Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2



தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3


தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

Monday, March 10, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனார்


(10.3.2008ஆம் நாள் பாவலேறு பெருஞ்சித்திரனாரின் 75ஆவது பிறந்தநாள். அதனையொட்டி அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகின்றது.)

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகளும் கருத்துகளும் பேரளவில் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.


தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது. பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார்.


பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர். பெருஞ்சித்திரனார் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.


தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் சுற்றுச்செலவை மேற்கொண்டார்.


"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''
என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.


1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார். 1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்காக வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் தமிழ்மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து வாழ்கின்றன.

நன்றி: http://muelangovan.blogspot.com/2007/08/blog-post_15.html

Wednesday, March 05, 2008

கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?



(நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட 'தமிழ்மொழி இலக்கணச் சிப்பம்' தொடர்பாக எழுந்த கண்டனங்களின் வரிசையில் நான் எழுதிய கட்டுரை. இக்கட்டுரை 9-3-2008இல் மலேசிய நண்பன் நாளேட்டில் வெளிவந்தது)


அண்மையில் நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் வெளியிட்ட தமிழ் இலக்கணச் சிப்பம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியதன் தொடர்பில் என்னுடைய கருத்துகளை இதன்வழி எழுதுகிறேன். இந்தச் சிக்கல் பற்றி மலேசிய நண்பன் (10.2.2008) விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. பின்னர் 12.2.2008இல் தலையங்கமும் தீட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, தலையங்கம் எழுதிய பாதாசன் அவர்களைச் சாடியும் தமிழ் இலக்கணச் சிப்பத்தை அதரித்தும் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.

இப்படி ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் கண்டித்து எழுதிக் கொண்டிருப்பதை விடுத்து, தமிழ்மொழியின் அமைப்பு யாது? தமிழில் கிரந்தமும் சமற்கிருதமும் எப்படி கலந்தது? வடமொழியின் துணை தமிழுக்குக் தேவையா? கிரந்தம் இல்லாமல் தமிழ் இயங்குமா? தமிழ் தன்னுடைய தூயநிலையிலே வாழ்ந்துவிட முடியுமா? என்பன போன்றவற்றை ஆய்ந்து தெளிந்தால் நூற்றாண்டுச் சிக்கலான இதற்கு நல்ல தீர்வு பிறக்கும் என்பது என்னுடைய கருத்து.


தமிழின் கட்டமைப்பு
தமிழ்மொழி மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட மொழி. உயிர், மெய் என அடிப்படை ஒலிகளாக 30 எழுத்துகளையும் ஓர் ஆய்த எழுத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட செம்மொழி தமிழ். தொல்காப்பியக் காலம் தொட்டு இந்தக் கட்டமைப்புக் குலைந்துபோகாமல் இருப்பதால்தான் தமிழ் இன்றளவும் தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது.

உலகின் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒலிகள் ஏறக்குறைய 25 மட்டுமே. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையான ஒலித்தொகுதி உண்டு. அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு ஒலிகள் உள்ளன. ஒரு மொழியில் உள்ள ஒலிகளை வேறொரு மொழியில் எழுதும்போது அதே ஒலிக்குறிப்போடு எழுத முடியும் என்பது இயலாத ஒன்று. பிறமொழிச் சொல்லுக்கு மிக நெருக்கமான ஒலியைக் கொண்டுதான் மற்றொரு மொழியில் எழுத வேண்டும். அல்லது மொழியாக்கம் செய்து எழுத வேண்டும். இந்த விதி எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.


இந்த உண்மையை உணர்ந்ததன் பயனாகத்தான் 3000 ஆண்டுக்கு முன்பே தொல்காப்பியர் வடவெழுத்தையும் சொற்களையும் விலக்கவேண்டும் என்றார். அவருக்கு முன்னர் தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தனித்தமிழே விளங்கியது. பிறகுதான் பிராகிருதம் சமற்கிருதம் முதலிய வடமொழிகள் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடுருவின. கி.பி3ஆம் நூற்றாண்டு தொடங்கி 6ஆம் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய நானூறு(400) தமிழுக்கு இருண்ட காலம் எனலாம். களப்பிரர், பல்லவர், மராட்டியர், மொகலாயர் முதலான அன்னியரின் ஆட்சியில் தமிழ் சின்னபின்னமாகிப் போனது. அதேபோல், தமிழரிடையே சனாதனம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் செல்வாக்குப் பெற்றதாலும் தமிழில் பிறமொழிக் கலப்புகள் பெருகின.


