Thursday, September 11, 2008

மாபாவலர் பாரதியார்

இன்று 11.9.2008ஆம் நாள் மாபாவலர் பாரதியாரின் 126ஆம் ஆண்டு நினைவுநாள். அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

**********************************

கடந்த 126 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஓப்புயர்வற்ற பாவலரை.. சிந்தனையாளரை.. சீர்திருத்தவாளரை.. புரட்சியாளரைச் சுப்பிரமணிய பாரதி என்னும் பெயரில் தமிழ்நாடு இந்த உலகிற்கே உவந்து அளித்தது. 1882 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் பாரதியார்.

அப்போது, அந்தக் குழந்தை பின்னாளில் உலகமே போற்றும் மாபாவலனாக (மகாகவியாக) உருவாகும் என பெற்றாரும் உற்றாரும் மற்றாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், 39 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த அந்தத் தமிழ்ப்பாவலர் தம்முடையப் பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.

அந்தப் பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று ஒரு கருத்தைச் சொன்னதாக பலரும் பேசி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றும்,

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே" என்றும்,

"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"


என்றெல்லாம் தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாரதி பாடியிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பாரதியாரே தம்முடைய ஒரு பாடலில் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாடியிருக்கிறார் என்கின்ற கூற்று உண்மையா?

தமிழ் சேமமுற வேண்டும் தமிழ் செழித்திட வேண்டும் தமிழ் உலகமெலாம் பரவ வேண்டும் என்றெல்லாம் தமிழுக்கு உரமூட்டி தமிழருக்கு உணர்வூட்டிய பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நம்பிக்கையின்மையை கருத்தைச் சொல்லியிருப்பாரா?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற முடிவினை அறிவிக்கும் அளவுக்குப் பாரதியாருக்கு என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்? அல்லது தமிழுக்குத்தான் என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வரிகள் வருகின்ற பாடல் இதுதான்.

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!


தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!


"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை


சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."


புதிய எழுச்சி.. புதிய சாதனை.. புதிய வரலாறு படைக்க வேண்டித் தன் மக்களை; தமிழரைப் பார்த்து தமிழ்த்தாயே கேட்பதாக அமைந்த இந்தப் பாடலில்தான் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வரி வருகின்றது.

தமிழ் இறந்துபோகும்.. தமிழ் அழிந்துபோகும்.. தமிழ் செத்துப்போகும் என்ற பொருளில் பாரதியார் எழுதவே இல்லை. மாறாக, சில பேதைகள்.. சில அறிவிலிகள்.. சில மூடர்கள் "தமிழ் இனிச் சாகும்" என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் பாரதி சொல்லியிருக்கிறார்.

தமிழ் வழக்கிறந்து; வாழ்விழந்து போகும் என்று சொல்லும் சிலரைப் பார்த்து பாரதி 'பேதைகள்' என்று மிகக் கடுமையாக உரைக்கின்றாரே தவிர, பாரதி ஒருபோதும் தமிழுக்கு எதிராக நம்பிக்கையின்மையை விதைக்கவில்லை என்பது தெளிவு.

"தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று" என்று மிக உரத்தத் தொனியில் தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் மாபாவலன் பாரதி.

9 comments:

Sathis Kumar said...

உடல் தமிழுக்கு உயிர் தமிழுக்கு.. வாழ்க உங்கள் தமிழ்த் திருத்தொண்டு..

ஐயா, திருமன்றில் எனும் புதிய வலைத்தளத்தை உருவாக்கியிருப்பதாக அறிகிறேன். வாழ்த்துகள்.

அவ்வலைப்பூவில் என்னென்ன விடயங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளப் போகிறீர்கள்..?

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சதீசு,
திருமன்றில் விரைவில் வரும்!
பாருங்களேன். வருகைக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

தமிழுக்குத் தொண்டு செய்தோன்
தமிழுணர்ச்சி ஓங்க செய்தோன்
பாரதி என்னும் பெயரில்
பாத்தமிழை செழிக்கச் செய்தோன்
பாரதிதாசன் என்ற வொரு
பாவலரைப் படைத் தளித்தோன்
பாரிடை மறைந்த போதும்
புகழோடு வாழு கின்றோன்!

