Saturday, December 06, 2008

நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு


"அச்சிக்கா புச்சிக்கா தண்ணித்தோம்பு
அம்மாகிட்ட சொல்லாத சின்ன பாப்பா
உன்னையும் என்னையும் பெத்தாங்க
சீனசட்டியில் போட்டு வருத்தாங்க"

இப்படி சிறுவயதில் பாடிய 'சிறுவர் பாடல்கள்' ஏராளம் ஏராளம். இளம் வயதில் பாடிப்பழகியப் பாட்டு என்பதால் இன்றும் நினைவைவிட்டு நீங்காமல் இருக்கிறது.

இதுபோன்ற பாடல்களைச் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாகவும் கூட்டமாகக் கூடி மகிழ்ச்சியாகவும் பாடுவர். இவை மனப்பாடமாக வைத்துப் பாடக்கூடியவையே தவிர ஏட்டில் எழுதிவைத்து பாடுகின்ற கவிதையன்று.

இப்படி எழுதிவைக்காத காரணத்தினாலே பல நாட்டுப்புறப் பாடல்கள் காணாமலே போய்விட்டன. இன்றைய சிறுவர்களுக்கும் இப்படியான சிறுவர் பாடல்கள் தெரிவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடல்களைச் சொல்லித் தருவதில்லை.

சிறுவர் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாக உருவாக்கப்பட்டவை என்றாலும்கூட, சந்த நயத்தாலும் எதுகை மோனையாலும் ஒரு நல்ல கவிதைக்குரிய தன்மையோடு அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், சிற்றூர் அல்லது தோட்டப்புற மண்வாசனை அந்தப் பாடல்களில் அப்படியே படிந்துநின்று பழைய வரலாற்றையும் எடுத்துக்காட்டும்.

அதோ பாரு மாப்பிள
காசு கேட்டா குடுக்கல
உட்டான் பாரு வைத்துல
உழுந்தான் பாரு சேத்துல
தூக்கி உட்டான் மேடுல
'தெரிமா காசே' சொல்லல

என்ற ஒரு சிறுவர் பாட்டில் மலேசியத் தோட்டத்தின் மணமும் மலாய்மொழியின் மணமும் மிக அழகாக வீசுகிறதே பார்த்தீர்களா?

மலாயாத் தோட்டக்காட்டில் குடியேறிய அன்றையத் தமிழர்கள் தங்களின் தமிழ் இசையோடு இந்த நாட்டின் மலாய்மொழியை இணைத்து எவ்வளவு அழகாகப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். கூடவே, அருமையான நகைச்சுவை செய்தியையும் சொல்லி இப்பாடல் அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறது.

"கைவீசம்மா கைவீசு; கடைக்குப் போகலாம் கைவீசு"
"நிலா நிலா ஓடிவா; நில்லாமல் ஓடிவா"
"காக்கா காக்கா மைகொண்ட"
"டிங் டிங் கொய்யாக்கா எங்கடா போன"
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்திச்சு"

இப்படி இறவா புகழ்கொண்ட சிறுவர்கள் பாட்டுகள் பல உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நகையைக் கானோம்
திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க் கிழமை செயிலுக்குப் போனான்
புதன் கிழமை புத்தி வந்தது
வியாழக் கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்

என்ற சிறுவர் பாடலின்வழி, கிழமைப்பெயர்களை அறிமுகப்படுத்துவதோடு நல்லதொரு நன்னெறிப் பண்பையும் புகட்டுகின்ற அழகும் திறமும் நிறைந்த நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய உண்டு.

நாட்டுப்புறச் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று 'குத்து குத்து தாம்பாளம்' என்பது. சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து கைகளைத் தரையில் வைத்து ஆடும் விளையாட்டு இது. இந்த ஆட்டத்தை ஆடும்போது பாடப்படும் ஒரு சிறுவர் பாடலை பாடிப்பார்ப்போம்.. வாருங்கள்.

குத்து குத்து தாம்பாளம்
கோடாலி தாம்பாளம்
உங்க அப்பா பேர் என்னா?
'முங்கப்பூ"
முருங்கப்பூ தின்னுபுட்டு
பாம்பு கைய எடுப்பியா
எடுக்க மாட்டியா?

