Saturday, September 27, 2008

மக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்

மக்கள் ஓசையின் ஆசிரியர் திரு.எம்.இராஜன் அவர்களுக்கு எழுதப்பட்ட இந்த மடல் இங்கே திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக வெளியிடப்படுகின்றது.

********************************
மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள்கள் பற்றி இரா.திருமாவளவன் கூறிய கருத்து தொடர்பில் என்னுடைய எண்ணங்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


முதலில், சில ஐயங்களுக்கு தெளிவு காண விழைகிறேன். அதாவது, இரா.திருமாவளவன் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் நாளிதழ்களைச் சுட்டிப் பேசிய கடுமையான பேச்சை மக்கள் ஓசை பெரிதுபடுத்தியது ஏன்?

முதல் நாள் "இரா.திருமாவளவன் பாய்ச்சல்" என்று செய்தி போட்டுவிட்டு, மறுநாள் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக அதுவும் மிகவும் எடுப்பாக "திருமாவளவனே நாவை அடக்கு" என்று மிகவும் காட்டமாகத் தலைப்பிட்டு இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியது ஏன்?

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் கருத்தை அடித்துப்போட மறுப்புச் செய்திகளை வெளியிட்டதா? அல்லது திருமாவளவன் என்ற ஒரு தமிழினத் தலைவனை அடித்து நொறுக்க செய்தி வெளியிட்டதா?

கிள்ளான் வாசகர் வட்டத் தலைவரின் அறிக்கைக்குப் பெரிய அழுத்தம் கொடுத்து வெளியிட்டு இந்தச் சிக்கலை பூதாகரமாக்கிய மக்கள் ஓசை மறுநாளே இரா.திருமாவளனின் "தமிழ் தமிழன் பற்றிப் பேசுவது என் பிறப்புக் கடமை" என்ற பதிலடியில் சுருண்டு படுத்துக்கொண்டது.

மறுநாள் மக்கள் ஓசையைத் தூக்கி நிறுத்த முயன்ற பினாங்கு மதியழகனும் தோற்றுப் போனார். கிள்ளான் நம்பியாரும், பினாங்கு மதியழகனும் இரா.திருமாவளவன் சொன்ன அடிப்படைக் கருத்தை விட்டுவிட்டு தமிழ் நாளிதழ்கள் அதைச் செய்தன இதைச் செய்தன என்று நீட்டி அளந்தவை எதுவுமே எடுபடவில்லை. காரணம், தமிழ் நாளிதழ்களின் சாதனைகள் பற்றி இரா.திருமாவளவன் கேள்வி எழுப்பவே இல்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், நம்பியார், மதியழகன் இருவருமே ஊடகங்கள் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைப் போடுகின்றன என்ற இரா.திருமாவளவனின் அடிப்படைக் குற்றச்சாட்டை வழிமொழிந்ததுள்ளது தான்.

மக்கள் ஒசையாகட்டும், நம்பியாராகட்டும், மதியழகனாகட்டும் இரா.திருமாவளவனைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, அவர் அவ்வாறு பேசியதற்கான பின்புலங்களை ஆராய்ந்திருக்க வேண்டும்; அடிப்படைகளை ஆய்ந்திருக்க வேண்டும்.

இரா.திருமாவளவன் கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் தன்னையே ஈகப்படுத்திக்கொண்ட ஒரு தமிழினப் போராளி. அவர் தமிழையும் தமிழர் நலனையும் முன்னெடுக்கும் தமிழ் நெறிக் கழகம் என்ற ஒரு இயக்கத்தின் தேசியத் தலைவர். அவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது இவ்வாறுதான் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அதனால்தான், தன்னுடைய மறுப்பறிக்கையிலும் "தெளிந்தும் தெரிந்தும்தான் அவ்வாறு பேசினேன்" என்று சொல்லியிருந்தார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் அல்லது தமிழ்ப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்களும் அல்லது தமிழ் மொழி இன உணர்வற்றவர்களும் இரா.திருமாவளவன் 'திமிர்' பிடித்தவர் என கருதலாம். ஆனால், கொள்கை உறுதியும் வினைத் தூய்மையும் வாய்மையும் உள்ள ஒரு மொழி இனத் தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இரா.திருமாவளனே சான்று.

