Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

மனமார்ந்த நன்றிக்குரியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா? மேலும் படிக்க.. இங்கே சொடுக்கவும்

5 comments:

Anonymous said...

மதிப்புமிகு திருத்தமிழ் ஆசிரியர் அவர்களே வணக்கம்.

கிரந்தம் பற்றிய சிறப்பானதொரு கட்டுரை தொகுப்பை வழங்கியுள்ளீர்கள். விளக்கங்கள் அனைத்தும் தெளிவாகவும் விரிவாகவும் இருந்தது. கிரந்தம் பற்றி இனி யாரும் ஐயங்களை எழுப்பக்கூடாது.

குறிப்பாக ஆசிரியர் சமுதாயம் இந்த கிரந்த எழுத்து சம்பந்தமான மொழிச்சிக்கலை நன்றாக புரிந்து செயல்பட வேண்டும்.

அன்புடன்,
இளையவேல், சிரம்பான்

Anonymous said...

கிரந்தம் பற்றி 4 பாகக் கட்டுரை படித்தோம். மிக நன்று. தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயனாக அமையும் என கருதுகிறோம். நன்றி.

*ஒரு விரிவுரையாளர்

Anonymous said...

Kirantha ezhuthu patri nalla vilakkam kidaiththathu. Nandri.

-s.g.ganesh, bidor

Anonymous said...

கிரந்த எழுத்து பற்றி தெளிவாக அறிந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கூட இப்படி தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் கிரந்தம் வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் அதிகம்.

-->பட்டதாரி மங்கை

செல்வா said...

எத்தனை அருமையாக எழுதியுள்ளார் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது! எத்தனை அருமையாக இதனை திரு சற்குணன் பதிவு செய்துள்ளா! கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் சொல்வதை நேர்மையாக யாரும் அறிவடிப்படையில் மறுக்க இயலாதது. இக் கருத்துக்களையே நானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வந்திருக்கின்றேன். கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்கும்,திருத்தமிழ் ஆசிரியர் சற்குணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உங்கள் யாவருக்கும் தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! - செல்வா, வாட்டர்லூ, கனடா சனவரி 13, 2009.

Blog Widget by LinkWithin