எடுக்காட்டி போனா
பீச்சாங் கைய எடுத்து
தலை மேல வச்சிக்கோ...

இந்தக் 'குத்து குத்து தாம்பாளம்' பாடல் பல ஊர்களில் பல வகையாகப் பாடப்படுகிறது. அப்படி, தெரிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாமே..!

4 comments:

பழமைபேசி said...

ஆகா! மிக்க நன்றிங்க ஐயா!! இது போன்ற பாடல்களைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்!!

சித்தன் said...

இன்று நாளிதழில் உங்களுடைய சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அருமையான கதைக் கரு. வேற்று மொழி கலப்பில்லாமலேயே சிறப்பானதொரு சிறுகதையைப் படைக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் அத்தாட்சி.

வேற்று மொழியைக் கலந்தால்தான் நிதர்சனத்தை வெளிக்கொணர முடியும் என்ற சிலரின் எண்ணங்களை, தாங்கள் உடைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

அகரம் அமுதா said...

தங்களின் இக்கட்டுரையைப் படித்தவுடன் என் இளமைக்காலங்கள் நினைவிற்கு வந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் சாப்பிடுவதென்றாலும் தூங்குவதென்றாலும் அம்மா அப்பா கதையோ பாட்டோ சொன்னால்தான் செய்வோம். விளையாடுகையில் கூட சகநண்பர்களைக் கிண்டல் செய்ய பாடல்களைப் பாடிக்கொண்டேவிளையாடுவோம். ஆனால் இன்று கணினி விளையாட்டுகள் பெருகிவிட்டதால் பலஇளையர் பாடல்களை இன்றைய தமிழ் சிறார்கள் இழந்துவிட்டார்கள். சில மணித்துளிகள் என்னை என் இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள் அய்யா!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் பழமைபேசி,

இப்படிப்பட்ட செய்திகளை இதைவிட மிக மிகச் சிறப்பாக எழுதி வரும் உங்கள் பாராட்டு மகிழ்வை அளிக்கிறது. நன்றி நண்பரே!

*****

திருத்தமிழ் அன்பர் சித்தன்,

என் சிறுகதையைப் பாராட்டியமைக்கு நன்றி.

//வேற்று மொழியைக் கலந்தால்தான் நிதர்சனத்தை வெளிக்கொணர முடியும் என்ற சிலரின் எண்ணங்களை, தாங்கள் உடைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.//

கதையில் நடப்பியல்(யாதார்த்தம்) உணர்ச்சி இருக்க வேண்டுமானால், பிறமொழிக் கலப்பு தேவை என எழுத்தாளர் பலர் வாதிடுகின்றனர்.

என் கதையில்கூட நான் எழுதாத சில பிறமொழிச் சொற்கள் கலக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த நடப்பியல் கருதிதான் திருத்தியுள்ளனர்.

நல்ல தமிழில் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்..

நல்லவர்கள் நிறைந்த நல்லதமிழ் உலகம் ஒன்று உள்ளது..

என்பன போன்ற விவரங்கள் சிலருக்குத் தெரிவதில்லை..! தெரிந்தும் ஒப்புவதில்லை..!

கதையைப் பற்றிய தங்களின் பார்வையைத் தெரிவித்தால் மிக்க மகிழ்வேன்.

*****

திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,

அந்த நாட்கள் என்றுமே பசுமையானவை அல்லவா?

இன்றைய குழந்தைகளை நினைத்தால் சமயங்களில் மனம் வலிக்கிறது..!

எந்த நேரமும் படிப்பு.. கல்வி.. கணினி.. இசை வகுப்பு.. ஓவிய வகுப்பு.. பரதம்.. தற்காப்புக் கலை.. என்று துள்ளித்திரியும் பருவத்தில் சுவர்களுக்குள் சிறைப்பறவையாக வாழ்கிறார்கள்.

குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழ விடாமல்;
குழந்தைகளைத் தங்களுக்காகவே வாழவைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் தங்களை பணிவுகலந்த அன்போடு வரவேற்கிறேன்.

Blog Widget by LinkWithin