Sunday, July 14, 2013

கூகிள் கண்ணாடி - கண்ணுக்குள்ளேயே கணினி

தகவல் தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு கருவிகளின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன. எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்கள் அனைத்தும் மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி, அவை மீள்திறக் கைபேசி (Smart Phone) என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக கருதப்பட்டது.
இன்றைய நவின தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது என்பது சிந்தனைக்குரியது. 
மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக் கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு அருகில் ஒளி ஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen) காட்டும்.
கூகிள் கண்ணாடி உள்ளடக்கம்
கூகிள் கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (Processor), புவியிடங்காட்டி (GPS), கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி,  ஒலிபெருக்கி (Mic, Speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளியுருக்காட்டி (Projector) ஆகியவற்றுடன், இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.
நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் ஒளியுருக்காட்டி நேரடியாக ஒருவரது விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் உண்மைக் காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.
கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண் கணினியை மீள்திறக் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள படக்கருவியின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point) படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.
கூகிள் கண்ணாடி பாதுகாப்பானதா?
கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடிக் கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் சிக்கல் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் ஆய்வுசெய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகள் வழியாக அனைத்து தகவல்களையும் பெற  கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று அறிவியலாளர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
மறுசாரார் கூகிள் கண்ணாடி போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு 'நியூரான்கள்' விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் காண இங்குச் சொடுக்கவும் 
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் உய்த்துணர  இங்குச் சொடுக்கவும்
கணினியைக் கடந்து, கைபேசியைக் கடந்து, கையடக்கக் கருவிகளைக் கடந்து தொழில்நுட்பம் கண்ணுக்குள்ளேயே சென்று மூளையை இயக்கும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் மாந்தவினத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லப் போகின்றதா? அல்லது மனிதப் பண்பாட்டை புரட்டிப்போடப் போகின்றதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:- வினவு

Wednesday, June 05, 2013

அன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..

[மனம் திறந்த மடல்]
 
இன்று 5-6-2013ஆம் நாள் கோலாலம்பூர், பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில் நடைபெறும் '10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு' அரங்கத்திலிருந்து மலேசியத் தமிழாசிரியர்கள் தமிழ்க் கல்வியாளர்கள் சிந்தனைக்காக இதனை இங்குப் பதிவிடுகிறேன்.

இந்த மாநாட்டில் மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியசு, அசுத்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் 'நாட்டுப் படைப்பு' அரங்கத்தில் பேசினார்கள். அந்தந்தப் பேராளர்களின் உரையின் நடுவில் என் மனத்தில் துளிர்த்த சிந்தனைகள் இவை.

அயல்நாடுகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு எப்படி இருக்கின்றன தெரியுமா? எப்படி வளர்க்கப்படுகின்றன தெரியுமா? எவ்வாறு அவை காக்கப்படுகின்றன தெரியுமா?

தாய்மொழியாகிய தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் - ஆதாரம் இல்லாமல் பலவித இன்னல்களில் வாடுகிறார்கள்!

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் தமிழை மீட்கப் பாடுபடுகிறார்கள்!
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அவர்கள் தமிழைக் காக்கப் போராடுகிறார்கள்!

தமிழ்க்கல்வியை அறிமுகப்படுத்தவும் தமிழைக் கற்பிக்கவும் வழிதேடி வழிதேடி உருக்குலைந்து போகிறார்கள்.

அவர்கள் நாட்டு அரசாங்கப் பள்ளிகளில் பள்ளி நேரத்திலேயே தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களின் வருகை - ஆர்வம் - கற்கும் திறன் ஆகியவை கவலைக்கிடமாக இருப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் - ஆசிரியர் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னார்வத்தின் அடிப்படையில் மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர், தகவல் தொழிநுட்பர், இல்லத்தரசிகள் போன்றோர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல்  தமிழைக் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தமிழ்க்கல்விக்கான முறையான கலைத்திட்டம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் பாடநூல்கள் - பயிற்சிநூல்கள் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அடுத்த தலைமுறை தாய்மொழி அறியாத இனமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பண்பாடு தெரியாதவர்களாக ஆகி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

அவர்களின் எதிர்கால சரவடிகள் தமிழிய வரலாற்றையும் வாழ்வியலையும் அறியாமல் இனமல்லா இனமாக ஆகிவிடுமோ என உண்மையிலேயே கலங்குகிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!

