Friday, June 18, 2010

மலேசியத் தமிழறிஞருக்கு அஞ்சல் தலை வெளியீடு

தமிழ் அறிஞர் ஒருவருக்கு மலேசியாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பினைப் பெற்றிருக்கும் அந்தத் தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பவர். தமிழ்த் தலைவருக்கு ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்யப்படுவது மலேசிய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கக்கூடிய இந்தச் செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. @சுப.ந.


மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாருக்கு ‘போஸ் மலேசியா’ (மலேசிய அஞ்சல் துறை) அஞ்சல் தலை வெளியிட்டிருப்பது, கழகத்திற்கு மட்டும் அல்லாமல் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருமிதம் சேர்க்கும் வரலாற்றுப் பதிவு என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பற்றும் மொழிப்பற்றும் இணைந்த தமிழ்நெறி வித்துகளை தமிழ் நெஞ்சங்களில் விதைத்த பாவலர் ஐயா திருமாலனாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சூன் திங்கள் 8ஆம் நாள் அஞ்சல் நிறுவனமான ‘போஸ் மலேசியா’ அவருடைய உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

பேரா மாநிலம், செலாமா பட்டணத்தில் தோன்றிய திருமாலனார், ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து தமிழியக் கடமைகளை ஆற்றினாலும் காலத்தால் தமிழ் நெறிக்காகத் தனி இயக்கம் கண்டார்.

தமிழர்கள் கடபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள், தமிழியச் சிந்தனைகள், தமிழ்க் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் – பொருள் துலங்கும்படி பெயர் சூட்டுவது; குடும்ப நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் தமிழியப் பண்பாட்டைப் பின்பற்றுதல்; தாய்மொழியை உயிர்மூச்செனக் கொள்ளுதல் போன்ற சிந்தனைகளை எல்லாம் பல தமிழ் நெஞ்சங்களில் விதைத்தவர் இவர்.

அப்படிப்பட்ட தமிழ்த் தகைமையாளருக்கு இவ்வாண்டு பிறந்த நாளில் சிறப்புச் செய்ய வேண்டும் என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைமையகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முனைப்புகளுக்கு ஆதரவு தந்துள்ள ‘போஸ் மலேசியா’ நிறுவனத்திற்கு மலேசியத் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரா.திருமாவளவன் கூறினார்.

ஒரு தமிழ்த் தலைவருக்குப் போஸ் மலேசியா சிறப்பு செய்வது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாலனாரின் அஞ்சல் தலைகளை வாங்க விரும்புவோர் 016-3262479 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

பி.கு: பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கவும் அன்னாரின் அரிய தமிழ்த் தெண்டூழியங்களைப் பற்றி அறியவும் இங்குச் சொடுக்கவும்.

தொடர்பான செய்திகள்:

1.பாவலர் அ.பு.திருமாலனாரின் நூல்:- வள்ளலார் கண்ட சமயநெறி


  • செய்தி:- மலேசிய நண்பன் நாளிதழ் (18.6.2010)

4 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புள்ள நற்குணர் ஐயா அவர்களுக்கு,
நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிமையுடைய ஐயா திருமாலனார் அவர்களுக்கு மலேசியாவில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டுள்ள செய்தியறிந்து மகிழ்கின்றேன்.

அவர் நினைவு தமிழகத் தமிழர்களுக்கும் உண்டாகும் வண்ணம் செம்மொழி மாநாட்டில் அவர்பெயரில் ஒரு அரங்கிற்குப் பெயரிட்டிருந்தால் மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மகிழ்ந்திருப்பார்கள்.

அஞ்சல்தலை வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்ட அனைத்துத் தமிழ் உள்ளங்களையும் போற்றி மதிக்கிறேன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Ilakkuvanar Thiruvalluvan said...

மலேசிய அரசிற்கும் மலேசிய அஞ்சல் துறைக்கும் அஞ்சல் தலை வெளியிட முயன்றவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக. பிற தமிழறிஞர்கள் உருவப்படம் கொண்ட அஞ்சல்தலைகளும் உருவம் பொறித்த நாணயங்களும் வெளியிட வகை செய்வீர்களாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் முனைவர் ஐயா,

//ஆனால், கபிலரோ எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் உடலிலிருந்து உயிரை அணு அணுவாகப் பிரித்துக்கொண்டிருக்கிறார்...//

நல்ல சிந்தனை ஐயா.

உலகமெங்கிலும் இப்படியான தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள். அதனை உணர்ந்து செம்மொழி மாநாட்டில் சிறப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால்.......!!!!!!!!!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் ஐயா,

//பிற தமிழறிஞர்கள் உருவப்படம் கொண்ட அஞ்சல்தலைகளும் உருவம் பொறித்த நாணயங்களும் வெளியிட வகை செய்வீர்களாக! //

அடுத்து முதுபெரும் பாவலர் குறிஞ்சிக் குமரனார் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு ஆவன செய்வதாக ஐயா.இரா.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது நல்லதொரு தொடக்கமாக நாங்கள் கருதுகிறோம். தமிழ்ப் பற்றாளர்கள் இப்போது நிரம்ப ஊக்கம் பெற்றுள்ளோம்.

தங்களின் பாராட்டுதல் அனைத்தும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்திற்குச் சென்று சேருவதாக. அவர்களுக்குத் தங்கள் பாராட்டுதலை அறிவிப்பேன்.

வருகைக்கு நன்றி ஐயா.

Blog Widget by LinkWithin