Friday, November 18, 2011

இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)




4.0   இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்

இணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)  மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2)  ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
    தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
   வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4)  எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
   நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
   எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5)  மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6)  தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
   உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
   வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
    கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12)  குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
    நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது. 
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
   மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
    கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
    கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
    வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
    (update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
    செய்துகொள்ளவும் முடிகிறது. 


5.0   முடிவுரை

மொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.  

மேற்கோள்கள்

குழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.

ரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,
தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

நக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு
கண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

இளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்
கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,
பென்சில்வேனியா.

பெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.
தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr. Seetha Lakshmi. (2011). Facebook and Tamil Language in Singapore's Teacher
Education . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr.Sajap Maswan. (1998). Kelebihan Penggunaan Internet dan Laman Web dalam
Pengajaran dan Pembelajaran. Institut Perguruan Tuanku Bainun. Pulau
Pinang, Malaysia.

Collins,B. (1996). The Internet As An Educational Innovation: Lesson From
Experience With Computer Implementation. Educational Technology, 36 (6),
pg. 21- 30

@சுப.நற்குணன்

Thursday, November 17, 2011

மலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்

மலேசியாவின் தமிழறிஞர்.. தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்.. தமிழியல் பட்டயக் கல்வியை மலேசியாவில் அறிமுகப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழியல் கல்விப் பட்டதாரிகளை உருவாக்கியவர்.. தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார் (M.Lit) அவர்கள், 16.11.2011இல் இயற்கை எய்தினார். 
 
  • மலேசியாவில் தமிழைத் தமிழாகச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவர். 
    விளம்பரமே இல்லாமல் அமைதியாகத் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய பெருந்தகை.  
    திருக்குறள் நெறியில் வாழ்ந்து, இளையோர் மனங்களில் குறளியச் சிந்தனைகளை விதைத்து அரும்பணி ஆற்றியவர். 
    தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கிய தமிழ்த் தொண்டர்.
    தமிழில் பிறமொழி கலப்பதை எதிர்த்து, தமிழ் தூய்மையாக இருக்க காலமெல்லாம் பாடாற்றிய கொள்கை மறவர்.
    தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நல்லறிஞர்; நற்றமிழர்!
    தமிழ் ஆசிரியர்களையும், இல்லத்தரசிகளையும், பணி ஓய்வு பெற்றவர்களையும் தமிழியல் பட்டக் கல்வி பயிலச் செய்து பட்டதாரிகளாக்கி பெருமைபடச் செய்த பண்பாளர்; நற்றமிழ்ச் சிந்தனையாளர்.     
     அன்னாரின் மறைவு நற்றமிழர்க்குப் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற இறைமையை இறைஞ்சுவோம்!
    @சுப.நற்குணன்

Wednesday, November 09, 2011

இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 3)

<பாகம் 1
<பாகம் 2


3.0   தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணைய ஏந்துகளின் பயன்பாடு

      தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணைய உலகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவ்வகையில், தமிழ்க் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய ஏந்துகள் குறித்து கண்னோட்டமிடுவோம்.

3.1   தமிழ்க்கல்வி வலைத்தளங்கள்
      தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பல இணையத்தளங்கள் உள்ளன. தமிழை முதல்மொழியாகக் கற்பதற்கும், இரண்டாம் மொழியாகக் கற்பதற்கும் இணையத்தளங்கள் வந்துவிட்டன. அதுமட்டுமல்லாது, ஆங்கிலத்தின் வழியாகத் தமிழ் கற்றல், மலாய்மொழி வழியாகத் தமிழ் கற்றல் என உலகத்தின் பெருமொழிகள் பலவற்றின் வழியாகத் தமிழைப் படிப்பதற்குரிய சூழல்கள் உருவாகியுள்ளன. முறையாகச் செய்யப்பட்ட கலைத்திட்டங்கள், பாடங்கள் ஆகியவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க இயலாது. அதுபோல, உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ்க் கல்விக் கழகங்கள் அல்லது கல்விக் கழகத் தமிழ் இருக்கைகள் இணையம் மூலமாகத் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான வலைத்தளங்கள் சில பின்வருமாறு:-
அ) www.tamil.net
ஆ)www.tamil.org
எ) www.tamilvu.org


