Friday, May 07, 2010

மலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (2/3)


இதன் முதல் பகுதியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்

இன்றைய மலேசியத் தமிழர்களின் முன்னோர்களும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இங்கு வந்தவர்கள். இரப்பர் தோட்டங்கள் மலேசியத் தமிழரின் தொட்டில்கள் என்று சொல்லலாம்.

1786 தொடங்கி 1938 வரையில் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் மிகப்பெரும் தொகையினர் ஆவர். இவர்களுள் 85% பகுதி தமிழர்கள். காடுகளும் மலைகளும் நிறைந்து கிடந்த இந்த நாட்டை வளமாக்குவதற்கு வந்த எந்தமிழர் பெருமக்கள், துன்பங்கள் – துயரங்கள் நிறைந்த இரப்பர் தோட்டத்து வாழ்க்கையை நாட்டுப்புற பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடல்களிலிருந்து எமது முன்னோர்களின் வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இந்தப் பதிவில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மலாயாவில் அப்போது இரப்பர் தோட்டங்களை உருவாக்குவதற்கும் அங்கு மாடாய் உழைப்பதற்கும் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்குப் பொருத்தமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள்தான் என்று வெள்ளையர்களுக்குத் தெரிந்தது. உடனே, தென்னிந்தியாவில் ஆட்களைச் சேர்ந்து மலாயாவுக்குக் கொண்டுவந்தனர். எப்படி தெரியுமா?

பகடியான வார்த்தையிலே
பால்மரத்தில் பணம் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிர்ஷ்டமும் தானேவரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க
பொய்சொல்லிக் கப்பலேத்திப்
பொழப்பெல்லாம் போச்சுங்க
கருங்கடல் தாண்டிவந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டின்னு
கையேந்தி ஊமையானோம்.

தென்னிந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தமிழ் மக்களை ஏற்றிவந்து, மலாயாவில் தரை இறக்குகிறார்கள் வெள்ளையர்கள். கடலில் வரும்போது நோயாலும் இன்னபிற காரணங்களாலும் பலர் மாண்டு போயுள்ளனர். அதில் பிழைத்து இங்கு வந்து சேர்ந்த எமது முப்பாட்டன் ஒருவன் தாம் பட்ட துயரத்தை இப்படி பதிவு செய்து வைத்துள்ளான்.

காடுமலை மேடுபள்ளம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
மாடுபோல உழைக்கணும்
மலையேறிப் பாடுபட்டு
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
ஓடிவர்றார் பூட்சுகாலால் உதைக்க
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
அப்பப்பா பசிக்கொடுமை...

அன்று இரப்பர் தோட்டங்கள் எப்படி இருந்தன என்று எங்கள் நாட்டுக் கவிஞர் வீரமான் இப்படி பாடிவைத்துள்ளார்.

வாய்பிளந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேய் உலவும் வெளிக்காடு
பீதியன்று முடிந்ததுண்டோ?
புதர் அடர்ந்த மேடுபள்ளம்
புலி உலவக் கூடுபயம்
உதற வைக்கு பனியிருட்டு...

இரப்பர் தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளையும் செய்த வேலைகளையும் கீழே வரும் பாடல் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். தாயகத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து போதாதென்று, வாழ்வுதேடி வந்த இடத்தில் எமது மக்கள் பட்ட பாடுகளைப் பாருங்கள்.

*காண்டா வாளி தூக்கணும்
கடுமையான (நா)நூறு மரத்தை
நாங்க வெட்டனும்
உழைபாளியா நாங்க இருந்து
ஓடாத் தேயணும்
உழைக்கும் மக்கள் நாங்க
வறுமையால வாடணும்
இட்ட வேலையை நாங்களே
எடுத்துக் கூறிச் செய்யணும்
செய்யாவிட்டால் பின்முதுகில்
பிடரி பிடித்துத் தள்ளுவார்
ஏனென்று கேட்க நாதியில்லே
எடுத்துரைக்கக் கதியும் இல்லே..

*காண்டா வாளி:- மேலே படத்தில் பெண் தொழிலாளி தோளில் தூக்கிச் செல்லும் கருவி. இரப்பர் பாலை வாளியில் நிரப்பி 'காண்டாவில்' மாட்டி தோளில் சுமந்து செல்வர்.



அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தோட்டத்து மக்களை *‘சாமக்காரன்’ விடுவீடாகச் சென்று மணியடித்து, கூவி எழுப்பி விடுவான். வீட்டில் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து, குழந்தைகளைப் பாதுகாக்க *‘ஆயக்கொட்டகை’யில் விட்டுவிட்டு ஆறு மணிக்கெல்லாம் *‘பெரட்டுக்குப்’ போக வேண்டும். அங்கு *‘கங்காணி’யிடம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திவிட்டு, இன்று எந்தக் *காட்டில் வேலை என தெரிந்துகொண்டு கல்லிலும் முள்ளிலும் காலால் நடந்து வேலைக்காட்டுச் சென்று மாலைவரை மாடாய் உழைத்துவிட்டு வீடு திரும்பும் அந்தப் பால்மரகாட்டுக் கொடுமை சொல்லி மாளாது.


தோட்டத்து நிருவாகிகளாக இருந்த துரைமார்கள் (வெள்ளையர்கள்) எமது மக்களை அடிமாடுகள் போல மதித்து வேலை வாங்கினர். துரைமார்கள் பண்ணிய கொடுமைகள் தாங்காமல் ஊருக்குத் திரும்பும் வழியும் அறியாமல் தவியாய் தவித்த மக்களின் இன்னல்கள் ஏராளம் உள்ளன. துரைமார்கள் ஒருப்பக்கம் என்றால், தோட்டத்தில் வெள்ளிக்காரர்களின் ஏவலாளிகளாய் இருந்து தொழிலாளர்களைக் கவனிக்கும் *‘கங்காணி’கள் பண்ணிய எகத்தாளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

*சாமக்காரன் – அதிகாலையில் தொழிலாளர்களின் வீடு வீடாகச் அவர்களை எழுப்பும் வேலையாள்.
*ஆயக்கொட்டகை – தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் இடம். அங்கு வேலை செய்யும் பெண்கள் ‘ஆயா’ என்று அழைக்கப்பட்டனர்.
*பெரட்டு – தொழிலாளர்கள் வருகையைப் பதிவுசெய்த்து அவர்களுக்கான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு
*கங்காணி – தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்ளவும் வேலை வாங்கவும் வெள்ளைக்கார துரைகளால் நியமிக்கப்பட்ட பணியளர்கள்
*காடு – இரப்பர் மரங்கள் பயிரப்பட்டுள்ள காடுகள். அவை 1, 2, 35, 48 என்று எண்களால் பெயரிடப்பட்டிருக்கும்.