இப்படியெல்லாம், பல்வேறு அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் இடையில் பெரும்பாடு பட்டு தமிழை வாழவைக்க.. வளர்த்தெடுக்க அரும்பாடு படுகிறார்கள்..! புலம்பெயர் நாடுகளின் அரசாங்கத்தின் போதுமான உதவிகள் இல்லாமல் தங்கள் தாய்மொழிக்காகவும் மொழி சார்ந்த வாழ்வியலுக்காகவும்  உயிரைப் பிழியும் பெரும்பாடு படுகிறார்கள்..!

அவர்களுடைய பாடுகளைப் பார்க்கும் பொழுது நமக்கும் இதயம் வலிக்கிறது..! அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது..! அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது..! அவர்களின் தமிழ் உணர்வைப் பார்க்கும் பொழுது நம் உடலும் சிலிர்க்கின்றது..!

தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விழுமியங்களை மீட்டெடுக்கவும் காத்து வளர்க்கவும்.. அவர்களின் குழந்தைகளைத் தமிழ் இனமான உணர்வுள்ளவர்களாக - தமிழ்க் குழந்தைகளாக வளர்த்தெடுக்க மிக மிகக் கடுமையாக மெனக்கெட்டு உழைக்கிறார்கள்.

ஆனால், இங்கே மலேசியாவில்  நிலைமை எப்படி இருக்கின்றது..?

 அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு இடர்கள், இன்னல்கள், நெருக்கடிகள், போராட்டங்கள், சிக்கல்கள் எல்லாமே குறைவு. அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு வாய்ப்பு, ஏந்து (வசதி), சலுகை, உதவி, ஆதரவு ஆகிய அனைத்தும் மிக மிக அதிகம்.
அரசாங்க உதவியுடன் தொடக்கப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் இடைநிலைப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் கலைத்திட்டங்களில் நடைபயின்று..
அரசாங்க உதவியுடன் தேர்வுகளில் அமைர்ந்து தேர்வு பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர்க் கல்லூரியில் பட்டயம்  பயின்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்று..
அரசாங்க உதவியுடன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்து..
அரசாங்க உதவியுடன் கற்றல் கற்பித்தலை நடத்தி..
அரசாங்க உதவியுடன் பணியிடைப் பயிற்சிகளில் கலந்துகொண்டு..
அரசாங்க உதவிடன் உதியம், படிச்செலவு, ஓய்வூதியம் அனைத்தும் பெற்று..

இன்னும் இப்படி பற்பல பற்பல உதவிகளும் ஏந்துகளும் எல்லா ஆதரவுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்டு மலேசியாவில் நாம் ஆசிரியர்களாக இருக்கின்றோம்; விரிவுரைஞர்களாக இருக்கின்றோம்; பேராசிரியர்களாக இருக்கின்றோம்; முனைவர்களாக இருக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் தமிழுக்காகவும் - தமிழ் மாணவர்களுக்காகவும் - தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் - தமிழ்க் கல்விக்காகவும் - தமிழ் இனத்திற்காவும் - தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் - தமிழ் விழுமியங்களுக்காகவும் - தமிழ் வாழ்வியலுக்காகவும்..

உண்மையாக சிந்திக்கின்றோம்..?
உளமாற எண்ணிப் பார்க்கின்றோம்?
நேர்மையாக உழைக்கின்றோம்..?
தமிழ் உணர்வோடு செயல்படுகின்றோம்..?
தமிழ்ப் பற்றோடு பாடாற்றுகின்றோம்..?

நமது மாணவர்களும் இளையத் தலைமுறையினரும் எதிர்காலத்தில் தமிழிய உணர்வோடும் தமிழிய அறிவோடும் வாழ நம்மில் எத்தனை கல்வியாளர்கள் தெளிந்த அறிவோடும் தூய்மை உணர்வோடும் பணிசெய்கின்றோம்? பாடாற்றுகின்றோம்?

