Monday, December 07, 2009

எசுபிஎம்12: மறுபடியும் இன்னொரு போராட்டமா?


2010ஆம் ஆண்டு தொடங்கி, மலேசியக் கல்விச் சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வில் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை வன்மையாகக் கண்டித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் உக்கிரமாகக் குரல் கொடுத்தன. தமிழ் மக்களிடையே எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து 10 பாடங்களுக்குப் பதிலாக 12 பாடங்களை எடுக்க இசைவு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்போடு சேர்த்து இரண்டு அணுகுண்டுகள் தமிழர் தலைக்குமேல் போடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் மலேசியத் தமிழர்களிடையே கொந்தளிப்பு வெடித்துள்ளது. அதற்குக் காரணமான அந்த 2 அணுகுண்டுகள் இவைதாம்:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் (Core Subject) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.

யாருமே எதிர்பார்க்காத இந்தப் புதிய அறிவிப்பினால் – தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மீண்டும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பினால் இப்போது, 2ஆம் கட்ட மொழிப் போராட்டம் தொடங்கிவிட்டது. பொது இயக்கத் தலைவர்களும் அரசியலாளர்களும் உடனடி கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி (பினாங்கு மாநிலத் துணை முதல்வர்)
இந்தப் புதிய அறிவிப்பு சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 12 பாடங்கள் எடுத்தாலும் 10 முகன்மை பாடங்கள் (Core Subject) மட்டுமே கணக்கிடப்படும் என்று கூறுவதை சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்மொழி அழிக்கப்படுவதை வரவேற்கிறார்களா? மலேசிய இந்தியர்களுக்கு இந்த நாட்டில் தமிழ்மொழி ஒன்றுதான் இருக்கிறது. அதையும் இழந்துவிட்டால் தாய்மொழியற்றச் சமுதாயமாக உருவாக்கப்பட்டு விடுவோம். இந்த அவல நிலை தேவையா? நமது தாய்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றை இழக்கப் போவதை நாம் வரவேற்கப் போகிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். தமிழ்மொழியைக் காப்பாற்ற நாடு முழுவதும் பல எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப்படும். அதன் முதல் கூட்டம் இன்று 6.12.2009, பிரிக்பீல்டில் நடக்கவிருப்பதாகக் கூறினார்.

ஆ.திருவேங்கடம் (தமிழ் இலக்கிய 12 பாட மீட்புக்குழுத் தலைவர்)

12 பாடங்கள் எடுக்கலாம் என்று அமைச்சரவை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இதுவொரு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. நமது போராட்டம் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. 10 பாடங்கள் எடுக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது இலக்கியப் பாடங்களையும் எடுத்தால், அந்த இரண்டு பாடங்களுக்கும் அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவின் பின்புலத்தில் உள்ள சூட்சுமங்களை முழுமையாக அறியாமல் சிலர், போராடி வெற்றி பெற்றதாகப் புலம்பி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரும் திசம்பர் 12ஆம் நாள் தோட்ட மாளிகையில் திட்டமிட்டபடி “தமிழைக் காப்போம் – இலக்கியத்தை மீட்போம்” எனும் கவன ஈர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

க.உதயசூரியன் (மலேசியத் தமிழ்க்கல்வி அறவாரியத் தலைவர்)
எசுபிஎம் தேர்வில் 12 பாடங்கள் என்று அரசாங்கம் கூறிய போதிலும், தமிழ் – தமிழ் இலக்கியம் பாடங்களுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். மாணவர்களுக்குப் பொதுக் கல்விக் கடனுதவி பற்றி ஆழமாக விவாதிக்கவும் கல்வி அமைச்சு தனது முடிவினை அறிவிக்க வேண்டும். சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், இந்தச் சிக்கல் தொடர்பாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கருத்துரைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

“நாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக விடயங்களைக் கவனிப்போம். 10 பாடங்களுக்குப் பதில் 12 பாடங்களுக்கு அனுமதிப்பதின் மூலம் நாம் முதலாவது தடையைத் தாண்டியுள்ளோம். அதற்கு நாம் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

அந்த இரண்டு கூடுதல் பாடங்களை (தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும்) அரசாங்க உபகாரச் சம்பளங்களுக்கும் மற்ற விடயங்களுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது தான் இப்போதைய சிக்கல் ஆகும்.

12 பாடங்கள் விடயம் மீது அரசாங்கத்துடன் நாம் பேச்சு நடத்தியது போல இந்தச் சிக்கல் மீது நாங்கள் (மஇகா) பேச்சு நடத்த அனுமதியுங்கள்.
டத்தோ ஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் இது நாள் வரையில் நமக்கு (இந்திய சமூகத்திற்கு) நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால் அவரிடம் பிரச்னையை விட்டு விட வேண்டும்” என்று அவர் கூறியுள்ள செய்தியை மலேசியாஇன்று வெளியிட்டுள்ளது.
இச்செய்தி ஆறுதலைக் கொடுத்தாலும்கூட, இறுதியான முடிவு அறிவிக்கப்படும் வரை மக்களின் மனங்கள் பொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எது எப்படியாயினும், 2010 கல்வியாண்டு தொடங்குவதற்கு இன்னும் குறுகிய காலமே இடைவெளி இருப்பதால், இந்தச் சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டியிருக்கிறது. ஒரு சிறுபான்மை இனத்தின் கல்வி உரிமையைக் கையிலெடுத்துக்கொண்டு அரசியல் விளையாட்டுக் காட்டி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது அறிவுடைமைக்கு எதிரானது.

மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதில் எந்த ஓர் அரசாங்கத்திற்கும் நன்மையே அன்றி, தீது யாதொன்றுமில்லை.
  • பி.கு:- மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளேடுகள், மலேசியாஇன்று இணையத்தளம் ஆகியவை வெளிட்ட செய்திகளின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

5 comments:

மனோவியம் said...

தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்கள்தான் நமக்கு.தமிழர்களின் உணர்வினை உரசிப் பார்க்கும் அரசாங்கத்திற்கும் நமது உறங்கா உணர்வினை எடுத்து இயம்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.பேச்சு வார்த்தை எல்லாம் வெறும் கண்த்துடைப்பு.அவர்கள் மனம் மாறினால்ஏற்கனவே செயல் வடிவம் பெற்றுவிட்டது தமிழ் மொழி தடைகள். புத்தித்சாலி அரசியல் தலைவர்கள் கையில்தான் இருக்கிறது நமது தமிழ் மொழிக் கல்வி.இப்பொழுதே சிலர் அரசாங்கத்திற்கு ஒத்து ஓத ஆரம்பித்து விட்டார்கள்.தடைகளை தகற்ப்பதற்கு வீவேகம் நிறைந்த நமது தமிழர்களின் கையில் தான் இருக்கிறது.

உண்மையில் அரசாங்கம் இப்படிப்பட்ட முடிவுகள் எடுபதற்கும் சில தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தான் காரண்ம்.இந்த புல்லுறிவிகள் தாய் மொழிக் கல்விக்கு பெரும் தடையாய் இருக்கின்றார்கள்.pol என்ற தய் மொழிக் கல்வி தேசிய மொழி பாடச்சாலைகளில் சொல்லித் தருவதற்கு அரசாங்கம் அனுமதி தந்தும் சில் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தடைகளை எற்ப்படுத்தி அங்கு சென்று போதிக்காமல் இருக்க அன்று தான் பள்ளியில் சில கூட்டதை ஏற்ப்பாடு செய்கின்றனர்.போதிக்கும் ஆசிரியர்களே தவியாய் தவித்து கால தாமதமாய் சென்று போதித்து வந்தால் அங்குள்ள மலாய் பள்ளி தலைமை ஆசிரியர் சும்மா இருப்பார்களா?..தாய் மொழிக் கல்வியை தூக்கத்தான் பார்பார்கள்.இம்மாதிரியான விடயங்கள் மேல் நிலை அதிகாரிக்கு போகமாலா இருக்கும்.சில ஆசிரியர்கள் தன்னை விட அதிகம் ஊதியத்தை தாய் மொழி கல்வி போதிப்பதில் பெருகின்றார்கள் என்ற் ஒரே ஆதாங்கம் சில தலைமை ஆசிரியர்களுக்கு. தனக்கு பிடிக்காத ஆசிரியர் என்றால் இன்னும் பல தடைகள்.இவர்கள் சிந்திப்பதே இல்லை இவை எல்லாம் தமிழ் மொழி கல்வியை பாதிக்கும் என்று.இவர்களின் ஆணவ போக்கும் அதிகார திமிரும் தமிழுக்குதான் கேடு.

Tamilvanan said...

//டத்தோ ஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் இது நாள் வரையில் நமக்கு (இந்திய சமூகத்திற்கு) நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால் அவரிடம் பிரச்னையை விட்டு விட வேண்டும்” //

அப்ப‌டியாயின் 12 பாட‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமைச்ச‌ர‌வை முடிவு பிர‌த‌ம‌ருக்கு தெரியாம‌ல் அல்ல‌து புரியாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்ட‌தா?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருட்ணன்,

நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை.

இப்படி இருக்கும் பல சிக்கல்களை எப்படி, யார் தீர்த்து வைப்பது?

மேல்நிலையிலிருந்து கீழ்வரை இப்படி சிக்கலும் தடையும் இடையூறும் கொடுத்தால்.. நமது மாணவர்கள் எப்படி ஐயா தமிழைப் படிப்பார்கள்..?

தமிழுக்குப் போராடும் பொது இயக்கங்கள் நீங்கள் கூறியுள்ள விடயங்களையும் கருத்தில் கொள்வது நல்லது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//அப்ப‌டியாயின் 12 பாட‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமைச்ச‌ர‌வை முடிவு பிர‌த‌ம‌ருக்கு தெரியாம‌ல் அல்ல‌து புரியாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்ட‌தா?//

உங்கள் குறுக்கு விசாரணை மிகவும் சரியானது.

மனோவியம் said...

தங்களின் உணர்ச்சி வயப்படாமல் அழ்ந்த அறிவுபூர்வமாண தர்க்கரீதியான நாகரீகமான எழுத்துக்களை கண்டு யான் உள்ளம் மகிழ்வு கொண்டோம் ஐயா.தங்களின் சேவை இந்த தமிழனுக்கு தேவை என்பதை மறைக்கவோ மறுக்கவே முடியாது ஐயா.தங்களின் தமிழ் உள்ளம் தகைமைச்சிறந்த நல்லுள்ளம்.உங்களின் அறிவும் ஆற்றலும் தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு தேவை,தொடர்ந்து போராடுவோம்..உங்கள் எழுத்தால்,எண்ணத்தால் இந்த சமுதாம் மாறட்டும் ஐயா.தங்களின் பதிவுகள் தமிழர்களின் உண்மை நிலைகளையும் உணர்வுகளையும் சித்தரிக்கிறது.வாழ்க வளமுடன்.

Blog Widget by LinkWithin