Wednesday, December 16, 2009

இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்


‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நாளிகை ஆசிரியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு தாம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போவதாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் வெளிவரும் ‘ஊத்துசான் மலேசியா’ எனும் மலாய் நாளேட்டின் முகமை ஆசிரியர் சைனி அசான். அவர் எழுதிவரும் ‘சுவிட்’ (Cuit – தமிழில் சீண்டல்) பகுதியில் இன்று (16.12.2009) ஒரு கேலிச்சித்திரம் போட்டு செய்தியும் எழுதியுள்ளார்.

இந்தக் கேலிச்சித்திரத்தில் சைனி அசானுடைய வாய் ஒட்டப்பட்டது போலவும்; அவருடைய கணினி திரையில் ‘தூதுப்’ (TUTUP தமிழில் ‘மூடு’) என்று எழுதப்பட்டது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவருடைய கையும் காலும் கட்டப்பட்டு இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, இந்த வாரத்தில் வாயை மூடிக்கொண்டும், எழுதுவதை நிறுத்திக்கொண்டும் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.


வாயை மூடிக்கொள்ள வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறீர்களா? தொடருங்கள்...

அதாவது கடந்த 9.12.2009இல் தன்னுடைய சிறப்புப் பகுதியில் சைனி அசான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘இந்திய இந்தியர்கள், மலேசிய இந்தியர்களின் கதை’ என்பது அதன் தலைப்பு.

அக்கட்டுரையில், ‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு அவர் கூறிய சான்று என்ன தெரியுமா? அண்மையில் அவர் ஐதிராபாத் சென்றிருந்தாராம். அவர் தமிழ், இந்திப் படங்கள் பார்ப்பாராம். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்து எழுதியது இதுதான்.

“இந்திய நாட்டில் வாழும் இந்தியர்கள் கோளாறு குளறுபடிகளோடு வாழ்பவர்களாம். அந்த பண்பாடு இங்கே மலேசியாவில் உள்ள இந்தியர்களிடமும் எதிரொலிக்கிறதாம். இந்தியர்கள் மற்றவரைவிட மாறுபட்டவர்களாம். அதாவது, இந்திப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் அவர்களின் பண்பாட்டைப் பார்க்க முடியுமாம். அவர்கள் எப்போது பார்த்தாலும் கூச்சல்.. கூச்சல்.. கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்களாம்.

அதேபோல, மலேசியாவில் உள்ள இந்தியர்களும் கூச்சல் போடுகிறார்களாம். இங்கே கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நிபுணர்களாக, வழக்கறிஞர்களாக, அரசியலாளர்களாக இருக்கிறார்களாம். நன்குப் படித்தவர்கள் எல்லாரும் அதிகம் கூச்சல் போடுகிறார்களாம்.”


இது எப்படி இருக்கிறது..?

இந்த எழுத்தாளர் இப்படி ஒரு கருத்தை ஏன் எழுதினார் என்பதையும் இங்குச் சொல்ல வேண்டும்.

மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பிராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு என்.குலசேகரன் (இவர் ஒரு வழக்கறிஞர்) அண்மையில் “மலாய்க்காரர் மேலாண்மைக் கொள்கையை அடியோடு வேரறுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மலேசிய மக்கள் மேலாண்மைக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சினால் சினமடைந்துபோன சைனி அசான் எனும் மலாய்க்கார ஊடகவியலாளர், மேலே சொன்ன செய்திகளை எல்லாம் குறிப்பிட்டு என்.குலசேகரனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களையே வசைபாடி எழுதியிருந்தார்.

மலேசிய இந்தியர்களை மிகவும் இழிவுபடுத்தி எழுதிய அவருக்கு எதிராக மாண்புமிகு என்.குலசேகரன் உள்பட, ஆளும் / எதிர்க்கட்சித் தலைவர்களும், பொது இயக்கங்களும், தனியாட்களும் படையெடுத்துக் காவல்துறையில் பல புகார்களைச் செய்தனர்.

இதனால்தான் அந்த ஊடகவியலாளர் ஒரு வாரத்திற்கு எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போலும்.

இது உண்மையிலேயே அவருடைய முடிவா அல்லது அண்டப் புளுகா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

அடுத்த வாரம் அவருடைய தூவலும் (பேனா) அந்த நாளேடும் மீண்டும் ஒரு நஞ்சை கக்காமல் இருக்குமா?