பல்லினம் வாழும் மலேசியச் சூழலைக் கருத்தில் கொண்டும்  படுவேகமாக வளர்ந்துவரும் உலகமயமாதல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நம்மில் எத்தனை கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை தமிழோடு வாழவும் தமிழராக வாழவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம்? தொலைநோக்கோடு திட்டமிடுகின்றோம்?

உணர்ச்சிவயப்படாமல் அறிவுவயமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை...!


இத்தகைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் யாருமே இல்லை எனச் சொல்வது மிகப் பெரிய பொய். கண்டிப்பாகச் சில நூறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை! உண்மை! அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்; போற்றுதலுக்கு உரியவர்கள் எனில் மிகையன்று.

ஆனால், சில நூறு ஆசிரியர்களும். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர் மட்டும் போதுமா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் 8000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இடைநிலைப்பள்ளிகளில் 3000 தமிழாசிரியர்கள் இருக்கின்றார்கள். 100 விரிவுரைஞர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 50 முனைவர்கள் இருக்கிறார்கள். ஆக, ஏறக்குறைய 11,000 தமிழ்க் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மனதுவைத்தால்.. இவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்றால்.. இவர்கள் அனைவரும் உணர்வுபெற்று எழுந்தால்.. இவர்கள் அனைவரும் தமிழிய உள்ளத்தோடும் உணர்வோடும் உழைத்தால்..

எதிர்காலத்தில் உலகத் தமிழர்களுக்கே வழிகாட்டும் வெற்றித் தமிழர்களாக மலேசியத் தமிழ் மாணவர்கள் திகழ முடியும்!

வருங்காலத்தில் உலகத் தமிழினத்திற்கே தலைமையேற்கும் தகைமைசான்ற தமிழினம் மலேசியாவில் உருவாக முடியும்!

மலேசியத் தமிழ் ஆசிரியர்களே.. கல்வியாளர்களே வாருங்கள்..

தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழராக ஒன்றுபடுவோம்! 
தமிழுக்காக ஒன்றுபடுவோம்!
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Tuesday, June 04, 2013

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலேசியா

கோலாலம்பூர் பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில், உலகத் தமிழசிரியர் மாநாடு கோலாகலமாகக் தொடங்கி நடைபெறுகின்றது. இம்மாநாடு சூன் திங்கள் 3 - 5 வரை நடைபெறுகின்றது. "உலகத்தரக் கற்றல் கற்பித்தலை நோக்கி தமிழ் ஆசிரியர்கள்" எனும் கருப்பொருளில் நடைபெறும்  இம்மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கிய 'உலகத் தமிழாசிரியர் மாநாட்டு" இடையறாது நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பெருமைக்குரிய நல்லார் சிலர் முயற்சியால், குறிப்பாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் நல்லாசிரிய மாமணி ஈஸ்வரன் ஐயா அவர்கள், அனைத்துலக ஆசிரியர் பேரவைப் பேராளர் இராமநாதன் ஐயா, சிங்கை மாணிக்கம், சாமிக்கண்ணு, கோலாலம்பூர் கோ.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா ஏ.சகாதேவன், நாகரத்தினம், மொரிசியசு புஷ்பரதம், தென்னாப்பிரிக்கா முனுசாமி முதலான எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று ஆல்போல் வளர்ந்து பரந்து விரிந்து பயந்தருவதைக் காண முடிகின்றது.

தொடர்ந்து 10 தடவை நடந்துவரும் இம்மாநாட்டின் விளைவாகப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு விழுமியங்கள், தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் - ஒன்றிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக,உலகத் தரத்தை நோக்கி தமிழ்க்கல்வியை உயர்த்தவும், கணினி தகவல் தொழில்நுட்பம் வழி தமிழ்க்கல்வி பயணிக்கவும் பல்வேறு ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன.

