Wednesday, January 20, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)எங்க ஊரு (மலேசியா) பொங்கல் இப்போதெல்லாம் கோலாகலமாக நடைபெறுகிறது. அப்படியானால், முன்பெல்லாம் இப்படி இல்லையோ என நீங்கள் கேட்கலாம். அதற்கு “ஆமாம்” என்பதே பதில்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம், இப்போது போல இருந்ததில்லை. ஆனால், இன்றோ வீட்டுக்கு வீடு பொங்கல் வைப்பது கட்டாயாமான ஒன்றாகிவிட்டது.

இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பல புதிய பரிணாமங்களைக் கண்டுவிட்டது. இற்றைநாள் பொங்கலில் பெருமைப்படத்தக்க பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகக் காண்போமா?

மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள்

1.இப்போது மலேசியத் தமிழர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கலுக்குக் கிடைத்திருக்கும் பெருமதியாகக் கொள்ளலாம்.


2.பொது இடங்களில் நூறு, இருநூறு, ஆயிரம் எனப் பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சாதனை புரிகின்றனர். இதனால், மற்ற இனத்தாரின் கவனம் பொங்கல் மீது இப்போது விழுந்திருக்கிறது.

3.தமிழர்களோடு இணைந்து மலாய்க்காரர், சீனர் என மூவினத்தவரும் பொங்கலிடும் புதிய பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றது.

4.நாட்டுப் பிரதமர் தொடங்கி மற்ற இனத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தீபாவளிக்கு மட்டுமே வாழ்த்துச் செய்தி வழங்கிய காலம் மாறி, இப்போது பொங்கலுக்கும் வாழ்த்துச் செய்தி தருகிறார்கள்.
5.மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பக்கங்கள், இணைப்புகள் வெளியிடுகின்றன. அதோடு, தங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையும் விடுகின்றனர். இது பொங்கலுக்குத் தரப்படும் மரியாதை எனவும் சொல்லலாம்.

6.நாட்டில் வெளிவரும் வார, மாத இதழ்கள் அனைத்தும் பொங்கல் சிறப்பிதழ் வெளியிட்டு பொங்கல் குதூகலத்தை அதிகப்படுத்துகின்றன.

7.ஒலி – ஒளி ஊடகங்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. அதுவும், சொந்த நிகழ்ச்சிகளாக உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

8.தமிழ் சார்ந்த இயக்கங்கள் பொங்கல் விழா, தமிழர் திருநாள் முதலான பெயர்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றன. கலை, இலக்கியப் போட்டிகளும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.

9.கோலாலம்பூரில் செயல்படும் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழர் திருநாள் விழாவை நடத்தி நாடு முழுவதும் தமிழ் உணர்வைப் பரவச் செய்கிறது.

10.பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் நாளும் வருகின்றது. திருக்குறளைத் தமிழர் மறையாக ஏற்றுக்கொண்டு தமிழ் வாழ்வு வாழும் தமிழன்பர்கள் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கூட்டு வழிபாடு, திருவள்ளுவர் குருபூசை என்ற பெயர்களில் ஒன்றுகூடி அகவழிபாடு செய்கின்றனர்.

11.பொங்கலன்று திறந்த இல்ல விருந்துகளும் இப்போது ஆங்காங்கு நடைபெறுகின்றன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்றிலும் மரக்கறி உணவுகள் பரிமாறப்படுகின்றன. விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையில் வந்து விருந்தோம்பலில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

12.நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் பொங்கலன்று சிறப்பு விடுமுறை எடுக்கின்றன. இது புதிய பண்பாடாக உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா, தீமிதி, சித்திரைப் பௌர்ணமி என்று விடுமுறை எடுத்து வந்த தமிழ்ப்பள்ளிகள் இப்போது பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்கின்றன.

13.சில தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கலிட்டு மகிழ்கின்றனர். தவிர, பொங்கல் தொடர்பாக பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நமது மாணவர் சமுதாயத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகளை வளர்ப்பதற்காக தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

14.இதேபோல், இப்போதெல்லாம் கல்லூரி, பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் முதலான உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் நமது மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையும் காண முடிகிறது.


15.நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.

16.இத்தனையும் போக, தை முதல் நாள் பொங்கல் மட்டுமல்ல; தமிழ்ப் புத்தாண்டும் கூட. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழ் நாளேடுகளும் சில தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நெஞ்சை நிமிர்த்தி ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று உரக்க அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

17.மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய இரு நாளேடுகளும் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், தமிழியல் ஆய்வுக் களம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான அமைப்புகளும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக வலியுறுத்தி வருகின்றன.

