Monday, September 15, 2008

பேரறிஞர் அண்ணா

இன்று 15.09.2008 பேரறிஞர் அண்ணா அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்தநாள். அண்ணா என்கிற அந்த மாபெரும் தமிழினத் தலைவரின் நூற்றாண்டு விழா நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.*****************************************************தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக விளங்கினார்.

தமிழ்த்தாயின் தலைமக்களுள் ஒருவரகாவும் தமிழினத்தின் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா. தமிழ் மொழி – தமிழ் இனம் – என்று சிந்தனை – சொல் – செயல் என மூவகையாலும் எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்திட்டவர் அண்ணா.அண்ணாவின் வரலாறுஅறிஞர் அண்ணா 15.09.1909ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும் பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார். 'யேல்' பல்கலைக்கழகம் இவருக்குச் 'சப்பெல்லோ சிப்' எனப்படும் உயரிய அறிஞருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968ஆம் ஆண்டில் அண்ணாவுக்கு இலக்கிய முனைவர் (Doctor of Literature) பட்டத்தை வழங்கி அணி சேர்த்தது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் அண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும் கொள்கை உரத்தாலும் 'தென்னாட்டுக் காந்தி' என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப்போட்டார்; அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக்காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.

அண்ணாவின் மலேசிய வருகை


1965ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மலேசியாவுக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்க மலேசியத் தமிழர்கள் கடலலையென திரண்டனர். மலேசியத் தமிழ் நாளிதழ்கள் அண்ணாவை வரவேற்றுச் சிறப்பு மலர்களை வெளியிட்டன. தமிழர் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்து இருந்தன. மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில் "உலகமெங்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள்" என்று அண்ணா பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாக பேரா மாநிலத்தில் ஒரு *பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.அண்ணாவின் பொன்மொழிகள்


இப்படியெல்லாம் பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-

1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு
2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை. 7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.


அண்ணாவின் மறைவு

அறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள்தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தது தமிக்கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. அப்போது மலேசியாவில் மாபெரும் இரங்கல் கூட்டங்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டது. பேரா மமநிலத்தில் நடந்த ஒரு இரங்கல் கூட்டத்தில் மலேசியப் பாவலரேறு சா.சி.சு.குறிஞ்சிக்குமரனார் இரங்கற்பா வாசித்தார். அவரால் முழுமையாகப் படிக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத அழுகையும் கண்ணீரும் அவரை கட்டிப்போட்டன. அவரைக் கண்ட கூட்டத்தினர் அனைவரும் தேம்பித் தேம்பி அழுதனர். அண்ணாவின் மறைவில் மலேசியத் தமிழரின் வாழ்வும் ஒருகணம் இருண்டு போனது.

அண்ணாவுக்கு இந்திய அரசின் அங்கீகாரம்:-

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயத்தை இந்திய நடுவண் அரசு இன்று (15.09.2008) வெளியிடுகிறது. தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. அவரது நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. அரசியல், நாடகம், சினிமா, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அரும்பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது.

*அண்ணாவின் பெயர் சூட்டப்பட்ட பாலம் படத்தை வழங்கி உதவிய திரு.க.முருகையன், பாரிட் புந்தார் அவர்களுக்கு நன்றி.

4 comments:

Unknown said...

அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க நாளில் நல்லதொரு நினைவு கூறல்..

சுப.நற்குணன்,மலேசியா. said...

பின்னூட்டம் பெரியசாமி,
வருகைக்கு நன்றி

Anonymous said...

//அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாக பேரா மாநிலத்தில் ஒரு பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.//

சுங்கை பாரி என்றழைக்கப்படும் ஆற்றை இந்தப் பாலம்தான் இணைக்கின்றது. காலம் கடந்தும் இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்தப் பாலத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போதெல்லாம் தமிழராய் பிறந்ததில் ஏதோ ஒரு பெருமிதம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் இனியவள் புனிதா,

நல்ல தகவலை நயமாகத் தந்தீர்கள். மிக்க நன்றி. சான்றோரையும் அறிஞரையும் போற்றும் பண்பாட்டை தமிழர்கள் வளர்த்துக்கொண்டால் நன்மை கிட்டும். பெரியோர்களையும் முன்னோர்களையும் மதிக்கத் தவறும் இனம் சீர்கெட்டுத்தான் போகும்.

Blog Widget by LinkWithin