அன்புடன்,
இனியன்,
இரவூப்பு - பகாங்கு

VIKNESHWARAN ADAKKALAM said...

//1882 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் பாரதியார்.//

ஐயா பாரதியும் பாரதி தாசனும் பிறந்தது புதுவை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறு விளக்கம் கொடுப்பீரா?

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் விக்னேஷ்,

பாரதி எட்டயபுரத்தில் பிறந்தவர். பாரதிதாசன் புதுவைக்காரர். புதுவைக்காரருக்கும் பாரதிக்கும் ஆழமான உள்ளன்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது தமிழும் நாட்டு உணர்வும்தான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

சமிபத்தில் ஒரு திரைபட பாடல். அறிவுமதி எழுதியது என நினைக்கிறேன்.
அப்பாடலுக்கு அவர் விளக்கம் சொல்கிறார் இப்படி:

'நீ புதுவை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா' இது கவிஞர் எழுதியது.

'நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா' இது திரையில் வந்தப்பின்.

அப்போது அறிவுமதி சொன்னார் பாரதியும் பாரதிதாசனும் புதுவைகாரார்கள் என. அதனால் சிறு சந்தேகம்.

உங்கள் பதிலுக்கு நன்றி ஐயா.

ஐயா,

வீரமா முனிவரை பற்றிய குறிப்புகள் ஏதும் எழுதி இருக்கிறீர்களா? அவரை கேள்விபட்டிருக்கிறேன். மேலும் தகவல்கள் படிக்கக் கிடைத்தால் மகிழ்வேன். திருத்தமிழ் வழி செய்யுமா?

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் விக்னேஷ்,

சோசப்பு பெசுகி (Joseph Beschi) பாதிரியார் என்பார் கிறித்துவ சமயத்தைப் பரப்ப தமிழகம் வந்தவர். தமிழின் மீது ஏற்பட்ட ஆழ்ந்த பற்றுதலால் 20 ஆண்டுகள் தமிழைக் கற்றவர்; ஆய்ந்தவர். தொடக்கத்தில், தம் பெயரைத் தைரியநாதர் என மாற்றம் செய்தார். பின்னர்தான், தைரியநாதர் என்பது தமிழல்ல; அது வடமொழி என அறிந்து உடனே வீரமாமுனிவர் என நல்லதமிழில்; தனித்தமிழில் தம் பெயரை அமைத்துக்கொண்டார்.

தமிழுக்கு இவர் செய்திருக்கும் தொண்டு வரலாற்றில் பெரிதாக மதித்துப் போற்றப்படுகிறது. தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் எழுத்து முறைகளில் தக்க மாறுதல்களைச் செய்தவர். திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் பகுதிகளை இத்தாலியில் மொழிபெயர்த்தவர். தமிழில் நிறுத்தக் குறிகளை அறிமுகப்படுத்தியவரும் இவரேதான்.

இப்படி, வீரமாமுனிவரைப் பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன. தக்க நேரம் வரும்போது தமிழுக்குச் தொண்டு செய்து தமிழ்க்கூறும் நல்லுலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் "தமிழ்ப்" பெரியாரைப் பற்றி திருத்தமிழில் எழுதுவோம்.

பின் குறிப்பு:-பாரதியும் பாரதிதாசனும் புதுவையில் சந்தித்து தமிழ் உறவாடியதை வைத்து அறிவுமதி அவ்வாறு எழுதியிருக்கலாம்.

Anonymous said...

பாரதி பற்றிய கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. மெல்லத் தமிழினிச் சாகும் என்று பாரதி சொன்னதாக பலர் பேசுவதை நானும் கேட்டுள்ளேன். அதற்கு நல்ல விளக்கம் இப்போது கிடைத்து விட்டது.

உங்கள் திருமன்றில் என்ற மற்றொரு வலைப்பதிவு ஒட்டுமொத்தமாக தமிழ் உலகத்தையே அடக்கிவிட்டது போன்று உள்ளது. மிகவும் சிறப்பான முயற்சி. என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

Anonymous said...

tamil vaalga tamilar valga

Blog Widget by LinkWithin