென்பொருள்களை உலகத்திற்கே வழங்கியது நமது மலேசியாதான். இணையம் என்று இன்று உலகம் முழுமைக்கும் பயன்படுத்தப்படும் சொல்லையே கொடுத்ததும் நமது மலேசியாதான். மலேசியாவின் முன்னணி இணைய இதழான மலேசியாகினி ‘மலேசியாஇன்று’ என்ற பெயரில் அழகுதமிழில் இயங்குவதையும் எண்ணற்ற தமிழ் இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் வண்ணத்தமிழில் வளமையாக இயங்குவதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

இப்படியிருக்கும் நிலையில், தங்கள் நேரடிப் பார்வையில்; தங்கள் பொற்கரங்களின் ஆணையில் செயல்படும் 1மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கு இடமில்லாமல் போனது எங்கள் தமிழ் மக்களை ஆழந்த வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

ஆகவே, இதற்கான நல்லதொரு தீர்வைத் தாங்கள் உடனே அறிவித்தால் தமிழ் மக்கள் மனங்களில் பாலை வார்த்ததாக அமையும். 1மலேசியா வலைப்பதிவில் தமிழும் இடம்பெறுவதன் மூலம், தங்களின் உயரிய பார்வைகளும் நேரிய எண்ணங்களும் பரந்த சிந்தனைகளும் தமிழ் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்வதாக அமையும். அதுமட்டுமலாமல், தங்களின் ஆட்சி மிகவும் நடுநிலையானது – 1மலேசியா கொள்கை மிகவும் உன்னதமானது என்பதை உறுதிபடுத்துவதாக அமையும். இத்த்னைக்கும் சேர்த்து தங்களின் கடைக்கண் பார்வையைப் பெரும் ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம்.

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அவர்களே,

எங்கள் தமிழ் உங்கள் 1மலேசியா வலைப்பதிவில் விரைவில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் – உங்களையே என்றும் நம்புகின்றோம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்

2 comments:

Admin said...

நண்பரே உங்கள் தமிழ்ப் பணியினைப் பார்த்து வியக்கின்றேன். என் வலைப்பதிவுக்கு வந்து உங்களை எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு எனது நன்றிகள். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.... வாழ்த்துக்கள்...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உங்கள் தமிழ்ப் பணியைக் கண்டு மகிழ்க்கின்றேன்......உங்கள் பணி தொடரட்டும் சுப.ந ...அவர்களே...

Blog Widget by LinkWithin