Saturday, November 28, 2009

இலக்கியம் இழுத்துப் பறிக்கிறது; இதயம் வலிக்கிறது


மலேசியக் கல்வித்திட்ட அமைப்பில் மிக முக்கியமான தேர்வாக இருப்பது எசுபிஎம் தேர்வு. 6 ஆண்டுகளுக்குத் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் 5 ஆண்டுகளுக்கு இடைநிலைப்பள்ளியிலும் கற்கும் மாணவர்களின் அடுத்தக்கட்ட பயணத்தை முடிவுசெய்யும் மிக முக்கியமான தேர்வாக இது இருக்கிறது.

உயர்க்கல்விக் கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், தனியார் துறை வேலை வாய்ப்பு, அரசுத்துறை வேலை என எதுவாக இருந்தாலும் அதில் நுழைவுத் தகுதியாக - அடிப்படைத் தகுதியாக எசுபிஎம் தேர்வு அடைவுநிலைதான் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு முகன்மைத்தரம் வாய்ந்த இந்த தேர்வில் தமிழ்மொழிப் பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் தேர்வுப் பாடங்களாக இருந்து வருகின்றன.

ஆனால், மலேசியத் தமிழ் மாணவர்கள் காலங்காலமாக எழுதிவந்த இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இப்போது பேராபத்து வந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு நிற்கிறது. மலேசியாவில் தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இப்போது உருவாகி இருக்கிறது.

மேற்சொன்ன எசுபிஎம் தேர்வில், அடுத்த 2010 தொடங்கி 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என கல்வியமைச்சு கொடுத்த அறிவிப்புதான் தமிழ்மொழிக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான நெருக்கடிக்கு காரணம். இந்தப் 10 பாடங்களில் 6 பாடங்களைக் கண்டிப்பாக எல்லா மாணவர்களும் எடுத்தாக வேண்டும். மீதமுள்ள 4 பாடங்களை மாணவர்களே தெரிவு செய்யலாம்.

அவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யும் பாடங்கள், அவர்களுடைய எதிர்காலத்திற்குக் குறிப்பாக அவர்களுடைய மேற்படிப்பிற்கும் அல்லது வேலை வாய்ப்புக்கும் உறுதிப்பாடு(உத்தரவாதம்) அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில், தமிழ் மாணவர்கள் மூன்று வேறு பாடங்களோடு நான்காவதாகத் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுக்கலாம். அதுவும், தமிழ்க் கற்ற மாணவர்களும் உண்மையிலேயே தமிழைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள்தாம் இதனைச் செய்வார்கள். தமிழ் படித்திருந்தாலும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லாதவர்கள் கண்டிப்பாகத் தமிழைக் கைவிட்டுவிடுவார்கள் என்பது திண்ணம்.

இப்படியாக, கட்டாயப் பாடம் 6, மாணவர்கள் தேர்வு செய்தவை 4 என 10 பாடங்கள் முழுமையடைந்துவிட்டால், தமிழ் இலக்கியத்தை எப்படி தேர்வுக்கு எடுக்க முடியும்? இதுதான் இப்போது மலேசியத் தமிழர்களிடையே வெடித்துள்ள மாபெரும் சிக்கல்.

இதுவரை சொன்னது எல்லாமே கலைத்துறை சார்ந்த மாணவர்களின் சூழ்நிலைதான். அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. அறிவியல் துறையில், 6 கட்டாயப் பாடங்கள் போக, மீதமுள்ள 4 நான்கு பாடங்களில், அறிவியல் துறை சார்ந்த இரசாயணம், வேதியல், பௌதிகம் முதலிய பாடங்களையும் கண்டிப்பாக எடுத்தாக வேண்டிய சூழல் இருப்பதால் தமிழை எடுக்கும் வாய்ப்பு கடுகளவும் கிடையாது. அதையும் தாண்டி, தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் சூழல் அறவே அற்றுபோய்ட்டது.