இந்தப் பதிவிலே தொடரை முடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருப்பதால் அடுத்த தொடரில் இதனைத் தொடருகிறேன். மீண்டும் வருக.

நனிநன்றியுடன்:-

Thursday, May 06, 2010

மலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (1/3)

7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.

தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.



படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.

வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.

குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா - Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி - Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.


தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.




இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.

வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)


இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.


இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.



எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.



இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!

தலைப்பில் சொன்னது போல இங்கே சொன்னவை வரலாறு பாடங்கள்; இதன் அடுத்த பகுதியில் வரலாறு பாடுங்கள்..!

நனிநன்றியுடன்:-











Wednesday, May 05, 2010

முத்தமிழ் வளர்த்தெடுத்த மலையகத் தமிழறிஞர்

இன்று 5.5.2010, முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் பிறந்தநாள். வாழும் காலமெல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்து 18.10.1997இல் அதிகாலை மணி 5.55க்கு இறைவனடி சேர்ந்த அமரர் முதுபெரும் பாவலர் ஐயா அவர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப்பார்த்து இப்பதிவினை எழுதுகிறேன்.

சா.சி.சுப்பையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 5.5.1925இல் தமிழகம், இராமநாதபுற மாவட்டத்தில் இரணசிங்கபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். காதர்மீரான், பிரான்மலை ஆகிய புலவர் பெருமக்களிடம் தமிழ் இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் முதலியவறைக் கற்றுத் தேர்ந்தார். தம்முடைய தந்தை வழியில் மருத்துவம், வர்மக்கலை, சிலம்பம் முதலிய கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார்.

1938இல் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த பாவலர் ஐயா, பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ என்னும் ஊரில் வாழ்ந்தார். தொடக்கக் காலத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஐயாவின் “தமிழ் முரசு” நாளிதழ் ஏற்படுத்திய எழுச்சியால் தமிழ் உணர்வாளராகவும், பற்றாளராகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் மீது ஏற்பற்ற அளவிறந்த பற்றுதலால், 1960இல் மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் கண்டார். பாவாணர் மன்றம் என்றே அதற்குப் பெயரும் சூட்டினார். பாவாணரின் பணிகளுக்குப் பல்லாற்றானும் துணையாக இருந்துள்ளார். பாவாணரின் குமரிக்கண்ட கொள்கைகள், வேர்ச்சொல்லாய்வுகள், தமிழின் தனித்திறங்கள் யாவும் மலேசியாவில் பரவுவதற்கு கரணியமாக இருந்தவர் இவர்.

அதேபோல் 1974இல் பெருஞ்சித்திரனார் மலேசியாவுக்கு வந்தபொழுது அவருடைய சுற்றுச்செலவை ஏற்பாடு செய்து நாடு முழுமைக்கும் தமிழ்வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

துளியும் அரசியல் ஈடுபாடு இல்லாமல் மொழி, இன, சமயம், பண்பாடு, இலக்கியம் சார்ந்த அரும்பணிகளை அயராது செய்தார். மலேசியாவில் தென்மொழி இதழ்களைப் பரப்புவதன் வாயிலாகத் தனித்தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தார். பலரைத் தனித்தமிழ் பற்றாளர்களாக வளர்த்தெடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பன்னூலாசியராகவும் விளங்கினார். தம்மை நாடிவருவோருக்கு மனமுவந்து சித்த மருத்துவம் செய்து வந்தார்.

பாவலர் ஐயா சிறந்த பாடகராகவும் விளங்கினார். தமிழ்ப் புலமையின் காரணமாக இலக்கிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியராகவும் இருந்தார். நிலைபெற்ற தலைவன், தமிழருவி போன்ற நூல்களை எழுதி இருப்பதால் இவர் நூலாசிரியராகவும் பரிணமித்து இருக்கிறார்.

இவருடைய அரும்பணிகளைப் பாராட்டி ‘தமிழ்ச்செல்வர்’ என்னும் விருதும் பொற்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. 1971இல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்னும் விருது வழங்கி பாவலர் ஐயாவைச் சிறப்பித்துள்ளார். அதே 1971-ஆம் ஆண்டு “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1976இல் “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989இல் மலேசியத் திராவிடர் கழகம், பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய ஒரு விழாவில் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தது.

பாவலர் ஐயா போன்ற நற்றமிழ் அறிஞர் வாழ்ந்த பேரா மாநிலமானது இன்றளவும் தமிழ்வளம் நிறைந்த மாநிலமாக விளங்கி வருகின்றது. அன்னாருடைய அருந்தமிழ் பணிகள் காலத்தால் போற்றத்தக்கவை என்றால் மிகையன்று. மலேசியாவில் தமிழ் வளர்த்த முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் தமிழ்க்கூறு நல்லுலகம் போற்றும் தமிழறிஞராக நிலைபெற்றிருப்பார் என்பது உண்மை.

மேலே இதுவரை சொன்ன முதுபெரும் பாவலர் ஐயா அவர்களைப் போல, அவர் காலத்தில் வாழ்ந்து மலேசியாவில் தமிழைக் காத்து – வளர்த்து – போற்றியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஈகத்தினால் இன்று மலேசியாவில் தமிழ் நிலைபெற்றிருக்கிறது என்றால் அதை யாரும் மறுத்துவிட முடியாது.

