Tuesday, February 02, 2010

இந்தியர்கள் பிச்சை எடுக்க! சீனர்கள் உடலை விற்க!

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க வந்தனர்”.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”.

"எசுபிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு மீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்".

“பகசா மிலாயு (மலாய்மொழி) அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும்".

இன்று (2.2.2010) காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்கள் இவை.


மேலே படத்தில் நடுவில் நிற்கும் நசிர் சாபார் என்பவரின் இந்தப் பேச்சானது மலேசிய இந்தியர்கள், சீனர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (விரிவாக)

  • செய்தி:-மலேசியாஇன்று

பி.கு:-இனங்களுக்கு இடயிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பேசிய நசிர் சாபார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவார் என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் பேசிய கருத்துகள் மலேசியப் பிரதமரின் நிலைப்பாடு அல்ல எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Monday, February 01, 2010

எசுபிஎம்12: உரிமை இழக்கலாமா? உயிர்த்தமிழ் இறக்கலாமா?


மலேசியக் கல்விச் சான்றிதழ் எனப்படும் எசுபிஎம் தேர்வில் மொத்தம் 12 பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியும். இத்தகவலை, 13-01-2010 திகதியிட்ட சுற்றறிக்கையின் வழியாக மலேசியக் கல்வி அமைச்சு அதிகாரப்படியாக அறிவித்துவிட்டது.

அந்தச் சுற்றறிக்கையைப் படிக்க சொடுக்கவும்:- http://www.moe.gov.my/upload/galeri_awam/pekeliling/1264067970.pdf

மேலும், மாணவர்கள் எழுதும் 12 பாடங்களின் முடிவும் புள்ளி விவரமும் ஒரே சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்கள் இனி எந்தவித அச்சமோ அல்லது ஐயமோ இல்லாமல், துணிந்து 12 பாடங்களை எடுக்கலாம் - எடுக்க வேண்டும். எசுபிஎம் தேர்வுக்குப் பதிவு செய்துகொள்ளும் இறுதிநாள் எதிர்வரும் 31-03-2010 ஆகும்.

இதற்கு, பெர்றோர்கள், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் மெனக்கெட்டு நமது மாணவர்களுக்கு உதவ வேண்டும் – வழிகாட்ட வேண்டும்.

நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களுடைய உரிமையாகும். ஆகவே, அதனைத் தடுக்கவோ தடை போடாவோ யாருக்கும் உரிமையில்லை.

குறிப்பாக, பள்ளி நிருவாகம் அல்லது பள்ளி முதல்வர்கள் பல்வேறு காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லி நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதை தடுத்து நிறுத்த முடியாது.

அப்படியே யாராவது; எந்தப் பள்ளியாவது; எந்த முதல்வராவது; செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

எனவே,

1) பள்ளியில் மாணவர் எண்ணிக்கை போதாது
2) பள்ளி நேரத்தில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கற்பிக்க முடியாது
3) பள்ளியில் முழுநேர தமிழ் ஆசிரியர் இல்லை
4) பள்ளியில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் பாடச் சிப்ப முறை (Pakej Sistem) இல்லை


என்பன போன்ற சாக்குப் போக்குகளை இனி எந்தப் பள்ளியும் சொல்ல முடியாது – சொல்லவும் கூடாது.

அப்படியே, நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வுக்கு எடுப்பதை தடுக்கின்ற பள்ளிகள் இருக்குமானால் உடனடியாக அதுகுறித்து புகார் செய்ய வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகம், மாநிலக் கல்வித் திணைக்களம், மலேசியத் தேர்வு வாரியம், மலேசியக் கல்வி அமைச்சு ஆகிய தரப்பினரிடம் இந்தப் புகாரைச் செய்யலாம். ஓவ்வொரு மாநிலக் கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றும் தமிழ்மொழி உதவி இயக்குநர்களிடம் தாராளமாகப் புகார் கொடுக்கலாம்.