இப்படியான ஒரு நெருக்கடி சூழலில் இப்போது தமிழ்க்கல்வி மாட்டிக்கொண்டு பரிதவித்துக்கொண்டிருக்கிறது. அதனை நினைக்கையில் மலேசியத் தமிழர் உள்ளங்கள் எல்லாம் தாங்கொணாத் துயரில் துடித்துக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், கல்வியமைச்சின் முடிவினைக் கண்டித்தும் 10 பாடங்கள் என்பதை 12 பாடங்களாக மாற்றி அமைக்கும்படியும் தமிழ் – தமிழர் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் பற்றாளர்களும் தொடர்ந்து கண்டனக் குரல்கொடுத்து வருகின்றனர்; விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்; கல்வியமைச்சுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர்; தமிழைக் காப்பாற்றவும் தமிழ்மொழியின் நீடுநிலவலை உறுதிப்படுத்தவும் போராடி வருகின்றனர்.


அந்தவகையில், தமிழ்க் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கல்வியமைச்சிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, விளக்க அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை கல்வியமைச்சின் பார்வைக்குக் கொண்டுசெல்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய அறிக்கையில் பின்வரும் செய்திகளை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

1.சிறுபான்மை சமூகத்தின் மொழி உணர்வுகளுக்கும் அரசாங்கம் மரியாதை தர வேண்டும்.
2.தமிழ் இலக்கியப் பாடத்திற்கு நேர்ந்துள்ள இடர் குறித்து நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்திலும் குரல் எழுப்பாமல் மௌனம் சாதிக்கும் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
3.தமிழுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தடையினால் ஏறக்குறைய நான்காயிரம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியிலிருந்து பிற பள்ளிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
4.தனிழ் இலக்கியம் படிக்கும் வாய்ப்பு இல்லையெனில், தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகள் தடைபடும்.
5.இதனால், மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும் இழுத்து மூடப்படும் பேராபத்து ஏற்படும்.


அடுத்து, மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட 13 அமைப்புகளும் ஒன்றுகூடி ஆ.திருவேங்கடம் தலைமையில் மலேசியக் கல்வியமைச்சின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் பின்வருமாறு:-

1.எசுபிஎம் தேர்வில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலால் ஆறாம் படிவத்தில் எசுதிபிஎம் (STPM) தேர்வுக்குத் தமிழை எடுக்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போகும்.
2.எனவே, 5ஆம் படிவ எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3.பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை எடுப்பதற்கு வாய்ப்புகள் விரிவான முறையில் உருவாக வேண்டும்.
4.கல்வியமைச்சின் முடிவைக் கண்டித்து நாடுமுழுவதும் மாநில, நகர அளவில் கனவ ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5.பிரதமருக்கு இதன் தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்படும்.


தமிழுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டான நிலைமையைக் கண்டித்து “தமிழ் எங்கள் உயிர்” குழுவின் சார்பில் வழக்கறிஞர் பொன்முகம் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள் கீழே:-

1.மலாயாப் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல் துறையின் பெயரை மாற்ற முடிவு செய்ததற்கும், இப்போது இலக்கியப் பாடம் எழுத கல்வி அமைச்சு மறுப்பதற்கும் தொடர்பு இருக்குமோ என ஐயுற வேண்டியுள்ளது.
2.எவ்வித ஆய்வும் நடத்தாமல், தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
3.நாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் உடனடியாக கூட்டங்களை நடத்தி, “ஐந்தாம் படிவத் தேர்வான எசுபிஎம்மில் தமிழ் இலக்கியம் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி திருவேங்கடம் தலைமியிலான சிறப்புக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4.அந்த சிறப்புக் குழுவினர், கிடைக்கப்பெறும் அனைத்துத் தீர்மானங்களையும் சேகரித்து கல்வி அமைச்சரைச் சந்தித்து க் கொடுப்பதோடு சமுதாயத்தின் ஒன்றுபட்ட கருத்தைத் தெரிக்க வேண்டும்.

