Friday, September 01, 2006

தொடர் 5 : மூன்று கடற்கோள் கண்ட முத்தமிழ்

தமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.

தமிழின் பொற்காலமாக இருந்த சங்க காலமேதான் தமிழுக்குப் பேரழிவுகள் ஏற்பட்ட காலமாகவும் இருந்துள்ளது. கடந்த 2004இல் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை உலுக்கிய 'சுனாமி' பேரலை போன்ற இயற்கைப் பேரிடர் அன்றைய குமரிக்கண்டத்தையும் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரைத் தமிழ் இலக்கியங்கள் 'கடற்கோள்' எனக் குறிப்பிடுகின்றன. குமரிக்கண்டத்தில் மூன்று முறை இவ்வாறான மாபெரும் கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளதாகச் சான்றுகள் கூறுகின்றன.

தமிழின் தலைச்சங்கம் மொத்தம் 4440 ஆண்டுகளாக 89 பாண்டிய மன்னர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர்களாக 549 புலவர்கள் இருந்துள்ளனர். ஏறக்குறைய 9,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கடற்கோளினால் தலைசங்கத் தமிழ்நிலமும் தமிழ்ச்சுவடிகளும் பேரழிவுக்கு உள்ளாயின.

இடைச்சங்கம் 59 பாண்டியர் மன்னர்களின் தலைமையில் 3,700 ஆண்டுகள் நடைபெற்றது. அகத்தியம், தொல்காப்பியம் முதலான நூல்கள் தோன்றிய காலமும் அதுதான். 59 புலவர்களை உறுப்பினர்களைக் கொண்ட இடைச்சங்கத் தமிழ்மண்ணும் மக்களும் நூல்களும் இரண்டாவது முறையாக அழிவுக்கு ஆட்பட்டுள்ளனர். இப்பேரிடர் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றாவது கடற்கோள் தாக்கி குமரிக்கண்டத்தை முற்றுமாக அழித்துவிட்டது. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் 1950 ஆண்டுகள் நடைபெற்ற கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இக்காலத்தில் குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, பரிபாடல் முதலான நூல்கள் தோன்றியுள்ளன.

இவ்வாறாக, மூன்று முறை தமிழுக்கு இயற்கையின் சீற்றத்தினால் பேரிடர்கள் நேர்ந்துள்ளன. இதனால், தமிழ் நிலமும் தமிழின் பெருஞ்செல்வங்கள் அனைத்தும் தடமே இல்லாமல் அழிந்துவிட்டன. இருந்தபோதிலும், இம்மூன்று மாபெரும் தடைகளையும் கடந்து தமிழ் வென்றுவந்திருப்பது வியக்கத்தக்க செய்தியாகும்.

தொடர் 4 : குமரிநிலம் தமிழின் தாய்நிலம்

மாந்தன் முதன் முதலாகத் தோன்றிய இடம் இன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பது மாந்தவியல் (Antropology) ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உலகின் பெரிய மதங்களின் கருத்துகளோடும் ஒத்துப்போகின்றது. அதோடு, தமிழ் இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளன.

இன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இலங்கைத் தீவுக்கும் கீழாகச் சென்றால் உலகின் பழம்பெரும் நாடு ஒன்று இருந்திருக்கிறது. இந்தியா, இலங்கையையும் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா, மியான்மார், மலேசியா, ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா போன்ற நிலப்பகுதிகள் ஒன்றாக ஒட்டிக்கிடந்த ஒரு மாபெரும் கண்டமாக அது இருந்திருக்கிறது. நிலத்தியல் (Geology) ஆய்வாளர்கள் இதனை "இலெமூரியா" என்று குறிக்கின்றனர். இம்மாபெரும் நிலப்பகுதியைத் தமிழ்மரபு "குமரிக்கண்டம்" என்று வழங்குகின்றது.

