Tuesday, April 29, 2008

பாவேந்தர் பாரதிதாசனார்

(29-4-2008ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழரிடையே தமிழ் மண்ணில் பிறந்த நினைவு நாள். அவருடைய நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது)பாரதிதாசன்....! உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின் சொல்லுருவம் அது!

"கவி எப்படி உருவாகிறான் என்பது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் பாரதிதாசனைத் தான் உவமையாகக் காட்டியிருக்கிறேன். என் கவிதை மண்டலத்தில் பாரதிதாசன் ஒரு பகுதி" புரட்சிக்கவி பற்றி மகாகவி பாரதி எழுதியிருக்கிறார்.

"முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து முதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன" என பேரறிஞர் அண்ணா பாவேந்தரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின் முழவும் −னிக்கும்; பாரதிதாசன் பாட்டும் −னிக்கும்' என மொழிகின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

''பழமை - மதவாதம் - ஆசாரம் ஆகியவற்றில் ஊறிக் கிடந்த தமிழ்மக்களிடையே அவருடைய பாடல்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆதலால் −வரைப் புரட்சிக்கவி எனலாம். அமெரிக்கா கண்ட புரட்சிக்கவி வால்ட் விட்மன் போல் தமிழ்நாடு கண்ட புரட்சிக்கவி பாரதிதாசன்'' எனக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.


''மாபாவலன் பாரதியார் −ன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துக்கள் பல. அவற்றுள் முகாமையாவை ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவும் கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனும்'' எனக் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.

''நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்று பறைசாற்றும் முறுக்கான மீசை, வயதை விழுங்கிய வாலிப வீறு, உணர்ச்சி பொங்கும் பேச்சு, புதுமை வேட்கை கொண்ட உள்ளம் ஆகியவற்றின் கலவையே பாரதிதாசனார்'' என முழங்குகிறார் சுத்தானந்த பாரதியார்.

பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கி எழுந்த பாவுணர்வு தமிழர் விடுதலை நோக்கிப் புதுவழியில் நடையிடல் ஆயிற்று! அது புரட்சி மனப்பாங்கு வாய்ந்தது! எனவேதான், பாரதிக்கு வாய்க்காத புரட்சிப் பாவலர் என்ற பட்டம் பாரதிதாசனுக்கு மக்களால் கொடுக்கப்பெற்றது என்று எழுதுகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

''புரட்சிகரமான கருத்துக்களைத் துணிவோடு வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் பாரதிதாசனார் ஒருவரே. அவருக்குப் பிறகு அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் இதுவரை தோன்றவேயில்லை. அவ்வாறு தோன்றியவர்களும் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாரதிதாசன் போல புரட்சிக் கவிஞர்கள் தோன்றியிருந்தால், கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுக்காலமாக தமிழரிடையே இழிவுகளும் இன்னல்களும் −ருந்திருக்குமா?'' எனக் கேள்வி கேட்கின்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.இப்படியாக, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கிய பலரும் பாரதிதாசனின் வரலாற்றுச் சிறப்பு எத்தகையது என்பதைக் கூறிச் சென்றுள்ளனர்.

ஏறத்தாழ எழுபத்து நான்காண்டுகள் வாழ்ந்து, செந்தமிழ்க்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லரிய தொண்டுசெய்து, எண்ணற்ற பாமணிகளை வாரி வழங்கி, தமிழே மூச்சாய், வாழ்வாய், இன்பமாய் இருந்தவர் பாரதிதாசன் என்னும் புனைப்பெயர் கொண்ட திரு.கனக.சுப்புரத்தினம். அவர் 1891, ஏப்பிரல் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.

'நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்' என்று தம் தோற்றத்தை விளக்கும் அவ்வரிய தமிழ்ப்பாவேந்தர், வெறும் பாரதிதாசனாக இல்லாமல், தமிழ்ப்புரட்சி செய்த முதல் புரட்சிப் பாவலராய் தமிழகத்திடையே வாழ்ந்து வந்தார். அவர் வரலாறு தமிழரின் மறுமலர்ச்சி வரலாறாகும்; தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக் கதையாகும்; தமிழர்தம் மான உணர்வுக்குக் கலங்கரை விளக்காகும்.

பாரதியாரின் உள்ளம் இந்திய நாட்டு விடுதலையை எதிர்நோக்கிப் பாடியபொழுது, பாரதிதாசன் தமிழ்நாட்டு விடுதலைக்கெனக் குரல்கொடுத்தார். தமிழ்மக்களின் ஆறாத் துயரும் அவல நிலையும் பாரதிதாசனின் உள்ளத்தில் ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கின. இதன் பயனாக, தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைப்பது ஒன்றே தம் வாழ்வென வரையறுத்துக் கொண்டார்.

"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,
செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும்" என்பது அவர் கூற்று. இப்புரட்சி மனப்பான்மையால் இவர் பெற்ற துயரங்கள் பலப்பல. இவர் பெறாத நன்மைகள் கோடி. இருப்பினும் 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார்.

தமிழன் உய்வுக்கும் வாழ்வுக்கும் அடிப்படையாக நிற்பது தமிழே என்றுகூறித் தமிழ் இளைஞர் தமக்கு இவர் ஊக்கம் கொடுப்பதைப்போல் வேறு எந்தப் புலவரும் செய்ததில்லை.

"உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு
நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்,
நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டாரோ" என்றும், "வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?" என்றும் தமிழ் உணர்வை ஊட்டினார். "சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழை" அவர் காதலித்தது போல் கம்பனும் காதலிக்கவில்லை. தமிழே அவர் உயிர்! மூச்சு! அவர் தமிழின் உருவம்!

"தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்." என்று தமிழர்க்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருக்கவேண்டிய மொழி, இன நலனையும் கடமையையும் எடுத்துக்கூறினார்.

"பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே - உடல் பச்சை ரத்தம் பரிமா றிடுவோம்" என்று தீப்பொறி பறக்கும் தமிழ் உணர்ச்சியைத் தமிழரிடையே விதைத்து தமிழ்; தமிழர் விடுதலைக்கு வித்திட்ட விடுதலைப் பாவலர் தமிழக வரலாற்றில் பாவேந்தர் ஒருவரே. இவ்வுலகிடை தமிழும் தமிழரும் நிலைத்திருக்கும் காலம் முழுமைக்கும் பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் மறையாதிருக்கும்; உண்மைத் தமிழர் அவரை மறவாதிருப்பர்.

No comments:

Blog Widget by LinkWithin