ஏற்கனவே 2ஆம், 6ஆம் மாநாடுகளை ஏற்று நடத்திய மலேசியாவில் இப்பொழுது 10ஆம் மாநாடு வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான புதிய சிந்தனைகள் மிளிரவும் தமிழ்க் கற்றல் கற்பித்தல் புதுப்பொழிவுடன் வளரவும் இம்மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.
மன்னர் மன்னன்

இன்று நம் தமிழ்மொழியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்க்கல்வியும் எதிர்கொள்ளும் வெல்விளிகள் மிகப் பெரியது. தமிழை முதன்மொழியாகக் கற்கும் காலம் மெல்லென தூர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களே தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்க வேண்டிய இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் தமிழை முதன்மொழியாகக் கற்கும் வாய்ப்பு கடல்போல் விரிந்து இருந்தாலும், தமிழின் மீதான தமிழ் மக்களின் எண்ணப்போக்கும் எதிர்பார்ப்பும் எதிர்மறையாக இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகள் இந்தித் திணிப்பின் வழியாகவும் ஆங்கில வழிக்கல்வி தாக்கத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னுஞ்சில நாடுகளில் தமிழைப் பேச்சுமொழி என்னும் அளவில் கற்றுக்கொண்டாலே போதுமென்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.




 
இப்படியான வெல்விளிகளுக்கு இடையிலும் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தமிழையும் தமிழ்க்கல்வியையும் வென்றெடுக்கும் தலைமையான திட்டங்களும் தூய்மையான பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு உலகத் தமிழாசிரியர் மாநாடு பெரும் பங்களிக்க முடியும். மேலும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களிடையே அணுக்கத் தொடர்பும் நுட்பத்திற ஒத்துழைப்பும் ஏற்பட இதுபோன்ற மாநாடுகள் உதவ முடியும். 













முனைவர்  மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முத்து நெடுமாறன்,  சுப.நற்குணன், இல.வாசுதேவன், கோவி.சந்திரன்     
விரிவுரைஞர் மன்னர் மன்னன் தலைமையில் அமைந்த ஏற்பாட்டுக் குழுவினர் இந்த மாநாட்டை நன்முறையில் நெறிபடுத்தியுள்ளனர். ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கும் 'திருத்தமிழ்' தன் நெஞ்சார்ந்த நல்வாழ்த்தினை அன்பளிக்கின்றது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Sunday, April 21, 2013

தமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்டும்

தமிழர்தம் வாழ்வியலையும் வரலாற்றையும் அறிந்துகொள்ள நாம் தமிழ் இலக்கியம் பயில வேண்டும். மொழி, இன, பண்பாட்டு அறிவும் உணர்வும் கொண்டவர்களாக நாம் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இலக்கியங்கள் உதவும் எனப் பாரிட் புந்தார் இரா.பாலு தெரிவித்தார். பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற எசுபிஎம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

"நான் ஒரு சில வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குத் தமிழர்கள் தங்கள் கலை, பண்பாட்டோடு வாழ்வதைப் பார்த்தேன். நம்மைப் போலவே உடை உடுத்துகிறார்கள். நமது உணவுகளைச் சமைக்கிறார்கள். நம்மைப் போலவே வழிபாடு செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தமிழ்ப் பேச தெரியவில்லை.  அவர்கள் வீட்டில் தமிழ் இல்லை; குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்பொழுது மனம் வேதனையாக இருந்தது. அவர்களும்கூட தமிழ் தெரியவில்லையே; படிக்கவில்லையே; தமிழ்ப்படிக்க வழியில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால், நம் மலேசிய நாட்டில் அப்படியில்லை. தமிழ்ப் படிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்க அரசாங்கம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழில் நன்றாகப் பேச முடிகின்றது. அப்படி இருக்கையில் நம் மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நமது தாய்மொழியை நாம் படிக்காவிட்டால் காலப்போக்கில் நாமும் மியான்மார், இந்தோனேசியா, மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் போல ஆகிவிடுவோம். பிறகு, நமது அடுத்த தலைமுறை சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்ட இனமாக ஆகிவிடும்" என்று அவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் இர.திருச்செல்வம் "எசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நூல்களும் மிக அருமையானவை. மலேசியக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து மிக அருமையான கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார்கள். மேலும், ஒவ்வொரு கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பைப் அவர்களின் படத்துடன் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். அந்தக் கவிதைகளைப் படித்தால் மாணவர்கள் மிக சிறந்த பண்புடனும் நெறியுடனும் திகழ முடியும். அதேபோல், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பாடமாகப் படிப்பதன்வழி தமிழின் சுவையையும் தமிழ் நாடகத்தின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் சிலப்பதிகார மூலக்கதையைப் படித்து உணரவேண்டும். தமிழ் இலக்கியம் படிப்பதால் மாணவர் மனங்கள் பண்படுவதோடு, இளம் வயதிலேயே நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் பதிவாகும். தமிழ்மொழ்யின் மீது பற்றுதல் ஏற்படும். பாரிட் புந்தார் வட்டாரத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்த இலக்கிய வகுப்பை நடத்திவரும் ஆசிரியர் சுப.நற்குணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் நிறைய படித்துக்கொள்ள முடியும். அவர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். ஆகவே, மாணவர்கள் அனைவரும் நல்லமுறையில் பயின்று சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கிய வகுப்பில் பயிலும் 25 மாணவர்களுக்கு 'இலக்கியக்களம்' வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. விக்னேசுவரன் தண்ணீர்மலை இந்த நூல்களை அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.