எந்த ஒரு அச்சத்திற்கும், நயப்பிற்கும், புகழுக்கும், விளம்பர வெளிச்சத்திற்கும் அடிமையாகாமல் பொதுமக்கள் நலம்நாடி புதுக்கருத்தைத் துணிவோடு முன்வைக்கும் தலைவர்களே இந்த இனத்திற்குச் சரியான வழிகாட்டிகளாக இருக்க தகுதி உள்ளவர்கள். அந்தவகையில், இரா.திருமாவளவன் நெஞ்சுரம் கொண்ட தலைவராகவே எழுந்து நிற்கிறார்.

இதே வகையான பண்பு ஏற்கனவே பல தமிழினச் சான்றோர்களிடமும் தலைவர்களிடமும் வெளிப்பட்டிருக்கிறத்து. அவ்வளவு ஏன், அன்றைய எழுத்து இமயம் அமரர்.ஆதி.குமணனிடமும் இன்றைய எழுத்துச் சிகரம் எம்.இராஜனிடமும் பல நேரங்களில் இதே பண்பு வெளிப்பட்டிருப்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.

ஆக, தான் சார்ந்த இனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சீரழிவுகளைப் பார்த்துப் பொங்கி எழுந்த இரா.திருமாவளவன் மீது என்ன தவறு இருக்கிறது?

கண்முண்ணே நடக்கின்ற குமுகாயக் கேடுகளையும் அந்தக் கேடுகளைச் செய்துவரும் ஊடகங்களையும் உரிமையோடு கேள்வி கேட்டதில் எங்கே இருக்கிறது தவறு?

சொந்த மொழியின் சொந்த இனத்தின் நன்மைக்காகக் குரல்கொடுத்திருக்கும் இரா.திருமாவளவனைக் கண்டிப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்; தன் கண்ணையே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும்.

செய்தி ஊடகம் எப்படியும் செயல்படலாம் என்று இல்லாமல், ஓர் உறுதியான கொள்கையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஓர் இனத்தின் சிந்தனைப் போக்கை வடிவமைக்கும் பொறுப்பில் இருக்கின்ற ஊடகங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தமிழ் மொழியை; தமிழ் இனத்தை சரியான இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டிய செய்தித்தாள்கள் தொடக்கத்திலேயே குமுகாயத்தை 'காயடித்து' விடக்கூடாது.

ஊடகத்துறை என்பது வணிகத்தோடு தொடர்புடையதுதான். வணிக நோக்கம் கருதி ஒரு எல்லைக்குட்பட்ட நிலையில் சிலவற்றை வெளியிடுவதில் தவறில்லைதான். அதற்காக, அடி மடியிலே கைவைகின்ற கதையாக இரு இனத்தின் மொழியின் அடிப்படை மரபுகளில் கைவைக்கலாமா? மொழியின நலனை வணிகத்திற்காகவும் பணத்திற்காகவும் விட்டுக்கொடுக்கலாமா? சமுதாய நலனைப் பாதுகாக்கிறோம் என்று ஒரு பக்கம் கூவிக்கொண்டே மறுப்பக்கம் சமுதாயத்தின் அடித்தளங்களை ஆட்டிப்பார்க்கலாமா?

மற்றைய ஊடகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தமிழ் ஊடகங்கள் மாற நினைப்பது கடைந்தெடுத்த மடைமையாகும்; புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொள்ளும் அறியாமையாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு நிலையான மரபும், வரலாறும் உண்டு. எந்த நேரத்திலும் தமிழ் மரபுக்குக் கேடு ஏற்படாதவாறு தமிழ் ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் பெருமளவில் இருக்கின்ற குப்பை நாளிதழ்கள், வார, மாத இதழ்களுக்கு இடையில் சில நல்ல நாளிதழ், வார, மாத இதழ்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) தமிழ்மொழி, தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகளுக்கு முழுப்பக்கத்தையே ஒதுக்குகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) அடிப்பகுதியில் பக்கத்திற்குப் பக்கம் திருக்குறளைப் போடுகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) ஆங்காங்கே தமிழ், தமிழினம், தமிழ் மரபு சார்ந்த துணுக்குகளை அழகாக தருகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) நல்லதமிழ்ச் சொற்களை மிகப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) பிறமொழிச் சொற்களுக்கு நிகரான நல்லதமிழ்ச் சொற்களைப் பட்டியல் போடுன்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) குழந்தைகளுக்கான நல்லதமிழ்ப் பெயர்களை வெளியிடுகின்றன. தமிழ்நெறி, உங்கள் குரல் போன்ற இதழ்கள் நல்லதமிழையே முழுமையாகப் பயன்படுத்துகின்றன.

