Monday, April 21, 2008

தமிழவேள் கோ.சாரங்கபாணி


(20.4.2008ஆம் நாள் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பிறந்தநாள். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)


கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கை, மலாயாவில் தமிழும் தமிழரும் நிலைப்பெற்று இருப்பதற்கு தன்னையே ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரிலும் பின்னர் மலாயாவிலும் தமிழர் திருநாள் கண்டவர். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார்.

மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க் கலை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும் பாடாற்றியவர்.

பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியின்போது மலாயா இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல் கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த சங்கத்தின்வழி போராடியவர்.

தமிழ் முரசு என்ற நாளிதழைத் தொடங்கி மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர் விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும், தமிழர் நலமொன்றையே மேலாகக் கருதியவராகவும் திகழந்தார். தமிழ் முரசு நாளிதழ் வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். இதன் வழியாக ஆயிரமாயிரம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், பேச்சாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிக் காட்டினார். தமிழகத்திலிருந்து மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, மாலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் அமரர் கோ.சா என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமற்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே வைக்கவேண்டும் என்று போராடினார்.

பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச் செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக் காப்பாற்றிய பெருமகனார் இவராவார். இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும் தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை அமைந்தது.

'தமிழர் திருநாள்' என்ற பெயரில் மாபெரும் தமிழ்; தமிழர் எழுச்சிப் பெருவிழாவினை ஏற்படுத்தி மலாயாவில்(மலேசியாவில்) வாழும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி, இன்றளவும் தமிழும் தமிழரும் தங்களின் தாய்மொழி உரிமையோடு வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தை வழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் அந்த மொழி, இனநலச் சான்றோன் பொன்னடிகளை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் போற்றிக் கும்பிட வேண்டும்.

3 comments:

Anonymous said...

அன்புள்ள ஐயா வணக்கம்.
நான் சிங்கையில் வாழ்ந்து வருகிறேன். சிங்கையிலும் மலேயாவிலும் தமிழ் வளம் செழிக்கச்செய்த எனது குருநாதர் அமரர் தமிழவேள் ஐயா பற்றி உங்கள் இணையப் பகுதியில் படித்து மிகவும் உவகை அடைந்தேன். என்னை ஒத்த அக்கால பல இளஞர் நெஞ்சில் தமிழ் உரத்தையும் உணர்வையும் ஊட்டி தமிழ் எழுச்சியை ஏற்படுத்திய தமிழவேள் ஐயா அவர்களை நினைவுப்படுத்திய தங்கள் செயலைப் போற்றுகிறேன். இணையத்தில் ஐயா தமிழவேள் அவர்களைப் பற்றி செய்திகள் காணக்கிடைப்பதில்லை. உலக அரங்கில் அந்த மாபெரும் சரித்திர நாயகனின் புகழ் பரப்பப்பட வேண்டும். தமிழ்க்கூறு நல்லுலகம் ஐயா தமிழவேள் அவர்களை நித்தமும் நினத்து போற்றிட வேண்டும். அவர் புகழ் மங்காமல் தமிழர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நல்ல பணியை மலேஷிய இளைஞரான நீங்கள் செய்துள்ளீர்கள் ஐயா. எனது அன்பான வாழ்த்துகளை உங்களுக்கு வழங்குகிறேன்.

வாழ்க தமிழவேள் புகழ்!
வளர்க தமிழ்மொழி மாண்பு!

இவண்,
இராம.கதிர்வாணன்
சிங்கை

Anonymous said...

தமிழவேள் ஐயா அவர்களை நினைவுக்கூர்ந்து கட்டுரை படைத்த திருத்தமிழ் இணையத்தளத்திற்கு என் நன்றி.

அன்புடன், சிவபாலன்

Kanags said...

பார்க்க:
விக்கிப்பீடியாவில் கோ. சாரங்கபாணி

Blog Widget by LinkWithin