Saturday, January 23, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)


*இதன் முதற்பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

தைத்திங்கள் பிறக்கும் பொழுதெல்லாம் பொங்லோடு சேர்ந்து சில புரட்டுகளும் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. இந்தக் கோளாறுகளை எல்லாம், கோளாறுகள் என்றே தெரியாமலே பலர் குளறுபடிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்டக் கூட்டத்தார் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு பொங்கலில் சில கோளாறுகளைச் செய்துவருகின்றனர்; பொங்கலன்று பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நுண்ணரசியல் விளையாட்டு காட்டுகின்றனர்.

அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

கோளாறு 1:- பொங்கல் முதல்நாள், சூரியப் பொங்கல் எனப்படுகிறது. காலையில் கதிரவன் உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கவேண்டும் என்பதுதான் காலாகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். அதுதான் இயற்கையானதும் இயல்பானதும்கூட. ஆனால் இன்றோ, பொங்கலுக்கு நல்ல நேரம் குறிக்கப்படுகிறது. அந்த நல்ல நேரத்தைத் தெரிந்துகொள்ள நமது மக்கள் பயபத்தியோடு காத்திருப்பதும், பிறகு சாமிக்குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி நல்ல நேரப்படி பொங்கல் வைப்பதும் பாரிய நகைச்சுவை.

அப்படி குறித்துக் கொடுக்கப்படும் நேரம் எதுவாக இருக்கிறது தெரியுமா? சூரியன் நன்றாகக் கொளுந்துவிட்டு காயும் நேரமாக இருக்கும் அல்லது சூரியன் உச்சி மண்டைக்கு மேலே வரும் மதிய நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் பொங்கல் வைக்கும் நல்ல நேரம் குறித்துக்கொடுக்கபட்ட கதையும் உண்டு. அதற்கும் மேலே போய், காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் என்று ஒரே நாளில் இரண்டு நேரங்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை ஒன்றும் இவ்வாண்டு நடந்தது. பொங்கல் வைக்கும் நல்ல நேரம் இரவு 8.00 மணி என்று முதலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதுதான் அது. அப்புறம், பொங்கல் அமாவாசையில் வருகிறது. அதனால், மறுநாள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூடவே இன்னொரு புரளி வேறு.

இப்படி பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்துக்கொடுக்கும் கோளாறு எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதை விளக்கி எழுதினால், சோதிட மேதைகள், பத்திமான்கள், ஏன் ஊதுவத்தி வணிகர்கள் கூட வம்புக்கு வந்துவிடுவார்கள். அதனால், அதை எழுதாமல் விடுகிறேன்.


கோளாறு 2:- சூரியப் பொங்கலுக்கு மெனக்கெட்டு நேரம் குறித்து கொடுக்கின்ற சோதிடக் குருமார்கள், ஏனோ தெரியவில்லை மாட்டுப் பொங்கலுக்கும் மறுநாள் காணும்(கன்னிப்) பொங்கலுக்கும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில் இத்தனை மணிக்குதான் பழையத் தட்டுமுட்டு துணிமணிகளைக் கொளுத்த வேண்டும் என்றும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. மண்டையைக் குழப்பும் இந்தக் கோளாறுக்காக எங்கே போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை!

கோளாறு 3:- பொங்கலை அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது புதிதாக ஒரு புராணப் புழுகை அள்ளிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கடவுளர் ஒருவர் சூரியனாகவே வடிவெடுத்தாராம். அதனால், பொங்கலன்று சூரியப் பகவானோடு அந்தக் கடவுளரையும் சேர்த்து வழிபட்டால் கோடானும் கோடி நன்மை உண்டாகுமாம். இப்படி, இயற்கை வழிபாட்டை ஒட்டிய பொங்கலின் பண்பாட்டுச் சிறப்பை மழுங்கடித்து அதில் மதச்சாயத்தைப் பூசியும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குச் சார்புபடுத்தியும் கோளாறு செய்யப் பார்க்கிறது ஒரு தரப்பு.


கோளாறு 4:- பொங்கல் நாளில் அதாவது தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டாகிய திருவள்ளுவராண்டு பிறக்கிறது. இலக்கியத்திலும், வானியலிலும் இதற்குத் தக்க சான்று உண்டு. தமிழ்க்கடல் மறைமலை அடிகள், திரு.வி.க, பேராசிரியர் கா.நமசிவாயர், சிவனியப் பெரியார் சச்சிதானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அய்வுசெய்து, தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆயினும், தை முதல் நாளை இன்னமும் தமிழ்ப் புத்தாண்டாகச் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமயஞ்சார்ந்த அமைப்புகளும் தலைவர்களும் இதனை ஏற்பதே இல்லை. அதற்கேற்றவாறு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து மட்டுமே சொல்கிறார்கள். மறந்தும்கூட, தமிழ்ப் புத்தாண்டு என்று மூச்சுப் பரிவதே இல்லை.