இலெமுரியா அல்லது குமரிக்கண்டமே உலக உயிர்களின் பிறப்பிடமும் மாந்தனின் பிறந்தகமும் ஆகும் என்பது அறிஞர்களின் முடிவு. பழங்கற்காலம் தொடங்கி பின்னர் புதுக் கற்கால நாகரிகமும் அதனையடுத்துச் செம்பு, வெண்கல, இரும்புக்கால நாகரிகங்களும் படிப்படியாக வளர்ந்து இன்றைய நூற்றாண்டின் நாகரிகங்கள் வரையில் எல்லாவற்றுக்கும் முதலும் மூலமுமாக அமைந்தது குமரிக்கண்ட நாகரிகமே ஆகும்.

பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் படிகளைக் கடந்து குமரிக்கண்டத்தில் தோன்றிய மனித இனம் உருவாக்கிய மொழிதான் பழந்தமிழ்மொழி. இந்தப் பழந்தமிழ்மொழியே பல்வேறு காலக்கட்டங்களில் பல வகையான மாற்றங்களையும் ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் வெற்றிகளையும் கண்டு இன்றளவும் நிலைத்திருக்கிறது.

குமரிக்கண்டத்தில் குமரிக்கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, ப•றுளி முதலிய ஆறுகளும் இருந்தன. மேலும், ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என 49 நாடுகளும் இருந்தன.

தமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில்தான் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.

சங்க காலம் தமிழ்மொழி வரலாற்றின் பொற்காலம்; தமிழ் மொழி தனிப்பெரும் தலைமையோடு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த காலம்; "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பொதுவியல் நோக்கோடு தமிழ் மிகவும் உயர்ந்து நின்ற காலம். இந்தப் பொற்காலம் பின்னர் கனவிலும் நினையாத கடற்கோள்களால் அழிந்துபட்டுப் போனது ஆற்றமுடியாத கண்ணீர் காலமுமாகிவிட்டது.

தொடர் 3 : செவ்வியல் மொழி தமிழ்

தமிழ் உலகின் மூத்த மொழி என்பது இன்றைய உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும். தமிழ் இயற்கையோடு இயைந்து தோன்றிய மொழியாகும். மாந்த இனம் முயன்று உருவாக்கிக் கொண்ட முதல் மொழியாக இருப்பதற்கான சான்றுகளும் தடையங்களும் தமிழில் நிறையவே உண்டு. அதனால்தான் மாந்தனின் முதல் அறிவியல் வழிபட்ட கண்டுபிடிப்பு தமிழ்மொழி என சொல்லப்பெறுகிறது.

உலகின் மற்ற மொழிகளைப்போல் அல்லாமல் தமிழ் மிக செப்பமாக அமைந்துள்ளது. மிகவும் நுட்பமான முறையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் அடிப்படை அமைப்பியல் முறை மிகவும் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது. அதன் செம்மாந்த அமைப்பும் செவ்வியல் தன்மையும் நம்மை வியக்கச்செய்கிறது.

தமிழ் 'உயர்தனிச் செம்மொழி' என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பதே இதன் பொருள். தமிழ் என்பதற்கு மொழி என்பதோடு அழகு, இனிமை, வீரம், இறைமை, வேந்தர், நாடு எனவும் பொருள்கள் உண்டு. உலகில் மொழியைக் குறிக்கும் எந்த சொல்லுக்கும் இவ்வாறு பல பொருள்கள் இல்லை.

தமிழ் எழுத்துக்கள் மூவகைப்படும். அவை வல்லினம் மெய்யினம் இடையினம் எனப்படும். இவை மூன்றிலிருமிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து மொழிக்குப் பெயர் வைத்திருக்கும் நம் முன்னோர்களின் திறம்வியந்து போற்றாமல் இருக்க முடியாது. (த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்) தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் 'ழ்' ழை உடையது எனப் பொருள் கூறுவாரும் உள்ளனர்.