ஆயினும் சில செய்தித்தாள்கள் இன்னமும் இரட்டை வேடம் போட்டு நடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கண்ட குப்பைகளையும் கண்ணறாவிகளையும் நமது செய்தி ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வாசகர்களை மடையர்களாக ஆக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

"எங்களுக்கு கொலை, வெட்டுக்குத்து, கற்பழிப்புச் செய்திகள் முதல் பக்கத்திலேயே வேண்டும்" என்றும்,

"எங்களுக்கு நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் பெரிது பெரிதாக வேண்டும்" என்றும்,

"எங்களுக்குத் திரையுலக கிசு கிசு செய்திகள் அதிகமாக வேண்டும்" என்றும்

வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது வாசகர் விழா நிகழ்ச்சிகளிலோ கேட்டுக்கொண்ட ஒரு வாசகரை மக்கள் ஓசை அடையாளம் காட்ட முடியுமா?

ஆனால், இந்தக் குப்பைகள் எல்லாம் வேண்டவே வேண்டாம் என காலம் காலமாகக் கதறிக்கொண்டிருக்கும் ஆயிரம் பேரை நாம் அடையாளம் காட்ட முடியும்.

ஆகவே, சமுதாய நலன் கருதி தட்டிக் கேட்பது தவறா? குமுகாயத்தைக் கெடுக்கும் கேடுகளைக் கண்டிப்பது தவறா? காசு கொடுத்து நாளிதழ் வாங்கும் எங்களின் மனக்குமுறலைக் கொட்டுவது தவறா?

எத்தனையோ முறை எத்தனையோ பேர் முறையாக, அமைதியாக, நாசுக்காகச் சொல்லிப் பார்த்தோம். கேட்டார்களா ஊடகக்காரர்கள்? இப்போது, இரா.திருமாவளவன் ஒரே போடாகப் போட்ட பின்பு மக்கள் ஓசை அவருக்கெதிராக சீறிப் பாய்கிறது. பண்பாடாக பேச வேண்டும்; மேடை நாகரிகத்தோடு கருத்துச் சொல்ல வேண்டும் என்று புத்திமதி சொல்கிறது.

பண்பாடாக, நாகரிகமாக சொன்ன போதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆகிய கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாத என்ன? எங்களின் கேல்விகளுக்கு உறுதியான எந்தப் பதிலையும் சொல்லாம் மழுப்பிய கதையெல்லாம் மறக்கக் கூடியதா என்ன?

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக இரா.திருமாவளவன் பேச்சு அமைந்துள்ளது. செய்தி ஊடகங்களுக்கு நன்றாக உறைக்கும்படி பேசியிருக்கிறார். இருந்துங்கூட பாருங்கள், மக்கள் ஓசையைத் தவிர வேறு எந்த நாளிதழுக்கும் உறைக்கவேயில்லை. வழக்கம் போல், எருமை மேல் மழை பெய்தது போல இதைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே இருந்து விட்டனர்.

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் பேச்சுக்கு தக்க மறுமொழி கூறியிருக்க வேண்டும். அல்லது மற்ற நாளிதழ்கள் போல் மழுங்கித்தனமாக இருந்திருக்க வேண்டும். இப்படி, உணர்ச்சிகரமாக அணுகி இருக்கக் கூடாது. அறிவார்ந்த நிலையில் இரா.திருமாவளவனுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். நம்பியாரின் கண்டன அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஓசை தன்னுடைய 'தமிழ் எதிர்ப்பு' கொள்கையைப் பறைசாற்றியிருக்கக் கூடாது.

