Friday, September 01, 2006

தொடர் 5 : மூன்று கடற்கோள் கண்ட முத்தமிழ்

தமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.

தமிழின் பொற்காலமாக இருந்த சங்க காலமேதான் தமிழுக்குப் பேரழிவுகள் ஏற்பட்ட காலமாகவும் இருந்துள்ளது. கடந்த 2004இல் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை உலுக்கிய 'சுனாமி' பேரலை போன்ற இயற்கைப் பேரிடர் அன்றைய குமரிக்கண்டத்தையும் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரைத் தமிழ் இலக்கியங்கள் 'கடற்கோள்' எனக் குறிப்பிடுகின்றன. குமரிக்கண்டத்தில் மூன்று முறை இவ்வாறான மாபெரும் கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளதாகச் சான்றுகள் கூறுகின்றன.

தமிழின் தலைச்சங்கம் மொத்தம் 4440 ஆண்டுகளாக 89 பாண்டிய மன்னர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர்களாக 549 புலவர்கள் இருந்துள்ளனர். ஏறக்குறைய 9,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கடற்கோளினால் தலைசங்கத் தமிழ்நிலமும் தமிழ்ச்சுவடிகளும் பேரழிவுக்கு உள்ளாயின.

இடைச்சங்கம் 59 பாண்டியர் மன்னர்களின் தலைமையில் 3,700 ஆண்டுகள் நடைபெற்றது. அகத்தியம், தொல்காப்பியம் முதலான நூல்கள் தோன்றிய காலமும் அதுதான். 59 புலவர்களை உறுப்பினர்களைக் கொண்ட இடைச்சங்கத் தமிழ்மண்ணும் மக்களும் நூல்களும் இரண்டாவது முறையாக அழிவுக்கு ஆட்பட்டுள்ளனர். இப்பேரிடர் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றாவது கடற்கோள் தாக்கி குமரிக்கண்டத்தை முற்றுமாக அழித்துவிட்டது. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் 1950 ஆண்டுகள் நடைபெற்ற கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இக்காலத்தில் குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, பரிபாடல் முதலான நூல்கள் தோன்றியுள்ளன.

இவ்வாறாக, மூன்று முறை தமிழுக்கு இயற்கையின் சீற்றத்தினால் பேரிடர்கள் நேர்ந்துள்ளன. இதனால், தமிழ் நிலமும் தமிழின் பெருஞ்செல்வங்கள் அனைத்தும் தடமே இல்லாமல் அழிந்துவிட்டன. இருந்தபோதிலும், இம்மூன்று மாபெரும் தடைகளையும் கடந்து தமிழ் வென்றுவந்திருப்பது வியக்கத்தக்க செய்தியாகும்.

No comments:

Blog Widget by LinkWithin