Tuesday, January 12, 2010

நமது நாளிதழ்கள் பற்றி ஒரு செய்தி

தமிழர் நலன் கருதி, மலேசியத் தமிழ் நாளேடுகள் தவிர்க்க வேண்டிய செய்தி எது?

1.அரசியல் செய்திகள்
2.வன்முறைச் செய்திகள்
3தமிழகச் செய்திகள்
4.சோதிடச் செய்திகள்

இப்படி ஒரு தலைப்பில் திருத்தமிழ் ஒரு கருத்துக் கணிப்பை அண்மையில் மேற்கொண்டது. இதில், மேலே உள்ளது போல 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன் இறுதி முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.



ஒரு வேளை இந்த முடிவை நமது நாளிகை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், இதுதான் உண்மை.

மலேசிய வாசகர்கள் (57%), சோதிடச் செய்திகளில் நாட்டம் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. சோதிடச் செய்திகளால் எந்தப் பயனும் இல்லை என வாசகர்கள் நம்புகிறார்கள் போலும். மேலும், இணைய வாசகர்களில் பெரும்பாலானோர் நல்ல தெளிவும் விழிப்புணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்களோ என இந்த முடிவின்வழி ஒரு சிந்தனைப்பொறி தட்டுகிறது.

ஆனாலும் பாருங்கள். இந்த சோதிடச் செய்திகளுக்குத்தான் நமது நாளேடுகள் அதிகமான முகமைதரம் கொடுத்து வெளியிடுகின்றன. வாசகர்கள் விரும்பிக் கேட்கிறார்கள் – விழுந்து விழுந்து படிக்கிறார்கள் – விடிய விடிய வாசிக்கிறார்கள் என்று வாயில் நுரைதள்ள நாளிதழ் ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். அதனாலே சோதிடச் செய்திகளைப் பக்கம் பக்கமாக நாள்கணக்கில் வாரக்கணக்கில் போடுகிறார்கள்.

எத்தனை எத்தனை சோதிடச் செய்திகள் தெரியுமா? ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, இராசி பலன்கள், எண்கணிதம், சோதிடக் கேள்வி பதில் இப்படியாக ஏராளம்! ஏராளம்!

இவற்றுள் எந்தச் சோதிடப் பலன்தான் பலிக்குமோ தெரியவில்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.



நல்ல வேளை தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டு என்பதாலும் அது அறிவாண்மைக்கு முகன்மை கொடுப்பதாலும் சோதிடம் முதலிய மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு நிற்பதாலும் தைப்பொங்கல் பலன்கள் என்று எழுத முடியவில்லை. இல்லாவிட்டால், பொங்கல் பலன்கள் என்று புழுகிக் கொண்டிருப்பார்கள் நமது உலகமகா சோதிடப் பூசர்கள். (இன்னும் கொஞ்ச காலத்தில் பொங்கலுக்கும் சோதிடப் புராணம் பாடப்போகிறார்கள் என்பது வேறு விடயம்)

சோதிடச் செய்திக்கு அடுத்து, நமது நாளிதழ்கள் வன்முறைச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என 53% வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனாலும் நமது நாளிதழ்களின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? வெட்டிக் கொலை – கழுத்து அறுத்து கொலை – தலை துண்டானது குடல் சரிந்து மரணம் – கை துண்டிக்கப்பட்டது – இரத்த வெள்ளத்தில் கிடந்தார் – நெற்றிப் பொட்டில் துப்பாக்கிச் சூடு – சிறுமி கொலையுண்டு அம்மணமாகக் கிடந்தாள் என்று கொட்டை எழுத்தில் வகை வகையாகத் தலைப்பிட்டு முதல் பக்கச் செய்தியாகப் போடுவார்கள்.

அந்தச் செய்தியோடு படம் போடுவார்கள் பாருங்கள்..! அடேயப்பா! இதில், தமிழ் நாளேடுகளை யாரும் மிஞ்ச முடியாது. விரல் துண்டிக்கப்பட்ட கையோடு உள்ள படம் – வெட்டப்பட்டு கை தனியாகத் தொங்கும் படம் – சவக்கிடங்கில் முகம் வீங்கிப் போய் இருக்கும் படம் – தலையில் இருபது தையல் போட்ட படம் – இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் பெண்கள் தலைவிரி கோலமாக கதறி அழும் படம் இப்படியாக அருவருக்கத்தக்க – பார்க்க சகிக்காத படங்களைப் போடுவார்கள். அதுவும் வண்ணத்தில் போட்டு அசத்துவார்கள்.