18.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் தொடர்ந்து தமிழ் நாள்காட்டி வெளியிடப்பெறுகின்றது. தமிழியல் ஆய்வுக் களம் இந்த அரும்பணியைச் செய்து வருகின்றது. இப்போது பிறந்துள்ள திருவள்ளுவராண்டு 2041ஐ முன்னிட்டு முழுக்க முழுக்கத் தமிழை முன்படுத்திய நாள்காட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படியாக, மலேசியாவில் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில், இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

அதற்காக, நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன; நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ள முடியாது.

காரணம், மேலே சொன்ன அத்தனைக்கும் நேர்மாறான கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. அல்லது, திட்டமிட்டு சில கோளாறுகள் செய்யப்படுகின்றன. பொங்கல் பெயரில் நடக்கின்ற குளறுபடிகளை அடுத்த இடுகையில் எழுதுவேன்.

அதுவரை.. நீங்களும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக் குதிரையை ஓடவிடுங்களேன்..!

2 comments:

Anonymous said...

/////நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.////
சிரிப்பு அடக்க முடியவில்லை திருத்தமிழின் குழந்தைதனமான கள்ளம் கபடமற்ற வார்த்தைகளை பார்க்கும் போது....

நாகர்கோவில் ஜனவரி 16 2009, பிள்ளையார்புரத்தில் வீட்டு முன் பொங்கல் வைக்க போலீசார் அனுமதி மறுப்பு. மீண்டும் பதட்டம், போலீஸ் குவிப்பு.
தமிழனின் பண்டிகையை நீதிமன்ற தடுப்பாணை தடுத்தது ஏன் ஏன்?????

இனதுரோகிகள். தமிழையும் தமிழனின் கலாச்சாரத்தையும், கூட இருந்து குளிபறிக்கும் குள்ள நரித்தனம். தமிழா திருத்தமிழா எப்போது விழித்தெழுவாய்?????????????? அய்யகோ எங்குவரை புகுந்து விட்டார்கள் புற்று நோய்போல். தாக்கிய பாகத்தை அறுத்தெறியுங்கள். இல்லையேல் பிள்ளையார்புரம் போல் தங்களுடைய இணைய தளத்திலும் பொங்கல் வாழ்த்து கூறமுடியாமல் போகும்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//நாகர்கோவில் ஜனவரி 16 2009, பிள்ளையார்புரத்தில் வீட்டு முன் பொங்கல் வைக்க போலீசார் அனுமதி மறுப்பு. மீண்டும் பதட்டம், போலீஸ் குவிப்பு.
தமிழனின் பண்டிகையை நீதிமன்ற தடுப்பாணை தடுத்தது ஏன் ஏன்?????//

அயலகத் தமிழர்களின் உள்ளங்களில் சாதிவெறி, மதவெறி, சங்கதவெறி என பல வெறியுணர்ச்சிகள் எற்படுவதற்குத் தமிழ்நாடும், அங்குள்ள தலைவர்களுமே காரணிகளாக இருக்கின்றனர்.

தமிழ் நாட்டிலிருந்து ஒரு தலைவர் எங்கள் நாட்டுக்கு வந்தால்.. இங்கு புதிதாக ஒரு சாதிக்கட்சி உருவாகிறது.

அயலகத் தமிழர்களின் மண்டைக்குள் நஞ்சை ஏற்றுவதற்குத்தான் தமிழ் நாடும், அதன் தலைவர்களும் இருக்கிறார்கள் போலும்.

தமிழ்நாடு, இந்தியாவில் எதில்தான் அரசியல் விளையாட்டுகள் இல்லை.., பொங்கலில் இல்லாமல் போவதற்கு!!

தனித்தெலுங்கானா போல, தனித்தமிழ் நாடு பிரிந்தாலும் நல்லது என்று தோன்றுகிறது.

//இனதுரோகிகள். தமிழையும் தமிழனின் கலாச்சாரத்தையும், கூட இருந்து குளிபறிக்கும் குள்ள நரித்தனம். தமிழா திருத்தமிழா எப்போது விழித்தெழுவாய்?????????????? //

இனத்துக்குள் இருக்கும் துரோகிகளை முதலில் ஒழித்தால் நல்லது.

தமிழனுக்கு அன்னியன் செய்யும் பாதகம் எள்மூக்கு அளவுதான். ஆனால், தமிழனுக்குத் தமிழனே செய்யும் பாதகம் பரங்கி அளவினது என்று சும்மாவா சொன்னார்கள்.

Blog Widget by LinkWithin