7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.
•கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எனலாம்.
•23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட மாத்திறம் கொண்டவர்.
•மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.
•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.
•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.
•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.
•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.
•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.
•7-2-1902இல் மண்ணுலகில் வந்துதித்த பாவாணர் என்னும் ஊழிப் பேரறிஞர் 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் இறைவனடி சேர்ந்தார். பாவாணரைப் போன்ற பேரறிஞர் ஒருவரைப் பெற்றதற்காக தமிழ்க்கூறு நல்லுலகம் என்றுமே பெருமையடையலாம்.
பாவாணரின் கண்டுபிடிப்புகளை உலகம் மதித்து ஏற்கும் பொற்காலம் கண்டிப்பாக மலரும். உலக உருண்டையின் மிகநீண்ட வரலாற்றில் பெரும்பகுதியைத் தமிழ்மொழி தன்னுள் கொண்டிருக்கும் உண்மை கண்டிப்பாக வெளிப்படும். அதுவரையில் பாவாணரின் புகழ் உலகத்தில் நிலவும்; அதன்பின்னர் உலகத்தின் உச்சியில் பாவாணரின் புகழ் மிளிரும்.
பாவாணர் இணைய இணைப்பு :
No comments:
Post a Comment