Saturday, December 05, 2009

எசுபிஎம்12: மழை ஓய்ந்தது; தூவானம் விடவில்லை


எசுபிஎம் தேர்வுக்கு அமரும் மாணவர்கள் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என்னும் முடிவில் கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு, இப்போது 12 பாடங்கள் எடுக்கலாம் என புதிய அறிவிப்பு கொடுக்கபட்டுள்ளது.

10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற விதியினால், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியாமல் இருந்த தடை இப்போது நீங்கியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.
ஆனாலும், இந்த வெற்றியானது முழுமையானது அல்ல. இன்னும் அவிழ்க்கபடாத முடிச்சுகள் இருக்கின்றன; தீர்க்கப்படாத நெருடல்கள் தொடருகின்றன.

புதிய அறிவிப்பினால் தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் சில நன்மைகள் கிடைத்துள்ளன. முதலில், அவற்றைப் பார்ப்போம்.

1.வழக்கம் போலவே தமிழ் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் எடுப்பதற்கான வாய்ப்பு நிலைத்திருக்கிறது.

2.இவ்விரு பாடங்களின் முடிவுகளும் சான்றிதழில் குறிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

3.தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

4.தமிழ்மொழிக்குரிய அரசுரிமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
5.தமிழ் இலக்கியம் தொடர்ந்து படிக்கப்படுவதற்கும் காக்கப்படுவதற்கும் உரிய சூழல் தொடர்ந்து நிலவுகிறது.

எனினும், இந்தப் புதிய அறிவிப்பில் நெருடலை உண்டாக்கும் சில விடயங்களும் இருக்கின்றன. அதனால், மழை ஓய்ந்தாலும் தூவானம் விடாத கதையாக இச்சிக்கல் இன்னும் தொடரக்கூடும். அவை:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.

இவை இரண்டும் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளப்பட வேண்டியவை அல்ல எனத் தோன்றலாம். காரணம், நடப்புச் சூழலிலும் இவ்விரு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. என்றாலும், இதனால் தமிழ்ச் சமுதாயமும் மாணவர்களும் மீண்டும் ஒரு பெரும் குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்; மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும்.
ஏனெனில், தமிழுக்கு நிச்சயமற்ற – பாதுகாப்பற்ற சூழல் இன்னமும் இருப்பதையே மேலே சொன்ன இரண்டு விடயங்களும் புலப்படுத்துகின்றன.

எனவே, நாம் தெளிவுபெற வேண்டிய அல்லது கல்வியமைச்சு தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அல்லது கல்வியமைச்சுக்குத் தெளிவுபடுத்தி நாம் உறுதிபடுத்த வேண்டிய சில விவரங்கள் உள்ளன. அவை:-

1.மாணவர்கள் எடுக்கும் 12 பாடங்களின் தேர்ச்சி விவரமும் அரசு சான்றிதழில் கண்டிப்பாகக் குறிப்பிடப்படுமா?

2.தேர்வுப் பாடங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்த்தப்பட்ட பின்னர், தமிழ்மொழி பழையபடியே விருப்பப்பாடக் [Matapelajaran Elektif (Tambahan)]குழுவில் வைக்கப்படுமா?
*(கட்டாயப் பாடக் (Matapelajaran Teras) குழுவில் உள்ள 6 பாடங்களில் ஒன்றாக தமிழ் இடம்பெறாத நிலையில், விருப்பப்பாடக் குழுலிருந்து நீக்கப்பட்டால் தமிழுக்குப் பாதிப்பே ஆகும்).

3.தமிழ்மொழி , வெளிப்பாடம் [Matapelajaran Elektik (Luar Kurikulum)] குழுவுக்குத் தள்ளப்படும் நிலைமை கண்டிப்பாக நிகழக்கூடாது.

4.தமிழ்மொழி விருப்பப்பாடக் குழுவில் நிலைநிறுத்தப்படும் சூழலில், மேற்படிப்பு, கல்விக் கடனுதவி முதலிய தேவைகளுக்குத் தமிழ்மொழியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே நியாயமாகும். இது கடைபிடிக்கப்படுமா?