Sunday, December 13, 2009

வேட்டைக்காரனை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம்


வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரசுடன் கமுக்க உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் இது. படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

  • நன்றி:-தமிழர் வலைப்பதிவு

Saturday, December 12, 2009

எசுபிஎம்12 பாடக் கவன ஈர்ப்புப் பேரணி

எசுபிஎம் தமிழ்மொழி - இலக்கியம் ஆகிய பாடங்கள் தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான சூழல் இன்று ஓர் உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (12.12.2009) காலை 10.00 மணி தொடங்கி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்தத் தமிழ் மீட்புப் பேரணி மிக கட்டுக்கோப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. எசுபிஎம்12 பாட மீட்புக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தலைமையில் இந்த முடற்கட்ட தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றியுடன் நடைபெற்றுள்ளது.

இந்த எழுச்சியும் - தமிழ் மீட்பு உணர்வும் - தமிழ்க் காப்பு உணர்வும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பது பலருடைய விருப்பமும் எண்ணமுமாக இருக்கிறது. எனவே, தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும்.

இன்று "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" இல் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2009 தோட்ட மாளிகை
"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்


1)மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது அம்சத்தை நிலை நிறுத்த வேண்டும்.

வரைவு எண்:152
அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.

வரைவு எண்:152(1)(a)
பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண்:152(1)(b)
கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.


2)தாய் மொழியான தமிழ்க் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமலாக்குவதற்கு முன் சமூக இயக்கங்களையும் கல்வியாளர்களையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும்.


3)எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

4)தமிழ் மொழியின் ஆய்விற்கும் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் அரசுசார் அமைப்பு ஒன்று அதிவிரைவில் முழு அரசாங்க நிதி உதவியோடு அமைக்கப்பட வேண்டும்.

5)நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மொழிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு தரப்பின் நடவடிக்கைகளையும் இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் வேண்டிய பொறுப்பு நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளால் நாம் வேறுபட்டிருக்கலாம். அது எல்லாவிடத்திலும் நிகழும் இயல்பான ஒன்றுதான். ஆனாலும் மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது, நாம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால்தான் வெற்றியை நாம் ஈட்ட முடியும் என்பதற்கு இன்று நடந்த "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" மற்றுமொரு நற்சான்று என்றால் மிகையில்லை.


Monday, December 07, 2009

எசுபிஎம்12: மறுபடியும் இன்னொரு போராட்டமா?


2010ஆம் ஆண்டு தொடங்கி, மலேசியக் கல்விச் சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வில் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை வன்மையாகக் கண்டித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் உக்கிரமாகக் குரல் கொடுத்தன. தமிழ் மக்களிடையே எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து 10 பாடங்களுக்குப் பதிலாக 12 பாடங்களை எடுக்க இசைவு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்போடு சேர்த்து இரண்டு அணுகுண்டுகள் தமிழர் தலைக்குமேல் போடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் மலேசியத் தமிழர்களிடையே கொந்தளிப்பு வெடித்துள்ளது. அதற்குக் காரணமான அந்த 2 அணுகுண்டுகள் இவைதாம்:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் (Core Subject) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.

யாருமே எதிர்பார்க்காத இந்தப் புதிய அறிவிப்பினால் – தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மீண்டும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பினால் இப்போது, 2ஆம் கட்ட மொழிப் போராட்டம் தொடங்கிவிட்டது. பொது இயக்கத் தலைவர்களும் அரசியலாளர்களும் உடனடி கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி (பினாங்கு மாநிலத் துணை முதல்வர்)
இந்தப் புதிய அறிவிப்பு சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 12 பாடங்கள் எடுத்தாலும் 10 முகன்மை பாடங்கள் (Core Subject) மட்டுமே கணக்கிடப்படும் என்று கூறுவதை சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்மொழி அழிக்கப்படுவதை வரவேற்கிறார்களா? மலேசிய இந்தியர்களுக்கு இந்த நாட்டில் தமிழ்மொழி ஒன்றுதான் இருக்கிறது. அதையும் இழந்துவிட்டால் தாய்மொழியற்றச் சமுதாயமாக உருவாக்கப்பட்டு விடுவோம். இந்த அவல நிலை தேவையா? நமது தாய்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றை இழக்கப் போவதை நாம் வரவேற்கப் போகிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். தமிழ்மொழியைக் காப்பாற்ற நாடு முழுவதும் பல எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப்படும். அதன் முதல் கூட்டம் இன்று 6.12.2009, பிரிக்பீல்டில் நடக்கவிருப்பதாகக் கூறினார்.

