Thursday, August 02, 2012

யுபிஎசார் தேர்வுத்தாள் தொகுப்பு:- புதிய வெளியீடு



ஜாலான் செராஸ் தமிழ்ப்பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள் என்னும் நிகழ்ச்சி 22.7.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.  முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.


தொடக்கப் பள்ளிகளில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 தொடங்கி 13ஆம் நாள் வரையில் மூன்று நாட்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் என்னும் அரசுத் தேர்வை எழுதவுள்ளனர். அதனை முன்னிட்டு மாணவர்களைத் தயார்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் ஜாலான் செராய் தமிழ்ப்பள்ளியில் ‘யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள்’ என்னும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தன்முனைப்பையும் ஊக்கத்தையும் வழங்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. மாணவர்களின் தேர்வுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் 5 புத்தகங்கள் கொண்ட தேர்வுத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்குரிய 7 சோதனைத் தாள்கள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவியாக ‘ரீட் ரிசோர்சஸ்’ நிறுவனம் இந்தத் தேர்வுத் தாள் தொகுப்பைச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் இடம்பெறும் 7 பாடங்களுக்கும் தலா 7 தேர்வுத் தாள்களை இந்த நிறுவனம் மிக தரமான முறையில் உருவாக்கி வெளியிட்டிருப்பதாக சுப.நற்குணன் பேசுகையில் தெரிவித்தார். இவர் தமிழ்மொழிக்குரிய தேர்வுத் தாள் தொகுப்பினை எழுதிய ஆசிரியராவார்.

சுப.நற்குணனுக்குப் பொன்னாடை அணிவிக்கும் திரு.பாலன்
மேலும் பேசுகையில், நம் நாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பயனுக்கும் பயன்பாட்டிற்கும் சில புத்தக நிறுவனங்கள் தொடர்ந்து துணை நூல்கள், பயிற்சி நூல்கள், வழிகாட்டி நூல்கள், தேர்வுத் தாள் தொகுப்பு போன்றவற்றை வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் வாங்கிப் பேராதரவு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மலாய், சீன நிறுவனங்கள் போல் நமது நிறுவனங்களும் தரமிக்க நூல்களை வெளியிட முடியும்.

பெற்றோர்களின் நல்ல ஆதரவும் நல்ல சந்தை வாய்ப்பும் இருந்தால் தரமான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிடுவதற்குப் பல நிறுவனங்கள் முன்வருவார்கள். தவிர, பல நிறுவங்களிடையே வணிகப் போட்டாப்போட்டி இருந்தால்தான் சிறப்பான நூல்கள் வெளிவர முடியும். ஆகவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தையில் உள்ள தேர்வுத் துணை நூல்களை வாங்கி ஆதரிக்க வேண்டும். ஒரே ஒரு புத்தகத்தை வாங்கி பல படிகள் (Photostat) எடுத்துப் பயன்படுத்தும் நிலைமையை மாற்ற வேண்டும். எல்லாரும் மூலப்படி நூல்களை வாங்கினால் நம் சமுதாயத்தில் தமிழ்க்கல்வி சம்பந்தமான நூல்கள் இன்னும் அதிக அளவில் வெளிவரும் வாய்ப்பு உண்டாகும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியினைத் தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் பேசுகையில், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதான் நமது மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சமயம் என அனைத்தும் நிலைத்து இருக்கும். இன்னும் ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது அடுத்த தலைமுறையினர் நமது சொந்த அடையாளத்தோடு வாழ்வதற்குத் தமிழ்ப்பள்ளிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

திரு.இராஜரத்தினம் யுபிஎசார் தேர்வுநூலை வெளியிடுகிறார்

மாணவர்களுக்குத் தேர்வுத் தொகுப்பு வழங்கப்படுகிறது
தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாகக் கல்விப் பணிகளை செய்து வருகிறார்கள். ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்று வருகிறார்கள். அதேபோல், ஆசிரியர்கள் நமது கலை, பண்பாடு, பழக்க வழக்கம், மரபுகளை நமது மாணவர்களுக்கு ஊட்டி வர வேண்டும் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதோடு, பள்ளியில் பயிலும் 55 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வெளியீடு கண்ட தேர்வுத் தாள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகுப்பு மாணவர்கள் தேர்வினைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள துணைபுரியும் என முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் கேசவன் குறிப்பிட்டார்.


பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகேஸ்வரராவ், மாணவர்கள், ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவன அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தத் தேர்வுத் தொகுப்பு நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயன்பட வேண்டும். இதனை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், இதனை வாங்க விரும்புவோர் 012-6514683 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவனத்தின் சார்பில் பாலன் தெரிவித்தார்.


                                                                                           @சுப.நற்குணன், திருத்தமிழ்



No comments:

Blog Widget by LinkWithin