தமிழ் மொழி சார்ந்த பல சிக்கல்கள் நாட்டில் தோன்றிய போதெல்லாம் மக்கள் ஓசை தமிழுக்கு ஆதரவாக இல்லாமல் தமிழ்ப் பகைவருக்கும் தமிழைப் பழிப்பவருக்கும் ஆதரவாக இருந்துள்ளது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. தமிழ்ப் பற்றாளர்கள் இதனை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் மக்கள் ஓசை தமிழ் மக்களின் பகைமையைத் தேடிக்கொள்ளும் என்பது திண்ணம்.


இக்கண்,
சுப.நற்குணன்,
பேரா.

3 comments:

Anonymous said...

சுப.நற்குணன் ஐயா அவர்களே,

"மக்கள் ஓசை மண்ணைக் கவ்வியது" என்ற கடுஞ்சொல் உங்கள் தமிழ்த்திருவாயிலிருந்து வரலாமா..? இது தகுமா...?

தவறுகள் எங்கோ நடந்திருக்கின்றன என்பது உண்மைதான். அதனைச் சுட்டிக் காட்டுவது உங்கள் போன்றவர்களின் கடமைதான். மறுப்பதற்கில்லை. உங்கள் கடமையுணர்வினைப் பாராட்டுகின்றேன்.

இருப்பினும், மக்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் "மக்கள் ஓசையை" தாங்கள் இப்படிக் கடிந்து பேசுவதுதான் சற்று வேதனையாய் உள்ளது.

புண்பட்ட நெஞ்சங்களின் சினங்களைக் குறைப்பதற்கு நாம் அனைவரும் பாடுபடுவோம். அதனைத் தங்களால் இலகுவாக செய்ய முடியும். தங்கள் மீது எனக்கு நம்பிக்கையுண்டு.

இணைவோம்..வெல்வோம்..மகிழ்வோம்.!

அன்புடன்,
தங்களின் திருத்தமிழ்த் தோழன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங்கு, சிலாங்கூர்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சந்திரன்,

தங்களின் அன்பான வேண்டுகையை ஏற்று அந்தத் தலைப்பை நீக்கியுள்ளேன்.

தமிழ்ப் பற்றாளர்களின் மனங்களைப் புண்படச் செய்யும் சில செயல்களை மக்கள் ஓசை நீண்ட காலமாக செய்துவந்துள்ளது.

அதன் உச்சமாகத்தான் இப்போது இரா.திருமாவளவன் ஐயா மீது பாய்ந்துள்ளது.

தமிழ் மொழி இனத்தின் நலன் கருதி சொல்லப்பட்ட ஒரு சரியான செய்தியை உள்வாங்கிக்கொண்டு தக்க மாற்றங்களைச் செய்யாமல், தடித்த சொற்களால் கண்டன அறிக்கை வெளியிட்டதில் நமக்கெல்லாம் கொஞ்சம் வருத்தம் தான்.

அந்த வருத்தத்தின் விளைவுதான், இந்தக் கட்டுரை.

28.9.08 ஞாயிறு ஓசையில் 'இராஜ சபையில்' ஆசிரியர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த விளக்கத்தை அப்போதே எழுதியிருந்தால் இப்போது இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.

மற்றபடி மக்கள் ஓசையின் சில நல்ல பணிகளைப் போராட்டங்களை நாம் மறுக்கவோ மறைக்கவே முடியாது. ஆசிரியர் எம்.இராஜன் அவர்கள் மீது நமக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் அவர் எழுத்துகளின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவன் நான்.

இதனை அவரே ஓரளவு அறிந்தவர்தான். இருந்தாலும், என்னுடைய பார்வையில் அவருக்குச் சில கருத்துகளை முன்வைக்க விரும்பினேன். அவ்வளவுதானே தவிர, இதனால் எந்தவொரு பகைமையும் பூசலும் துளிகூட கிடையாது.

ஆதவன் said...

மக்கள் ஓசைக்கு எழுதிய கண்டனத்தில் சரியான கருத்துகளை அழகுற அடுக்கியிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் கண்டிப்பாக அவர்களால் சரியான பதிலைச் சொல்ல முடியாது.

"மக்கள் ஓசை அல்ல" என்று வரிசையாக அடுக்கியுள்ள வரிகள் அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

எது எப்படியோ, இறுதி வெற்றி என்பது நமது தமிழுக்குதான். தமிழின் வெற்றி திரு.இரா.திருமாவளவன் வெற்றியும் ஆகும்!

Blog Widget by LinkWithin