ஆ.திருவேங்கடம் (தமிழ் இலக்கிய 12 பாட மீட்புக்குழுத் தலைவர்)

12 பாடங்கள் எடுக்கலாம் என்று அமைச்சரவை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இதுவொரு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. நமது போராட்டம் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. 10 பாடங்கள் எடுக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது இலக்கியப் பாடங்களையும் எடுத்தால், அந்த இரண்டு பாடங்களுக்கும் அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவின் பின்புலத்தில் உள்ள சூட்சுமங்களை முழுமையாக அறியாமல் சிலர், போராடி வெற்றி பெற்றதாகப் புலம்பி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரும் திசம்பர் 12ஆம் நாள் தோட்ட மாளிகையில் திட்டமிட்டபடி “தமிழைக் காப்போம் – இலக்கியத்தை மீட்போம்” எனும் கவன ஈர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

க.உதயசூரியன் (மலேசியத் தமிழ்க்கல்வி அறவாரியத் தலைவர்)
எசுபிஎம் தேர்வில் 12 பாடங்கள் என்று அரசாங்கம் கூறிய போதிலும், தமிழ் – தமிழ் இலக்கியம் பாடங்களுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். மாணவர்களுக்குப் பொதுக் கல்விக் கடனுதவி பற்றி ஆழமாக விவாதிக்கவும் கல்வி அமைச்சு தனது முடிவினை அறிவிக்க வேண்டும். சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், இந்தச் சிக்கல் தொடர்பாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கருத்துரைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

“நாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக விடயங்களைக் கவனிப்போம். 10 பாடங்களுக்குப் பதில் 12 பாடங்களுக்கு அனுமதிப்பதின் மூலம் நாம் முதலாவது தடையைத் தாண்டியுள்ளோம். அதற்கு நாம் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

அந்த இரண்டு கூடுதல் பாடங்களை (தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும்) அரசாங்க உபகாரச் சம்பளங்களுக்கும் மற்ற விடயங்களுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது தான் இப்போதைய சிக்கல் ஆகும்.

12 பாடங்கள் விடயம் மீது அரசாங்கத்துடன் நாம் பேச்சு நடத்தியது போல இந்தச் சிக்கல் மீது நாங்கள் (மஇகா) பேச்சு நடத்த அனுமதியுங்கள்.
டத்தோ ஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் இது நாள் வரையில் நமக்கு (இந்திய சமூகத்திற்கு) நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால் அவரிடம் பிரச்னையை விட்டு விட வேண்டும்” என்று அவர் கூறியுள்ள செய்தியை மலேசியாஇன்று வெளியிட்டுள்ளது.
இச்செய்தி ஆறுதலைக் கொடுத்தாலும்கூட, இறுதியான முடிவு அறிவிக்கப்படும் வரை மக்களின் மனங்கள் பொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எது எப்படியாயினும், 2010 கல்வியாண்டு தொடங்குவதற்கு இன்னும் குறுகிய காலமே இடைவெளி இருப்பதால், இந்தச் சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டியிருக்கிறது. ஒரு சிறுபான்மை இனத்தின் கல்வி உரிமையைக் கையிலெடுத்துக்கொண்டு அரசியல் விளையாட்டுக் காட்டி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது அறிவுடைமைக்கு எதிரானது.

மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதில் எந்த ஓர் அரசாங்கத்திற்கும் நன்மையே அன்றி, தீது யாதொன்றுமில்லை.
  • பி.கு:- மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளேடுகள், மலேசியாஇன்று இணையத்தளம் ஆகியவை வெளிட்ட செய்திகளின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

Saturday, December 05, 2009

எசுபிஎம்12: மழை ஓய்ந்தது; தூவானம் விடவில்லை


எசுபிஎம் தேர்வுக்கு அமரும் மாணவர்கள் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என்னும் முடிவில் கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு, இப்போது 12 பாடங்கள் எடுக்கலாம் என புதிய அறிவிப்பு கொடுக்கபட்டுள்ளது.

10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற விதியினால், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியாமல் இருந்த தடை இப்போது நீங்கியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.
ஆனாலும், இந்த வெற்றியானது முழுமையானது அல்ல. இன்னும் அவிழ்க்கபடாத முடிச்சுகள் இருக்கின்றன; தீர்க்கப்படாத நெருடல்கள் தொடருகின்றன.

புதிய அறிவிப்பினால் தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் சில நன்மைகள் கிடைத்துள்ளன. முதலில், அவற்றைப் பார்ப்போம்.

1.வழக்கம் போலவே தமிழ் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் எடுப்பதற்கான வாய்ப்பு நிலைத்திருக்கிறது.

2.இவ்விரு பாடங்களின் முடிவுகளும் சான்றிதழில் குறிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

3.தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

4.தமிழ்மொழிக்குரிய அரசுரிமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
5.தமிழ் இலக்கியம் தொடர்ந்து படிக்கப்படுவதற்கும் காக்கப்படுவதற்கும் உரிய சூழல் தொடர்ந்து நிலவுகிறது.