அதற்கு உதவியாக கீழே சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் முகவரிகளும் தொலைபேசி தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1) மலேசியக் கல்வி அமைச்சு
KEMENTERIAN PELAJARAN MALAYSIA, Blok E8, Kompleks E,Pusat Pentadbiran Kerajaan Persekutuan,62604, PUTRAJAYA, MALAYSIATel : 603-8884 6000

2) மலேசியத் தேர்வு வாரியம் (Lembaga Peperiksaan Malaysia) சொடுக்கவும்

3) மாநிலக் கல்வித் திணைக்களம் (Jabatan Pelajaran Negeri) மாநில வாரியாகச் சொடுக்கவும்:-

அ.பெர்லிசு மாநிலம்
ஆ.கெடா மாநிலம்
இ.பினாங்கு மாநிலம்
ஈ.பேரா மாநிலம்
உ.சிலாங்கூர் மாநிலம்
ஊ.பகாங்கு மாநிலம்
எ.நெகிரி செம்பிலான் மாநிலம்
ஏ.மலாக்கா மாநிலம்
ஐ.சொகூர் மாநிலம்
ஒ.கிளந்தான் மாநிலம்
ஓ.திரங்கானு மாநிலம்
ஔ.கூட்டரசு பிரதேசம்

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்காக இருக்கின்ற உரிமையை நாம் முழுமையாகப் பயன்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நமது உரிமைகளை மறந்து வாளாவிருக்கக் கூடாது.

அந்தவகையில், நமது உயிர்த்தமிழைக் காப்பதற்கு நாம் முனைப்பாக இருந்து செயல்பட வேண்டும். நம்மோடு இந்நாட்டில் வாழும் சீனர்கள் எதற்காகவும் எந்தச் சூழலிலும் தங்களின் தாய்மொழியை விட்டுக்கொடுக்காமல் கண்ணும் கருத்துமாக இருந்து காத்து நிற்பதற்கான மூலக்காரணத்தை நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது மாணவர்களின் நலனுக்காக – நமது தாய்மொழியின் நலனுக்காக – நமது சமுதாயத்தின் நன்மைக்காக – நமது எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காகத் தமிழ்மொழியைக் கற்போம்; தேர்வில் கட்டாயப் பாடமாகத் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்போம்.

சாவிலும் தமிழ்ப்படித்துச் சாக வேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

என்ற உணர்வோடு ஒவ்வொரு தமிழ் மாணவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் படிக்க வேண்டும்.

அவ்வாறு, மாணவர்கள் படிப்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றுள்ள பொது அமைப்புகளும் உறுதிபடுத்த வேண்டும். கூடவே, வேண்டிய உதவிகளையும் ஆதரவுகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

Wednesday, January 27, 2010

எசுபிஎம்மில் 12 பாடங்கள்: கல்வி அமைச்சு சுற்றறிக்கை



மலேசியக் கல்விச் சான்றிதல் (எசுபிஎம்) தேர்வு தொடர்பான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடாகத் தெரியவில்லை. கடந்த ஆறு மாதங்களாக இந்தச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

சரியான வழிகாட்டுதலும் விளக்கமும் கிடைக்காத நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் ஏன் ஆசிரியர்களும் கூட இவ்வாறு குழப்பத்திற்கு ஆட்பட்டுப் போவது இயல்பானதுதான்.

எசுபிஎம் தேர்வில் 10 பாடம்தான் எடுக்க வேண்டுமா? அல்லது தமிழையும் இலக்கியத்தையும் சேர்த்து 12 பாடம் எடுக்கலாமா? முடியுமா? என்ற குழப்பம் இனி தேவையில்லை.


மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களை எடுக்கலாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை வழி தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை 13-1-2010இல் வெளியிடப்பட்டதாகும்,

சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் (சொடுக்கி) இந்தச் சுற்றறிக்கையைக் காண்க:

1. http://www.moe.gov.my/index.php?id=13&aid=541

2.http://apps2.moe.gov.my/lpm/images/pekeliling/Pekeliling%20Iktisas%20Bil%201_2010.pdf

இந்தச் சுற்றறிக்கையின்படி, மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே, 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது கூடுதலாக 2 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**மேலும், மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும் எனவும் அதில் (தடித்த எழுத்துகளில்) குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.

***அதோடு, கூடுதலான 2 பாடங்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பாடங்களின் தேர்ச்சி அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவித குழப்பமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை. மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களைத் தேர்வுக்கு எடுக்கலாம் – எடுக்க வேண்டும்.

எசுபிஎம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்களை எடுக்கலாம் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு எல்லாப் பள்ளிகளும் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.

ஆகவே, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதற்கு இசைவு(அனுமதி) அளிக்காத பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களைத் தடுக்கும் பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களுக்குத் தடை விதிக்கும் பள்ளிகள் பற்றியும் கல்வி அமைச்சுக்குத் தெரியபடுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் கெடுபிடிகள் பண்ணும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது உடனடியாகப் புகார் செய்யவேண்டும்.

Tuesday, January 26, 2010

தமிழைக் காக்க தைப்பூசத்தில் உண்ணாநோன்பு



எசு.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட இருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.


அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.


“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. (விரிவாக)
  • நன்றி:விடுதலைமலேசியாஇன்று

Saturday, January 23, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)


*இதன் முதற்பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

தைத்திங்கள் பிறக்கும் பொழுதெல்லாம் பொங்லோடு சேர்ந்து சில புரட்டுகளும் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. இந்தக் கோளாறுகளை எல்லாம், கோளாறுகள் என்றே தெரியாமலே பலர் குளறுபடிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்டக் கூட்டத்தார் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு பொங்கலில் சில கோளாறுகளைச் செய்துவருகின்றனர்; பொங்கலன்று பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நுண்ணரசியல் விளையாட்டு காட்டுகின்றனர்.

அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

கோளாறு 1:- பொங்கல் முதல்நாள், சூரியப் பொங்கல் எனப்படுகிறது. காலையில் கதிரவன் உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கவேண்டும் என்பதுதான் காலாகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். அதுதான் இயற்கையானதும் இயல்பானதும்கூட. ஆனால் இன்றோ, பொங்கலுக்கு நல்ல நேரம் குறிக்கப்படுகிறது. அந்த நல்ல நேரத்தைத் தெரிந்துகொள்ள நமது மக்கள் பயபத்தியோடு காத்திருப்பதும், பிறகு சாமிக்குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி நல்ல நேரப்படி பொங்கல் வைப்பதும் பாரிய நகைச்சுவை.

அப்படி குறித்துக் கொடுக்கப்படும் நேரம் எதுவாக இருக்கிறது தெரியுமா? சூரியன் நன்றாகக் கொளுந்துவிட்டு காயும் நேரமாக இருக்கும் அல்லது சூரியன் உச்சி மண்டைக்கு மேலே வரும் மதிய நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் பொங்கல் வைக்கும் நல்ல நேரம் குறித்துக்கொடுக்கபட்ட கதையும் உண்டு. அதற்கும் மேலே போய், காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் என்று ஒரே நாளில் இரண்டு நேரங்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை ஒன்றும் இவ்வாண்டு நடந்தது. பொங்கல் வைக்கும் நல்ல நேரம் இரவு 8.00 மணி என்று முதலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதுதான் அது. அப்புறம், பொங்கல் அமாவாசையில் வருகிறது. அதனால், மறுநாள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூடவே இன்னொரு புரளி வேறு.

இப்படி பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்துக்கொடுக்கும் கோளாறு எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதை விளக்கி எழுதினால், சோதிட மேதைகள், பத்திமான்கள், ஏன் ஊதுவத்தி வணிகர்கள் கூட வம்புக்கு வந்துவிடுவார்கள். அதனால், அதை எழுதாமல் விடுகிறேன்.


கோளாறு 2:- சூரியப் பொங்கலுக்கு மெனக்கெட்டு நேரம் குறித்து கொடுக்கின்ற சோதிடக் குருமார்கள், ஏனோ தெரியவில்லை மாட்டுப் பொங்கலுக்கும் மறுநாள் காணும்(கன்னிப்) பொங்கலுக்கும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில் இத்தனை மணிக்குதான் பழையத் தட்டுமுட்டு துணிமணிகளைக் கொளுத்த வேண்டும் என்றும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. மண்டையைக் குழப்பும் இந்தக் கோளாறுக்காக எங்கே போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை!

கோளாறு 3:- பொங்கலை அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது புதிதாக ஒரு புராணப் புழுகை அள்ளிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கடவுளர் ஒருவர் சூரியனாகவே வடிவெடுத்தாராம். அதனால், பொங்கலன்று சூரியப் பகவானோடு அந்தக் கடவுளரையும் சேர்த்து வழிபட்டால் கோடானும் கோடி நன்மை உண்டாகுமாம். இப்படி, இயற்கை வழிபாட்டை ஒட்டிய பொங்கலின் பண்பாட்டுச் சிறப்பை மழுங்கடித்து அதில் மதச்சாயத்தைப் பூசியும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குச் சார்புபடுத்தியும் கோளாறு செய்யப் பார்க்கிறது ஒரு தரப்பு.