சமய நாட்டமுள்ளவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர்தம் வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்வதில் மிகவும் குறியாக இருக்கின்றனர்.

கோளாறு 5:- மலேசியாவில் வெளிவரும் இரு நாளிகைகள் பொங்கல் வாழ்த்தோடு தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்து செய்தி போடுகின்றன. ஆனால், சில ஏடுகளில் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடத்திலும்கூட வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படியொரு வரலாற்று மறைப்பைச் செய்வதற்குச் சில பின்னணிகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கு விரிவாகப் பேச விருப்பமில்லை.

கோளாறு 6:- நாட்டில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளும், சமயம் சார்ந்த அமைப்புகளும், பொது இயக்கங்களும் கூட தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை; வாழ்த்து சொல்லுவதும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்வதும் இல்லை. இவர்களின் இந்த நடிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஆனாலும், இவ்வாண்டு எதிர்க்கட்சிகளில் இருக்கும் நமது தலைவர்கள் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நாளிகைகளில் வெளிவந்திருந்தன. மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தச் சொல்லலாம்.)


கோளாறு 7:- அரசியலாளர்கள் சிலர், சில செய்தியிதழ்கள் போலவே தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழ்ப் புத்தாண்டைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றன. அவ்வளவு ஏன். கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் உளறிக்கொட்டி கிளறிமூடும் தனியார் வானொலிகூட பொங்கல்! பொங்கல்! என்று முழங்கியதே தவிர தமிழ்ப் புத்தாண்டு என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே தன்னுடைய செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி கொஞ்சமாகப் பேசியது.

இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது, பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துவிடக் கூடாது, ‘தைப் பிறப்பே தமிழ்ப் புத்தாண்டு’ என்பது மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் சில தரப்பினர் மிக மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காண முடிகிறது . எது எப்படியோ. ஒன்றுமட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்த நுண்ணரசியலுக்குப் பின்னணியில் யாரோ ஒரு தனியாள் அல்லது ஒரு இயக்கம் கண்டிப்பாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் புத்தாண்டை இருட்டடிப்புச் செய்வதற்கான ஆதரவும் அதற்குரிய சதித்திட்டமும் வேறொரு நாட்டிலிருக்கும் ஆரிய வழித்தோன்றல்கள் வழியாக இவர்களுக்குக் கிடைக்கலாம்.



இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.

4 comments:

மனோவியம் said...

//பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.// அமையவேண்டும் என்பதே எனது அவா!

தமிழ்ப் புத்தாண்டுக்கு கூட ஓரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலை தமிழனுக்கு.தமிழர்கள் வீறுக் கொள்ள பொங்கலாவது உதவட்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருட்ணன்,

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. உங்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

seeprabagaran said...

தமிழர்கள் ஒரு குண்டுமணி அளவு உரிமையை மீட்பதாக இருந்தாலும் அதற்காக பல உயிர்களை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. தன்னை யார் என்றே உணராத தமிழினத்தை என்னவென்று சொல்வது. மான உணர்வோடு செயல்படும் ஒரு சிலரையும் எதிரிகள் காவு கேட்கிறார்கள் தமிழர்களும் பக்தியோடு அவர்களுக்கு காவு கொடுக்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் தமிழ்நாடு-புதுச்சேரியில் பரவலாக இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒரு சிலரோடு நின்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். மார்கழி மாதத்திலேயே வாழ்த்து அட்டைகளை விற்பதற்காகவே எங்கள் ஊரில் பல சிறப்பு அங்காடிகள் திறக்கப்படும். தற்போது அந்த வாழ்த்து அட்டைகளை விற்கவே யாரும் முன்வருவதில்லை. இந்த ஆண்டு எனக்குத் தேவையான வாழ்த்து அட்டைகளை சென்னையிலிருந்து எனது நண்பர் வாங்கி வந்து கொடுத்தார்.

தமிழ் புத்தாண்டு-பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சீ.பிரபாகரன்,

உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

நீங்கள் சொல்லியிருக்கும் செய்தியைப் படிக்க வருத்தமாகத்தான் உள்ளது. தமிழரிடையே இப்படியான பண்பாட்டு மரபியல் தேய்மானங்கள் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை.

//தமிழ் புத்தாண்டு-பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.//

சிந்திக்க வேண்டியது மட்டுமல்ல; உடனே செயல்படுத்தக் கூடியதும்தான்.

Blog Widget by LinkWithin