எனினும், இந்தப் புதிய அறிவிப்பில் நெருடலை உண்டாக்கும் சில விடயங்களும் இருக்கின்றன. அதனால், மழை ஓய்ந்தாலும் தூவானம் விடாத கதையாக இச்சிக்கல் இன்னும் தொடரக்கூடும். அவை:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.

இவை இரண்டும் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளப்பட வேண்டியவை அல்ல எனத் தோன்றலாம். காரணம், நடப்புச் சூழலிலும் இவ்விரு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. என்றாலும், இதனால் தமிழ்ச் சமுதாயமும் மாணவர்களும் மீண்டும் ஒரு பெரும் குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்; மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும்.
ஏனெனில், தமிழுக்கு நிச்சயமற்ற – பாதுகாப்பற்ற சூழல் இன்னமும் இருப்பதையே மேலே சொன்ன இரண்டு விடயங்களும் புலப்படுத்துகின்றன.

எனவே, நாம் தெளிவுபெற வேண்டிய அல்லது கல்வியமைச்சு தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அல்லது கல்வியமைச்சுக்குத் தெளிவுபடுத்தி நாம் உறுதிபடுத்த வேண்டிய சில விவரங்கள் உள்ளன. அவை:-

1.மாணவர்கள் எடுக்கும் 12 பாடங்களின் தேர்ச்சி விவரமும் அரசு சான்றிதழில் கண்டிப்பாகக் குறிப்பிடப்படுமா?

2.தேர்வுப் பாடங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்த்தப்பட்ட பின்னர், தமிழ்மொழி பழையபடியே விருப்பப்பாடக் [Matapelajaran Elektif (Tambahan)]குழுவில் வைக்கப்படுமா?
*(கட்டாயப் பாடக் (Matapelajaran Teras) குழுவில் உள்ள 6 பாடங்களில் ஒன்றாக தமிழ் இடம்பெறாத நிலையில், விருப்பப்பாடக் குழுலிருந்து நீக்கப்பட்டால் தமிழுக்குப் பாதிப்பே ஆகும்).

3.தமிழ்மொழி , வெளிப்பாடம் [Matapelajaran Elektik (Luar Kurikulum)] குழுவுக்குத் தள்ளப்படும் நிலைமை கண்டிப்பாக நிகழக்கூடாது.

4.தமிழ்மொழி விருப்பப்பாடக் குழுவில் நிலைநிறுத்தப்படும் சூழலில், மேற்படிப்பு, கல்விக் கடனுதவி முதலிய தேவைகளுக்குத் தமிழ்மொழியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே நியாயமாகும். இது கடைபிடிக்கப்படுமா?

5.தமிழ் இலக்கியம் வெளிப்பாடம் [Matapelajaran Elektif (Luar Kurikulum)] குழுவில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலைப்பாடு என்ன?

6.அனைத்திற்கும் மேலாக, பள்ளி நிலையில் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் பயில்வதில் நடப்பில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகள், இடையூறுகள், தடைகள் நீக்கப்பட வேண்டும். இவ்விரு பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.

மொத்தத்தில், 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற முந்தைய முடிவு சில தளர்வுகளோடு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில், தமிழையும் இலக்கியத்தையும் அரசுத் தேர்வுப் படமாக எழுதுவதற்கான உரிமையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களும் நிறைய இருக்கின்றன.

எது எப்படியாயினும், இது தொடர்பாக மலேசியக் கல்வித்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வழி முழு விவரங்களை வெளியிடுவார் என கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். அந்தச் சுற்றறிக்கைதான் இந்தச் சிக்கலில் இருக்கும் கமுக்க(மர்ம) முடிச்சுகளை அவிழ்ப்பதாக இருக்கும்.

அதுவரையில், காத்திருந்து, நாம் எதிர்ப்பார்த்து அல்லது நமக்குச் சாதகமானது அறிவிக்கப்படாமல் போனால் மீண்டும் இன்னொரு முறை போராட வேண்டிய நெருக்கடி ஏற்படுமா?

அல்லது,

தமிழ்ச் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் ஆகியோர் உடனடியாக ஒன்றுகூடி கலந்துபேசி நமது மொழிக்கும் இலக்கியத்திற்கும் உறுதியான பாதுகாப்பை அளிக்கும் நல்லதொரு தீர்வை முன்வைக்கப் போகிறோமா?

Friday, December 04, 2009

தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!