அத்தகையவர்களுள் சிலரைக் கீழே காணலாம்.






தமிழ் ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்
மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தோற்றுநர்.
மொழி – இனம் – சமயம் என்ற முப்பெரும் கோட்பாட்டை மலையகத்தில் உருவாக்கி மாபெரும் தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். (மேலும் படிக்க)




  • தமிழவேள் கோ.சாரங்கபாணி
    தமிழ் எங்கள் உயிர் என்ற முழக்கத்துடன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை நிலைநிறுத்தியவர். நாட்டிலேயே மிகப்பெரிய தமிழ் நூலகத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தியவர். தமிழ் இளைஞர் மணிமன்றம் என்னும் பேரியக்கம் கண்டு, நாடு முழுவதும் தமிழர் திருநாள் விழாக்களை நடத்தி தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தவர். (மேலும் படிக்க)





உலகத் தமிழர் இர.ந.வீரப்பனார்,
உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உலகத் தமிழருக்காக இயக்கம் கண்டவர். (மேலும் படிக்க)





முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்பிரமணியம்,
மலேசியாவில் தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி தமிழுக்கும், தமிழர்க்கும் அளப்பரிய தொண்டு செய்தவர். எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அரும் பாடாற்றியவர். தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் நிதித்திட்டத்தை உருவாக்கியவர்.

  • நனிநன்றியுடன்:-











பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்


தமிழ் வலைப்பதிவு உலகம் இன்று விரிந்து வளர்ந்துகொண்டே போகிறது. நாளும் புதிய புதிய வலைப்பதிவுகள் உருவாகி வருகின்றன. எமது மலேசியத்திலும் இன்று நிறைய வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அவை பல்வேறு துறை சார்ந்தவையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் கேலிக்கைக்கும், மனமகிழ்வுக்கும் முதன்மைக் கொடுக்கும் தளங்களே அதிகம் என்றாலும் சமுதாயப் பயன்கருதும் – மொழியின நலன்கருதும் பதிவுகளும் சில இருக்கின்றன.

இவ்வகை பதிவுகளின்மீது வாசகர்கள் அவ்வளவாக நாட்டம் காட்டுவது கிடையாது. நாளிதழா கிசுகிசு போதும்; வானொலியா திரைப்பாட்டு போதும்; தொலைக்காட்சியா நடிகைகளின் குலுக்கும் சின்னத்திரை சிலுக்கும் போதும், சிறுகதையா நவினம் போதும், கவிதையா உரைவீச்சு போதும், இணையமா கேலிக்கை போதும்; கும்மாளம் போதும் என்று போய்க்கொண்டிருக்கிறது காலம். எதை எடுத்தாலும் எல்லாமும் புலன் இன்பங்களுக்குத் தீனி போடுபவையாகவே உள்ளன. அறிவான செய்திகளையோ அழமான சிந்தனைகளையோ பலரும் அவ்வளவாக விரும்புவது கிடையாது.

இந்தச் சூழலில், உள்ளடக்கமாகட்டும் அல்லது மொழியாகட்டும் அல்லது வடிவமைப்பாகட்டும் அல்லது தரமாகட்டும் அல்லது சூடியிருக்கும் பெயராகட்டும்.. எல்லாவற்றிலும் மலேசிய வலைப்பதிவுகள் சிறப்பாகவே இருப்பதாக என்னுடைய கணிப்பு. அதேவேளையில், அவற்றின் சமூகப் பொறுப்பும் பங்களிப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மலேசிய வலைப்பதிவுகள் உள்நாட்டு தமிழர்களிடம் இன்னும் பரவலாகப் போய்ச்சேராத அல்லது சேர முடியாத நிலைமை இருக்கிறது. தகவல்களை வழங்குவதில் தமிழ் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி முதலிய பாரம்பரிய ஊடகங்கள் போல வலைப்பதிவு அல்லது இணைய ஊடகம் இன்னும் வரவேற்பு பெறவில்லை. இதனை மாற்றியமைத்து இணைய ஊடகம் மாற்று ஊடகமாகப் பரிணாமம் பெறுவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அந்தவகையில், மலேசியாவிலிருந்து செயல்படும் சில வலைப்பதிவுகளை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இவற்றை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்; சில வலைப்பதிவுகளை இப்போதுதான் அறிய நேரலாம்.

எது எப்படி இருப்பினும், இவை எமது மலேசிய உற்பத்திகள்; மலேசிய மணம் கமழும் ஊடகங்கள்; மலேசிய அச்சில் வார்க்கப்பட்ட வலைப்பதிவுகள். இவற்றைச் சென்று பார்ப்பதன் – படிப்பதன் வாயிலாக எமது மலேசியத்தை – எமது மலேசியத் தமிழர் நிலையை உலகத் தமிழர்கள் அறிந்துகொள்ளலாம்.


அருமை தோழர் சதீசுகுமார் அவர்களுடைய வலைப்பதிவு ஓலைச்சுவடி. மலேசியத் தமிழர்களுக்கு விடியலாய் முகிழ்த்தது. எமது மக்களின் இன்னல்கலையும் எழுச்சிகளையும் பதிவு செய்திருக்கும் இணைய ஆவணம் இது. எதிர்காலத்தில் மலேசியத் தமிழரின் வரலாற்றை ஆய்வுசெய்யும் ஒருவருக்குத் தேவையான பல விடயங்கள் ஓலைச்சுவடியில் கிடைக்கும்.


நனவுகள், அன்பின் ஐயா அ.நம்பி அவர்களின் வலைப்பதிவு. மொழி, இன நலச் செய்திகள் இங்கு நிறைய கிடைக்கும். தமிழகத்தின் அரசியல் கூத்தடிப்புகளை பற்றி மலேசியத் தமிழனின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை அழகாக எழுதுவதில், அதுவும் அழகழகாய் படம்போட்டு எழுதுவதில் இவருக்கு நிகரில்லை. தமிழ் இலக்கணம், இலக்கியம், யாப்பு ஆகியவையும் அ.நம்பி ஐயாவுக்குக் கைவந்த கலை.