மலேசியாவில் தமிழ்மொழியைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை நிலைபெறச் செய்யவும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் உரக்கக் கருத்தறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இளைஞர் இயக்கங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், எழுத்தாளர் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், வாசகர் வட்டங்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் அமைதி வழியில்நின்று அறந்தவறாமல் போராடி தமிழை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.

இதனை உடனடியாக உணர்ந்துகொள்ள வேண்டும்; அந்த உண்மை உணர்வுடன் செய்யத்தக்க அனைத்தையும் செவ்வனே செய்ய வேண்டும்.

தொடர்பான செய்தி:

எசுபிஎம் தேர்வில் தமிழை அகற்றும் முயற்சிக்குக் கடுமையான கண்டனம்:- மலேசியா இன்று - (இங்கு சொடுக்கவும்)

7 comments:

Anonymous said...

கட்டுரை நன்று

மகேந்திரன் நவமணி said...

வெட்கங்கெட்ட தலைவர்கள் வாய்மூடி கிடப்பதற்குப் பதவி எதற்கு..? இன்னும் எத்தனை காலம் தான் மானங்கெட்டவர்கள் நமக்குத் தலைவர்கள் என்ற பெயரில் குழி பறிக்கப் போகின்றனரோ...

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மகேந்திரன் நவமணி,

மீண்டும் உங்கள் மறுமொழி காண்பதில் மகிழ்ச்சி.

//இன்னும் எத்தனை காலம் தான் மானங்கெட்டவர்கள் நமக்குத் தலைவர்கள் என்ற பெயரில் குழி பறிக்கப் போகின்றனரோ...//

மானங்கெட்டால்தானே அல்லது கெட்டதால்தானே தலைவர்களாக இருக்க முடியும் என்பதை யார் உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ.. நம்ம தலைவர்கள் இந்த விடயத்தில் முதலிடம்தான்...!! அது ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி.. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரிதான்!

எல்லாத் தலைவர்களும் நல்லா அரசியல் பண்ணுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இங்கு, மொழி அழிவதோ இனம் சாவதோ சமயம் நலிவதோ பற்றி எவருக்கும் உண்மையான ஈடுபாடோ அக்கறையோ கிடையாது.

தம்முடைய பதவியைவிட அவர்களுக்கு வேறு எதுவுமே பெரிதல்ல என்பது நமது மக்களுக்கு இன்னும் புரியாமல் இருக்கிறதே என சமயங்களில் வருத்தம் ஏற்படுவது உண்டு.

திருத்தமிழில் அரசியல் கலக்கக்கூடாது என்பது எனது எண்ணம். அதனால், இதைப்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை.

மகேந்திரன் நவமணி said...

சாதாரண வேலைகளுக்கு கூட அடிப்படை தகுதி உண்டு. ஆனால், நாட்டையும் சமுதாயத்தையும் ஆளும் அரசியல் தலைவர்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் இருப்பதும் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.
சமீபத்தில் செம்மொழி மலர் வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே வந்திருந்த பிரமுகர் ஒருவர் கூறிய் தகவல் ஒன்று அதிர்ச்சியைத் தந்தது. அறிவியல் துறை மாணவர்கள் எதற்காக எசுபிம் தேர்வில் தமிழும் இலக்கியம் எடுக்க வேண்டும் என்று தமிழர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர் ஒருவர் கேட்டதாக அந்தப் பிரமுகர் தெரிவித்தார். என்னவொரு மடமை... மொழியையும் இலக்கியத்தையும் அறிவியல் துறை மாணவர்கள் பயில்வதால் கேடு விளைந்திடுமா...இவர் யார் அதனை கேள்வி எழுப்ப ? இத்தகைய தலைவர்களை நம்பி தான் நம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பது எவ்வளவு வேதனைக்குரியது.

Tamilvanan said...

