Sunday, August 19, 2012

அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..
வணக்கம். தங்களின் மேலான கவனத்திற்கு இந்த மடலை விடுக்கின்றேன். இம்மடல் வழியாகத் தங்களுக்குச் சில விளக்கங்கள் கூறுவதோடு சில வினாக்களுக்குத் தங்களிடமிருந்து விளக்கம் பெற விரும்புகின்றேன்.

2. அதற்கு முன்னதாக, தமிழ்க் குமுகாய நலன்கருதி தாங்கள் ஆற்றிவருகின்ற நற்பணிகளுக்கு மனமார்நத பாராட்டுகளைப் பதிவுசெய்ய விழைகிறேன். தமிழ் மக்கள், தமிழ்க் கலைஞர்கள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு நன்கொடைகளை வாரி வழங்கி ஆதரவு செய்துவரும் தங்களின் கொடையுள்ளத்தை வணங்குகின்றேன்.


3. தங்களின் மீதும் தாங்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் மீதும் எனக்கு எப்பொழுதுமே ஆழ்ந்த மதிப்பு உண்டு. அதேவேளையில், ஒட்டுமொத்த குமுகாய நன்மையைப் பாதிக்கின்ற வகையில்; நமது மொழி இன நலத்தைப் பாழ்படுத்தும் வகையில்; நமது அடிப்படை உரிமைகளைச் சீரழிக்கும் வகையில் அண்மையில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாடும் உரிமையும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகின்றேன். இதன் வழியாகத் தங்களைக் குறைத்துப் பேசும் எண்ணமோ அல்லது சிறுமைபடுத்தும் எண்ணமோ எனக்குத் துளியும் கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4.   அண்மையில், “தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்என்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்து  நாளிதழ்களில் செய்திகளாக (8.8.2012, 19.8.2012) வெளிவந்துள்ளன. அச்செய்திகளின் சாரம் பின்வருமாறு:-

) மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆ) தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 30% மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். மீதமுள்ள 70% இந்திய மாணவர்கள் தேசியப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இ) இவ்விரு கூற்றுகளின் அடிப்படையில், தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
  
உ) அதற்காக மலேசியத் தமிழ்மொழி நடவடிக்கை என்ற இயக்கத்தின் வழியாக கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மக்கள் ஓசை செய்தி - 19.08.2012
5. மேற்சொன்ன கூற்றுகளைத் தாங்களும் மேலும் இருவரும் வலுவாக ஆதரிக்கின்றீர்கள். அந்த இருவரில் ஒருவர் பத்திரிகை விற்பனையாளர் சங்கத் தலைவர். இன்னொருவர் உலோக மறுசுழற்சி சங்கத் தலைவர். தாங்களும் மேலும் இருவரும் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகிய எந்தவொரு தளத்திலும் காலூன்றி நிற்காதவர்கள் என்னும் சூழலில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நீங்கள் மூவரும் தமிழர்கள் அல்லது இந்தியர்; தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் மீது உங்களுக்கும் அக்கறையுண்டு என்ற ஒரு சிறு ஆறுதலை எனக்கு நானே சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.


6. தங்களிடமும் தங்கள் குழுவினரிடமும் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.


அ) தமிழ்ப்பள்ளிகளில் 30% மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் 70% மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்திற்குத் தங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

ஆ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கினால், அங்குப் படிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் தமிழைப் படிப்பார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?

இ) இந்தியர் என்ற இனப்பெயரைத் தங்கள் பிறப்பு ஆவணத்தில் குறிக்கப்பெற்றிருக்கும் அனைவரும் தமிழைப் படிக்க முன்வருவார்களா?

உ) தற்போது தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் (BTSK) கற்பிக்கப்படுகின்றது. மேலும் 15 பெற்றோர்கள் விரும்பினால் தாய்மொழி வகுப்பு (POL) நடத்தப்பட முடியும். இந்த இரு வழிகளில் தமிழைப் படிக்கும் வாய்ப்பு இருந்தும், எத்தனை இந்திய மாணவர்கள் தமிழை எடுத்துப் படிக்கின்றனர் என்ற புள்ள விவரமோ அல்லது தரவுகளோ தங்களிடம் உள்ளனவா?

ஊ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்கினால், அது ஒரே ஒரு தமிழ்ப் பாடமாக மட்டுமே இருக்குமே தவிர, ஒருபோதும் அது ‘தமிழ்க்கல்வி’ ஆகாது என்ற வேறுபாட்டைத் தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
  

எ) தேசியப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கினால், எல்லாப் பெற்றோரும் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு, தேசியப் பள்ளிகளுக்குப் படையெடுத்துச் செல்வதையும் இதனால் காலப் போக்கில் தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுவதையும் இறுதியில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளே இல்லாத நிலைமை உருவாகுவதையும் தாங்கள் வரவேற்கிறீர்களா?

