Saturday, November 08, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?


தமிழின் உலகளாவிய நிலை இருக்கட்டும். தமிழ் நாட்டளவில் அதன் நிலையும் இருக்கட்டும். நமது மலேசிய நாட்டிலேயே எத்தனை பேருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்!

தேசிய மொழியாகவோ பெரும்பான்மை இனத்தவர் மொழியாகவோ இல்லாத இந்நாட்டில்கூட தமிழ் எண்ணற்றவருக்கு என்னென்னவோ தந்து கொண்டிருக்கிதே! அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?

1.இங்கே ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது எது?

2.வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தமிழ்ப்பிரிவுகளில் பணிபுரிவோருக்குச் சோறு போட்டுக் கொண்டிருப்பது எந்த மொழி?

3.காவல்துறை, உளவுத்துறை, சட்டத்துறை, உள்துறை அமைச்சு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கெல்லாம் தமிழை முதலாக வைத்துப் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

4.பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழாலேயே பெரும் பணிகளில் அமர்ந்திருப்போர் இல்லையா?
5.தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்கள் தமிழால் வாழவில்லையா?

6.ஏன் அந்தக் காலத்து துன் சம்பந்தன் முதல் இன்றைய டத்தோஸ்ரீ சாமிவேலு வரை பலர் அமைச்சர்களாக வழிவகுத்தது அவர்கள் அறிந்த தமிழன்றோ!

7.அன்றும் இன்றும் இந்நாட்டு அரசியலில் பெயர்போட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அல்லரோ!

இவர்களுக்கெல்லாம் தமிழ் சோறுமட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறது? வாழ்வாங்கு வாழும் வையப் பெருவாழ்வையே அன்றோ தந்திருக்கிறது!

சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?

அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?

குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
2.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
3.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

  • நன்றி: உங்கள் குரல் திங்களிதழ்

5 comments:

பழமைபேசி said...

வணக்கம் ஐயா! நல்ல ஆழமான பதிவு, சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி!!

மு.வேலன் said...

தமிழ் சோறுபோட்டுகொண்டிருக்கும் மலேசிய அரசாங்க துறைகளில், அதிக மலேசிய தமிழர்கள் நன்றாக அங்கு தமிழால் சோறு சாப்பிட வேண்டும்.

Sathis Kumar said...

மலேசியத் தமிழர்கள் பலருக்கு சோறு போடுகிறது என்பதனை புட்டு புட்டு வைக்கிறது இக்கட்டுரை..

ஐயா, அண்மையில் ஒரு செய்தி படித்தேன். சீனர்கள் சீன மொழிக்கென்று மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாகப் படித்தேன்.

நம் தாய் மொழியான தமிழுக்கும் இதுபோன்று ஒரு பலகலைக்கழகம் மலேசியாவில் உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?

sinna sayabu said...

eligal kooda keeci keeci moliyai maatra villaiye-avai iraval vaange villaye.perum puliyai pola tullum unnaku moliyin maanam illaya- nee mugamillaatha pillayaa! soru podum moligalellam sontha moliyaagumaa-unakku soro mattum pothumaa.nilai maarumpothu taayai kooda maatrikkolla tondrumaa-tan maanam unakku vendumaa! moligadkellam munnai moli tamiladaa-athu unnai ookum amuthadaa! ilivene ennivittaal ilinthidum un tharamada-mella alinthidum un inamadaa!

pathma said...

சிந்தனைக்குறிய கட்டுரை.

தமிழ் சோறு போடுமா என்று கேள்வி கேட்பவருக்கு பதிலடிளாக இருக்கட்டும்.

Blog Widget by LinkWithin