Tuesday, June 10, 2008

உலகின் முதல் தாய்மொழி தமிழ் ! -பாவாணர் நிறுவிய உண்மை


தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர்.


இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர். ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச் செயல்களால் தமிழ் தாழ்வுறுத்தப்பட்டுக் குலைந் துலைந்து நிலையிழந் திழிந்தது.தமிழருள்ளும் தன்மானமும் தாய்மொழிக் காப்புணர்வும் மிக்க சிலர் தாய்மொழி மீடசிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிகளுக்குத் தம் அறிவழுத்தம் சான்ற ஆக்கமான அறிவு வெளிப்பாடு களால் பெரும் வலிவைச் சேர்த்தவர், பாவாணர் எனப் பரவலாகப் பலராலும் அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் ஆவார். அஃகி அகன்ற தம் ஆய்வறிவால், மொழியாய்வில் மாபெரும் விழிப்புணர்வை உண்டாக்கிய பெருமை அவருக்கே உரியதாகும்.


பாவாணரின் தலைசிறந்த மாணாக்கரும் தமிழின விடுதலைப் பாவலரும் தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ்நிலம்' ஆகிய மூன்று தூயதமிழ் இதழ்களின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவாணரைப் பற்றி எழுதுகையில், “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின், தமிழ் தன்னை நிலைப் படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்."


பாவாணர் கண்டுகாட்டிய உண்மைகளில் மிக முகாமையானது, 'தமிழே உலகின் முதல் தாய்மொழி' என்பதாகும். மொழியியல் அடிப்படையில், வேர்ச்சொல் ஆய்வுகளின் வழி இந்தக் கருத்தைப் பாவாணர் நிறுவியுள்ளார். இந்தக் கருத்து எந்த அளவுக்கு உண்மை! இந்தக் கருத்து ஏற்கத்தக்கதா?


3 comments:

Anonymous said...

ஐயா,
வணக்கம்.
பாராட்டுரைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாவாணர் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரில், பாவாணரின் இன்னொரு நூலைப்பற்றிய என் கட்டுரையும் உள்ளது.
உங்கள் ஈடுபாட்டிற்கும் ஊக்கத்திற்கும் பாராட்டும் நன்றியும் !

அன்பன்,
தமிழநம்பி.
http://thamizhanambi.blogspot.com/

அகரம் அமுதா said...

பாவாணர் பற்றிய கட்டுரையைப் படித்தேன். அருமை. பல மேனாட்டறிஞர்கள் தமிழ்தான் முதன்மொழி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வடவர்தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

முகாமை என்ற சொல் பாவாணர் நிறுவியதல்லவா? அதனை முகன்மை என்றும் சொல்லலாம் அல்லவா?

Ravi Devaraj said...

அன்புள்ள நண்பரே

தங்கள் சீரிய முயற்சிக்கு என் உளங்கனிந்த நல்வாழ்த்துகள். மேலும் தொடர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன், தங்களிடம்.


தங்கள் உண்மையுள்ள
இரவி

http://www.ravivararo.blogspot.com
http://www.scribd.com/dravivararo

Blog Widget by LinkWithin