கோளாறு 4:- பொங்கல் நாளில் அதாவது தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டாகிய திருவள்ளுவராண்டு பிறக்கிறது. இலக்கியத்திலும், வானியலிலும் இதற்குத் தக்க சான்று உண்டு. தமிழ்க்கடல் மறைமலை அடிகள், திரு.வி.க, பேராசிரியர் கா.நமசிவாயர், சிவனியப் பெரியார் சச்சிதானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அய்வுசெய்து, தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆயினும், தை முதல் நாளை இன்னமும் தமிழ்ப் புத்தாண்டாகச் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமயஞ்சார்ந்த அமைப்புகளும் தலைவர்களும் இதனை ஏற்பதே இல்லை. அதற்கேற்றவாறு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து மட்டுமே சொல்கிறார்கள். மறந்தும்கூட, தமிழ்ப் புத்தாண்டு என்று மூச்சுப் பரிவதே இல்லை.

சமய நாட்டமுள்ளவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர்தம் வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்வதில் மிகவும் குறியாக இருக்கின்றனர்.

கோளாறு 5:- மலேசியாவில் வெளிவரும் இரு நாளிகைகள் பொங்கல் வாழ்த்தோடு தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்து செய்தி போடுகின்றன. ஆனால், சில ஏடுகளில் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடத்திலும்கூட வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படியொரு வரலாற்று மறைப்பைச் செய்வதற்குச் சில பின்னணிகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கு விரிவாகப் பேச விருப்பமில்லை.

கோளாறு 6:- நாட்டில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளும், சமயம் சார்ந்த அமைப்புகளும், பொது இயக்கங்களும் கூட தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை; வாழ்த்து சொல்லுவதும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்வதும் இல்லை. இவர்களின் இந்த நடிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஆனாலும், இவ்வாண்டு எதிர்க்கட்சிகளில் இருக்கும் நமது தலைவர்கள் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நாளிகைகளில் வெளிவந்திருந்தன. மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தச் சொல்லலாம்.)


கோளாறு 7:- அரசியலாளர்கள் சிலர், சில செய்தியிதழ்கள் போலவே தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழ்ப் புத்தாண்டைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றன. அவ்வளவு ஏன். கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் உளறிக்கொட்டி கிளறிமூடும் தனியார் வானொலிகூட பொங்கல்! பொங்கல்! என்று முழங்கியதே தவிர தமிழ்ப் புத்தாண்டு என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே தன்னுடைய செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி கொஞ்சமாகப் பேசியது.

இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது, பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துவிடக் கூடாது, ‘தைப் பிறப்பே தமிழ்ப் புத்தாண்டு’ என்பது மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் சில தரப்பினர் மிக மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காண முடிகிறது . எது எப்படியோ. ஒன்றுமட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்த நுண்ணரசியலுக்குப் பின்னணியில் யாரோ ஒரு தனியாள் அல்லது ஒரு இயக்கம் கண்டிப்பாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் புத்தாண்டை இருட்டடிப்புச் செய்வதற்கான ஆதரவும் அதற்குரிய சதித்திட்டமும் வேறொரு நாட்டிலிருக்கும் ஆரிய வழித்தோன்றல்கள் வழியாக இவர்களுக்குக் கிடைக்கலாம்.



இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.

Wednesday, January 20, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)



எங்க ஊரு (மலேசியா) பொங்கல் இப்போதெல்லாம் கோலாகலமாக நடைபெறுகிறது. அப்படியானால், முன்பெல்லாம் இப்படி இல்லையோ என நீங்கள் கேட்கலாம். அதற்கு “ஆமாம்” என்பதே பதில்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம், இப்போது போல இருந்ததில்லை. ஆனால், இன்றோ வீட்டுக்கு வீடு பொங்கல் வைப்பது கட்டாயாமான ஒன்றாகிவிட்டது.

இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பல புதிய பரிணாமங்களைக் கண்டுவிட்டது. இற்றைநாள் பொங்கலில் பெருமைப்படத்தக்க பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகக் காண்போமா?

மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள்

1.இப்போது மலேசியத் தமிழர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கலுக்குக் கிடைத்திருக்கும் பெருமதியாகக் கொள்ளலாம்.


2.பொது இடங்களில் நூறு, இருநூறு, ஆயிரம் எனப் பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சாதனை புரிகின்றனர். இதனால், மற்ற இனத்தாரின் கவனம் பொங்கல் மீது இப்போது விழுந்திருக்கிறது.

3.தமிழர்களோடு இணைந்து மலாய்க்காரர், சீனர் என மூவினத்தவரும் பொங்கலிடும் புதிய பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றது.

4.நாட்டுப் பிரதமர் தொடங்கி மற்ற இனத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தீபாவளிக்கு மட்டுமே வாழ்த்துச் செய்தி வழங்கிய காலம் மாறி, இப்போது பொங்கலுக்கும் வாழ்த்துச் செய்தி தருகிறார்கள்.




