மரபு வழியிலிருந்து இன்று உலகம் பின்நவினம்(Post-Modernism) வரையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து உண்டாகிய நவினக் காலத்தில் மரபு, பண்பாடு, ஒழுக்கம், நெறி, குடும்ப உறவு, பாலுணர்வு ஆகியவற்றில் மேலை நாட்டினர் பெரும் சிதைவுகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகினர். அதனையடுத்து, எழும்பியதுதான் பின்நவினம். இது இன்று எல்லாத் துறைகளையும் தழுவிக்கொண்டிருக்கிறது; விழுங்கிக்கொண்டிருக்கிறது.
மாந்த நாகரிகக் காலத்தைக் கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம், நவினக் காலம் என பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் அனைத்திற்கும் இறுதியானதாக உருவாகியிருக்கும் காலத்தைக் குறிக்கவே ‘பின்நவினம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கிற்கே உரிய பண்பட்டுப் பின்னணியில் தோன்றியதாக இருந்தபோதிலும் அது என்னவோ உலகம் முழுமைக்கும் உரிய புதிய எண்ணக்கருபோல காத்திரமாக(seriously) முன்னெடுக்கப்படுகிறது.
பின்நவினத்தைப் புரிந்துகொள்வதற்கு ‘காலம்’ என்பது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ‘பின்நவினக் காலம்’ என்பது மின்னல்வேகத்தில் மாறிவரும் மேற்கத்திய நாடுகளின் காலத்தைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் இடத்தை - காலத்தை எட்டிப்பிடிக்க கிழக்கத்திய நாடுகளுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம். அதில், தமிழ் மக்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது சிந்தனைக்குரியது.
இப்படிப்பட்ட சூழலில், மேற்கு நாடுகளில் பல்துறைகளிலும் ஊடுறுவி வியாபித்திருக்கும் ‘பின்நவின’ எண்ணக்கருவைக் கொண்டுவந்து நம்முடைய தலைக்குள் கொட்டுவது சரியல்ல என்று சொல்வதா இல்லை இப்போதைக்கு சாத்தியமல்ல என்று சொல்லுவதா?
இத்தனைக்கும், பின்நவினத்தின் வரையரைகள் பற்றி முடிவான கட்டுமங்கள் (Construct) இன்றுவரையில் மேற்குச் சமுகத்தாரிடம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்நவினம் மீது திறனாய்வு மேற்கொண்ட இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.
பின்நவினம் பற்றி இதுவரையில் வெளிவந்துள்ள ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில், பின்நவினம் என்பது ஒழுங்குசெய்யப்பட்ட - ஒருமைப்பட்ட - ஒரு முழுமையான - செறிவான கோட்பாடு அல்லது கட்டுமம் அல்ல.
இந்தப் பின்நவினம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2. பெரும் தொகுதியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை - நெறிகளை – மரபுகளை மறுத்துரைப்பது.
3. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முக அமைப்பைக் கொண்டிருப்பது.
4. மக்களின் மதிப்பைப் பெற்ற பெருநெறி, பெருங்கதையாடல்கள் (Meta Narratives) முதலானவற்றை மறுத்து சிறுங்கதையாடல்களை வரவேற்பது.
5. தன்னிலை(சுய) முரண்பாடுகளைக் கொண்டிருப்பது.
6. எதற்கும் உரிய பொதுவான தீர்வு என்று தனியாக எதுவுமில்லை என்கிறது.
7. அறிவியலே மேலான அறிவு என்ற வாதத்தைத் தகர்த்தெரிவது
8. எதனையும் மாற்றுவதோ அல்லது தீர்ப்பதோ அல்ல. மாறாக அனைத்தையும் மறுத்துரைப்பது.
9. வரலாற்று நிகழ்வுகளைத் திரும்பிப்பார்த்து புதிய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுவது.
10. முதலாளியத்தின் (Capitalism) அடக்குமுறைக்குப் பின்னெழுந்த பின்முதலாளியம், பயனீட்டாளரியல் (Consumerism) ஆகியவற்றின் பின்னனியில் வருவது.