அருமை இளவல் விக்னேஷ்வரன் அடைகலம் எழுதும் வாழ்க்கைப் பயணம் இதமான வாசிப்புக்கு ஏற்ற வலைப்பதிவு. அரிய செய்திகளை அழகாய் படைக்கும் நல்ல படைப்பாளி. இவருடைய பல பதிவுகள் தமிழகத்தின் மக்கள் ஓசை ஏட்டில் வெளிவந்துள்ளது.


அருமை நண்பர் மனோகரன் கிருட்டிணன் ‘மனோவியம்’ வலைப்பதிவின் சொந்தக்காரர். இவர் உரைவீச்சுகளில் எமது மண்ணின் நீள அகலங்களைக் காணலாம். ஆன்மிகத்திலும் வரலாற்று ஆய்விலும் ஈடுபாடு உடையவர். இவர் எழுதிய ‘தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்’ தொடர் உலகத் தமிழர் படிக்க வேண்டிய ஆவணத்தொடர்.

மலேசியத் தமிழன்:- மலேசியத் தமிழரின் நடப்பு நிலைமையை பிரித்துப்போட்டு மேய்ந்திருக்கிறது இவ்வலைப்பதிவு. மலேசியத் தமிழரின் பிற்போக்குத் தனங்களை அலசி ஆராய்ந்து இருப்பதோடு, முன்னேறுவதற்கான வழிகளையும் காட்டியிருக்கிறது.

தமிழுயிர்:- மலேசியாவின் முதலாவது தமிழ்த்தேசிய வலைப்பதிவாக வலம்வருகிறது. மலேசியத் தமிழர்களிடையே நிலவும் மொழி, இன, சமய, பண்பாட்டு, கலை, இலக்கியச் சீரழிவுகளைச் சூடாக விவாதிக்கும் தளம்.

கருத்து மேடை:- வழிமாறிச் சென்றுகொண்டிருக்கும் மலேசியத் தமிழ் இலக்கியம், பண்பாட்டின் மீது கருடப் பார்வை செலுத்தும் வலைப்பதிவு இது.

திருநெறி:- தமிழியச் சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வலைப்பதிவு. எழுச்சிமிகு உரைகள், பாடல்கள் ஒலி வடிவில் இங்கு கிடைக்கும். தமிழறிஞர் இரா.திருமாவளவன் இதன் பதிவர். ஓயாத தமிழ்ப்பணிகளுக்கு இடையிலும் இவர் பதிவெழுதுவது வியப்புதான்.

வேய்ங்குழல்:- அழகுதமிழ் பெயரில் ஐயா.தமிழ்மாறன் எழுதும் பதிவிது. தமிழ்வளம் நிறைந்த வலைப்பதிவு.

இப்படியாக இன்னும் ஏராளமான வலைப்பதிவுகள் எமது மலேசியப் பதிவர்களின் கைவண்ணத்தில் பதிவுலகப் பூமாலையில் நறும்பூக்களாக மணக்கின்றன.­­­­­­ தமிழின் சிறப்பைக் கெடுக்காத வகையில் எமது பதிவர்கள் பெயர்சூட்டி இருப்பது சொல்லத்தக்கச் சிறப்பாகும். இதற்காகவே அவர்களை மனதார பாராட்டலாம்.


வலைப்பதிவுகளைத் தவிர்த்து மலேசிய செய்திகளைச் சுடசுட தரும் செய்தித் தளங்களும் உள்ளன. குறிப்பாக மலேசியாஇன்று இணையத்தளம் மிகவும் புகழ்பெற்றதாகும். உலக அளவில் அதிகமாகப் பார்க்கப்படும் தளமாக இது வெற்றிபெற்றுள்ளது. அதுபோலவே, அண்மையில் வெளிவந்துள்ள விடுதலை மலேசியாஇன்று இணையத்தளத்திலும் மலேசியத் தமிழர் சார்ந்த செய்திகள் இடம்பெறுகின்றன. இதே அமைப்பில் வணக்கம் மலேசியா எனும் தளமும் நீண்ட காலமாகத் தமிழ்சேவை வழங்கி வருகிறது.

இவை போன்று இன்னும் பல வலைப்பதிவுகளை மொத்தமாகப் பார்ப்பதற்குத் திருமன்றில் அல்லது வலைப்பூங்கா ஆகிய இரு திரட்டிகளுக்குச் செல்லவும்.

வருங்காலத்தில் இன்னும் அதிகமான வலைப்பதிவுகள் உருவாகி மலேசியத் தமிழர் எண்ணங்களும் கைவண்ணங்களும் உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

நனிநன்றியுடன்:-

­­­­­­­­­

Tuesday, May 04, 2010

இணைய வெளியில் என் இனிய பயணம்


திருத்தமிழ் வலைப்பதிவு எழுதும் வேளையில், மலேசியச் சூழலில் தமிழ் இணையத்தை இன்னும் எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கலாம் என்ற சிந்தனை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கும். நெருக்கமான நண்பர்களிடம் இதுகுறித்து நிறைய கதைத்து இருக்கிறேன்.