தமிழில் வடமொழி கலந்தது எப்போது?
வடமொழி பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய கி.பி.12ஆம் நூற்றாண்டில் தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதும் 'மணிப்பிரவாள நடை' உருவானது. அப்போதுதான், வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதுவதற்குப் புதிதாக சில வரிவடிங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக, தமிழ் எழுத்துகளின் அமைப்பிலேயும், இரு தமிழ் எழுத்துகளை ஒன்றாக இணைத்தும் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வடமொழிச் சொற்களை பெரிய அளவில் புகுத்தித் தமிழை முடக்க விரும்பிய சிலர் செய்த அயராத முயற்சியின் விளைவாக 'மணிப்பிரவாள நடை' பெரும் செல்வாக்குப் பெற்று வளர்ந்தது. சமற்கிருதச் சொற்களும் கிரந்த எழுத்துகளும் தமிழை இருபுறமும் நெருக்கி ஒடுக்கி வைத்தன.


இவ்வாறு தமிழில் கிரந்தமும், சமற்கிருதமும் இன்னும் பிற மொழிகளும் கலந்துபோனதால் தமிழ் தன்நிலைகெட்டுப் போனது. 12ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு நிகழ்ந்த கேட்டினை அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் முன் அறிவிப்புச் செய்துவிட்டார்.
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
அதாவது வடசொல் கலக்க நேர்ந்தால் அதற்கு ஒரு வரையறை செய்துகொண்டு எழுதவேண்டும் எனத் தொல்காப்பியர் வலியுறுத்தினார். தொல்காப்பியர் பிறமொழி சொல்லையோ, ஒலியையோ அல்லது எழுத்தையோ தமிழில் கலக்கலாம் என ஒருபோதும் சொல்லவே இல்லை. தொல்காபியர் கூறிய இலக்கணத்தைக் கடைபிடித்திருந்தாலே போதும், தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் தமிழ் வடிவத்திலும் தமிழ் ஒலிநயத்துடனும் இருந்திருக்கும். ஆனால், தமிழின் தனித்தன்மையும் தூய்வடிவமும் பேணப்படாமல் போனதால் தமிழுக்குள் கணக்கிலடங்காமல் பிறமொழிச் சொற்கள் புகுந்துகொண்டன.


வடமொழிக் கலப்பால் விளைந்த கேடுகள்
இதன் விளைவுகள் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டன. வடமொழி பெருவாரியாகக் கலந்ததால் தமிழானது கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல்வேறு மொழிகளாகச் சிதைந்து போனது. தமிழராக இருந்தவர்கள் பல்வேறு இனத்தவராக மாறிப்போனது மட்டுமன்று பகைவராகியும் போயினர். அதனினும் கொடுமை என்னவெனில், தமிழிலிருந்து பிரிந்த மொழிகளின் இலக்கிய வரலாறுகளை எழுதும்போது அவை தமிழுக்கும் முந்தியவை எனக் காட்டுவதுதான்.


வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் பரந்து விரிந்து இருந்த தமிழ்நாட்டு எல்லை சுருங்கிப்போனதும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்துபோனதும் மொழிக்கலப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அடுத்து, தமிழில் இருந்த பல்லாயிரக்கணக்கான சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன. தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளில் குடியேறியத் தமிழர்கள் தமிழின் அடையாளத்தை இழந்து வேற்று இனதாராகி விட்டனர். பீசித் தீவு, மொரிசியசு, இந்தோனீசியா முதலான நாடுகளில் குடியேறிய தமிழர்கள் இன்று தமிழராக இல்லை. நம் மலேசியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறிய மலாக்கா செட்டிகள் இன்று தமிழராக இல்லை. மொழியில் ஏற்படும் கலப்பினால் தமிழுக்கும் தமிழர்க்கும் நேர்ந்துள்ள கொடுமைகள் இப்படி பற்பல உள்ளன.