//அமைதி வழியில்நின்று அறந்தவறாமல் போராடி தமிழை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.//

ந‌ன்றாக‌வே கிண்ட‌ல் செய்கிறீர்க‌ள். உரிமையை பிச்சைக் கேட்க‌ சொல்கின்றீறோ?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மகேந்திரன் நவமணி,

மொழியின உணர்வற்றவர்கள் ஒரு இனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் அந்த இனமும் அவர்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சமயம் எல்லாம் என்னவாகும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டி நமக்கு வாய்த்திருக்கும் தலைவர்கள்தாம்.

இப்போதைக்கு இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, படிப்படியாக இன்னும் சில ஆண்டுகளில் கலைக்கு ஆப்பு.. பண்பாட்டுக்கு ஆப்பு.. கடைசியாக சமயத்திற்கு ஆப்பு.. அனைத்தையும் தாண்டி இனத்திற்கே பெரிய ஆப்பு காத்திருக்கிறது.

அந்தப் பெரிய ஆப்பு வைக்கப்படும்போது ஒருவேளை நாம் இருக்க மாட்டோம்..!! ஆனால், வலியும் வேதனையும் அடையப் போவது நமது குழந்தைகள்தான் நமது சரவடிகள்.. தான்..!!

//மொழியையும் இலக்கியத்தையும் அறிவியல் துறை மாணவர்கள் பயில்வதால் கேடு விளைந்திடுமா...இவர் யார் அதனை கேள்வி எழுப்ப ? //

இவர்களேதான் இன்னொரு கூட்டத்தில் போய் பேசுவார்கள். மொழியைக் காக்க வேண்டும்.. தமிழைப் போற்ற வேண்டும்.. தமிழ்ப்பள்ளியை வளர்க்க வேண்டும்...!!

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது அரசியல்வாதிக்கும் பொருந்தும்தானே. அதனால், இதற்காக தயவுசெய்து வருந்தாதீர்கள் நண்பரே..!

நாம் நமது சத்திக்கு ஏற்றதை.. செய்ய வேண்டியதை.. மட்டும் தொடர்ந்து செய்வோம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருக.. வருக!

//ந‌ன்றாக‌வே கிண்ட‌ல் செய்கிறீர்க‌ள். உரிமையை பிச்சைக் கேட்க‌ சொல்கின்றீறோ?//

இந்த நாட்டில் பிச்சைக்காரர்போல தானே நமது இனம் இருக்கிறது; பிச்சைக்காரர்போல தானே நடத்தப்படுகிறது.. பிச்சைக்காரர்போல தானே ஆக்கப்படுகிறது..!!

பிச்சைக் கேட்டால் என்ன தப்பு. பிச்சை கேட்பவர்கள் கேட்கிறோம்.

உரிமையைத் தட்டிக் கேட்பவர்கள் வீதியில் இறங்கி போர்க்கொடி தூக்கிப் போராடுங்கள்.

யாருக்கு என்ன முடியுமோ செய்வோம். ஆனால், எதுவாக இருந்தாலும் இறுதியில் நமது இனமும் மொழியும் நன்மை அடைவதுதான் முக்கியம்.

இந்திய விடுதலைக்கு காந்தி அறவழியில் போராடினார். (உங்கள் மொழியில் பிச்சை கேட்டார்) அதே சமயத்தில் சுபாசு சந்திரபோசு ஆயுதம் ஏந்தி போராடினார்.

இறுதியில் பலன் அடந்தது இந்தியநாடும் மக்களும் அல்லவா?

அப்படி இதுவும் இருந்தால் என்ன தவறு...??

எனது நோக்கமும் உங்கள் நோக்கமும் ஒன்றுதான். அணுகுமுறை வேறாக இருக்கலாம். அதற்காக நாம் ஏன் அடித்துக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து பொது எதிரியைச் சந்திப்போம்.
நமக்கானதை மீட்டெடுப்போம்.

Blog Widget by LinkWithin