குறிப்பாக, வலைப்பதிவு தொடங்குமாறு நண்பர்கள் பலரை வலியுறுத்தியுள்ளேன். எனக்குச் செவிசாய்த்து சிலர் வலைப்பதிவு தொடங்கியும் உள்ளனர். கி.விக்கினேசு (தமிழோடு நேசம்), கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்), மு.மதிவாணன் (செர்சோனீசு தமிழ்ப்பள்ளி), தமிழரண் (கருத்து மேடை), ஆய்தன் / ஆதவன் (தமிழுயிர்), அலகேஸ்ஸ்ரீ (நீலாம்பிகை மழலையர் மன்றில்) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

வலைப்பதிவுகளைத் தவிர்த்து இன்னும் சில தேவைகள் இருப்பதை உணர்ந்து வேறு சில இணையத் தளங்களையும் தொடங்க வேண்டியிருந்தது. இது காலத்தின் தேவையாகவும் இருந்தது. (பின்வரும் படங்களைச் சொடுக்கு அவ்வந்த தளத்திற்குச் சென்று நோட்டமிடவும்)


மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைப்பதற்கும் தமிழ் வலைப்பதிவுகளின் வாசிப்பு வட்டத்தைப் பெருக்கவும் திரட்டி அமைப்பிலான ஒரு தளம் தேவைப்பட்டது. அதற்காக, ‘திருமன்றில்’ எனும் பெயரில் ஒரு எளிய தளத்தை தொடங்கினேன். அதில் மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தையும் இணைத்து திரட்டியைப் போல உருவாக்கினேன். ஆயினும், மலேசியப் பதிவர்கள் இந்தத் தளத்தை முழுமையாகப் பயன்கொள்ளவில்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமே. பொது நன்மை கருதி ஏற்படுத்தப்பட்ட இந்த ஏந்தினை(வசதி) மலேசியப் பதிவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கே வேண்டுகையை முன்வைக்கிறேன்.

அடுத்து, மலேசியத் தமிழ் ஆசிரியர்களிடையே தமிழ் இணையம் குறித்து வெளிப்படுத்த வேண்டும்; அவர்களை இணையத்துக்குள் இழுத்துவர வேண்டும்; தமிழ்க் கல்வித்துறை தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதற்கும் கருத்தாடுவதற்கும் ஒரு களம் வேண்டும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் ‘தமிழ் ஆசிரியம்’ மடற்குழு தொடங்கினேன். முழுக்க முழுக்க மலேசிய ஆசிரியர்களை இலக்கு வைத்து இந்தக் கூகில் மடற்குழு தொடங்கப்பட்டது. இதுவரை 116 உறுப்பினர்களுடன் மனநிறைவளிக்கும் வகையில் ஆக்கமான கருத்தாடல்களுடன் தமிழ் ஆசிரியம் மடற்குழு செயல்படுகிறது. ஆனால், மலேசியாவில் ஏறக்குறைய பத்தாயிரம் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தமிழ் ஆசிரியம் இன்னும் சூம்பிக்கிடப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. தமிழாசிரியர்கள் நினைத்தால் மலேசியத்தில் தமிழ் இணையத்தை பெரிதாக வளர்த்தெடுக்க முடியும் என்பது என் கருத்து.


2010 பிறந்ததும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தப் போகிறோம் என்று ஒரு கூட்டம் வேகமாகக் கிளம்பியது. தொடக்கத்தில் காதோடு காதாகவும், பின்னர் தமிழக நாளிதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகவும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்கான பரப்புரைகள் நடந்தன. இணையத்திலும் அவர்களுடைய பரப்புரை தலையெடுத்தபோது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருத்தமிழ் வலைப்பதிவும் எழுத்துச் சீர்மையைக் கண்டித்து பல பதிவுகள் போட்டது. ஆயினும், இந்தச் சிக்கலை விவாதிக்க தனி வலைப்பதிவு இருப்பதே நல்லது என நினைத்து ‘தமிழ் எழுத்துச் சீர்மை’ எனும் வலைப்பதிவைத் தொடங்க வேண்டி இருந்தது. எழுத்துச் சீர்மை என்ற பெயரில் நிகழும் மாற்றங்களையும் அதனுடைய மறுபக்கங்கலையும் அலசும் களமாகவும் கருத்தாடல் தளமாகவும் இது அமைந்தது.

இற்றை நாளில் முதன்மைச் சந்தைப் பொருளாக இணையத்தில் புகழ்பெற்றிருப்பது முகப்புத்தகம் (facebook). இதற்கு இன்னும் நல்ல – நயமான – நச்சென்று ஒரு தமிழ்ப்பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் பயின்ற மாணவர் ஒருவரின் விடாப்பிடியான அழைப்பின் பேரில் முகப்புத்தகத்திலும் இடம்பெறவேண்டிய சூழல் வந்தது. பல்வேறு ஏந்துகளை உள்ளடக்கிய முகப்புத்தகத்தில் இன்னும் கத்துக்குட்டியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறேன்.


என் சொந்த ஆக்கங்களான இவை தவிர, தமிழுயிர் வலைப்பதிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளேன். நண்பர்கள் சிலர் இணைந்து நடத்திய மலேசியாவின் முதல் தமிழ்த்தேசிய வலைப்பதிவு இது. அதற்காகவும் அவ்வப்போது சில பதிவுகளை வழங்கியுள்ளேன்.

இப்படியாக, மலேசியத் தமிழ் இணையத்தை என்னால் ஆனமட்டில் வளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சில திட்டங்கள் உள்ளன. அவற்றை இப்போதைக்குச் சொல்லுவதாக இல்லை. சொன்னால் பலிக்காது என்பதற்காக அல்ல. சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்; சொல்லிய வண்ணம் செயல் என்ற தமிழ்மறையாம் திருக்குறளின் வரிகள் “செய்யாமல் சொல்லாதே” என்று காதோரம் கேட்கின்றன.

மலேசியத் தமிழ் இணையம் மிகப்பெரிய மாற்று உடகமாக வளர்வதற்குரிய அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆயினும், சிற்சில தடைகளும் இருக்கவே செய்கின்றன. இன்று உலக அளவில் தமிழ் இணையம் அடைந்துள்ள பரந்துபட்ட வளர்ச்சிக்கு நடுவில் மலேசிய இணைய, வலைத்தலங்களும் பெரிய வளர்ச்சியை எட்டவேண்டும் என்ற கனவு என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.

என் கனவுகள் பலித்திட; இன்னும் எண்ணற்ற இணையப் பணிகள் இனிதே நடந்திட நீங்களும் வாழ்த்தினால்.. மகிழ்வேன் நிச்சயமாக!