இப்படியாகப் பின்நவினம் பற்றிய பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இதில் சிக்கல் என்னவெனில், நேரடிப் பட்டறிவுகள் எதுவும் இல்லாதச் சூழலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் கிழக்கத்திய மரபுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. புரிந்துகொள்வதே சிரமாக இருக்கின்ற நிலையில் அவற்றை ஏற்றுக்கொள்வதென்பதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
ஆளானப்பட்ட மேலைநாட்டு அறிஞர்களே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ‘பின்நவினம்’ பற்றி இங்கே இருக்கும் சிலர் கரைத்துக்குடித்துவிட்டது போல எழுதுவதும் பேசுவதும் கேள்விக்குரியதாகும். மாறாக, பொதுவுடைமை, நவினமயம், பின்நவினமயம் ஆகிய வாழ்க்கைச் சூழலில் ஒன்றன்பின் ஒன்றாக உழன்று – அழுந்தி – சிதைந்து – சீரழிந்து பின்னர் வாழ்வைத் தேடி அலையும் மேலையர்களுக்கு வேண்டுமானால் பின்நவினம் ஓரளவுக்குப் புரிதலுக்கு உரிய ஒன்றாக இருக்கலாம்; அவர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கலாம்.
இருந்த போதிலும், பின்நவினத்தைப் பற்றி கருத்துகளை முன்வைத்த லெவின்(Harry Levin), பின்நவினமானது அடிப்படையில் அறிவாண்மைக்கு எதிரானது (Anti intellectual) என்று கூறியுள்ளார்.
இறுதியாக, தமிழ் விக்கிப்பீடியா பின்நவினம் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்:-
பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடந்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.
ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
சான்றாதாரம்:-
1.கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (பேரா.முனைவர் சபா.செயராசா)
2. உயிர்நிழல்-பிரான்சு), செப்தெம்பர்-அத்தோபர், 1999 (கொ.றொ.கொன்சுரன்ரைன்)
3.உளவியல் முகங்கள் (பேரா.முனைவர் சபா.செயராசா)
4.தமிழ் விக்கிபீடியா
(மரபியல் தொடர்ந்து மலரும்)
தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)
3. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது
16 comments:
வாழ்த்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி
ஐயா சு.ப நற்குணன் அவர்களுக்கு வணக்கம். பின்நவினம் என்ன என்பதனைத் தெளிவான விளக்கத்தோடும் சான்றோடும் பகர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.
//இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.//
இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றனை பொதுவிற்கு ஏற்புடையது என அறைகூவல் விடுக்கும் கே.பாலமுருகன் போன்றோர் அவசியம் படிக்க வேண்டு. மரபுகளையும் பற்றியும் தெரியாது, நவினத்துவத்தைப்பற்றியும் தெரியாது, ஆனால் அவர்கள் பேசும் பேச்சோ உலகத்தையே விழுங்கிவிட்டதுபோல் இருக்கின்றது. எதையும் சான்றோடு வாதிடுவதுதான் கற்றவனக்கு அழகு.
நன்றி.
மு. மதிவாணன்
கூலிம்.
அருமையான கருத்துக்கள்.சில துறைகளை ஆய்வுக்குக்குரிய கருத்தாக எடுத்து கட்டுரை படைப்பது என்பது பாரட்டத்தக்க விஷயம்.நல்ல முயற்ச்சியும் கூட.வாழ்துக்கள்.
பயனான பதிவு ஐயா... பின் நவீனத்திற்கு அடுத்தபடியாக அதிநவீனம் எனும் ஒன்றும் உள்ளது.
>முனைவர் மு.இளங்கோவனார்,
தங்களின் அன்புக்கு நன்றி உடையேன். தங்களுடைய அருமைமிகு நூல்களை விரைவில் காண விழைகிறேன்.
>மு.மதிவாணன்,
தொடர்ந்து வருவதற்கு நன்றி.
//எதையும் சான்றோடு வாதிடுவதுதான் கற்றவனக்கு அழகு.//
கல்விகழகு கசடற மொழிதல்.