3.2   இணையத்தில் கலைத்திட்டம் - பாடநூல்
      தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் அரசாங்கத்தின் பார்வையில் தமிழ்மொழிக் கல்வி முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்காக, தனியான கலைத்திட்டமும் பாடநூல்களும் பயன்படுத்தப்படுகின்றன. கனடா, அசுத்திரேலியா, அமெரிக்கா முதலிய இன்னும் பிற நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி தனியார் நிறுவனங்கள் வழியாகவும் தன்னார்வ அடிப்படையிலும் கற்பிக்கப்படுகின்றது. மேற்சொன்ன அவ்வந்த நாடுகளில் பயன்படும் கலைத்திட்டமும் பாடநூல்களும் இணையத்தில் ஏற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்தப் பகிர்தலின் வழியாக, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் அறிவார்ந்த பரிமாற்றங்களும் புதிய வளர்ச்சிகளும் ஏற்பட வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.
அ) http://www.moe.gov.my/bpk


3.3   வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள்    
தமிழ் வலைத்தளங்கள் இன்று ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை கேளிக்கை, பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி, வணிகம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது. ஆயினும், தமிழ்க் கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் ஏராளமாகவே இருக்கின்றன. இவை கற்றல் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கற்றல் மூலங்களை (learning source) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது, கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி நிருவகிக்கவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
அ) www.tamilheritage.org
ஆ) www.tamil.net/projectmadhurai
இ) http://hongkongtamil.blogspot.com


3.4   கலைக்களஞ்சியம் - மின்னகராதி
ஆங்கிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைக்களஞ்சியம், மின்னகராதி போன்றவை தற்போது தமிழிலேயே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றின் வழியாக, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கற்பித்தலையும் கற்றலையும் பொருளுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். அதிகம் விலைகொடுத்து பெரிய பெரிய கலைக்களஞ்சியம், அகரமுதலி ஆகியவற்றை வாங்கிச் சேர்த்துவைக்க வேண்டிய வேலையோ அல்லது எங்கு சென்றாலும் அவற்றைச் சுமந்துசெல்ல வேண்டிய அவசியமோ இல்லை. இருக்கும் இடத்திலேயே விரல்நுனியில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அ) http://ta.wikipedia.org/தமிழ்


3.5             மின்னூலகம்
தற்போது தமிழ் மின்னூலகங்கள் இணையத்தில் நிறைய வந்துவிட்டன. இவற்றின் வழியாக ஆயிரக்கணக்கிலான நூல்கள் காணக்கிடைக்கின்றன. பழைய புதிய நூல்களோடு கிடைத்தற்கரிய தமிழ் நூல்களை மின்வடிவில், மின்நூலாகப் படிப்பதற்குரிய வாய்ப்பினை இந்த மின்னூலகங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதுமட்டுமல்லாது, பழங்கால ஓலைச்சுவடிகளையும் இணையத்தில் படிப்பதற்குரிய வாய்ப்புகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
அ) http://tamilelibrary.org/
ஆ) http://www.chennailibrary.com/index.html
இ) http://www.tamilvu.org/library/libcontnt.htm

3.6   தமிழ் ஒருங்குறி
      தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் ஒருங்குறி எழுத்துரு முறை தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகின்றது என்றால் பொய்யில்லை. தேடு பொறிகளில் (search engine) தமிழிலேயே தட்டச்சி தேடுகின்ற நிலைமை இன்று சாத்தியமாகியுள்ளது. இதனைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலிக்கு ஆக்கமான முறையில் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய விவரங்களைத் தமிழிலேயே தேடிப்பெறவும் தமிழிலேயே தொடர்புகளை மேற்கொள்ளவும் முடிகின்றது.
அ) http://www.google.com/webhp?hl=ta
ஆ) http://ezilnila.com/nila/unicode_writer.htm