2010 தொடங்கி மலேசியக் கல்விச் சான்றிதல் எனப்படும் எசுபிஎம் (SPM) தேர்வில் 10 படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவு அகற்றப்படுகிறது. 10 பாடங்களுக்குப் பதிலாகப் 12 பாடங்களை எடுக்க அமைச்சரவை இன்று இசைவு(அனுமதி) வழங்கியுள்ளது. மலேசியாஇன்று இணையத்தளம் இந்தச் செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ், தமிழர் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள், தமிழ் நாளேடுகள், தனியாட்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நோக்கத்தில் ஒரே குரலில் தமிழ்மொழிக்காகப் பெரிய எழுச்சியோடு போராடினர் என்பதை நாடே அறிந்துள்ளது.

ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற கடுமையான நெருக்கடியிலிருந்து தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுத்திருக்கும் மலேசியத் தமிழர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருகின்றனர்.

இன்று மலேசியத் தமிழர்தம் போராட்டத்தின் வழி அடைந்திருக்கும் இந்த வெற்றிக்குப் பொருத்தமாக மலேசியப் பாவலர் ஒருவர் அன்றே பாடி வைத்திருக்கிறார் இப்படி:-

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
-(தமிழ்நெறி ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்)
ஊர்கூடி தேர் இழுத்ததால் இழுத்ததால்தான் இந்த வெற்றி. ஒருமனதாக அனைவரும் போராடியாதால்தான் இந்த மாற்றம். ஒற்றுபட்டு நின்று குரல்கொடுத்ததால்தான் தமிழும் தமிழ் இலக்கியமும் மீட்கப்பட்டன – காக்கப்பட்டன - மலேசியத் தமிழரின் வாழ்வுரிமை நிலைநிறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் நமது மொழியின உரிமைகளைக் காப்பதற்குத்..
தமிழா ஒன்றுபடு..
தமிழால் ஒன்றுபடு..
தமிழுக்காக ஒன்றுபடு..
தமிழருக்காக ஒன்றுபடு..

இதுதொடர்பான மலேசியாஇன்று செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, December 02, 2009

தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்

மலேசியக் கல்விச் சான்றிதழ் எனும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பினால் தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருகிறது.

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழ்சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓங்கி குரலெழுப்பி வருகின்றன; கடும் கண்டனத்தைப் புலப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், மலேசியவின் நாளிதழ்கள் மூன்றும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்குத் நன்றிகூற மலேசிய இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழை மீட்டெடுப்பதில் தமிழ் செய்தித்தாள்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதைப் பற்றி நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். இதுவும் அது தொடர்பான பதிவுதான். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘மலேசிய நண்பன்’ நாளேடு பற்றிய செய்தி இது.

‘மலேசிய நண்பன்’ நாளேடு தொடர்ந்தாற்போல ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மொழிப்போராட்டச் செய்திகளை விரிவாக வெளியிட்டு வருகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

தொடர்ந்து ஒரே செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால், வாசகர்கள் வெறுப்படைவார்கள் என்ற வணிக நியதியை புறந்தள்ளிவிட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி, இந்தச் சிக்கல் பற்றி செய்திகள் போட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு நண்பன் நாளேடு முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்கு உரியது.

தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் மீட்கும் தன்னுடைய முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று 2.12.2009 ‘பிரதமருக்கு இந்தியர்கள் கோரிகை’ என்ற படிவத்தை வெளியிட்டிருக்கிறது நண்பன் நாளேடு.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களின் பார்வைக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

எசுபிஎம் தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களையும் எடுப்பதற்குரிய வகையில் அந்தப் பாட எண்ணிக்கையை 10லிருந்து 12ஆக அதிகரித்து உதவுமாறு பிரதமரையும், கல்வியமைச்சராகிய துணைப்பிரதமரையும் கேட்டுக்கொள்கிறது இந்தக் கோரிக்கைப் படிவம்.

மேலும், பிரதமர் வகுத்துள்ள ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டின் கீழ் அனைவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்தையும் இது மேற்கோள் காட்டியுள்ளது.

இதில், பெயர், முகவரி. அடையாள அட்டை எண் முதலான விவரங்களை எழுதி மலேசிய நண்பன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்றுதொடங்கி இன்னும் 10 நாட்களுக்கு இந்தப் படிவம் மலேசிய நண்பனில் வெளிவரும்.

ஆகவே, மலேசிய நண்பன் வாசகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தக் கோரிகைப் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழியாம் தமிழை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; தமிழ் இலக்கியத்தை காக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு:- இது மலேசிய நண்பனுக்காகச் செய்யப்படும் விளம்பரம் அல்ல. மலேசியாவில் தமிழ்மொழியின் வாழ்வுரிமைக்காக முன்வைக்கப்படும் வேண்டுகை.

Blog Widget by LinkWithin