Friday, September 01, 2006

தொடர் 2 : காலம் வென்ற கன்னித்தமிழ்

எந்த ஒரு மொழியாக இருந்தாலும் கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப அமைந்தால்தான் நீடித்து நிலைபெற முடியும். மாறுதலையும் முன்னேறுதலையும் புறக்கணிக்கும் மொழிகள் புறந்தள்ளப்பட்டு உலக வழக்கிலிருந்து காணாமல் போய்விடும் என்பதற்கு எகிப்து, பாலி, சமற்கிருதம், இலத்தின், கிரேக்கம், அரமிக் இப்ரூ முதலான மொழிகளே சான்றுகளாகும்.

இந்நிலையில், மிகப் தொன்மை மொழியான தமிழ் மட்டும் காணாமல் போகாமல் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டிருப்பது எப்படி? மிக மிகக் குறைவான கால அளவீட்டை வைத்தே பார்த்தாலும் தமிழின் வாழ்வும் வளர்ச்சியும் நம்மை வியக்க வைக்கிறது. அதாவது, தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான நூலாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. தொல்காப்பியக் காலம் இன்றைக்கு 3000 ஆண்டுகள் என்றும், திருக்குறளின் காலம் இன்றைக்கு 2037 ஆண்டுகள் என்றும் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே மொழியியலுக்கும் வாழ்வியலுக்கும் தமிழில் இலக்கணம் கண்டிருக்கிறார்கள் என்றால், அந்த மொழியும் அம்மொழிப் பேசிய மக்களும் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்தும் வளர்ந்தும் வளம்பெற்றும் வந்திருக்கவேண்டும் என்பது எண்ணுதற்குரிய ஒன்றாகும்.

தொல்காப்பியருக்கும் முன்பே தமிழ்மொழி வளமிக்க மொழியாக இருந்துள்ளது; தமிழ் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளை அவரே முன்வைத்திருக்கிறார். தொல்காப்பியர் தமக்கு முன்பிருந்த பல இலக்கணப் புலவர்களைப் பற்றி 256 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 'என்மனார் புலவர்' என்ற தொடரை மிகப்பல இடங்களில் கூறியிருக்கிறார். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். எந்த ஒரு மொழியிலும் இலக்கண நூல் முதலில் தோன்ற வாய்ப்பில்லை. ஒரு மொழிக்கு இலக்கணம் வகுப்பதற்கு முன் அம்மொழியில் சிறந்த இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். இலக்கியத்தின் அடிப்படையில்தான் இலக்கணம் தோன்றும்.


ஆக, தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் செவ்வியல் மொழியாக ஆகிவிட்டது என்பதில் ஐயமில்லை. தொல்காபியத்தில் காணும் சான்றுகளை வைத்து தமிழின் காலம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என அறிஞர் பெருமக்கள் நிறுவியிருப்பதில் நிச்சயமாக உண்மையும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் பெற்றுள்ள தமிழ் எப்போது தோன்றியிருக்கும் என்பதை ஆராய முற்பட்டால் அது மேலும் சில பத்தாயிரம் ஆண்டுகளையாவது தாண்டும் என்பது திண்ணம்.


தொல்காப்பியத் தமிழும் திருக்குறள் தமிழும் இன்று படித்தாலும் புரிகின்றது. புரியாதவர்களும் அகரமுதலிகளைக் கொண்டு பொருள் கண்டுகொள்ள முடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் உயிரோடும் இளமையோடும் வாழும் மொழியாக உலகில் தமிழ் மட்டுமே விளங்குகிறது எனலாம். இதற்குக் காரணம், கால மாறுதலுக்கும் உலகப் போக்குக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப தமிழ்மொழி தன்னைச் சீர்மைபடுத்திக்கொண்டது; செம்மைபடுத்திக்கொண்டது என்பதைத் தவிர வேறில்லை.

No comments:

Blog Widget by LinkWithin