Friday, February 08, 2008

உலகம் யாவையும்... (தமிழமுது 1)

கடவுள்நெறியைப் போற்றி வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரின் கடவுள் கொள்கையை பறைசாற்றும் அகப்புறச் சான்றுகள் மிக ஏராளம். தமிழரின் மறைநூலாகிய திருக்குறள் இறைமையை ஏற்றுப்போற்றும் நூலாக மிளிர்கிறது. திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் இறைவனின் அருங்குணத்தையும் அருட்கொடையையும் ஆழ்ந்து விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சூரியன், சந்திரன், மழை முதலான இயற்கைப் பொருளாக எல்லாம்வல்ல இறைமையை உணர்த்திப் பாடியுள்ளார். இவ்வாறாக, தமிழ் இலக்கியங்கள் பலவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்குகின்றன. அவ்வழியில், கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கடவுளின் பெருமையைப் பாடியுள்ளார். அந்தக் 'கடவுள் வாழ்த்துப்' பாடல் இதோ:-

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)

உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.

'உலகம் யாவையும்' என்ற அன்றைய கம்பரின் தொடர் இன்றைய அறிவியலை விளக்குவதாக உள்ளது. நாம் வாழும் உலகத்தையும் தாண்டி வேறு உலகங்கள் இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். ஆனால், தமிழர்களோ அன்றே இந்த உண்மையை உணர்ந்துவிட்டனர் என்பதற்கு இப்பாடல் நற்சான்று. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைத் தனியராகவே செய்கிறார் என்ற தமிழரின் கோட்பாட்டைக் கம்பரும் இப்பாடலில் வழிமொழிகிறார். (அமுது ஊறும்...)

No comments:

Blog Widget by LinkWithin