3.7   அச்சு வடிவத்தை ஒலி வடிவமாக மாற்றுதல்
      இணையத்தில் தமிழ்மொழியில் நிகழ்ந்துள்ள புதிய வளர்ச்சிகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது, வரிவடிவத்தை ஒலியாக்குதல் (Text to Speech). இரண்டாவது, பேச்சொலியை வரிவடிவமாக மாற்றுதல் (Speech to Text). மூன்றாவது, பிறமொழிகளைத் தமிழுக்கும் தமிழைப் பிறமொழிகளுக்கும் தானியங்கி முறையில் மொழிபெயர்த்தல் (Translation). இவ்வாறான, புதிய வளர்ச்சிகளைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழிவகைகளைக் காண வேண்டும்.
ஆ)http://www.google.com/transliterate/Tamil


3.8   சமூக வலைத்தளங்கள்
      மின்னஞ்சல், மடற்குழு போன்றவை வழியாகவும் முகநூல், டுவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்திகள், பாடக்குறிப்புகள், பாடப்பொருள்கள், படங்கள், அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ள முடியும். இதற்கு அதிகப்படியான நேரமோ அல்லது பணமோ தேவையில்லை. குறைவான நேரத்தில் மிகக் குறைந்த செலவில் மிகப்பெரிய பலன்களை அடைய முடியும். அதுமட்டுமல்லாது, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் இணையத்தின் வாயிலாகக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது.

இ) http://mail .yahoo.com


3.9   இணையம் ஒரு பல்லூடகம்
      இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாக பரிணமித்து இருக்கின்றது. எழுத்துரு, படங்கள், அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி ஒளி சேர்க்கைகள், இணைய உரையாடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல, எளிமையாகப் பயன்படுத்தக்கூடியவை. இவ்வாறு பல்லூடகமாகச் செயல்படும் இணையத்தில் உள்ளவற்றை கணினியில் சேமித்து வைத்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. அதேபோல், நம்மிடம் உள்ளவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் உள்ள கணினிப் பயனாளர்களோடு பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. இப்படியான, அரிய வாய்ப்பினைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய ஆற்றலும் திறமும் ஆகும்.
ஆ)  www.tamilradios.com
இ) http://www.4shared.com
ஊ)http://www.skype.com

@சுப.நற்குணன்

Thursday, November 03, 2011

ஏழாம் அறிவு:- மலேசியத் தமிழன் பார்வையில்...


*வரலாற்றில் அழிந்த தமிழர்களுக்கும்; அழியாத தமிழுக்கும் சமர்ப்பணமாக வந்திருக்கும் நல்லதொரு படம் ஏழாம் அறிவு.


*வரலாற்றில் திறக்கப்படாத பக்கங்களை இன்றைய திரைப்படச் சுவையுடன் கலந்து பரிமாறப்பட்டிருக்கும் படம் ஏழாம் அறிவு.

*இப்படியொரு படம் வந்திருப்பது திரைப்பட வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று சொல்லும் அளவுக்குத் தனித்தன்மையோடு வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழின் பெருமைகளைத் தொட்டுக்காட்டி; தமிழரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டி தமிழர்களின் மரபணுவைத்(டி.என்.ஏ) தட்டியெழுப்ப முடியுமா? என முயன்று பார்த்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழை வைத்து வணிகம் செய்ய முடியும்; தமிழரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பணம் பண்ண முடியும் என்கிற ‘வணிக நுட்பம்’ வாசமடித்தாலும், தமிழுக்கும் பொருளியல் மதிப்பு உண்டு எனப் பெருமைபடுகிற அளவுக்கு அமைந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*வரலாறு தெரியாத இனம் எப்படி அழிந்துபோகும்; போகின்ற ஊரிலும் நாட்டிலும் எப்படியெல்லாம் அடிபடும் - அல்லல்படும் - குண்டுபட்டுச் சாகும் என்பதைச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் படம் ஏழாம் அறிவு.