தூய உள்ளத்தோடும் நல்ல எண்ணத்தோடும் மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த விக்னேசுவரன் தண்ணீர்மலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சுப.நற்குணன், "இவரைப் போன்ற நல்லோர்களை அடையாளங்கண்டு மதிக்க வேண்டும். தமிழ்மொழி நலனுக்காக மனமுவந்து நன்கொடைகள் வழங்கி உதவும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின்  உதவியச் சரியாகப் பயன்படுத்தி நல்ல தமிழ்ப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பாடத்தை நம் தமிழ் மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இல்லையேல், எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படலாம். இப்படி ஒரு கவலைக்கிடமான நிலைமை நம் தமிழுக்கு ஏற்படக்கூடாது; அதுவும் நாமே அன்த நிலையை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழியல் நடுவ இலக்கிய வகுப்பு மாணவர்கள், நடுவப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, April 10, 2013

செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சாதனை

தமிழ்ப்பள்ளிகளின் புறவளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்குச் செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் சுப.நற்குணன் தெரிவித்தார்.

கடந்த 30-03-2013ஆம் நாள் காரிக்கிழமை, பேரா, கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் 7 மாணவர்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முடப்படக்கூடிய நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. மூடப்படும் அபாயத்திலிருந்து பள்ளியைக் காப்பாற்ற வேண்டி, பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னாள் மாணவர் சங்கம் மும்முரமாகவும் முழுமூச்சாகவும் செயல்பட்டது. இதன் பயனாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

5-5-2012ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் கல்விநிதி விருந்தோம்பலும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்ற ஏறக்குறைய 300 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதிவளத்தைக் கொண்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவியாகப் பள்ளிப் பேருந்து வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, மு.மா.சங்கத் துணைத்தலைவர் இராம.பாலமுரளி தலைமையில் பள்ளிப் பேருந்து குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக, தற்பொழுது பள்ளிக்கென ஒரு பேருந்து வாங்கப்பட்டுள்ளது எனப் பலத்த கரவொலிக்கு இடையில் சுப.நற்குணன் அறிவித்தார். செர்சோனீசு பள்ளி வரலாற்றில் இதுவொரு மாபெரும் வெற்றி மட்டுமன்று புது வரலாறும்கூட என்றாரவர்.

மேலும் பேசுகையில், செர்சோனீசு தமிழ்ப்பள்ளியை கிரியான் மாவட்டத்திலும் பேரா மாநில அளவிலும் மிகச் சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக்கிட மு.மா.சங்கம் பாடாற்றும் என்று தெரிவித்தார். அதற்கு, முன்னாள் மாணவர்கள் அனைவரும் உறுதியான ஆதரவினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பள்ளி மேலாளர் வாரியக்குழுத் துணைத்தலைவர் திரு.இரா.பாலு, செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மு.மா.சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்றார். அதனுடைய பணிகளும் சேவைகளும் மற்றவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று புகழாரம் சூட்டினார்.

