Monday, May 26, 2008

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்


(26.5.2008ஆம் நாள் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் நினைவு நாள். இன்றைக்குப் 19 ஆண்டுகளுக்கு முன், 26.5.1989ஆம் நாள் இறைவனடி சேர்ந்த அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)

தமிழ் இலக்கிய வரலாற்றில் “பன்மொழிப் புலவர்” என்று சொன்னாலே போதும், அது அப்பாதுரையாரைத்தான் குறிக்கும். அவரைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘ஆராய்ச்சி அறிஞர்’ எனலாம். ஒருவகையில், தேவநேயப் பாவாணர் வழியில் தமிழ், தமிழினம் ஆகிய துறைபோகிய மாபெரும் அறிஞர். தமிழகத் திரவிட இயக்கத்தின் மிகச்சிறந்த சித்தாந்திகள் சிலருள் பன்மொழிப் புலவர் குறிப்பிடத் தக்கவர். இவரை நீக்கிவிட்டு திரவிட இயக்க வரலாற்றை எவராலும் எழுதிவிட முடியாது.

கா.அப்பாதுரையார் 24.6.1907ஆம் நாள் குமரி மாவட்டத்தில் காசிநாத பிள்ளை இலக்குமி அம்மையார் வழ்விணையர்க்கு அருஞ்செல்வமாக வந்துப் பிறந்தார். இவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளில் நிறைபுலமை கொண்டவர். தம்முடைய ஆய்வாற்றல் காரணமாக மறைமலை அடிகளாரின் நன்மதிப்பைப் பெற்றவர். பன்மொழிப் புலவர் என்ற அடைமொழிக்கு ஒப்ப பன்மொழி அய்வுகளோடு இருநூறு அரிய நூல்களை எழுதிய பேரறிஞர்.

இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் தொன்மைத் தமிழின் இனிமையையும் வரலாற்று மரபையும், மாண்பையும், தமிழ்மண்ணில் முளைத்துத் தழைத்த தமிழ்மக்களின் பண்பாட்டு உயர்வையும், தமிழர்தம் வரலாற்றுப் பரப்பையும், நாகரிக மேன்மையையும் ஆய்ந்து ஆராய்ந்து சான்றுகளோடு எழுதியுள்ளார். அதோடு, கடல்வளம், மலைவளம், காட்டுவளம், நீர்வளம், நிலவளம் ஆகியன சூழ்ந்த தமிழ் மண்ணின் வளங்களையும் சிறப்புகளையும் தம்முடைய நூல்களுள் பதிவு செய்துள்ளார்.

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் தாய்மொழியாம் தமிழ்மொழியை அழிக்கவந்த இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர். அதற்காக, தடியடியும் சிறைதண்டனையும் பெற்று தமிழுக்காகப் பல விழுப்புண்களைத் தாங்கியவர்.

அறிவுச் சுடர்விளக்காய் ஒளிவீசித் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் தொண்டாற்றிய அப்பாதுரையார்,
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”
என்று மாபாவலன் பாரதியின் பாடியதை தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டு, பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்கு மேலும் வளமூட்டினார்.

தம் எழுத்தும் எண்ணமும், பேச்சும் மூச்சும் தமிழாகவே இருந்த பன்மொழிப் புலவர், தமிழ்நெறியாம் குறள்நெறியை உலகநெறியாகவும் உயிர்நெறியாகவும் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் தமிழையும் தமிழரையும் உயர்த்திப்பிடித்து ஓயாது உழைத்து, கொள்கை குன்றா வேழமாக வாழ்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் வரலாற்றையும் அவருடைய அரிய நூல்களையும் படித்தறிந்து இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காகப் பாடாற்ற முன்வரவேண்டும்.

6 comments:

Anonymous said...

மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு தமிழ் அறிஞர்களின் நினைவுநாளில் அவர்களைப் பற்றி கட்டுரை வெளி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு தமிழனும் இக்கட்டுரையை படித்து தன் இனத்தில் தோன்றிய அறிஞர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களின் தமிழ்ப்பணி என்றும் தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.

அன்புடன்,ஆதிரையன்

Anonymous said...

மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு தமிழ் அறிஞர்களின் நினைவுநாளில் அவர்களைப் பற்றி கட்டுரை வெளி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு தமிழனும் இக்கட்டுரையை படித்து தன் இனத்தில் தோன்றிய அறிஞர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களின் தமிழ்ப்பணி என்றும் தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.

அன்புடன்,ஆதிரையன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்புள்ள ஆதிரையன் அவர்களே..

திருத்தமிழைத் தாங்கள் தொடர்ந்து படித்து வருவதும் தவறாமல் மறுமொழி எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழையடி வாழையென வந்த தமிழ்த்திருக்கூட்ட மரபினரை நாம் என்றென்றும் மறவாதிருக்க வேண்டும். அவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நமது தாய்மொழியான தமிழ் உலக உருண்டையில் காணாமல் போயிருக்கும்.

ஆகவே, நமது தமிழ் முன்னோர்களை நினைவுக்கூர வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில்தாம், திருத்தமிழில் தமிழ் சான்றோர்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்பெறுகின்றன.

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்.

அகரம் அமுதா said...

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுருக்கமாக அழகாக ஆழமாகக் கட்டுரையில் தேன்தமிழ்ச் சாறுபிழிந்துத் தந்துள்ளீர்கள். அப்பாதுரையாரைப் பற்றி நானறியாத பல செய்திகளையும் தங்கள் தட்டுரையில் இருந்துத் தெரிந்து கொண்டேன். நன்றி. அன்புடன் அகரம்.அமுதா

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,

தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். தங்கள் வலைப்பதிவில் கவிதை இலக்கணம் பற்றிய இடுகைகளுக்குத் தொடுப்புகள் கொடுக்க எண்ணியுள்ளேன். தங்களின் இசைவை எதிர்பார்க்கிறேன்.

அகரம் அமுதா said...

மன்னிக்கவும் தாமதமாகத்தான் தங்களின் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன் நிச்சயம் இணைத்துக்கொள்ளுங்கள் மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றிகளை உடைத்தாக்குகிறேன். நன்றி

Blog Widget by LinkWithin