தமிழில் 12 உயிர்ரெழுத்துகள் உள்ளன. இவற்றுள் குறில் ஐந்தும் நெடில் ஐந்துமாக அமைந்துள்ள முறைமையும் குறிலுக்குப் பின் நெடியில் என்ற வைப்புமுறையும் வேறு எம்மொழியிலும் இல்லை. (ஐ, ஔ இரண்டும் கூட்டொலிகள்). 12 உயிரெழுத்துகளின் அடிப்படை ஒலிகளாக இருப்பவை அ, இ, உ ஆகிய மூன்று குற்றொலிகள்தாம். இம்மூன்று ஒலிகளும் மனிதனின் வாயிலிருந்து மிகமிக இயல்பாகப் பிறக்கும் ஒலிகளாகும். உலகின் எல்லா மொழிகளிலும் இந்த அடிப்படை ஒலிகள் இருப்பினும் தமிழில் மட்டும்தான் அதன் உண்மையான பயன்பாடும் வெளிப்பாடும் காணப்பெறுகிறது. சான்றாக, தமிழில் உள்ள 75% சொற்கள் 'உ' என்ற ஒலியிலிருந்து தோன்றியவை என்று தேவநேயப் பாவாணர் போன்ற மொழியறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

அடுத்து, 18 மெய்யெழுத்துகள் வல்லினம்(க்ச்ட்த்ப்ற்), மெல்லினம்(ங்ஞ்ண்நன), இடையினம்(ய்ரல்வ்ழ்ள்) என மூவையாகப் பிரிக்கப்பட்டு முறையாக வைக்கப்பட்டிருப்பது மற்றுமொரு வியப்பான செய்தியாகும். அதாவது 6 வல்லின எழுத்துகளின் பின் 6 மெல்லின எழுத்துகளையும் அவற்றுக்கு இடையில் 6 இடையின எழுத்துகளையும் முறைப்படுத்தி வைத்திருக்கும் நம் முன்னோர்களின் அறிவாற்றல் எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

காண்க: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

தமிழுக்கு 'முத்தமிழ்' எனவும் பெயருண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். எண்ணமும் துணிவும் இன்றி எச்செயலும் நடவாது என்பது உளவியல் கோட்பாடாகும். அதற்கு இணங்க இயல்(எண்ணம்), இசை(துணிவு), நாடகம்(செயல்) என தமிழையும் நம் முன்னோர்கள் முத்தமிழ் என அழைத்திருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

தொடர் 2 : காலம் வென்ற கன்னித்தமிழ்

எந்த ஒரு மொழியாக இருந்தாலும் கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப அமைந்தால்தான் நீடித்து நிலைபெற முடியும். மாறுதலையும் முன்னேறுதலையும் புறக்கணிக்கும் மொழிகள் புறந்தள்ளப்பட்டு உலக வழக்கிலிருந்து காணாமல் போய்விடும் என்பதற்கு எகிப்து, பாலி, சமற்கிருதம், இலத்தின், கிரேக்கம், அரமிக் இப்ரூ முதலான மொழிகளே சான்றுகளாகும்.

இந்நிலையில், மிகப் தொன்மை மொழியான தமிழ் மட்டும் காணாமல் போகாமல் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டிருப்பது எப்படி? மிக மிகக் குறைவான கால அளவீட்டை வைத்தே பார்த்தாலும் தமிழின் வாழ்வும் வளர்ச்சியும் நம்மை வியக்க வைக்கிறது. அதாவது, தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான நூலாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. தொல்காப்பியக் காலம் இன்றைக்கு 3000 ஆண்டுகள் என்றும், திருக்குறளின் காலம் இன்றைக்கு 2037 ஆண்டுகள் என்றும் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே மொழியியலுக்கும் வாழ்வியலுக்கும் தமிழில் இலக்கணம் கண்டிருக்கிறார்கள் என்றால், அந்த மொழியும் அம்மொழிப் பேசிய மக்களும் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்தும் வளர்ந்தும் வளம்பெற்றும் வந்திருக்கவேண்டும் என்பது எண்ணுதற்குரிய ஒன்றாகும்.