பள்ளியின் தலைமையாசிரியரும் மு.மா.சங்கத்தின் ஏடலுருமாகிய இர.முனுசாமி பேசுகையில், இந்த முன்னாள் மாணவர் சங்கம் அரிய செயல்களைச் சரியாகத் திட்டமிடுவதோடு அவற்றைச் சாதிப்பதிலும் முனைப்பாக இருக்கின்றது. மு.மா.சங்கக் குழுவினர் ஒவ்வொருவரும் பள்ளியின்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் ஆதரவினால் பள்ளியில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் சீராக நடந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் வாக்குறுதி அளித்தது போல இவ்வாண்டில் பள்ளிக்குப் பேருந்து ஒன்றினை வாங்கி பெரும் சாதனை படைத்துள்ள மு.மா.சங்கத்திற்குத் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், மு.மா.சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் நிதி வளத்தை அதிகரிப்பதற்காக சோமன் பாபு ஆயிரம் ரிங்கிட்டையும் செல்வம் ஶ்ரீ ஐந்நூறு ரிங்கிட்டையும் அன்பளிப்பு செய்தனர். மற்றொரு முன்னாள் மாணவராகிய யுவராஜ் நூறு ரிங்கிட் நன்கொடையளித்தார். சங்கத்தின் செயலாளர் இராஜேஸ்  ஒவ்வொரு மாதமும் 136.00 ரிங்கிட்டை மாத நன்கொடையாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஆளுக்குப் பத்து ரிங்கிடை ஒவ்வொரு மாதமும் நன்கொடையாக வழங்குவதாகத் தலைமையாசிரியர் தெரிவித்தார்.



இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பள்ளிக்காக வாங்கப்பட்டுள்ள பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் சிறப்புடன் நடந்தது. பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் துணைத் தலைவர் திரு.இரா.பாலு பேருந்தை ஓட்டி வெள்ளோட்டம் விட்டார். வருகையளித்த உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இதுவொரு பெரும் சாதனை என அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.

                                                                                                                  @சுப.நற்குணன், திருத்தமிழ்

Saturday, March 30, 2013

செர்சோனீசு முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம்

பேரா மாநிலத்தில் உள்ள கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.

நாள் : 30-03-2013 (காரிக்கிழமை)
நேரம் : மாலை மணி 5:00
இடம் : செர்சோனீசு தமிழ்ப்பள்ளிக்  கூட்ட அறை

இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2011இல், மூடப்படக்கூடிய நெருக்கடி நிலைக்கு ஆளாகி பின்னர் பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் குழு, முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலும் சீரிய நடவடிக்கையாலும் மூடப்படும் ஆபாயத்திலிருந்து பள்ளி காப்பாற்றப்பட்டது. பின்னர் 2012 மே திங்கள் 5ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' எனும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி வளத்தைக் கொண்டு பல்வேறு வளர்ச்சிட் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது. பள்ளியை மீட்கவும் காக்கவும் முழுமூச்சாகச் செயல்பட்ட முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இதுவாகும்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மேலும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களின் போக்குவரவுக்கு உதவியாக, மு.மா.சங்கம் 'பள்ளிப் பேருந்து' ஒன்றனை வாங்கியுள்ளது. இப்பள்ளிப் பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆகவே, செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்: தலைவர் சுப.நற்குணன் 012-4643401 / துணைத்தலைவர் இராம.பாலமுரளி 017-5573110.

@சுப.நற்குணன்

Monday, March 04, 2013

12-ஆவது தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர், மலேசியா

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து 'திதியான் டிஜிட்டல்' திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப்பெறுகிறது

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது. உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013” நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் மேனாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.  மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு  முனைவர் பத்ரி சேஷாத்திரிஅவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை”என்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கிறோம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணித்தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
  • கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.

(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்களை  அனுப்பக் கடைசி தேதி மே 31, 2013 ஆகும்.

பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
 
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Applets or Apps) வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ்8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம் ti2013.infitt.org அணுகவும்.  

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org

சி. ம. இளந்தமிழ்
தலைவர் உத்தமம், மலேசியா
செல்: 0060-12314390
chair@infitt.org


அ. இளங்கோவன்
செயல் இயக்குனர், உத்தமம், சென்னை, இந்தியா
செல்: 0091-98410 23223
ed@infitt.org

@நன்றி : உத்தமம் (infitt)



Blog Widget by LinkWithin