>மனேகரன் கிருஷ்ணன்,
முதல்முறையாகத் திருத்தமிழில் தங்களைக் காண்கிறேன். வருகைக்கு நன்றி; வாழ்த்துக்கும் நன்றி.
//தூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்
தூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்
திங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்
கொண்டு தாக்குவோம்//
தங்கள் வலைப்பதில் கண்ட வரி.
தொடர்ந்து வருக.
>விக்கினேசுவரன்,
//பயனான பதிவு ஐயா... பின் நவீனத்திற்கு அடுத்தபடியாக அதிநவீனம் எனும் ஒன்றும் உள்ளது.//
அதிநவினமா.. தாங்காதுப்பா...!!
வணக்கம், ஐயா சுப.நற்குணன் அவர்களே. சிறப்பான விளக்கம். சான்றுகளோடு தாங்கள் கூறிய கருத்துகளை நவினத்துவம் என்ற போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையற்ற கழிவுகளை எழுதித் தள்ளும் திரு.கே.பாலமுருகன் போன்றோர் கண்டிப்பாக படித்து தெளிவு பெற வேண்டும். மனிதர்களின் மனநிலை மாறி வருகின்றது என்பதால் மரபுகளை மாற்ற முடியுமா என்ன?
//ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது//
அப்படியென்றால் அதைப் பற்றி எழுதும் கே.பாலமுருகன் போன்றோர்?
என்ன கொடுமை ஐயா இது???!!!
உதயன்,
மலேசியா.
தமி்ழர்,மரபு,பாலியல், இலக்கியம்,படைப்பாளி
//தீப்பந்தத்தில் சுட்டாலும் தீக்குச்சியில் சுட்டாலும் நெருப்பு சுடுமல்லவா?//
என் கருத்துக்கு தீயை உவமை காட்டியது நன்று.
தீயினை தொட்டு பார்க்க விரும்பாத குழந்தைகள் உண்டா? எந்த தாயும் அல்லது சுற்றியிருப்போர் தீ சுடும் என்று எடுத்து சொல்லி எடுத்து சொல்லி சின்னக் குழந்தை முதலே மனதில் பதிய வைக்கிறார்கள். தீ பற்றிய நமது முதல் அறிவே தீ சுடும். தீங்கு என்பதே.
ஆனால் உண்மை நிலை என்ன?
கோரத் தீ , உடல் சுடும் தீ நிச்சயம் தீங்காகும்.
அதே சமயம் சமைக்க பயன்படும் தீ ,குளிருக்கு வெப்பம் தரும் தீ, இருட்டிற்கு வெளிச்சம் தரும் தீ ( அகல் விளக்கு / மெழுகுவர்த்தி) எப்படி தீங்காகும்?
பாலியல் ( செக்ஸ் ). நமது வாழ்க்கை முறைப்படி பாலியல் பற்றிய நமது முதல் அறிவு என்ன? அன்னியப் படுத்தபடுகிறது. இன்றும் கூட குடும்ப அளவிலாவது அமர்ந்து பாலியல் பற்றிப் பேசுகிறோமா?
ஆனால் இயற்கையில் உண்மை நிலை என்ன?
பாலியல் இல்லாமல் மனிதம் உண்டா?
வளரும் குழந்தைகள் வளர்ந்த இளைஞர்கள் பாலியல் அறிவை எங்கு பெறுகிறார்கள்? காண்பவை, கேட்பவை , படிப்பவை முதலியனவற்றிலிருந்து.இயற்கையின் மூலம் நாம் பாலியல் உணர்வைப் பெறுகிறோமே தவிர நிறைந்த பாலியல் அறிவை அல்ல.
சற்று உவமானத்தோடு ஒப்பிட்டு பார்ப்போமே.