தொல்காப்பியருக்கும் முன்பே தமிழ்மொழி வளமிக்க மொழியாக இருந்துள்ளது; தமிழ் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளை அவரே முன்வைத்திருக்கிறார். தொல்காப்பியர் தமக்கு முன்பிருந்த பல இலக்கணப் புலவர்களைப் பற்றி 256 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 'என்மனார் புலவர்' என்ற தொடரை மிகப்பல இடங்களில் கூறியிருக்கிறார். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். எந்த ஒரு மொழியிலும் இலக்கண நூல் முதலில் தோன்ற வாய்ப்பில்லை. ஒரு மொழிக்கு இலக்கணம் வகுப்பதற்கு முன் அம்மொழியில் சிறந்த இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். இலக்கியத்தின் அடிப்படையில்தான் இலக்கணம் தோன்றும்.


ஆக, தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் செவ்வியல் மொழியாக ஆகிவிட்டது என்பதில் ஐயமில்லை. தொல்காபியத்தில் காணும் சான்றுகளை வைத்து தமிழின் காலம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என அறிஞர் பெருமக்கள் நிறுவியிருப்பதில் நிச்சயமாக உண்மையும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் பெற்றுள்ள தமிழ் எப்போது தோன்றியிருக்கும் என்பதை ஆராய முற்பட்டால் அது மேலும் சில பத்தாயிரம் ஆண்டுகளையாவது தாண்டும் என்பது திண்ணம்.


தொல்காப்பியத் தமிழும் திருக்குறள் தமிழும் இன்று படித்தாலும் புரிகின்றது. புரியாதவர்களும் அகரமுதலிகளைக் கொண்டு பொருள் கண்டுகொள்ள முடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் உயிரோடும் இளமையோடும் வாழும் மொழியாக உலகில் தமிழ் மட்டுமே விளங்குகிறது எனலாம். இதற்குக் காரணம், கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப தமிழ்மொழி தன்னைச் சீர்மைபடுத்திக்கொண்டது; செம்மைபடுத்திக்கொண்டது என்பதைத் தவிர வேறில்லை.

Thursday, August 31, 2006

தொடர் 1 : அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்

மொழி எ‎னப்படுவது எ‎ன்ன? எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்கணமா? காதல் – வீரம் எ‎ன்பதைக் கற்பனை நயத்துட‎ன் விளக்கும் இலக்கியமா? அல்லது எண்ணங்களையும் ஏடல்களையும் பரிமாறிக்கொள்ள பய‎ன்படும் தொடர்புக் கருவியா? இவற்றில் எதுவுமே ‏இல்லை!

மொழி எ‎னப்படுவது ஓர் இனத்தின் அடையாளம் – பண்பாடு – வாழ்வியல் – வரலாறு எல்லாமே! மொத்தத்தில் ஓர் இனத்தி‎ன் உயிரும் – உயிர்ப்பும் மொழியே ஆகும்.

ஓர் இனம் அழியாமல் ‏இருக்க அந்த இனத்தி‎ன் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொ‎ன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று ‏இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இ‎ன்றும் நிலைத்திருக்கி‎ன்றன.

உலகில் தோன்றிய பல பழம்பெரும் மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் மட்டுமே இன்றளவும் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

4500 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்து மொழி இன்று உலக வழக்கில் இல்லை.
3000 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வட இந்திய மொழியாகிய சமஸ்கிருதம் இன்று வழக்கில் இல்லை. தேவ மொழியாகப் போற்றப்பட்டாலும் சம்ஸ்கிருதம் மக்கள் வழக்கிலிருந்து செத்தமொழியாகவே ஆகிவிட்டது. இம்மொழியைப் பேசவோ எழுதவோ அல்லது புரிந்துகொள்ளவோ அது தோன்றிய இந்திய மண்ணிலேயே எவரும் இலர் என்றே சொல்லலாம்.

