Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1


(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.)

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.

பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?


கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமயச் சார்போடு வாழ்வதற்குக் கிரந்த எழுத்துத் தேவையா? (பாகம் 2-ஐத் தொடர்க..)


தொடர்பான கட்டுரை காண்க:- கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?4 comments:

Anonymous said...

தங்களின் கிரந்த எழுத்து பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கிரந்த எழுத்து பற்றி இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை. மிக்க நன்றி.

அன்புள்ள,
ஔவை
ஆசிரியர் பயிற்றகம்
குவாலா லீப்பிசு
(குவாலா லீப்பிஸ் என்று கிரந்தம் கலந்து இனி எழுத மாட்டேன்)

Anonymous said...

சிறப்பான கட்டுரை. அறிவுப்பூர்வமான நல்ல விளக்கம். தமிழ் இலக்கணம் மிக சரியாக உள்ளது. யாரும் வீண் விவாதம் செய்வது முறையற்றது. கிரந்த எழுத்து தமிழுக்கு தேவையிலை என்று உறுதியாகத் தெரிகிறது. கிரந்த எழுத்தை தவிர்த்து எழுதுவது நல்லது.
(சங்கர், பினாங்கு)

Anonymous said...

கிரந்தம் பற்றி தெளிவான விளக்கம் அறிந்து கொண்டேன். இப்படிபட்ட பயனுள்ள கட்டுரைகள் தாங்கள் மேலும் வெளியிட வேண்டும். நன்றி.வணக்கம்.

அன்புடன்;
பயிற்சி ஆசிரியர்கள் சார்பில்,
எதிர்கால தமிழ் ஆசிரியர்

Anonymous said...

வணக்கம். மேலே, இரண்டு பயிற்சி ஆசிரியர்கள் கருத்துகளைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். இன்றைய இளையத் தலைமுறை தமிழைக் கண்டுகொள்வதில்லை என்ற குறைபாடு மூத்தத் தமிழ்ப் பற்றாளர்களிடையே இருந்து வருகிறது. இதில் அழுத்தமான உண்மை இல்லாமல் இல்லை. காரணம், தமிழைவிட மலாய், ஆங்கிலம் முதலான மொழிகள் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாலும், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தமிழைவிட மலாயும் ஆங்கிலமுமே அதிகமாகப் பயன்படுவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது.

எனினும், வேண்டிய இடங்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தும் இளைஞர்களும் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக, தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களும், தமிழ் இளங்கலை, முதுகலை கற்போரும், தமிழ் கற்பிப்போரும் தமிழின்பால் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். காரணம், தமிழுக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருப்போர் இவர்கள்தாம்.

தமிழ் தொடர்ந்து காக்கப்பட, தமிழின் தூய்மை தொடர்ந்து காக்கப்பட வேண்டிய பணியில் இளைய தலைமுறை ஈடுபட வேண்டும் அல்லது ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நறகுணன்

Blog Widget by LinkWithin