Monday, December 01, 2008

தமிழமுது 5 - பசி வந்தால் பறக்கும் பத்து

"பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்பது நாம் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது கேட்கும் பழமொழி.

பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.

இந்தக் கருத்தை உணர்த்துவதுதான் "பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்ற பழமொழி.

இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
(நல்வழி பாடல் 26)

ஔவைக் கிழவி நம் கிழவி; அமிழ்தினும் இனிய சொற்கிழவி என்ற சிறப்புக்குரிய தமிழ் மூதாட்டி ஔவையார் இயற்றிய இந்த நல்வழிப் பாடலிலிருந்து பிறந்ததுதான் அந்தப் பழமொழி.

மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் என்பதை அன்றே கண்டுபிடித்து பாடிவைத்துள்ளார் நம் ஔவைப்பாட்டி.

பாடல் என்னவோ பழங்காலத்தில் எழுதப்பட்டதுதான். ஆனால், அது இந்தக் காலத்திற்கும் இனிவரும் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது.
இதுவே தமிழ், தமிழ்ப் புலவோர், தமிழ்ச் செய்யுள் ஆகியவற்றுக்கு இருக்கும் தனிச்சிறப்பாகும்

4 comments:

Anonymous said...

அருமை, பசி வந்தால் பத்தென்னெ இருப்பதெல்லாம் போய்விடும், கையில் ஒரு காசு கூட இல்லாமல் சென்னை வீதிகளில் வேலைக்காக சுற்றித்திரியும் போது மதியவேளைகளில் களுத்திலிருக்கும் டை யை கழற்றி பையில் வைத்துவிட்டு கல்லியாண சத்திரங்களில் மாப்பிளை வீட்டுக்காரர் போல் தெனாவெட்டாக சாப்பிடும் போது பத்தும் சட்டை பையில் பத்திரமாக இருக்கும். அருமை ஒளவையாருக்கும் எங்க‌ளை போல் அனுப‌வ‌ம் இருக்குமோ.!

அன்புட‌ன் பாலாஜி

sinna sayabu said...

orunaal unavai oli yendraal oliyaai, iru naalukku e`la endral e`lai-orunaalum, enno variyaai idumbai koor envayire, unnodu vaalthal arithu! (nerisai venba-Avvai) `unnodu vaalthal arithu` enbathu eettradi. oru naal unavai vida sonnal maatten engirathaam vayiru. irandu naal unavai serthu edukka sonnaal athuvum mudiyaathu enkiratham vayiru. endrume tan tunbatthai purinthu kollatha intha vairodu vaalthal miga periya thunbam endru tham anubavatthai venbaavil vaditthirukirar Avvai paati. nam tamil moothatiyin katpani tirathayum solvalatthayum enna vendru paarathuvathu! pasiyin anubavattai eppadi venbaa vadivil paadiyirukiraar.nam munnorgalin sirappai solli maalaathu! Vaalga nam Munnor pughal!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

உங்கள் சென்னை வீதி பட்டறிவை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

*****

திருத்தமிழ் அன்பர் சின்ன சயாபு,

ஔவையின் மற்றொரு பாடலை எடுத்துக்காட்டி, மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

நம் முன்னோர்களையும் அவர்களின் சொற்களையும் கேட்டு நடந்தாலே போதும்..! நாம் சிறப்புமிக்க இனமாக உயர முடியும்.

இன்றைய தலைமுறைக்குத் தமிழும் தெரிவதில்லை.. தமிழ் முன்னோர்களையும் தெரிவதில்லை..!

என்ன செயவது.. எல்லாம் நம்முடைய தவக்குறைவு..!

பழமைபேசி said...

நன்றிங்க ஐயா!

Blog Widget by LinkWithin