கோரத் தீ , உடல் சுடும் தீ = பாலியல் கொடுமைகள், நோகடிக்கும் பாலியல் வன்முறைகள்
சமைக்க பயன்படும் தீ = மனித வர்க்கத்தை உருவாக்க உதவிடும் பாலியல்
குளிருக்கு வெப்பம் தரும் தீ = காதலில் உள்ள பாலியல்
இருட்டிற்கு வெளிச்சம் தரும் தீ = பாலியல் கல்வி
(இன்றைய சினிமா) கோரத் தீயாய்
( இலக்கியம்) வெளிச்சம் தரும் தீயாய்
மரபு இலக்கியத்திலே, நவீன இலக்கியத்திலே , பின் நவீன இலக்கியத்திலே பாலியல் சார்ந்த படைப்புக்கள் நிறையவே உள்ளன.
இன்றைய நவ நாகரீக உலகத்திலே அவசர யுகத்திலே நவீன இலக்கியமும் பின் நவீன இலக்கியமும் பாலியலை சூழ்நிலைகேற்ப கருத்திற்கேற்ப கதைக்கேற்ப காட்சிக்கேற்ப பாலியலை நேரடியாகவே தொட்டு பேசுகின்றது. சிலரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 50களில் 60களில் வந்த பாடல்களை கேட்டு மயங்கியவர்களுக்கு இன்றைய பாடல்கள் கசக்குமே அதுபோல.இன்று நவீன இலக்கியத்தை தற்காப்பவர்களில் சிலர் நாளை அதி நவீன இலக்கியத்தை குறை கூறும் வாய்ப்பும் உள்ளது.
நவீன இலக்கியத்தில் உள்ள பாலியல் கருத்துக்களை தீக்குச்சி,அகல் விளக்கு , மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை கொண்டு பார்த்து படித்து அவரவர் அறிவுக்கேற்ப உணர்வுக்கேற்ப வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுவோம்.
நவீன இலக்கியத்தில் கோரத் தீ தான் அதிகம் இருப்பதாய் சொல்லப்பட்டால் நான் மேலே சொன்னது போல 50களில் 60களில் வந்த பாடல்களை கேட்டு மயங்கியவர்களுக்கு இன்றைய பாடல்கள் கசக்கும் என்பதே என் பதில்.
படைப்பாளிகளை மதிப்போம். நம்மால் முடிந்த அளவு சுடர் விளக்குகளுக்கு தூண்டு கோலாய் இருப்போம்.
>உதயன்,
தொடர்ந்து வருவதற்கு நன்றி.
//சான்றுகளோடு தாங்கள் கூறிய கருத்துகளை நவினத்துவம் என்ற போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையற்ற கழிவுகளை எழுதித் தள்ளும் திரு.கே.பாலமுருகன் போன்றோர் கண்டிப்பாக படித்து தெளிவு பெற வேண்டும்.//
திரு.கே.பாலமுருகனை நேரடியாகத் தாக்கும் எண்ணம் நமக்குக் கிடையாது. அதனால், பயனேதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
இவர் என்ன பின்நவினத்தை அல்லது பாலியலை முழுக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாரா என்ன?
இவரை தாக்கிவிட்டாலோ - முடக்கிப் போட்டுவிட்டலோ மட்டும் இந்தச் சிக்கல் அடங்கிவிடாது. இவருக்குப் பின்னரும் இன்னும் பலர் எழுதுகோலைத் தூக்கிக்கொண்டு பின்நவினம் படைக்க படையெடுத்து வரலாம்.
அவர்கள் ஒவ்வொருவரையும் எவ்வளவு நாளைக்குத் தாக்கிக்கொண்டு இருக்க முடியும்?
மாறாக, இதன் தொடர்பிலான தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே முக்கியமானதாகக் கருதுகிறேன்.
இங்கே எழுதும் அன்பர்களும் அப்படியே சிந்தித்தால் மகிழ்வேன்.
மீண்டும் வருக!!
>தமிழ்வாணன்,
மிக நீண்ட மறுமொழியை எழுதியுள்ளீர்கள். ஆனால், செய்தி மிகச் சின்னதுதான்.