*ஆறாம் அறிவை இழந்துவிட்டு ஐந்தறிவு உயிரிபோல உலகம் முழுவதும் சிதறி சீன்னப்பின்னப்பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு “இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே..!” என்று எழுச்சியூட்டும் படம் ஏழாம் அறிவு

*“கழுத்தோடு ஒரு ஆயுதத்தை தினம் களத்தினில் சுமக்கிறோம்” என்று தமிழன் வீரத்திற்கு வணக்கம் செய்ய வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி!

தமிழ் உணர்வு, தமிழினப் பற்று என்ற அடிப்படைக் கருவை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்; அதற்குப் போதிதர்மன் என்னும் தொன்மக் குறியீட்டை எடுத்து திரைக்கதை பண்ணியிருக்கிறார்; திரைப்பட வரலாற்றில் மாறுபட்ட ப(பா)டத்தைக் கொடுத்து பின்னியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசு. இதற்காகவே இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவிக்கலாம்.



இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமா? இந்தப் படத்தைப் பற்றி இணையத்தில் எழுதப்பட்ட ‘விமர்சனங்கள்’ தாம்.

படத்தில் பாராட்டத்தக்க விடயங்கள் நிறையவே இருக்கின்றன. மாறுபட்ட கதையமைப்பில்  பார்பவரைக் கவரும் வகையில் படம் இருக்கின்றது. வியக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி, ‘சினிமா மசாலா’ கூட்டணி; அறிவியல், டி.என்.ஏ, ஆராய்ச்சி, நோக்கு வர்மம் போன்ற அதிரடி;  கூடவே தமிழனைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் 'நெத்தியடி' ஆகியவைப் பாராட்டும் படியாக இருக்கின்றன. ஆனாலும், இப்படத்தைப் பற்றி இதுவரை வந்த ‘விமர்சனங்கள்’ இவற்றை விரிவாக எடுத்துச் சொல்லிப் பாராட்டவில்லை.



நான் பார்த்தவற்றில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்து விமர்சனங்களுமே இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்டுள்ளன. என்றாலும்கூட, இதற்கான காரணம் மிக எளிமையான ஒன்றுதான். இந்தப் படம் தமிழனின் பெருமை பற்றி பேசுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

படத்தில் திரைக்கதை சரியில்லை.. படத்தொகுப்பு கண்ணைக் கட்டுகிறது.. இசை காதைப் புண்ணாக்குகிறது.. பாடல் பாடாய் படுத்துகிறது.. போதிதர்மன் கதை பொய்க்கதை.. படத்தில் பல இடங்களில் ஏரணம்(Logic) இடிக்கிறது.. என்றெல்லாம் பண்ணிப்பண்ணி எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமா போதிதர்மன் தமிழனே அல்லன் என்று வரலாற்று ஆய்வுகளை எல்லாம் பக்கம் பக்கமாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.



இந்தப் படத்தைப் பார்த்த வயிற்றெரிச்சலில் பலர் ‘விமர்சன’ வாந்தி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தைப் பற்றி யாருக்கும் எந்தவித நல்ல எண்ணமும் எதிர்பார்ப்பும் வந்துவிடக் கூடாது என்ற அவர்களின் கயமைத்தனம் நன்றாகவே தெரிகிறது.



போதாக் குறையாக, தமிழை மறந்து திரியும் தமிழர்க்கும்; தமிழை மறைத்து  திரியும் தமிழரல்லாதாருக்கும்; தமிழை விட ஆங்கிலத்தைத் தலையில் வைத்து கொண்டாடும் எல்லாருக்கும் இந்தப் படம் வயிற்றில் புளியைக் கரைக்கும்படியாக; முகத்துக்கு நேராகக் கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக; வாங்கு வாங்கென்று வாங்கும்படியாக இருக்கிறது என்பது இன்னொரு அப்பட்டமான உண்மை.



“800 ஆண்டுக்கு முன் வந்த ஆங்கிலத்தைவிட 20,000 ஆண்டுக்கு முன்னால் தோன்றிய தமிழ் பெரியது”


“நீயும் கிராமத்தான் தானே. செருமனிக்குப் போயிட்டா நீ பெரிய ஆளா?”