நல்லதமிழ்ப் பணியில் நல்லறிஞர்கள்
இந்த வரலாறுகளைச் சிறிதும் கவனிக்காமல் தமிழ்மொழியை வளர்ப்பதற்கு தமிழ் முன்னோர்கள் கிரந்தத்தையும் சமற்கிருதத்தையும் பிற ஒலிகளையும் மொழிகளையும் தமிழுக்குள் நுழைத்தனர் என்பது வடிக்கட்டிய பொய்யுரையாகும். தமிழின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பிறமொழி கலப்புகள் எந்த விதத்திலும் துணைநில்லா. தமிழ் தமிழாக இருப்பதே சாலச் சிறந்தது என்பதை உணர்ந்துதான் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகளார், திரு.வி.க, அறிஞர் அண்ணா, பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தனித்தமிழ் என்ற பெயரில் நல்லதமிழை வளர்த்தனர். அவர்களின் அடியொற்றி இன்றும் தமிழகத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியேயும் நல்லதமிழை முன்னெடுக்கும் பணிகள் முனைப்பாக நடைபெற்று வருகின்றன.


தனித்தமிழ் என்பது தனியொரு மொழியன்று. எந்தவொரு மொழிக்கலப்பும் இல்லாமல் முழுவதும் தமிழ் எழுத்துகளும் தமிழ்ச் சொற்களும் கொண்டு தமிழ் இலக்கண மரபுக்குள் எழுதுவதே தனித்தமிழாகும். ஆனால், இந்தத் தனித்தமிழ் ஏதோ புலவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் மட்டுமே உரியது; புரிந்துகொள்ள கடினமானது; கரடு முரடானது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, படித்த மேதைகளும் பேராசிரியர்களும் புழுகி வருகின்றனர். தமிழில் எதுவெல்லாம் இவர்களுக்குப் புரிகிறதோ அது தமிழாம் புரியாவிட்டால் உடனே தனித்தமிழ் என்றும் பண்டிதத் தமிழ் என்றும் கூறி தானும் மருண்டு பிறரையும் மருட்டி வருகின்றனர்.


பிறமொழி துணையின்றித் தமிழ் வளருமா?
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் பேரளவில் நீக்கப்பட்டுவிட்டன. தமிழைத் தூயதமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகின்றது. மனநிறைவளிக்கும் வகையில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது. நல்லதமிழ் வளர்ச்சியில் சில செய்தி இதழ்கள், நூலாசிரியர்கள், மக்கள் தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்கள், கணினித் துறையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.


தமிழகத்தில் தமிழறிஞர் மணவை முஸ்தாப்பா உருவாக்கியுள்ள 6 இலக்க(இலட்சம்) தமிழ்க் கலைச்சொற்கள் நல்லதமிழாக உள்ளன. சொல்லாய்வு அறிஞர் ப.அருளி தலைமையில் 135 அறிவியல் துறைகளுக்காக உருவாகியுள்ள அருங்கலைச்சொல் பேரகரமுதலி பிறமொழிக் கலப்பின்றி வெளிவந்துள்ளது. தமிழ்க் கணினி இணைய வல்லுநர்கள் வியத்தகு வகையில் புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர். தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் நாம் பயன்படுத்தும் தமிழ் மிகக் தூய்மையாக உள்ளது. அன்னிய மொழி கலக்காமல் தமிழ் வெற்றிபெற்று வருவதற்கு இப்படிப்பட்ட ஆக்கப்பணிகள் பலவற்றைச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.


தமிழ் தமிழாக இருக்க பிறமொழி எழுத்துகளையும் சொற்களையும் அறவே நீக்கிவிட வேண்டும். பிறமொழிச் சொல்லைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டு நேர்ந்தாலோ அல்லது மொழிபெயர்க்க இயலாமல் போனாலோ தமிழ் மரபுக்கு ஏற்ப திரித்து எழுத வேண்டும். சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளை எழுத நேர்ந்தால் முதலெழுத்து மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக, வலிந்து பிறமொழிச் சொற்களைத் திணிக்கக் கூடாது. இவ்வாறு சில எளிய வழிகளைப் பேணிவந்தால் தமிழ் தமிழாகவே இருக்கும்.


  • முடிந்த முடிபு
    மற்றைய மொழிகளைப் போல் தமிழ் பயனீட்டாளர் மொழியன்று. பயனீட்டாளர் மொழிதான் பிறமொழிகளிலிருந்து கடன்பெற்று பிழைக்க வேண்டும். ஆனால், தமிழோ உற்பத்தி மொழி. எந்தச் சூழலிலும் புதுப்புது சொற்களைப் புனைவதற்கு ஏற்ற மொழி. எனவே, கிரந்தம், சமற்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாளம் மட்டுமல்ல ஆங்கிலம் முதலான வேறு எந்தவொரு மொழியின் தயவும் துணையும் தமிழுக்குத் தேவையே இல்லை. தமிழ் தமிழாக இருப்பதற்கு தமிழர்கள் தமிழராக இருந்து உரிய பணிகளை முன்னெடுப்பதே முக்கியம்.
  • எழுத்து:- சுப.நற்குணன்,பாகான் செராய், பேரா.