2800 ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி மன்னர்கள் வளர்த்த தாய்மொழியும் ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழியுமாகிய இலத்தீன் மொழி இன்று இல்லை. மேலைநாட்டு அகராதிகளில் மட்டுமே இம்மொழியைக் காணலாம்.

2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமான் பேசிய பாலி மொழி இன்று இல்லை. புத்த நெறி உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும்கூட அந்தத் திருநெறி தோன்றிய பாலிமொழி உலக வழக்கிலிருந்து அழிந்துவிட்டது.

2300 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் எழுச்சியோடு உலகை ஆட்டிப்படைத்த மகா அலெக்சாந்தர் பேசிய மொழி; சாக்கிரட்டீசு, பிளாட்டோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் தாய்மொழியான கிரேக்க மொழி கிட்டதட்ட அழிந்துபோய், தற்போது கிரேக்க அரசினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்று வளர்க்கப்படுகிறது.

2006 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி அன்புவழி காட்டிய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் கிட்டதட்ட அழுந்து போய்விட்டது. இசுரேல் என்றவொரு நாடு உருவானதும் யூதர்களின் எழுச்சி உணர்வு; மொழி உணர்வின் விளைவாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டும் வாழ்விக்கப்பட்டும் வருகின்றது.

மேற்குறிப்பிட்ட மொழிகளுக்கு முற்பட்ட மொழியாகக் கருதப்படும் சீன மொழி காலத்தால் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையில் சீன மக்களின் பேச்சு மொழிகள் வேறு வேறாகவும் எழுத்து மொழி மாண்டரின் மொழியாகவும் ஆகிவிட்டது. பழஞ்சீனம் இன்று எவருக்கும் புரிவதில்லை.

ஆனால்...இந்தப் பழம் பெரும் மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமாக வாழ்ந்து... இன்றும் இளமையோடு வாழும் ஒரே மொழி... நம் தமிழ்மொழிதான். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக தமிழ் மக்கள் பெருமையடையலாம்.

Friday, January 06, 2006

தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம்



குமரிக்கண்டத்திலிருந்து தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளை இந்த வரைபடம் காட்டுகிறது.
இது 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிப்போன தமிழர் வரலாறாகும்.
மூலம்:இர.திருச்செல்வம், (ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்)

Thursday, January 05, 2006

உலகில் 7 கோடி தமிழர்

உலகில் 7 கோடியைத் தொடுகிறது தமிழினம்

இன்றைக்கு பார் எங்கும் தழைத்து விளங்கும் தமிழ் இனம் அதன் வேர்களை இந்தியாவிலும், ஈழத்திலும் கொன்டு தழைத்து நின்று எண்ணற்ற விழுதுகளைப் பார் எங்கும் பரப்பி தோற்றமளிக்கிறது.

தோராய தமிழின மக்கள்

வேர்கள்

தமிழ் நாடு(இந்தியா) - 6,10,90,000
தமிழீழம்(இலங்கை) - 50,00,000

விழுதுகள்

மலேசியா - 16,00,000
ரீயூனியன் - 3,50,000
இங்கிலாந்து - 3,00,000
தென் ஆப்பிரிக்கா - 3,00,000
பர்மா(மியன்மார்) - 2,50,000
சிங்கப்பூர் - 1,20,000
கனடா - 1,20,000
பிரான்சு - 1,00,000
மொரிசியஸ் - 1,00,000
ஆஸ்த்திரேலியா - 75,000
வளைகுடா நடுகள் - 25,000
கயனா - 10,000
பிஜி - 7,000

மேலும் 50 க்கு மேற்பட்ட நாடுகளில் 3,06,000

மொத்தம் 7 கோடியைத் தொடுகிறது தமிழினம்.
Blog Widget by LinkWithin