அடுத்த பதிவில் மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதுவேன்; படிக்க மறவாதீர். மீண்டும் வருக!

நனிநன்றியுடன்:-

திருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (2/2)


>இதன் முதல் பகுதியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

கணினி, இணையம், வலைப்பதிவு பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாத காலம் அது. அறிமுகமே இல்லாத நண்பர் ஒருவரை எதிர்ப்பாரா விதமாகச் சந்தித்தேன்; எதிர்ப்பாராமல் ஆர்வம் உண்டானது; எதிர்ப்பாராமல் முயன்றேன்; எதிர்ப்பாராமல் வலைப்பதிவு உருவானது. இப்படி எதிர்ப்பாராமல் வலைப்பதிவு தொடங்கி இருந்தாலும், ஒவ்வொரு பதிவையும் திட்டமிட்டும், ஓர் இலக்கை முன்வைத்தும் எழுதி வருகின்றேன்.

14-5-2005ஆம் நாள் ‘வளர்தமிழ் விழா’ என்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான ஒரு போட்டி நிகழ்ச்சியில் வாசுதேவன் இலெட்சுமணன் அவர்களைச் சந்தித்தேன். மலேசியாவில் வலைப்பதிவு எழுதத் தொடங்கிய முன்னோடி அவர் – என் வலைப்பதிவு வாழ்வுக்கு வழிகாட்டி அவர். தன்னுடைய ‘விவேகம்’ வலைப்பதிவு பற்றி கூறினார். அதுபோல மற்றவர்கள் குறிப்பாக, தமிழாசிரியர்கள் வலைப்பதிவு நடத்த முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தினார். வலைப்பதிவு தொடங்கும் வழிமுறைகளை விளக்கிச் சொல்லி, எழுதியும் கொடுத்தார். அவருடைய பேச்சும், மலேசியாவில் தமிழை வளர்த்தெடுக்க விரும்பும் வேட்கையும் எனக்குப் பிடித்திருந்தன.

அன்று வீட்டுக்கு வந்து மதியம் தொடங்கி நள்ளிரவு வரை கணினியோடு போராடி வலைப்பதிவு தொடங்குவதற்கு முயன்றேன். சரியாக வராமல் பல முறை தோல்வி கண்டு – துவண்டு விழுந்து - மனம் தளராமல் முயன்று முயன்று இறுதியில் 15-5-2005 நள்ளிரவு மணி 12.20க்கு முதலாவது இடுகையைப் பதிவுசெய்தேன்.

இந்த ஐந்து ஆண்டுகளில் திருத்தமிழில் நான் எழுதியுள்ள பதிவுகளின் எண்ணிக்கை இன்றோடு மொத்தம் 230 ஆகும். தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் என இன்னும் பல்வேறு கருப்பொருளில் பதிவுகள் எழுதியுள்ளேன்; இடுகைகள் இட்டுள்ளேன்.

என்னுடைய வலைப்பதிவை விடாமல் படித்து வருகின்ற நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் பலரை நான் நேரடியாக அறிவேன். சில பதிவுகளை வகுப்பறை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்திய ஆசிரிய நண்பர்கள், விரிவுரையாளர் பெருமக்கள் சிலரை இவ்வேளையில் நினைவுக்கூர்ந்து நன்றி சொல்ல விழைகிறேன். பல நிகழ்ச்சிகளில், கூட்டங்களில் நான் முகமறியாத பலர் என்னை எப்படியோ கண்டுபிடித்துக் கைகொடுத்துப் பாராட்டிய மணித்துளிகளில் மனம் நெகிழ்ந்து இருக்கிறேன்.

தமிழ்க் கல்வியாளனாக இருப்பதால் துறைசார்ந்த செய்திகளை அதிகமாக எழுதியிருக்கிறேன். கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு சிக்கலில் திருத்தமிழ் என்ன கருத்து அல்லது நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்து தங்களின் சொந்த நிலைப்பாட்டை முடிவுசெய்யும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்த நேரங்களில் நெஞ்சம் கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறேன்.

மலேசிய சூழலுக்கு ஏற்ப பல செய்திகளை – தகவல்களை – தெளிவுகளை – விளத்தங்களை வழங்கும் வலைப்பதிவாக ‘திருத்தமிழ்’ ஓரளவுக்கு அறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. மலேசிய நாளிகை, இணையத்தளம் முதலிய ஊடகங்கள் திருத்தமிழ் செய்தியை எடுத்துப் போடுவதைக் காணும்போது பெருமிதம் எற்படும். இப்படி வலையுலக வாழ்க்கையில் மனத்தை வருடிய மகிழ்ச்சிகளும், நெருடிய நிகழ்ச்சிகளும் நிறையவே இருக்கின்றன.

என் திருத்தமிழ் பணிகளைப் பாராட்டி திருநெறி வலைப்பதிவரும் தமிழறிஞருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் பின்வரும் பாவொன்றை பதிவிட்டு இருந்தார். அன்னாரின் அன்பினைப் பெற்றதில் பெருமையடைகிறேன்.

நற்குணன் என்னும் நற்றமிழ் நெஞ்சன்

முற்புகழ் திருத்தமிழ் முன்மையை உணர்ந்தான்

அற்ப அகத்தினர் கசடுகள் தகர்ப்பான்

எற்படும் கதிரொளி எழுச்சியைத் தந்தான்

என்றும் தமிழுக்குத் திருச்செல்வ மேலான்

நன்று செய்நெறி வலைத்தள வேலான்

பண்டு புகழ்சொல் மரபுகள் காப்பான்

நீண்டு அவன்புகழ் வாழிய! வாழிய!