7. இந்த நாட்டில் கடந்த நூறாண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு நடுவிலும் சிக்கிச் சிதறி, தட்டுத் தடுமாறி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி தொடர்பாக ஆயிரமாயிரம் சிக்கல்களும் நெருக்கடிகளும் இன்றவும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும், நாடு விடுதலையான காலத்தில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலையின் இன்று 523 பள்ளிகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இந்தத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் நம் சமுதாயம் அடைந்திருக்கும் சில நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

அ) நம் நாட்டில் தமிழ்மொழி இன்றளவும் வளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆ) நாட்டின் கல்விமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கின்றது.
இ) நாட்டின் அரசாங்கக் கேந்திரத்தில் ஒரு மொழியாகத் தமிழும் இடம்பெற்றிருக்கின்றது.
ஈ)  தமிழ்மொழி சார்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டு, வாழ்வியல் கூறுகள் செழிப்பாக இருக்கின்றன.
உ) பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அல்லது இந்தியர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வாதாரம், பொருளியல் வளம், வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
ஊ) தமிழ் நாளிதழ்களும் ஒலி, ஒளி, மின்னியல் ஊடகங்கள் செயல்படுகின்றன.
எ) தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகள், மாநாடுகள், ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
ஏ) தமிழ் மக்கள் அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் பணியாற்றும் அரசாங்கப் பணியிடங்கள் இருக்கின்றன.
ஐ) தனிமனித உரிமைகளாகிய தாய்மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி ஆகியவற்றைப் பேண முடிகின்றது.

8. ஏன் இதனைச் சொல்ல வருகிறேன் என்றால், தாங்களும் தங்கள் குழுவினரும் முன்மொழியும் “தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம்” என்னும் திட்டம் மேலே குறிப்பிட்ட அனைத்து நலன்களையும் இல்லாமல் செய்துவிடும். காலப் போக்கில் நமது குமுகாயத்தின் ஆணிவேராக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். நமது அடிப்படை உரிமைகளையும் நமது அடையாளங்களையும் நமது இருப்பையும் மெதுமெதுவாகக் கொல்லும் ‘நஞ்சாக’ இந்தத் திட்டம் உருவாகிவிடும்.

9. ஆகவே, நூறாண்டு காலமாக நமது மக்களுக்கும் தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்விக்கும் இடையில் இருந்துவரும் தொப்புள்கொடி உறவைத் துண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை; எதிர்காலத் தலைமுறையின் தாய்மொழிக் கண்ணைப் பறித்து அவர்களைத் தாய்மொழி அறியாத குருடர்களாக ஆக்கப் போகும்  இந்த அவலமான திட்டத்தை; வருங்காலத்தில் நமது குழந்தைகளை எந்தவித அடையாளமும் இல்லாத ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்போகும் இந்த ஆபத்து நிறைந்த திட்டத்தைத் தயவுசெய்து உடனடியாகக் கைவிடுமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

10. அதற்கு மாற்றாக, தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஏதேனும் நன்மை செய்ய நினைக்கும் தங்களைப் போன்ற செல்வாக்கு நிறைந்த நல்ல மனிதர்கள் செய்ய வேண்டிய சில திட்டங்களை முன்மொழிகின்றேன்.

அ) ‘குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள்’ என்னும் இயக்கத்தை (Campaign) நடத்தலாம்.
ஆ) தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதற்கு வேண்டிய ஏந்துகளைச் (வசதிகளை) செய்து தரலாம்.
இ) தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரப்புரை செய்யலாம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்;
சுப.நற்குணன்.8 comments:

Unknown said...

mika nandru nanbare.Tamilai alika ivargal kandu piditha valigal.

ந.தமிழ்வாணன் said...

மலேசியாவில் தமிழ்க்கல்வியின் பின்புலம்,தமிழ்ப்பள்ளிகளின் அவசியம் பற்றிப் புரியாத நிலையில் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிப்பதையோ அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதையோ தவிர்த்திருக்கலாம்.
தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி பற்றி நேர்மையற்ற போக்கு இந்நாட்டில் நிலவுகின்ற வரையில் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதைப் பற்றி யாரும் சிந்திக்காமல் இருப்பதே நலம்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள் அறிய முடிந்தது...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

மு.வேலன் said...

சுப.நற்குணன் ஐயா கூறியதை முழு மனதோடு ஆதரிக்கிறேன். தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்குவதால் வரும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு அவருக்கு நன்றி. தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் நன்மை செய்ய நினைக்கும் நெஞ்சங்களுக்கு சுப.நற்குணன் வகுத்து தரும் திட்டங்களே உயர்வானது; எஞ்சியிருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகளை காக்க வல்லது. 

Johnson Victor said...

Campaign - பிரச்சாரம் (மாற்றிக் கொள்ளலாம்).
‘தேசியப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடம்’ என்ற கோணத்தில் யோசிப்பதற்குப் பதில், ஒரு சில ‘நரிகள்’ குலை நடுங்கும் வகையில் நாம் இப்படிச் சிந்திக்க வேண்டும் - ‘எஸ்பிஎம் தமிழில் கிரடிட் அவசியம்’. 10 + 2 என்ற நஞ்சுகள் எதுவும் வேண்டாம்..... சிந்திப்போம்.

ஆ.இளங்கோவன் said...

அன்பரே, தங்களின் கருத்துகள் முற்றிலும் உண்மை.இதனைச் சம்பந்தப்பட்டவர்கள் திறந்த மனதோடு ஏற்பார்களாக. நன்றி.

thamizhukku nanRi! said...

kuRaivaana thamizhaRivaip peRRavargaL thaanggaLum thamizh mozhikkaaga Ethaavathu seyya vENdumenRa nOkkaththil ippadiyellaam seygiRaargaL.

thanggaLin sariyaana viLakkam ippOthu avargaLukkellaam therinthuviddathaal ThamizhppaLLigaLukkaaga inimEl avargaL siRantha muyaRchigalai edukkum thanggaLaip pOnRavargaLukku thOL koduththu uthavuvaargaL en nambalaam!

Johnson Victor said...

எனது விரிவான பதிவை வாசிக்க http://www.facebook.com/rawangjohnson என்ற எனது வதன நூலுக்குச் செல்லவும்.

Blog Widget by LinkWithin