Friday, December 12, 2008

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.


நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம். நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் நாடு எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா. இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.


  • நன்றி: செந்தமிழர்

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

7 comments:

Anonymous said...

எங்க அய்யா, இதெல்லாம் மக்களுக்கு புரிய போகுது. ஆங்கிலம் மயக்கம் தான் பிசாசு போல பற்றி கொணடுள்ளதே.

நீ எத்தனையாவது படிக்கிற யாராவது கேட்டால், நான் ஆறாவது என்றாலோ அன்னை சினங்கொளவாள். சிக்ஸ்த் என்று செப்பினால் தானே மகிழ்ச்சியுறுவாள். என் பையனுக்கும் ஆங்கிலம் பேச தெரியும் என்ற பெருமை அவளுக்கு.

தமிழில் பேசுவது,தமிழ் உணர்வோடு வாழ்வது எல்லாம் நாட்டுபுறத்தானின் செயல் என்று எண்ணுவதெல்லாம் நம்மிடம் இருந்து என்று ஓழியுமோ.
தமிழிலே கல்வி பயின்று, தமிழிலே சிந்தித்தால் நாம் இன்னும் பல மடங்கு மேம்படுவோம் எனற உண்மையெல்லாம் யாருக்கும் விளங்கா வண்ணம் உள்ளதேய்ய்ய்

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் கி.அருள்,

முதல் முறையாக உங்கள் மறுமொழியைக் காண்கிறேன். மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள். உங்கள் மன உணர்வுகளை மறுமொழியாகத் தாருங்கள்.

//தமிழில் பேசுவது,தமிழ் உணர்வோடு வாழ்வது எல்லாம் நாட்டுபுறத்தானின் செயல் என்று எண்ணுவதெல்லாம் நம்மிடம் இருந்து என்று ஓழியுமோ?//

சொந்த பேசுவதும் சிந்திப்பதும் செயல்படுவதும் தாழ்வானது என்பது மிகப்பெரிய தாழ்வெண்ணம்; தன்னம்பிக்கையின்மை என்பது படித்தவர்களுக்கும் தமிழால் பிழைப்பவர்களுக்குமே புரிய மாட்டேன் என்கிறதே..!


//தமிழிலே கல்வி பயின்று, தமிழிலே சிந்தித்தால் நாம் இன்னும் பல மடங்கு மேம்படுவோம் //

மிகச் சரியான கருத்து. இதனை ஓர் பொன்மொழியாக ஒவ்வொரு தமிழனும் இதயத்தில் எழுதி வைத்துக் கொண்டால் நல்லது.

மிக்க நன்றி கி.அருள் அவர்களே.

Anonymous said...

தமிழ்நாட்டில் இது பற்றி பேசுவதற்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
செயல்படுத்தத்தான் யாரும் இல்லை.

தமிழ்நாடு அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் தாய்மொழி வழிகல்வி பற்றி எந்தவித புரிதலும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் தமிழன் மேன்மையடைய இதுபோன்று ஆக்கப்பணிகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

தாய்மொழி வழிக்கல்வியை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசாக இருந்தாலும் அது மக்களை ஏமாற்றும் அரசுதான். மக்கள் சிந்தனையற்ற அடிமைகளாக இருப்பதையே இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.

து. பவனேஸ்வரி said...

வணக்கம் ஐயா,
உங்களின் பதிவு அருமை.

//முதல் 5 வருடங்கள் குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.//

உண்மைதான். ஆனால், அந்த ஐந்து வருடங்கள் தமிழ்க்கல்விப் பயிலுவதற்கே நம்மினத்தவர்கள் மூக்கால் அழுகிறார்களே? பின்பு எங்கேயிருந்து உணர்வு வரப்போகிறது?

நா. கணேசன் said...

நண்பரே,

நிலவூர்தி என்னும் பொருள்தரும் சந்திரயான்
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
சந்திராயன் என்பது சரியல்ல.

நன்றி!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் து.பவனேஸ்வரி,

திருத்தமிழுக்கு முதன்முறையாக மறுமொழி எழுதியுள்ள தங்களுக்கு வணக்கமும் வரவேற்பும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

இனி தொடர்ந்து வருக.. கருத்துகளை மறுமொழியாகத் தருக!

//ஆனால், அந்த ஐந்து வருடங்கள் தமிழ்க்கல்விப் பயிலுவதற்கே நம்மினத்தவர்கள் மூக்கால் அழுகிறார்களே? பின்பு எங்கேயிருந்து உணர்வு வரப்போகிறது?//

இதற்கெல்லாம், தமிழன் என்ற தாழ்வு மனப்பான்மையும் தமிழின் மீது இருக்கின்ற தப்பான - தவறான புரிதலும்தான் அடிப்படைக் காரணங்கள்.

தமிழனின் தாழ்வுணர்ச்சி நீக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதால் மட்டுமே இதற்கெல்லாம் நிலையான தீர்வுகள் பிறக்கும்.

அந்தப் புனிதப் பணியை நீங்களும் உங்கள் 'கணைகள்' வழியாகவும் செய்யலாம்.

*****

திருத்தமிழ் அன்பர் நா.கணேசன்,

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இனி கண்டிப்பாகத் திருத்திக்கொள்வேன்.

உங்கள் வருகைக்கும் மறுமொழி தருகைக்கும் நன்றி.

தொடர்ந்து வருக..!

அகரம் அமுதா said...

ஆஃகா! எத்துணை அருமையான உரை! தாய்மொழிக்கல்வியன்றோ ஓர் மனிதனை ஒப்பற்றவனாக உயர்ந்தவனாக உலகம் போற்றும் தூயனாக மாற்றச் செய்யும். விஞ்ஞானி அண்ணாதுரை அவர்களுக்கென் மனமார்ந்த வணக்கங்கள்.

Blog Widget by LinkWithin