Wednesday, June 25, 2008

தனித்தமிழ் விசைப்பலகை


கணினிக்குள் தமிழ் என்பது ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு செயலாக இருந்தது. ஆனால், இன்றோ கணினியிலும் இணையத்திலும் ஆங்கிலத்திற்கு இணையாக அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய அளவுக்குத் தமிழ் முன்னேறியுள்ளது.

கணினி மென்பொருள் உலகிலும் இணையத்திலும் தனக்கென தனியாக ஒரு தொழிநுட்பத்தையே உருவாக்கிக்கொண்டு உலகையே வலம் வந்துகொண்டிருக்கிறது தமிழ்மொழி. நிகழ்கால நூற்றாண்டில் தமிழ் அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட கணித்தமிழ் வல்லுநர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் கைகூப்பித் தொழுதல் வேண்டும்.

கணித்தமிழ் உலகில் ஆகக் கடைசியாக நிகழ்ந்துள்ள சாதனையொன்று உலகத் தமிழரையே வியக்கச் செய்துள்ளது. குறிப்பாக, தனித்தமிழ்ப் பற்றாளர்களை மனங்குளிர வைத்துள்ளது.

ஆம்! கணினியில் தட்டச்சு செய்யும்போது கிரந்த எழுத்துகள் அறவே தலைக்காட்டாமல் இருக்க புதியதாக ஒரு விசைப்பலகைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- (ரவி வலைப்பதிவிலிருந்து...)

*********************************************************
ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தமிழ் விசைப்பலகையால் என்ன பயன்?

*எனக்கு கிரந்தம் தவிர்த்து தனித்தமிழில் எழுத ஆவல். ஆனால், தட்டச்சு மென்பொருளில் கிரந்தம் இருப்பதால் பழக்கம் காரணமாக அதைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. இனி தவிர்க்கலாம்.

*தனித்தமிழ் ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கும், தனித்தமிழ் பரப்பவும் இந்தக் கோப்புகள் உதவலாம்.

*எங்காவது கிரந்தம் தவிர்த்து எழுதினால், ” நீ எப்படி கிரந்தம் தவிர்த்து எழுதலாம்” என்று கேட்கிறார்கள். “ஐயா, அம்மா, என் மொழியிலும் அதை எழுத நான் பயன்படுத்தும் மென்பொருளிலும் கிரந்தம் இல்லை” என்று சொல்வது இலகுவான விடையாக இருக்கும் தமிழில் எழுத மென்பொருள் இல்லையென்று தமிங்கிலத்தில் எழுதுபவர்களை ஏற்றுக் கொள்ளும் போது இதையும் ஏற்றுக் கொள்வார்கள் தானே..!

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அறிமுகத்துக்கு நன்றிங்க. இதைக் கண்டுபிடிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. ஏற்கனவே இருந்த விசைப்பலகைக் கோப்புகளில் கிரந்த எழுத்துகளை மட்டும் நீக்கி வெளியிட்டிருக்கிறேன். 5 நிமிடங்களில் இதை யாரும் செய்யலாம்.

தளத்துக்கு நீங்கள் தந்த தொடுப்பு வேலை செய்யவில்லை. http://blog.ravidreams.net/?p=307 என்ற முகவரிக்கு தொடுப்பு தரலாம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

மதிப்புமிகு ரவிசங்கர் அவர்களே,

கணித்தமிழ் உலகில் அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்ற தங்களை பெரிது மதிக்கின்றேன். தங்களின் பணிகளைக் கண்டு பல வேளைகளில் வியந்துள்ளேன். மற்ற மொழிகளுக்கு நிகராக கணினி இணைய அரியணையில் தமிழையும் அமரவைக்க பெரும் பாடாற்றி வருகின்ற தங்களையும் தங்களைப் போன்ற கணித்தமிழ் முன்னோடிகளையும் மனதார பாராட்டுகிறேன்.

தங்களின் மறுமொழி கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பதிவு தொடர்பில் தாங்கள் காணுகின்ற குறைபாடுகளையும், வலைப்பதிவை மேம்படுத்தும் வழிகளையும் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழிணையம் குறித்த ஆர்வமுண்டு. ஆனால், நீங்கள் சொல்கிற அளவுக்கு ஏதும் சாதித்ததாகத் தெரியவில்லை. எனினும் உங்கள் அன்பான சொற்களைக் கண்டதில் மகிழ்ச்சி.

தமிழ் நலம் குறித்த உங்கள் தொடர் இடுகைகளைப் படித்து வருகிறேன். வலைப்பதிவில் குறை என்று ஏதும் தோன்றவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஐயா உங்களில் பதிவுகள் படிப்பவர்கள் மத்தியில் அதீத தமிழார்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது... உங்கள் இடுக்கைகளை படிப்பதில் மகிழ்கிறேன்... மேலும் தொடருங்கள்...

சுப.நற்குணன்,மலேசியா. said...

நண்பர் விக்கினேஸ்வரன் அவர்களே,

தமிழ் ஒரு பெருங்கடல். அதில் நாம் தேடிக்கண்ட முத்துக்கள் மிகச் சில மட்டுமே! அந்த மிக சில முத்துக்கள் மட்டுமே மிகப் பெரிதான தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. தமிழைப் படிக்க படிக்க தன்னம்பிக்கை வருகிறது என்பது உண்மை.

தமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை என நான் எப்போதும் சொல்வது உண்டு. தமிழை ஆழ்ந்து படிப்பதைத் தவிர வேறு தன்னம்பிக்கை நமக்குத் தேவையில்லை!

தங்களைப் போன்ற இளையோர்கள் தமிழை முன்னெடுத்துச் சென்று, அடுத்த தலைமுறைக்குச் சேர்க்க வேண்டும் என்பதே நம்முடைய அவா!

Anonymous said...

தனித்தமிழ் விசைப்பலகை என்ற செய்தி கண்டு மிகவும் பூரிப்பு அடைகிறேன். கிரந்தப் பித்துப் பிடித்தவர்கள் வேண்டுமானால் அதனைக் கட்டி அழட்டும். தனித்தமிழ் பற்றாளர்கள் அனைவரும் இனி இந்தத் தனித்தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தலாம். இப்படி ஒரு அரியச் செய்தியை அறிய செய்த திருத்தமிழ்ப் பணி வாழ்க!

Blog Widget by LinkWithin