Tuesday, February 26, 2008

மெய்ப்பாடு என்பது என்ன?


உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் உடலின் வழியாக வெளிபட்டுத் தோன்றும். அவ்வாறு ஊணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு எனப்படுகிறது. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என்று பெயரிட்டு அழைத்தனர்.

3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.

1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.

2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.

3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.

4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.

5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.

6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.

7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.

8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.

உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.



Saturday, February 23, 2008

சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்


தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில் வீரமரபோடு வாழ்ந்திருந்தனர் என அப்பாடல் குறிப்பிடுகின்றது.

உலக மொழி ஆய்வாளர்கள் உலகின் முதல் தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர். மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிறுவியும் உள்ளனர்.

இந்த உண்மையை உலகம் ஏற்கும் காலம் நெருங்கிவந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. மேலும், இலத்தின், கிரேக்கம், எகுபதியம், சமற்கிருதம் முதலான தொன்மொழிகளை விடவும் தமிழ் முந்தியது எனவும் கூறுவர். சென்ற நூற்றாண்டுகளில் தமிழின் தலைமையும் தொன்மையும் மற்றைய மொழிகளை விடவும் மேம்பட்டு இருந்ததற்கான சான்றுகளும் நிறைய உள்ளன.

1. முற்காலத்தில் சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபர்ட் கால்டுவெல் முதலான வேற்றுநாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பட்டிருக்கிறது.

2. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கடாரத்தை (கெடா), சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளனர். முதலாம் குலோத்துங்க மன்னன் பர்மாவை (மியான்மார்) ஆண்ட செய்தியும், கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள், கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்ற வரலாற்று உண்மைகளாகும்.

3. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவை பரமேசுவரன் என்னும் மன்னனும் சிங்கப்பூரை நீல உத்தமன் என்னும் மன்னன் தம் துணைவியார் தாழைப் பூச்சூடி அரசியாருடன் ஆட்சிசெய்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

4. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளில் பற்பல தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.

5. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிந்துநதிக்கரையில் (மொகஞ்சதாரோ அராப்பா) கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

6. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள வடமொழி இலக்கணப் பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் நூல் தோன்றியிருக்கிறது.

7. 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் கப்பல்கள் வழியாக பண்டங்களைக் கொண்டுசென்று கிரேக்க நாட்டில் தமிழில் விலைபேசி விற்றுள்ளனர். அப்பொருள்கள் இன்றளவும் மேலை நாடுகளில் தமிழிலேயே குறிக்கப்படுகின்றன. அரிசி – "ரைஸ்", மயில் தோகை – "டோ கை", சந்தனம் – "சாண்டல்", தேக்கு – "டீக்கு", கட்டுமரம் – "கட்டமரன்", இஞ்சி – "ஜிஞ்சர்", ஓலை – "ஒல்லா", கயிறு – "காயர்" என வழங்கி வருகின்றன. இந்தச் சொற்கள் பிரெஞ்சு, ஆங்கில அகரமுதலிகளிலும் அவர்களின் சொற்களாகவே இடம்பெற்றுள்ளன.

8. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும் நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பல இலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமே கூறுகின்றது.

9. 3000ஆம், 5000ஆம், 9000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களின் தாய்மண்ணாகிய குமரிக்கண்டத்தில் கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டுள்ளன. இந்தக் குமரிக்கண்டத்தில் 49 நாடுகளும் 3 தமிழ்ச் சங்கங்களும் குமரி மலையும் பஃறுளி ஆறும் இருந்துள்ளன என்ற வரலாறுகள் கிடைத்துள்ளன.

இத்துணைச் சான்றுகளும் தமிழின் தொன்மையை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன. பழைமைச் சிறப்புடைய இனமாகிய தமிழினம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் குறைவுபட்ட இனமன்று. மாறாக, உலக மொழிகளுக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் முன்னோடியாக இருந்துள்ளது என்ற பெருமை கொண்டது தமிழினம்.

இந்த மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பினையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் உயர்வுபெறும்.
Blog Widget by LinkWithin