5.மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பக்கங்கள், இணைப்புகள் வெளியிடுகின்றன. அதோடு, தங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையும் விடுகின்றனர். இது பொங்கலுக்குத் தரப்படும் மரியாதை எனவும் சொல்லலாம்.

6.நாட்டில் வெளிவரும் வார, மாத இதழ்கள் அனைத்தும் பொங்கல் சிறப்பிதழ் வெளியிட்டு பொங்கல் குதூகலத்தை அதிகப்படுத்துகின்றன.

7.ஒலி – ஒளி ஊடகங்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. அதுவும், சொந்த நிகழ்ச்சிகளாக உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

8.தமிழ் சார்ந்த இயக்கங்கள் பொங்கல் விழா, தமிழர் திருநாள் முதலான பெயர்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றன. கலை, இலக்கியப் போட்டிகளும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.

9.கோலாலம்பூரில் செயல்படும் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழர் திருநாள் விழாவை நடத்தி நாடு முழுவதும் தமிழ் உணர்வைப் பரவச் செய்கிறது.

10.பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் நாளும் வருகின்றது. திருக்குறளைத் தமிழர் மறையாக ஏற்றுக்கொண்டு தமிழ் வாழ்வு வாழும் தமிழன்பர்கள் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கூட்டு வழிபாடு, திருவள்ளுவர் குருபூசை என்ற பெயர்களில் ஒன்றுகூடி அகவழிபாடு செய்கின்றனர்.

11.பொங்கலன்று திறந்த இல்ல விருந்துகளும் இப்போது ஆங்காங்கு நடைபெறுகின்றன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்றிலும் மரக்கறி உணவுகள் பரிமாறப்படுகின்றன. விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையில் வந்து விருந்தோம்பலில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

12.நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் பொங்கலன்று சிறப்பு விடுமுறை எடுக்கின்றன. இது புதிய பண்பாடாக உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா, தீமிதி, சித்திரைப் பௌர்ணமி என்று விடுமுறை எடுத்து வந்த தமிழ்ப்பள்ளிகள் இப்போது பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்கின்றன.

13.சில தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கலிட்டு மகிழ்கின்றனர். தவிர, பொங்கல் தொடர்பாக பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நமது மாணவர் சமுதாயத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகளை வளர்ப்பதற்காக தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

14.இதேபோல், இப்போதெல்லாம் கல்லூரி, பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் முதலான உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் நமது மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையும் காண முடிகிறது.


15.நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.

16.இத்தனையும் போக, தை முதல் நாள் பொங்கல் மட்டுமல்ல; தமிழ்ப் புத்தாண்டும் கூட. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழ் நாளேடுகளும் சில தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நெஞ்சை நிமிர்த்தி ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று உரக்க அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

17.மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய இரு நாளேடுகளும் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், தமிழியல் ஆய்வுக் களம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான அமைப்புகளும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக வலியுறுத்தி வருகின்றன.

18.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் தொடர்ந்து தமிழ் நாள்காட்டி வெளியிடப்பெறுகின்றது. தமிழியல் ஆய்வுக் களம் இந்த அரும்பணியைச் செய்து வருகின்றது. இப்போது பிறந்துள்ள திருவள்ளுவராண்டு 2041ஐ முன்னிட்டு முழுக்க முழுக்கத் தமிழை முன்படுத்திய நாள்காட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படியாக, மலேசியாவில் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில், இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

அதற்காக, நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன; நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ள முடியாது.

காரணம், மேலே சொன்ன அத்தனைக்கும் நேர்மாறான கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. அல்லது, திட்டமிட்டு சில கோளாறுகள் செய்யப்படுகின்றன. பொங்கல் பெயரில் நடக்கின்ற குளறுபடிகளை அடுத்த இடுகையில் எழுதுவேன்.

அதுவரை.. நீங்களும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக் குதிரையை ஓடவிடுங்களேன்..!

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து!



திருத்தமிழ் வலைப்பதிவு வாசகர்களாகிய திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்



இனிய பொங்கல் திருநாள்;
தமிழ்ப் புத்தாண்டு 2041 நல்வாழ்த்து.


தமிழ் தமிழாக;
தமிழர் தமிழராக;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.


அன்புடன்:- சுப.நற்குணன்



பொங்கல் சிறப்புக் கட்டுரை படிக்க இங்கு சொடுக்கவும்

Blog Widget by LinkWithin