இதையெல்லாம் கேள்வி கேட்டால் (அப்படி கேட்காவிட்டாலும் யாரோ ஒருவர் பெயரில் ஞாயிற்றுக்கிழமை கேள்வியைப் போட்டு) பதில் கொடுப்பார்கள் பாருங்கள். நாம் என்னாதான் மூளையைப் போட்டு பிழிந்து எடுத்தாலும் அப்படி ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு பதிலைச் சொல்லி, வன்முறைச் செய்திகளைப் போடுவதை நியாயப்படுத்தி விடுவார்கள்.

தவிர, தமிழகச் செய்திகளையும் அரசியல் செய்திகளையும் நாளிதழ்கள் அளவுக்கு அதிகமாக வெளியிடுவதைக் குறைத்துக் கொள்வது மலேசியச் சூழலுக்கு நன்மையாக இருக்குமென தோன்றுகிறது.

மலாய், ஆங்கில, சீன நாளேடுகள் போன்று நமது நாளிதழ்கள் செய்தித்துறைக்குரிய நிபுணத்துவத்தோடும் நடுநிலையோடும் சமுதாய நலத்தோடும் செய்திகளை வெளியிட முன்வர வேண்டும். வாசகனின் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டு நடப்புகள், அரசியல் போராட்டங்கள், சமுதாயச் சிக்கல்கள் பற்றி சிந்தனைக்குரிய கட்டுரைகளையும் ஆய்வுச் செய்திகளையும் தரமான முறையில் வழங்க வேண்டும். இவையே பெரும்பான்மையான வாசகர்களின் விருப்பமாக இருக்கின்றது என்பதை நாளிகைகள் உணர வேண்டும்.

நாளிதழ் ஆசிரியர்கள் இதனை உணர மறுக்கும்போது வாசகர்கள் அவர்களுக்கு உணர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியே இன்னொரு வழி இருந்தாலும், அது குறிப்பிட்ட நாளிதழை வாங்கிப் படிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

3 comments:

Sathis Kumar said...

அன்பின் திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்,

இப்பொழுதுதான் ஓலைச்சுவடியில் தமிழ் நாளேடுகள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றினை ஏற்படுத்திவிட்டு, உங்கள் வலைப்பக்கம் வந்தேன். நீங்கள் தமிழ் நாளிதழ்கள் குறித்து பதிவிட்டிருக்கிறீர்கள். பல காலமாகவே தமிழ் நாளிகைகள் மீது சில குறைப்பாடுகள் நம்முள் நிலவி வருவதை உங்கள் வாக்கெடுப்பு நிரூபிக்கிறது. இதனை நாம் எடுத்துக் கூறினால், நீங்கள் குறிப்பிட்டதைப்போலவே ஞாயிறு வாசகர் கேள்வி-பதில் அங்கத்தில் சொந்தமாகவே கேள்வியையும் கேட்டு பதிலையும் அவர்களுக்கு சாதகமாக கொடுத்துக் கொள்வார்கள்.

வாக்கெடுப்பு முடிந்ததும், தமிழ் நாளிகைகளின் பங்களிப்பைக் குறித்து நானும் ஒரு பதிவு இட எண்ணம் கொண்டுள்ளேன். பலருக்கும் என்னுடைய கருத்து ஒவ்வாததாக இருக்கலாம். இருப்பினும், சொல்ல நினைத்ததை சொல்ல வேண்டிய நேரத்தில் தைரியமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி விலக்க வேண்டியதை விலக்கி, சேர்க்க வேண்டியதை சேர்க்க இந்நாளிதழ்கள் தவறினால், இனிவருங்காலங்களில் மாற்று ஊடகங்களைத்தான் மக்கள் தங்களின் முதல் தேர்வாகக் கொள்வார்கள்.

subra said...

அப்படி கேட்காவிட்டாலும் யாரோ ஒருவர் பெயரில் ஞாயிற்றுக்கிழமை கேள்வியைப் போட்டு)

என்ன கொடும அய்யா
இதுல இன்னொரு கொடும என்னவென்றால் இந்திய
செய்தி தாளை அப்படியே வெட்டி ஓட்டுவது ,அட நல்ல
செய்தியாக இருந்தால் பரவில்லை ,அங்கேயும் அதே
கதைதான் .வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்

T Senthil Durai said...

அருமையான அலசல் !

எனக்கு விருப்பமான
சிறந்த தமிழ் நாளிதழ்கள் :

தினத்தந்தி ( தமிழ்நாடு - இந்தியா )
உதயன் ( யாழ்பாணம் )
மக்கள் ஓசை ( மலேசியா )
தமிழ்முரசு ( சிங்கப்பூர் )

Blog Widget by LinkWithin