Wednesday, September 17, 2008

தமிழ்ச் செம்மொழி நாள்இன்று 17.09.2008. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.

********************************************

செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.

இவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.

ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...

அன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்!

தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள்

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.


ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.

தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.

14 comments:

Sathis Kumar said...

செம்மொழி எனும் கூட்டுப் பதிவில் இணைய அன்போடு அழைக்கிறேன்..

http://semmozhi.net/

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சதீசு,

செம்மொழி பதிவைப் பார்த்துள்ளேன். நல்ல முயற்சி. தமிழுக்கு செய்யும் அரும் பணி. அப்பதிவை நிருவகிக்கும் தங்களுக்கும் மற்ற வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுகள்.

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி. என்னால் எந்த வகையில் பங்களிக்க முடியும் என தெரிவிக்கவும். இணையத்தில் இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.

Anonymous said...

செம்மொழிப் பதிப்பு மிகவும் சிறப்பு.
ஏன் எதனால் தமிழ்மொழி செம்மொழி என்பதை நண்பர்களுக்கு உணர்த்த நல்ல பதிப்பு. நன்றி. வாழ்க உங்கள் திருப்பணி.

அன்புடன்,
இனியன்,பினாங்கு.

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல தகவல்கள் ஐயா, கட்டுரையை அளித்தமைக்கு நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் இனியன்,

தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வருக! நல்ல மறுமொழிகள் தருக!

***

@திருத்தமிழ் அன்பர் விக்னேஷ்வரன்,

என்ன மறுமொழியைச் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்? செம்மொழி பற்றி தங்கள் கருத்தைப் பகிர்ந்திருக்கலாமே!

Anonymous said...

செம்மொழியைப் பற்றி மிக தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.இது போன்ற விளக்கங்கள் எனக்கு மிக மிக பயனாக இருக்கிறது.உங்களின் சேவை என்றும் தொடரட்டும்.

அன்புடன்,
ஆதிரையன்.

Anonymous said...

செம்மொழி கட்டுரை மிகவும் பயனாக இருந்தது. நன்றி.

Anonymous said...

வணக்கம் ஐயா.
நீண்ட இடைவெளிக்குப் பின் மறுமொழி எழுதுகிறேன். செம்மொழி பற்றி அதிகமாக அறிய இந்தச் செய்தி மிகவும் உதவியது. தமிழ் செம்மொழியாக அறிவித்ததால் இதுவரை என்ன நன்மைகள் ஏற்பட்டுள்ளது?

-சித்தன் சிவாசி

Sivaganapathy said...

தமிழ் செம்மொழி ஆகியதும், தமிழ் மொழி சிறப்புகளும் உலகம் அறிந்த ஒன்றே !!!
இங்கு ஒன்று மட்டும் நாம் யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மொழியானது தன் தனி சிறப்புகளை வைத்து மிளிர்வது என்பது உலகில் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு மொழியானது ஒரு சொந்த தனி அரசாங்கத்துடன் வாழ்ந்தால் ஒழிய அந்த மொழியின் பலம் என்னவென்று உலக மக்கள் மக்கள் அறிவார்கள்.

இங்கே ஆசிரியர் அவர்கள் குறிப்பட்டது போல் சீன மொழி செம்மொழியாக ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால் சமீபத்தில் அரங்கேற்றம் கண்ட ஒலிம்பிக் போட்டியின் உபசரணை நாடான சீனா தன் மொழியின் பலம் , பொருளாதாரம், கல்வி, பண்பாடு , கலாச்சாரம், ஒற்றுமை, போன்ற சிறப்பு அம்சங்களை இந்த உலகிற்கு நிருபித்து காட்டி இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு சீனர்களும் தங்களின் பெருமைகளை உலகிற்கு மறைமுகமாக நிருபித்து இருக்கிறார்கள் .

தமிழ் மொழி, செம்மொழி, பழமைவாய்ந்த மொழி, என்று கூரிகொவதில் என்ன பயன்?? இங்கே ஒன்று மட்டும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் நம் தமிழ் மொழிக்கென்று ஒரு தனி நாடு தோன்றும் வரை நம் தமிழ் மொழி உலக மக்களால் ஏற்று கொள்வதில் மிகவும் கடினம் - செம்மொழியாக இருந்தால் கூட !!!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சிவகணபதி,

தங்களின் முதல் வருகையை அன்போடு வரவேற்கிறேன். தொடர்ந்து வருக! நல்ல கருத்துகள் தருக!

தங்களின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். தனி நாடு அமையாத வரையில் உலக அரங்கில் தமிழுக்குத் தனி இடம் கிடைக்காதுதான்.

எனினும், தனி நாடோ அரசோ இல்லாத இன்றைய நிலையிலும் உலக மொழிகளுக்கு ஈடாக தமிழ் ஒவ்வொரு படியாக உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, கணினி இணைய உலகில் தமிழின் அடைவு நம்மை வியக்கச் செய்கிறது.

தமிழுக்கென தனிநாடு போராட்டம் வெற்றிபெற வேண்டும். அதற்காக, உலகத் தமிழர்கள் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

அகரம் அமுதா said...

கட்டுரையில் உரைப்பப் பட்டுள்ள அனைத்துக் கருத்துகளையும் வழிமொழிகிறேன். காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். கட்டாயம் தமிழ் அகில அரியணையில் ஏறும். வாழ்த்துகள். சிவகணபதி அய்யா உரைத்திருப்பது போல் தனிநாடு கோரிப்பெறுவதே தமிழை உலகஅரங்கில் உயர்த்தும் ஒப்பற்ற வழியாகும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,

தங்கள் வருகைக்கு நன்றி. உலகின் மிகப்பெரிய கமுக்கத்தை தமிழ் வைத்துள்ளது. கண்டிப்பாக அது ஒருநாள் வெளிப்படும் போது உலகமே தமிழை நிமிர்ந்து பார்க்கும்.

தாய்மொழி said...

நன்றி உங்கள் அழைப்பிதழுக்கு. உங்கள் கருத்துக்களை நான் ஆவலுடன் வரவேற்கிறேன், நன்றி வணக்கம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

தாய்மொழிக்கு வணக்கம்! வருக!

Blog Widget by LinkWithin