கொஞ்ச காலமாக “சுப.ந” என்றே என்னைச் சொல்லி வருகின்றேன். என்னைச் சுட்டும்போதெல்லாம் “சுப.ந” எனக் குறிப்பிட்டு, இன்று அதனை நான் நேசத்தோடு பயன்படுத்தும் அளவுக்குச் செய்துவிட்டவர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள். இப்படியாக, என் வலைப்பதிவு வாழ்வில் நான் மிகவும் உய்த்துணர்ந்த நிமிடங்களும் நிகழ்வுகளும் பற்பல உண்டு.

இதற்கு நேர்மாறாக, என்னை எரிச்சல்படுத்திய நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, தமிழ்மொழியைச் சிறுமைபடுத்தி; சின்னபின்னப்படுத்தி எழுதும் பதிவுகளைக் கண்டு மனம் வாடியதுண்டு. இப்படிச் செய்பவர்கள் உண்மையிலேயே தமிழர்களா? அல்லது தமிழுருவில் இருந்துகொண்டு தமிழர்களின் தாலிகளை அறுப்பவர்களா? என்று தேடியதுண்டு. வரலாற்றுக் காலந்தொட்டு தமிழுக்கு எதிராக நாசவேலைகள் புரிந்து, தமிழின் மீது நம்பிக்கை இன்மையைப் புரையோடச் செய்யும் நச்சுப் புழுக்களாகவே இவர்களை மதிப்பதுண்டு. “தமிழே தமிழர்க்கு உயிராம்; அந்தத் தமிழரே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்” என மலேசியப் பாவலர் ஒருவர் பாடிய வரிகள் இவர்களை நினைக்குங்கால் நெஞ்சத்தைத் தட்டுவதுண்டு.

இந்த நிலைமையை மாற்றுவது என்பது கல்லிலே நார் உறிக்கும் கடுமையான வேலைதான் என உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் ஒரு கை பார்த்திடலாம்; தமிழின் இடரினில் ஒரு துளி தீர்த்திடலாம் என்கின்ற தன்னம்பிக்கையும் தமிழ்நம்பிக்கையும் உள்ளத்தில் கொண்டிருக்கிறேன். ஆகவே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே என்ற திருமூலர் பெருமானின் அடியொற்றி,
எனக்குத் தெரிந்தது சொல்வேன்;
ஊருக்கு நல்லது சொல்வேன்.

என் கடன் பணிசெய்து கிடப்பதொன்றே என உளமாற எண்ணி ‘திருத்தமிழ்’ எழுதுகிறேன்; நிறைவான மனத்தோடு ‘திருத்தமிழ்’ செய்கிறேன்.

நனிநன்றியுடன்;









Monday, May 03, 2010

திருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (1/2)


இன்று, 3-5-2010 தொடங்கி ஒரு கிழமைக்குத் தமிழ்மணத்தின் ‘நட்சத்திரப் பதிவராக’ வலம்வர இருக்கிறேன். நான் வலைப்பதிவு தொடங்கிய மே மாத்திலேயே, இப்போது நட்சத்திரப் பதிவராகி இருப்பது எதிர்ப்பாராமல் நிகழ்ந்திருக்கும் மகிழ்வாகும்.

'நட்சத்திரப் பதிவர்' என்று சொல்லுவதைவிட, ஒரு வாரத்திற்கு வலையுலகப் பதிவர்கள், வாசகர்களிடம் என்னை – என் எழுத்தை – என் வலைப்பதிவை – என் மொழியை – என் இனத்தை – என் வாழ்வியலை, என் நாட்டை அறிமுகம் செய்துகொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாகவே இதனை எண்ணுகிறேன். தமிழ்மணம் எனக்கு வழங்கியிருக்கும் இந்த வாய்ப்புக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாக என்னுடைய எழுத்துலக வாழ்க்கை பற்றி எழுதலாமே என்று நினைத்தேன். அதன் எதிரொளிப்புதான் இந்தப் பதிவு.

சின்ன வயதிலிருந்தே எழுதுவதில் மிகுந்த ஆர்வம் எனக்கு. பிறந்து மூன்று வயது இருக்கும்போதே வீட்டுச் சுவர்களில் எழுதிக்கொண்டிருந்தவன் நான். பத்து வயதில் பள்ளியிலேயே கட்டுரை எழுதுவதில் நான்தான் முதல் மாணவன். பன்னிரண்டு வயதில் எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெற்றவன் நான். இன்று ஏராளமாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படியெல்லாம், உளறிக்கொட்டிக் கிளறி மூடாமல், என்னுடைய எழுத்துத்துறை ஈடுபாட்டைப் பற்றி ‘முதன்முறையாக’ எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்ள – பதிவுசெய்ய விரும்புகிறேன். இதனை வரலாறாக நினைத்துப் படிக்காமல், விரும்பிப் படிக்க வேண்டுகிறேன். இதனைப் பொறுமையோடு முழுதும் படிப்போருக்கு முதற்கண் நன்றி மொழிகிறேன்.

1988 என்று நினைக்கிறேன். அதுதான் எழுத்து எனும் விதை என்னுள் விழுந்த காலம். அப்போது மலேசியாவில் ‘மயில்’ எனும் வார இதழ் வெளிவந்தது. அன்றைய என் பதின்ம வயதில் வாசிப்பை நேசிக்கவைத்தது இந்த மயில்தான். ஒவ்வொரு வாரமும் காத்திருந்து அதனை வாங்கிப் படித்துமுடித்து, ஒருவரி கருத்தாவது எழுதி, மயில் ஆசிரியருக்கு அஞ்சல் பண்ணினால்தான் தூக்கமே வரும் என்ற அளவுக்குக் கட்டுக்கடங்கா மையல் அந்த மயில்மேல்.

‘மயில்’ கடைக்கு வந்துசேரும் முதல்நாளே வாங்கி, நம்முடைய கடிதம் வந்திருக்கிறதா என்று கண்களை அகல விரித்துப், எச்சில்தொட்டுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த அந்தநாள் ஆர்வம் புதையல் தேடுபவனையும் மிஞ்சியது. தூவல்(பேனா) பிடித்து எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது இந்த மயில்தான். ஒவ்வொரு வாரமும் என்னுடைய கடிதமோ அல்லது கட்டுரையோ கண்டிப்பாக எங்கோ ஒரு பக்கத்தில் இடம்பெற்றுவிடும். இதுவே எனக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது.