“பக்கத்து நாட்டுல தமிழனை அழிக்க ஒன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய துரோகம்”


“இந்தியன்னா உலகத்துல மதிக்க மாட்றானுங்க; தமிழன்னா இந்தியாவுல மதிக்க மாட்றானுங்க”


“தமிழ் மருத்துவத்தையும் தமிழர் வரலாற்றையும் உலகம் இன்னும் பார்க்காமல் இருக்கிறது”

“இன்றைய அறிவியல் உலகத்தில் கண்டுபிடிக்கப்படும் பல உண்மைகளைத் தமிழர்கள் முன்பே கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள்”



இப்படியெல்லாம் வருகின்ற உரையாடல்கள் மேலே சொன்ன ஆட்களுக்குக் குத்தலாகவும் மண்டைக் குடைச்சலாகவும் கண்டிப்பாக இருந்திருக்கும். 

ஆகவேதான், சொல்லி வைத்ததுபோல பலரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் உள்குத்து குத்தி இருக்கிறார்கள். தமிழன் வரலாற்றில் இப்படிப்பட்ட இருட்டடிப்புகளும்.. மறைப்புகளும்.. சிதைவுகளும்.. சொதப்பல்களும் வழக்கமான ஒன்றுதான் என்பதற்கு  இந்த விமர்சனங்களே நல்ல சான்று.



எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் பார்வை.. அவர்களின் உரிமை என்று விட்டுவிட வேண்டும்; மதிக்க வேண்டும்!

தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் என்ன? ஏரணப் பிழைகள் இருந்தால் என்ன? படத்தொகுப்பு வெட்டி வெட்டி ஓடினால் என்ன? கதையமைப்பில் / திரைக்கதையில் குறைபாடுகள் இருந்தால் என்ன? திரைப்பட விதிகளோ அல்லது நாட்டுச் சட்டமோ மீறப்பட்டிருந்தாலும் அதற்கென்ன..?

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு 'தமிழனைச் சொன்ன காரணத்திற்காக.. தமிழன் வரலாற்றைச் சொன்ன காரணத்திற்காக.. இரண்டரை மணி நேரத்திற்குத் ''தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று மார்தட்ட வைத்த காரணத்திற்காக இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம்!



ஏழாம் அறிவு திரைப்படம் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டிருக்கும் அதே வேளையில், வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் வரும் எல்லாமும் இருக்கின்றன. தமிழனைப் பற்றி தமிழ் இளையோர்களுக்குச் சொல்லுவதற்கு இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இந்த உத்திமுறையைப் பாராட்டலாம்.

நகைச்சுவை:-தனியாக இல்லாமல் படத்தோடு   ஒன்றி வந்திருக்கிறது. பத்துப் பதினைந்து பேரை அடித்து வீழ்த்தும் கதைநாயகன் ‘கேனைத்தனமாக’ கோணங்கி வித்தையெல்லாம் காட்டி சிரிக்க வைக்கும் காட்சிகள் இதில் இல்லாமால் இருப்பது வரவேற்கக்கூடியது.



இசை:- அரிசு செயராசு இசை நன்றாகவே இருக்கிறது. சீன இசையைத் தமிழ்நடை கலந்து கொடுத்திருக்கிறார். இறுதிச் சண்டைக் காட்சியில் ‘மாரியாத்தா’ இசை கவர்கிறது.



பாடல்:- ‘முன் அந்திச் சாரல் நீ’ பாட்டு காதுக்கு இனிமை. ‘இன்னும் என்ன தோழா’ பாடல் தமிழர் நெஞ்சங்களுக்கு வலிமை.



காதல்:- இதற்காகவே பாதிப் படத்தை இழுத்து வீணடிக்காமல் ஒரே காட்சியில் சுருதி ஆசனின் தொடுதிரைக் கைப்பேசியில்  சொல்லி முடிந்துவிடுகிறது.