இருந்தாலும், உங்களுக்கு தமிழில் எழுதும் கலை நன்றாக வருகிறது. அதனை உண்மையிலேயே பாராட்ட விரும்புகிறேன். மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். (இன்னும் சொல்லத்தான் நினைக்கிறேன். ஒருவேளை புத்தி சொல்வதுபோல உங்களுக்குத் தோன்றலாம் என்பதால் விடுகிறேன்.)
பாலியலைப் பற்றிய தெளிவு உங்களுக்கு இருக்கிறது என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், இது உங்களுக்கு எப்படி வந்தது என்று கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்.
உங்கள் பெற்றோர் சொன்னவையா?
ஆசிரியர்கள் சொன்னவையா?
நவினக் கதை வழி அறிந்ததா?
நண்பர்களா? சினிமாவா? சொந்த பட்டறிவா? நீங்களாகவே கற்றதா?
இந்தக் கதையில் இந்த இடம், இந்த வரி, இந்த உவமை பாலியல் அறிவை கொடுக்கிறது; பாலியலைப் பற்றிய விழிப்புணர்வைத் தருகிறது என்று எதாவது ஒன்றைச் சான்றோடு எடுத்துக் காட்டுங்கள்.
யாரும் யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையில்லை! எது சரி எது தவறு என தீர்மானிப்பது அவரவர் விருப்பம்! என்றெல்லாம் பேசும் பின்நவினம், பிறகேன் பாலியல் கதைவழி புத்திசொல்கிறது?
எங்கேயோ ஏதோ இடிப்பதுபோல் உங்களுக்குத் தோன்றவில்லை?
நவினக் கதைகள் பாலியல் அறிவைக் கொடுக்கின்றன என்பதை விடவும் பாலியல் கிளர்ச்சியை அதிகரிக்கின்றன என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).
என்னுடைய தொடரில் இதைப்பற்றியும் எழுதுவேன். தவறாமல் படிக்கவும்.
தொடர்ந்து வருவதற்கு நன்றி!
உங்கள் மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன்.
>தமிழ்வாணன்,
//படைப்பாளிகளை மதிப்போம். நம்மால் முடிந்த அளவு சுடர் விளக்குகளுக்கு தூண்டு கோலாய் இருப்போம்.//
படைப்பாளிகள் ஒரு சமுகத்திற்கு மிகவும் தேவையானவர்கள். நானும்கூட சில படைப்புகளை எழுதியவன்தான்.
அவர்கள் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். சமுதாய நலனைப் பேணுபவர்களாக இருக்க வேண்டும்.
சமுதாயத்தின் பலவீனங்களை அறிந்து அதனையே முதலீடாக ஆக்கி பிழைப்பு நடத்தக்கூடாது.
சினிமாக்காரர்கள் போல 'மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்' என்ற வணிக நோக்கத்தோடு செயல்படக்கூடாது.
பின்நவினம் என்பது இதைத்தான் செய்கிறது. நல்லது கெட்டது, சரி தவறு என்று பார்க்காமல் அனைத்தையும் வணிகநோக்கோடு - பொருளியல் பின்புலத்தோடு பார்க்கிறது.
உண்மை - நேர்மை - பொறுப்பு - கடமை - கடப்பாடு - ஒழுங்கு - அறம் இப்படியாக எல்லாவற்றையும் மறுதளிக்கிறது.
நம் வீட்டு விளக்கு என்பதால் முத்தமிட்டுக்கொள்ள முடியாது.
கண்டிப்பாகச் சுடும்!
தீக்குச்சியோடு விளையாடும் பிள்ளையை நம்வீட்டுப் பிள்ளைதானே என்று இருமாந்து இருந்துவிட முடியாது.
வீடே எரிந்துவிடும்!
தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பதற்கு ஒப்ப தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் போராடும் என் சகோதரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்துக்களும். என் இன மக்களே வாரும் முன்னோக்கிச் செல்வோம்... வெல்வோம்...
அருமையான கருத்துக்கள்...
பயனான பதிவு...
நன்றி...
http://www.chemamadu.com/BookName.aspx?id=1
http://www.chemamadu.com/BookName.aspx?id=1
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
Post a Comment