Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

6 comments:

நந்தா said...

நான்கு பாகங்களையும் படித்தேன். உங்களின் அனைத்துத் தகவல்களும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தன. மிக தேவைப்படும் ஒரு பதிவு இது. நன்றி.

http://blog.nandhaonline.com

Anonymous said...

வணக்கம். தமிழ்ப் புத்தாண்டு எது என்ற குழப்பத்தில் இருந்துவந்த எனக்குத் தங்களின் இந்த 4 பாகங்களாக வெளிவந்த கட்டுரை நல்லதொரு தெளிவினைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. நல்ல தெளிவான விளக்கம் கிடைத்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கு தங்களின் கட்டுரையைப் படியெடுத்துக் கொடுத்துள்ளேன்.

இருப்பினும், இப்போது நடப்பில் வடமொழிப் பெயர்களைக் கொண்டிருக்கும் 60 ஆண்டுகள் தமிழர்கள் கண்ட ஆண்டுமுறை என்றால், அதனுடைய பெயர்கள் ஏன் தமிழாக இல்லை? மற்றும் இராசி, நட்சத்திரம் போன்றவற்றின் பெயர்களும் தமிழாக இல்லை!

இது மனதுக்கு நெருடலாக உள்ளது. இதற்குத் தங்களின் விளக்கம் கிடைக்குமா?

மிக அருமையான வலைப்பதிவை நடத்திக்கொண்டிருக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். திருத்தமிழ் என்ற வலைப்பதிவின் பெயரும் அருமை. தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

அன்புடன்,
இளையவேல்,
சிரம்பான்.

Anonymous said...

சித்திரைப் புத்தாண்டுக்கும் கிருஷ்ணர் நாரதரர் கதைக்கும் தொடர்பு உள்ளதாகச் சிலர் பழங்காலம் தொடங்கி கதைக்கட்டி விட்டுள்ளனர் என நினைக்கிறேன். இதற்கு சரியான விளக்கம் கிடைக்குமா?

இப்படிக்கு,
செல்வகணேசன்
சிகாமட்

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் செல்வகணேசன் அவர்களே..,

கிருஷ்ணர் - நாரதர் கதை உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அக்கதை முழுக்க முழுக்க ஆரியவழி வந்த சில சமயத்தாரின் நம்பிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அதைப்பற்றி நாம் விவாதிப்பதில் நன்மை எதுவுமில்லை.

ஆனால், அந்தக் கதையைக் கொண்டுவந்து தமிழனோடும், தமிழர் புத்தாண்டோடும் தொடர்புபடுத்தி பேசுவதைத்தான் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அடுத்தவன் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் நம் வீட்டில் வந்து கொட்டினால் நாம் பொறுத்துக்கொள்வோமா? அப்படித்தான் இதுவும்.

கிருஷ்ணர் - நாரதர் கதையை அவர்களோடு வைத்துக் கொள்ளட்டும். சமயம், இறைநம்பிக்கை, மதம் என்ற போர்வையில் அதனைக்கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டவேண்டாம் என்பதே நம்முடைய வாதமும் வேண்டுகோளும் ஆகும்.

Anonymous said...

தைத்திங்கள் தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு முறை மலேசிய நண்பன் நாளிதழில் படித்தேன். அண்ணன் ஆதி. குமணன் எழுதியது. இப்பொழுது இன்னும் நன்றாகப் புரிகிறது.

ஆனால் இன்னும் பல இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் சித்திரை முதல் நாளைத் தான் தமிழ் புத்தாண்டு என்று காட்டுகின்றனர். தை முதல் நாளை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் என்று மட்டும் தானே சொல்கின்றனர்!!! இதனை யாரால் மாற்ற முடியும்?

aalunga said...

தமிழ் புத்தாண்டு தைத் திங்களில் தான் துவங்க வேண்டும் என்பதை வரலாற்று சுவடுகளோடு எடுத்து உரைத்து இருக்கிறீர்கள்.
நல்ல பதிவுத் தொடர்.
பல அரிய தகவல்களை அறிய உதவியமைக்கு நன்றி.

Blog Widget by LinkWithin