இதற்காக, மயில் இதழின் நிருவாக ஆசிரியர் பெரியவர் ஐயா.ஆ.சோதிநாதன் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையேன் ஆவேன். அந்த மயில் இதழில் அப்போது...

‘கனவுகளின் சுயம்வரம்’ என்று ஒரு தொடர்கதை வந்தது. என் இருபதுகளின் தொடக்கத்தில் ஐம்புலன்களையும் கட்டிப்போட்டுக் கொடுமைபடுத்திய கதை அது. ஒரு வாரம் படிக்காவிட்டாலும் பயங்கர மன உலைச்சலுக்கு ஆளாகிய காலம் அது. வாராவாரம் அக்கதைக்கு நான் எழுதிய மறுமொழிகளில், எழுத்துகளுக்குப் பதிலாக என் உணர்வுகளே அதிகமாகப் பதிவாகி இருக்கும்.

என் எழுத்துகளை யார் படித்தாரோ இல்லையோ, கதையாசிரியர் அரவிந்தன் விடாமல் படித்திருக்கிறார். ஒரு நாள் நான் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்காத வேளையில் என் வேலையிடத்திற்கு என்னைத் தேடி வந்தார். என் தந்தையார் வயது அவருக்கு. என்னை எப்படியாவது சந்தித்துவிடவே தேடி வந்ததாகச் சொன்னார். காலையில் வந்தவர் மாலை வரை – என் வீடு வரை வந்து அளவளாவினார். கதை பற்றிய என் மறுமொழிகளை மனப்பாடமாகச் சொல்லி மனதார பாராட்டினார். என் எழுத்தின் முதிர்ச்சிக்கும் எனக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையென வியந்து சொன்னார். தூக்கி வாரிப் போட்டது எனக்கு. கருத்து எழுதியவனைக் கதையாசிரியர் திறனாய்வு செய்வது எனக்குப் புதுமையாக இருந்தது.

எனக்குக் கிடைத்த மாபெரும் தகைமைப்பாடாக(அங்கீகாரம்) அந்த நிகழ்வை நினைத்தேன். தொடர்ந்து ஆர்வத்தோடு எழுதினேன். அதைவிட அதிகமாகப் படித்தேன்.

1993 வாக்கில், பக்கத்து ஊரில் நடந்த திருக்குறள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈர்க்கப்பட்டேன். அங்குதான் என் வாழ்க்கைப் பயணத்திற்கான இலக்கை அறிந்துகொண்டேன். தமிழ்த்திரு. இர.திருச்செல்வம், தமிழ்த்திரு. க.முருகையன் ஆகிய இருவரும், காட்டாற்று வெள்ளமாக இருந்த என் எண்ண அலைகளுக்கு இரு கரையாக இருந்து ஒரு தாளகதியில் இயங்கச் செய்தார்கள். இவர்கள்தாம் எனக்குத் ‘தீக்கை’ அளித்து தமிழ்க்கண்ணைத் திறந்துவைத்த ஆசான்கள். இன்றைய சுப.நற்குணனைச் செதுக்கிய சிற்பிகள் இவர்கள் இருவரும்தாம்.

அதுவரை கண்டதையெல்லாம் தமிழ் என்று நினைத்து படித்துக்கொண்டிருந்தவன், இதுதான் தமிழ் என்று தேர்ந்து படிக்கத் தொடங்கினேன். திருக்குறளையும் திருவருட்பாவையும் உருகிப் படித்தேன். தமிழியல் சார்ந்த ஏராளமான நூல்களைச் சேமித்துப் படித்தேன். தமிழியல் தொடர்பான ஏராளமான பணிகள், நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் என நாடு முழுவதும் என் ஆசான்களோடு சுற்றிச் சுழன்றேன். இன்றும் அப்படித்தான் சுழலுகின்றேன். அதில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 2002இல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் மாபெரும் எழுச்சியோடு ஒரு இலக்கம்(இலட்சம்) மலேசிய வெள்ளி செலவீட்டில் பெரும்பாடு பட்டு நடத்தி முடித்தோம்.

என்னுடைய பெயரைச் சுப.நற்குணன் என நிலைப்படுத்திக்கொண்டதும் இந்தக் காலத்தில்தான். என் பெற்றோர் ‘சற்குணன்’ என்று வடமொழி கலந்து எனக்கு வைத்துவிட்ட பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டேன். என் பெயரில் இருந்த இழுக்கைச் சரிபடுத்தியதன் வழியாக, அறிந்தோ அறியாமலோ; தெரிந்தோ தெரியாமலோ என் பெற்றோர் செய்துவிட்ட ஒரு கலங்கத்தைச் துடைத்தொழித்த மனநிறைவு எனக்கு எப்போதும் இருக்கிறது.

பின்னர் திருமணம், புதுமனை புகுவிழா, அருமைச் செல்வங்கள் மூவருடைய பெயர்சூட்டு விழா, இல்ல வழிபாடு, குரு வழிபாடு, இறை வழிபாடு என அனைத்தையும் தமிழ் வழியிலேயே அமைத்துகொண்டேன். இனிவரும் அனைத்தும் என் இறுதிக்கடன் உட்பட தமிழிலேயே நடக்க வேண்டுமெனவும் விருப்பம் கொண்டுள்ளேன்.

இம்மட்டில் கதையைச் சுருக்கிக்கொள்கிறேன். இனி, வலைப்பதிவு எழுத எப்படி வந்தேன் என்று சொல்லி முடித்துக்கொள்கிறேன். அதை அடுத்தப் பதிவில் சொல்வேன்.
  • நனிநன்றியுடன்:-
  • திருத்தமிழ் ஊழியன், சுப.நற்குணன் - மலேசியா.

Blog Widget by LinkWithin