சூர்யா:- போதிதர்மன் வேடத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். அரவிந்தாக வந்து இயல்பான நடிப்பால் கலக்கியிருக்கிறார். இவருடைய கண்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முடியும்போது சூர்யா நம்முடைய மனத்தில் மறைந்துபோகிறார்; அந்த இடத்தில் போதிதர்மன் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.



சுருதி ஆசன்:- முதல்படம் என்றாலும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நல்ல குரல்வளம். இவரின் மிடுக்கான பேச்சு கவர்கிறது. டி.என்.ஏ. ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தில் இவர் பேசும் உரையாடல் அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெறுகின்றது. ‘முன் அந்திச் சாரல்’ பாடல் காட்சியில் மாலை வெயில் போல அழகாக வருகின்றார்.



டொன் லீ:- அரவிந்தனையும் சுபாவையும் விரட்டி விரட்டிக் கொல்லப் பார்க்கும் பயங்கரம். எதிரில் வரும் எல்லாரையும் ‘நோக்கு வர்மம்’ (Hypnotism) மூலமாக வசியப்படுத்தி நாராசமாகக் கொன்று குவிக்கிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கொலையும்  கொடூரமும் தான்.

கதைக்காகச் எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம்!

பாடல்களுக்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

தொழில்நுட்பத்திற்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களைப் பார்த்திருப்போம்! ஏன்?

கவர்ச்சிக்காகவும்.. காம உணர்ச்சிக்காகவும்.. ‘ஆபாசத்திற்காவும்’ கூட சிலர் சில படங்களைப் போய்ப் பார்த்திருப்போம்!!



ஆனால், தமிழுக்காக, தமிழின உணர்வுக்காக, தமிழன் வரலாற்றுக்காக இந்த ‘ஏழாம் அறிவு’ படத்தை ஒரு முறை அல்ல.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திரையரங்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கலாம்..! பார்க்க வேண்டும்!



இதுபோன்ற படத்தை வெற்றிப்படைப்பாக ஆக்க வேண்டும். வசூல் சாதனைப் படமாக ஆக்க வேண்டும். இதுவொரு மொக்கைப் படம் என்று தமிழ்நாட்டுக்காரர்கள் முத்திரை குத்தினாலும், நம் மலேசியா போன்ற அயலகத் தமிழர்கள் இதனை வெற்றிப்படமாக மாற்றிக்காட்டி முத்திரைப் பதிக்க வேண்டும். 

வரலாற்றில் தமிழன் எங்கெல்லாம் வீழ்ந்தான்; தமிழன் வரலாறு எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது; தமிழினம் எவ்வாறு நசுக்கப்படுகிறது; தமிழன் மீண்டும் உயிர்த்தெழ என்ன செய்யலாம்; அந்த முயற்சியை எங்கிருந்து எப்படி தொடங்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் படத்தில் வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


அதுமட்டுமல்ல, படத்தின் ஓர் இடத்தில் ஒற்றை வரி உரையாடலில் மலேசியத் தமிழர்களின் 'நவம்பர் 25' வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு நாம் பாராட்டுச் சொல்லத்தான் வேண்டும்.



எனவே, படத்தை இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று படத்தைக் பார்க்கச் செய்யுங்கள்.



தமிழகத்தில் மனிதனாகப் பிறந்து பின்னாளில் சீனா, சப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய அயலக மக்களுக்கு மருத்துவம் கற்பித்து - தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து இறுதியில் தெய்வமாகவே ஆகிவிட்ட ‘போதிதர்மன்  ஒரு தமிழன்’ என்று திரையில் சொல்லும்போது தரையில் எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வைக்கும்; நெற்றிப் புருவங்களை உயர வைக்கும்; நானும் தமிழன்தான் என்று பெருமைபட வைக்கும்...

இந்தப் படத்தைப் பார்க்கும் இரண்டரை மணி நேரமாவது மானமுள்ள தமிழனாக வாழ்ந்துவிட்டு வாருங்கள்!

ஏழாம் அறிவு முன்னோட்டம்:-


-சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin