Saturday, September 10, 2011

தமிழில் மின்னூல் தொழில்நுட்பம்


சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறுகின்றது. அதன் இரண்டாம் நாளாகிய நேற்று (09.09.2011 - வெள்ளி) மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் 'தமிழில் மின்னூல்' என்னும் கட்டுரையை வழங்கினார். முரசு தமிழ் மென்பொருளை உருவாக்கியவருமாகிய முத்து நெடுமாறனின் கட்டுரை மாநாட்டுப் பேராளர்களை மிகவும் ஈர்த்தது.

இன்றைய தொழில்நுட்ப ஊழியில் 'மின்நூல்' மிகவும் புகழ்பெற்று வருகின்றது. காகிதத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் தற்போது மெல்ல மெல்ல மின்னூல்களாக மாறி வருகின்றன.

தமிழில் இவ்வகையான மின்னூல் தொழில்நுட்பம் இன்று சாத்தியமாகி இருக்கிறது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சி எனச் சொல்லலாம்.

அச்சு நூல்களைவிட மின்னூல்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல, மலிவும் என்பதோடு குறுகிய காலத்திலேயே உருவாக்கி வெளியிட முடியும். மின்வடிவில் அமைந்திருப்பதால் உயர்தரமாகவும் இருக்கும்.
அச்சு வடிவில் வெளியிடப்படும் புத்தகங்களில் எழுத்துகளோடு, படங்களையும் சேர்த்து வெளியிட முடியும். வண்ணங்களைச் சேர்த்து கவரும் வகையில் வடிவமைக்க முடியும். ஆனால், இந்த மின்னூலில் எழுத்து, படம், வண்ணம் ஆகியவற்றோடு ஒலியமைப்பு, இசை, நிலைப்படம், நிகழ்ப்படம் ஆகியவற்றையும் இணைத்து வளமாக்க முடியும்.

நூலைப் படிக்கும் நேரத்திலேயே வாசிக்கப்படும் செய்தி, கட்டுரை அல்லது கதை தொடர்பாக உள்ளுணர்த்து துய்க்க முடியும். குறிப்பாக, குழந்தைகளும் மாணவர்களும் மின்னூலை விரும்புவார்கள்; விரும்பிப் படிப்பார்கள் என்பது உண்மை. காரணம், இன்றைய குழந்தைகள் எண்ணிம இயல்பாளர்களாக (Digital Native) இருப்பதால், இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் அவர்களின் ஆர்வத்திற்கு உரம்சேர்ப்பதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்க் குழந்தைகள் மின்னூல் வழியாகத் தமிழ்மொழியைக் கற்கும் வாய்ப்புகளை உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மின்னூல் வழியாக ஊடாடும் (Interactive) முறையில் தமிழைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய தமிழ்க் குழந்தைகள் ஆளாகிவிட்டார்கள். இந்தச் சூழலை உணர்ந்து தமிழாசிரியர்கள் மின்னூல் வழியாகப் படிப்பதற்குரிய பாடங்கள், கதைகள், கட்டுரைகள், பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்க முனைய வேண்டும். அதற்கு முதலாக, மின்னூல் போன்ற கையடக்கக் கருவித் தொழில்நுட்பம் பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
'குட்டன்பர்க்' உருவாக்கிய இயந்திரம் அச்சிடப்பட்ட நூல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சென்றது. அதன்பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய புரட்சியாக 'மின்னூல்' தொழில்நுட்பம் விளங்குகின்றது.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழில் மின்னூல்கள் வராவிடில் அடுத்த தலைமுறையினர்  தமிழ் நூல்களை வாசிப்பதும், தமிழை வாசிப்பதும் அரிதாகிவிடும் என்று முத்துநெடுமாறன் தமது கட்டுரைப் பகிர்வில் குறிப்பிட்டார்.

தமது உரையில் ஊடாக, தாம் தமிழில் உருவாக்கிய ஒரு மின்னூலைப் பற்றி செய்முறை விளக்கம் (Demonstration) அளித்தார். மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கருத்தையும் கவனத்தையும் பெரிதும் ஈர்க்கும் வகையில் இந்தப் படைப்பு அமைந்திருந்தது. கையடக்கக் கருவியில் தமிழைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா? என்று அனைவருக்கும் பெரும் வியப்யை ஏற்படுத்தியது.

@சுப.நற்குணன்

Friday, September 09, 2011

மின்னஞ்சலின் புதிய புரட்சி:- குறுமடல்


http://shortmail.com/


யாகூ மெயில் (Yahoo Mail), கூகிள் மெயில் (gmail), ஓட்மெயில் (Hotmail) முதலான  மின்னஞ்சல் பரிணாமத்தில் தற்போது புதிதாக அறிமுகமாகிறது 'சார்ட்மெயில்' (Shortmail). இதனைத் தமிழில் 'குறுமடல்', 'குறுவஞ்சல்', 'குற்றஞ்சல்' என தற்போதைக்கு ஒரு பெயரைச் சொல்லிக்கொள்ளலாம். இதற்குரிய பொருத்தமான கலைச்சொல் இனி உருவாக்கப்படும் என நம்புவோம்.

'டுவிட்டர்' (Twitter), முகநூல் (Facebook) ஆகிய குமுக வலைத்தளங்களின் ஆதிக்கம் மின்னஞ்சலின் பயன்பாட்டை முடக்கிப்போடும் சூழல் உருவாகி வரும் காலக்கட்டத்தில், புதிய வரவாக புதிய வீச்சைத் தொடங்க வந்திருக்கிறது இந்தக் 'குறுமடல்'.
பெயருக்கு (Shortmail) ஏற்றாற்போல மின்னஞ்சல் செய்திகளைச் சுருக்கமாக அனுப்ப இந்த ஏந்து (வசதி) துணைசெய்கிறது. இதுவும் ஒருவகையில் மின்னஞ்சல் போன்றதுதான் என்றாலும், சில மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. அவையாவன:-

#1.ஒரு மடலை எழுதுவதற்கு 500 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். 500 எழுத்துகளுக்கு மேல் இருந்தால் நாம் எழுதும் மடல் திருப்பி அனுப்பட்டுவிடும்.

#2.மின்னஞ்சலில் விரிவான செய்திகளை எழுதுவதுபோல் அல்லாமல், சொல்ல வேண்டிய செய்தியை மட்டும் சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்ல வேண்டும்.

#3.மின்னஞ்சலை எளிமையாக்க மட்டுமல்லாது, அதனைச் சிறந்த முறையில் நிருவகிக்கவும் இது உதவியாக இருக்கும்.

#4.இந்தக் 'குறுமடலை' அனுப்பும்போதே அது கமுக்கமானதா அல்லது பொதுப் பகிர்வுக்குரியதா என்பதை அனுப்புபவர் தீர்மானித்துக்கொள்ளலாம்.

#5.'டிவிட்டர்', முகநூலைப் போல எளிதாக செய்திகளைப் பகிரவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் உதவியாக உள்ளது.

#6.மின்னஞ்சலோடு சேர்த்து மற்ற ஆவணம், நிழற்படம் போன்றவற்றை இணைத்து அனுப்பும் ஏந்து(வசதி) இதில் கிடையாது. இதனால், நமது மின்னஞ்சல் பெட்டியில் வந்து குமியும் தேவையற்ற இணைப்புகளைத் தவிர்க்க முடியும். 

#7.'குறுமடல்' சேவையைப் பெறுவதும் பயன்படுத்துவதும் மிக எளிது. 'டிவிட்டர்' கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் மூலமாகவே பதிவு செய்துகொள்ளலாம்.

#8.இணையப்பேசி (iPhone), 'ஆண்டிராய்டு' (Android) வகை பேசிகளுக்கு ஏற்ற வடிவத்திலும் இது செயல்படுகின்றது.

'குறுமடல்' சேவைப் பெறவும் பயன்படுத்தவும் இங்கே சொடுக்கவும்.

@சுப.நற்குணன்

Thursday, September 08, 2011

சிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு

மாநாட்டு அரங்கம்
உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று (08.09.2011)  வியாழக்கிழமை சிங்கப்பூரின் டவுண்டவுன் ஈசுட்டில் (Downtown East) தொடங்குகிறது.

இன்று தொடங்கி 10.09.2011 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டைத் தென்கிழக்காசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.கே.கேசவபாணி காலை மணி 9:00க்குத் தொடக்கி வைக்கிறார்.

இது சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 9-ஆவது மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகமயமாதலும் தமிழ்க் கற்றல் கற்பித்தலும்' என்பதாகும். 

மாநாட்டுப் பேராளர்கள்
ஏறக்குறைய 360 பேராளர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்கா, கனடா, பிரான்சு, டென்மார்க்கு, இந்தியா, அசுத்திரேலியா, செர்மனி, இலங்கை, மொரிசியசு, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 130 பேராளர்களும், சிங்கையிலிருந்து 230 பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கிட்டதட்ட 40 கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெற உள்ளன.

மலேசியப் பேராளர்கள்:- (இ-வ) புஸ்பராணி, கோவி.சந்திரன், அ.சு.பாஸ்கரன் (முகமை அமைப்பாளர்), சுப.நற்குணன், நடராஜா, தமிழரசி
மலேசியாவிலிருந்து கல்வி அமைச்சின் சார்பில் ஏறக்குறைய 60 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.அ.சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பேராளர்கள்

முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992ஆம் ஆண்டில் நடந்தது. இந்தியா,  மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 

முகமை விருந்தினர்
"இந்த மாநாடு உலகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைக்கின்றது. மேலும், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கின்றது என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும்" என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு கூறினார்.

அறிவிப்பாளர்கள்:- மீனாட்சி, ஜெயதீசன் (சிங்கை ஆசிரியர்கள்)
@சுப.நற்குணன்
 

Wednesday, September 07, 2011

9ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு


மாநாடு தொடர்பான செய்திகள் வாசிக்க:-

Sunday, August 28, 2011

'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா


உலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கங்கள் நடந்துவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழில் இதுவரை இல்லாத ‘சொல் திருத்தி’ (Spell Checker) மென்பொருள் வெளிவந்துள்ளது. ‘மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்’ என்னும் இந்த அரிய மென்பொருளைத் தமிழுக்கு உருவாக்கிக் கொடுத்திருப்பவர் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்.

மென்தமிழ்தமிழ்ச்சொல்லாளர் (Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள் தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் (Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகிய அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துருக்கள் (fonts) ஒருங்குறி உள்ளீட்டு முறையில் (Unicode) அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம் பெற்றுள்ளன. இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள் நிறைந்துள்ளன.

மேலும், ஏறத்தாழ 45ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, இணைச்சொல், எதிர்ச்சொல் அகராதி ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

வேர்ச்சொற்களில் மட்டுமல்லாது விகுதிகள் ஏற்ற சொற்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனையும் கண்டறிந்து இச்செயலி திருத்துகிறது. தவிர, தமிழில் ஏற்படும் ல, ள, ழ / ண,ன / ர, ற மயங்கொலிச்சொல் அகராதியும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரலிகையில் காண்க:-

தமிழ் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தமிழாசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும்.

***************அறிமுக நிகழ்ச்சி **************

இந்த ‘மெந்தமிழ் சொல்லாளர்’ அறிமுக நிகழ்ச்சியும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கமும் ஒருசேர நடைபெற உள்ளது. ‘உத்தமம்’ எனப்படும் உலகத் தமிழர் தகவல் தொழிநுட்ப மன்றத்தின் சார்பில் சி.ம.இளந்தமிழ் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் வருமாறு:

நாள்:- 04-09-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- காலை மணி 8.30

இடம்:- சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலும்பூர்.

மென்பொருள் விலை விவரம் - RM300 வெள்ளி (அறிமுக நிகழ்ச்சியின்போது RM200 வெள்ளிக்குக் கிடைக்கும்)

இந்நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையை உறுதிசெய்யத் தயதுசெய்து, நவராசன் 0173693737 என்ற தொலைப்பேசி எண்ணில் பெயரைப் பதிந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் மென்பொருள் விளக்கக்காட்சி அங்கம் இடம் பெறுகிறது. மென்பொருளின் செயற்பாடுகள். பயன்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

பி.கு:- இதே நிகழ்ச்சி வடமலேசியா வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது.

*நாள்:- 05-09-2011 (திங்கட்கிழமை) *நேரம்:- மாலை மணி 4:30 *இடம்:- துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு. (தொடர்புக்கு:- திரு.மணியரசன் 012-4411535)

@சுப.நற்குணன்

Tuesday, August 16, 2011

மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு

ஆகத்து 12, 13 & 14, 2011 ஆகிய மூன்று நாட்களில், கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாநாடு ஒன்று சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கை, கனடா முதலான நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இப்படியொரு மாநாட்டை மலேசியாவில் நடத்திய பெருமை, மலாயாப் பல்கலை முனைவர் சு.குமரன் அவர்களையும், சென்னை கலைஞன் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.நந்தன் மாசிலாமணி ஆகிய இருவரையே சாரும்.

‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு’

இதுதான் மாநாட்டிற்குச் சூட்டப்பட்டிருந்த பெயர். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழகத்தின் கலைஞன் பதிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.

முழுக்க முழுக்க கல்வியாளர்களுக்காக கூட்டப்பட்ட மாநாடாக இஃது அமைந்திருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என கல்வித்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மாநாட்டில் மொத்தம் 105 கட்டுரைகள் படைக்கப்பட்டன. இவை தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்திருந்தன. தமிழில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலோடு தொடர்புள்ளவையாக இருந்தன.

மூன்று நட்களில் நான்கு பொது அமர்வுகள் இடம்பெற்றன. இவை மாநாட்டிற்கு முத்தாய்ப்பு அரங்கங்களாக அமைந்தன. அவையாவன:-

1)பேராசிரியர் செ.இரா செல்வக்குமார் (கனடா) - மின்வழிக் கல்வியிலொரு கூறாக விக்கி மென்கல நுட்பம் வழி தமிழில் அறிவியல், கணிதம், பயன்முக அறிவியல் பாடங்கள் கற்றல் கற்பித்தல்.

2)முத்து நெடுமாறன் (மலேசியா) - கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்

3)விஜய இராஜேஸ்வரி (இலங்கை) - தமிழ்க் கற்றல் கற்பித்தலில் விக்கி (Wiki) தொழில்நுட்பம்

4)சுப.நற்குணன் (மலேசியா) - தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடும்

[படம்:- (இ-வ) சுப.நற்குணன், முத்தெழிலன், தமிழரசி, பேரா.செல்வா, பிரேமா, சிங்கை ஜெயந்தி, இலங்கை விஜய இராஜேஸ்வரி]

மாநாட்டின் தொடக்க விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த வேளையில், நிறைவு விழாவில் தான் ஸ்ரீ குமரன் அவர்கள் கலந்துகொண்டார்.

முனைவர் கிருஷ்ணன் மணியம் தம்முடைய கலகலப்பான அறிவிப்பால் மாநாட்டை வழிநடத்த, திருமதி தமிழரசி தமிழ் வாழ்த்து பாடினார்.

மலேசியக் கல்வியாளர்கள் பலர் இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-

1)கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் இலக்கியக் கூறுகளின் வழி பண்பாடுமிக்க சமூகத்தை உருவாக்குதல் (முனைவர் கிருஷ்ணன் மணியம், மலாயாப் பல்கலை)

2)வலிமிகுமா? - வலிமிகாதா? ஒரு புதிய பார்வை (முனைவர் மோகனதாஸ் இராமசாமி)

3)மொழிக் கற்பித்தலில் கேட்டல் திறன் (கோ.மணிமாறன், துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

4)மலேசியச் சூழலில் தமிழரல்லாதவர்களுக்குத் தமிழ்ப் பயிற்றுவதில் எழும் வேற்றுமைச் சிக்கல்கள் (முனைவர் அருள்செல்வன் ராஜூ, சபா பல்கலைக்கழகம்)

5)மலேசியாவில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் (பன்னீர் செல்வம் அந்தோணி, சுல்தான் அப்துல் அலிம், ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

6)கற்றல் கற்பித்தலின் மேம்பாட்டில் மதிப்பீட்டின் பங்கு (இளங்குமரன் சிவாநந்தன், சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

7)மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு வகுப்பறை மேலாண்மையில் புதிய அணுகுமுறை (முனைவர் சேகர் நாராயணன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

8)வலைத்தளத் தமிழகராதிகள் (மணியரசன் முனியாண்டி, துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

9)திருக்குறள் காட்டும் கற்றல் அறிவுநெறி (மோகன்குமார் செல்லையா, ஈப்போ, ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

10)வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் சிக்கல்கள் களைவதில் செயலாய்வு அணுகுமுறை ஒரு தீர்வு (முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி, சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகளைப் பாய்ச்சி, தமிழ்க்கல்வியைச் செழிக்கச் செய்யும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த கல்வியாளர்கள் மலேசியாவிலும் இருக்கின்றனர் என்பதை இந்த மாநாடு முரசறைந்து அறிவித்துள்ளது என்றால் மிகையாகாது.

@சுப.நற்குணன்


Thursday, August 11, 2011

தமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறார்


தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் குரல்விட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar).

தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த - செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.

தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று.

இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தோராகத் திகழும் பேரா.செல்வக்குமார் மலேசியா வருகின்றார். இவர் 11.08.2011 முதல் 21.08.2011 வரை மலேசியாவில் இருப்பார்.

ஆகத்துத் திங்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'கற்றல் கற்பித்தல் பன்னாட்டு மாநாட்டில்' கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவதோடு, விக்கிப்பீடியா, வின்னசரி ஆகியவற்றில் பங்களிப்பது குறித்து செய்முறை பயிற்சிகளும் வழங்கவிருக்கிறார்.

பேரா.செல்வகுமார் அவர்களின் பணிகள்:-

*தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின், கணினி இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

*தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக பங்களிப்புகள் செய்த முதல் 5-6 பேர்களில் ஒருவராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகின்றார் பேரா.செல்வா அவர்கள். இதுவரையில், விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 700-800 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார்.

*தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர் இவர்.

படம்:- தமிழ் இணைய முன்னோடிகள் (இ-வ) பேரா.செல்வா, நாக இளங்கோவன், பாலா பிள்ளை, கல்யாண், மணிவண்ணன், எ. இளங்கோவன், நா.கண்ணன், முத்து நெடுமாறன் , இராம.கி ஐயா, பேரா.நாகராசன் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010).

*தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டவர்களில் இவரும் ஒருவர். அதில், சில புதுமையான முன்வைப்புகள் கொடுத்திருந்தார். இப்பொழுது, தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார்.

*மதுரைத் திட்டம் தொடங்கும் முன்னே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் செய்தபோது அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார்.

*தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்கின்றார்கள்.

*தமிழ்வெளி என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றினைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

* முகநூலில் தமிழ்மொழி மொழிபெயர்ப்புகள் செய்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உருவாக்கிய முகநூல் தமிழ் மொழிப்பெயர்ப்பு கணித்திரை படிவு ஒன்றைக் கீழே காண்க:-


பேரா.செல்வா அவர்களைப் பற்றிய பிற விவரங்களை அறிய கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்குக:-

http://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

http://tawp.in/r/7rv


பேரா.செல்வா அவர்களின் மலேசிய வருகை, இங்குள்ள கணினி ஆர்வலர்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும், விக்கிப்பீடியா பயனாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

மலேசியாவில் இருக்கும் காலத்தில் இங்குள்ள தமிழ்க்கணினி ஆர்வலர்கள், வலைப்பதிவர்கள், முகநூல் அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவும் கருத்தாடவும் இவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஏதுவாக, பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவம் போன்ற இடங்களில் சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் இருக்கின்றது. மற்ற ஊர்களில் இவ்வாறான சந்திப்புக் கூட்டங்களை நடத்த விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
கைப்பேசி:- 012-4643401

@சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin