Saturday, August 04, 2007

இறைவன் இருக்கின்றார்!


மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் 'தமிழர் மதம்' என்ற ஆய்வு நூலில் கடவுள் உண்டு என்பதற்கான அசைக்க முடியாத புறச்சான்றுகள் இருக்கின்றன என வலியுறுத்துகின்றார். அதனை வைதே கடவுள் எனும் பேராற்றல் இருக்கின்றது என நம்பத் தோன்றுகிறது என்ற ஒரு முடிவான கருத்தை அவர் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:-

1. கதிரவன்(சூரியக்) குடும்பத்தைச் சேர்ந்த கோள்கல் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன. ஓர் ஊரில் ஊர்க்காவலரோ, ஆரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லாவிடினும் கலகமும் கொள்ளையும் கொலைகளும் நேர்கின்றன. உயிரற்ற நாளும், கோளும் பாவையாட்டுகள் (பாவை விளையாட்டுகள்) போல ஒழுங்காக ஆடிவருவதால், அவற்றை ஆட்டும் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ்வாற்றலே இறைவன்!

2. இவ்வுலகம் முழுவதற்கும் கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ண இயலாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன. ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதில் குடியிருக்கும் மக்களுக்கே. மக்கள் இல்லாவிட்டால் வீட்டில் விளக்குத் தானாகவே தோன்றி எறியாது. பல உலகங்களுக்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் இருவன் இருக்க வேண்டும். அவனே இறைவன்!

3. பிற கோள்களைப் போல் சுற்றாது ஒரே இடத்தில் இருக்கும் கதிரவன் பத்து திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையாய் இருப்பதும், அளவிடப்பட முடியாத நீண்ட நெடுங்காலமாக எரிந்து வரினும் அதனது எரியாவியாகிய சத்தி குறைந்து அணையாமல் இருப்பதும், இயற்கைக்கு மாறான இரும்பூதுச் செய்தியாதலால், அதை இயக்கி ஆளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும்! அப்பரம்பொருளே இறைவன்!

4. கோள்கள் ஒன்றோடு ஒன்று முட்டாது, தத்தம் கோள்வழியில் இயங்குமாறும், இவை சுழழும்போது இவற்றின் மேல் உள்ள பொருள்கள் நீங்காதவாறும் ஒவ்வொன்றையும் சூழ ஒரு கவர்ச்சி(ஈர்ப்பு) மண்டலம் அமைந்திருப்பதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பேயாகும். இவ்வமைப்பே இறைவன்!

5. காலமும் இடமும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையாதலால் இன்றைய மக்கள் உலகம் தோன்றுமுன், எண்ணிக்கையற்ற உயிர் உலகங்கள் தோன்றி அழிந்திருத்தல் வேண்டும்.
"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதா னொன்றி லோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்றுரத்தனன்"
(மணிமேகலை)

6. மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆயிற்று என வைத்துக்கொண்டாலும், நூற்றுக்கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக்கணக்காகத் தொடங்கிய மக்கள் தொகை இன்று நூறு கோடிக்கணக்காகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனையராயினும் அத்தனை பேரும் அடையாளம் காணுமாறு வெவ்வேறு முக வடிவில் உள்ளனர். கைவரையும்(ரேகை) வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும். அப்பேராற்றலே இறைவன்!

7. 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மெய்யே இறைவன்!

8. உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளவரும் இல்லாரும் படைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படைப்பாற்றலே இறைவன்!

9. பஞ்சம், கொள்ளை, நோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்கின்றன. இந்த இயற்கையாற்றலே இறைவன்!

1 comment:

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் ஐயா,
தற்சமயம் நான் உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் எனும் நூல் வாசித்து வருகிறேன் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கட்டுரையும் அதில் உண்டு.

1) அவரின் பெயர் காரணம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா? (அறிந்துக் கொள்ள நினைக்கும் தேவையற்ற கேள்வி)

2) அவரின் கட்டுரைகள் வாசித்தேன். அவரின் தனித் தமிழ் பற்றை மதிக்கிறேன். ஆனால் ஒரு சாதாரண வாசன் வாசிக்கும் போது பல புரியாத வார்த்தைகளால் அது மயக்கத்தை ஏற்படுத்தாதா? (அகராதியை புரட்டும் வாய்ப்பு உண்டானது. எனக்கு மகிழ்ச்சிதான்.)

3)திருத்தமிழ் மற்றும் திருமன்றம் என பெயரிட்டு இருக்கிறீர்கள். திரு என்பதன் அர்த்தம் என்ன?

திரு என்பதை ஆண் பாலை குறிக்கும் சொல் எனக் கொண்டால்,
திருமகன்= மகன் எனும் சொல் ஆணைக்குறிக்கிறது.
திருமகள்= மகள் என்பது பெண்னைக் குறிக்கிறது.
திரு எனும் சொல்லின் அர்த்தம் என்ன?

Blog Widget by LinkWithin