5.தமிழ் இலக்கியம் வெளிப்பாடம் [Matapelajaran Elektif (Luar Kurikulum)] குழுவில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலைப்பாடு என்ன?

6.அனைத்திற்கும் மேலாக, பள்ளி நிலையில் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் பயில்வதில் நடப்பில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகள், இடையூறுகள், தடைகள் நீக்கப்பட வேண்டும். இவ்விரு பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.

மொத்தத்தில், 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற முந்தைய முடிவு சில தளர்வுகளோடு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில், தமிழையும் இலக்கியத்தையும் அரசுத் தேர்வுப் படமாக எழுதுவதற்கான உரிமையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களும் நிறைய இருக்கின்றன.

எது எப்படியாயினும், இது தொடர்பாக மலேசியக் கல்வித்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வழி முழு விவரங்களை வெளியிடுவார் என கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். அந்தச் சுற்றறிக்கைதான் இந்தச் சிக்கலில் இருக்கும் கமுக்க(மர்ம) முடிச்சுகளை அவிழ்ப்பதாக இருக்கும்.

அதுவரையில், காத்திருந்து, நாம் எதிர்ப்பார்த்து அல்லது நமக்குச் சாதகமானது அறிவிக்கப்படாமல் போனால் மீண்டும் இன்னொரு முறை போராட வேண்டிய நெருக்கடி ஏற்படுமா?

அல்லது,

தமிழ்ச் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் ஆகியோர் உடனடியாக ஒன்றுகூடி கலந்துபேசி நமது மொழிக்கும் இலக்கியத்திற்கும் உறுதியான பாதுகாப்பை அளிக்கும் நல்லதொரு தீர்வை முன்வைக்கப் போகிறோமா?

7 comments:

மனோவியம் said...

காலம் கடந்த ஞானம் என்பார்கள்.காலம் கடந்தாலும் தமிழர்கள் திருந்துவர்களா என்று தெரியவில்லை.முழுமை பெறாத முடிவுகளை கொடுத்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவர்கள்.பிறகு நமது குரல்வலையை பிடித்து நெருக்குவார்கள்.தமிழ் என்ன பாவம் செய்தது? நமது உரிமைகளை ஏன் சலுகைகளாக பெறவேண்டும்?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருட்ணன்,

//காலம் கடந்த ஞானம் என்பார்கள்.காலம் கடந்தாலும் தமிழர்கள் திருந்துவர்களா என்று தெரியவில்லை.//

நமது தொடக்கக் கட்டப் போராட்டம் என்பது 12 பாடங்களைக் கோருவதுதான்.

அதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்பது மகிழ்ச்சிதான். ஆனால், புதிய நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும் தாழ்வில்லை நண்பரே..! அடுத்தக் கட்ட நகர்வுகளைச் சிந்திப்போம்; செயல்படுவோம்.

//நமது உரிமைகளை ஏன் சலுகைகளாக பெறவேண்டும்?//

மக்களாட்சி நாட்டில் நமது ஒருமித்த பலத்தை எப்போது காட்டுகிறோமோ.. அப்போதுதான் உரிமைகள் எல்லாம் கிடைக்கும்.

நம்மினம் இன்னும் சலுகைக்காகவே காத்திருக்கும் காரணம், இன அடிப்படையிலான ஒற்றுமையின்மையே.

மொழி,இன, சமய, பண்பாட்டு உரிமைகள் என வரும்போது அரசியல், தனிமனித கருத்து வேற்றுமைகள் புறந்தள்ளப்பட வேண்டும் என்ற தெளிவுக்கு நமது மக்கள் வரவேண்டும் - அதனை நோக்கி மக்களின் சிந்தனை வழிநடத்தப்பட வேண்டும்.

Tamilvanan said...

ம‌கிழ்சிய‌டைய‌ ஒன்றும் இல்லை, பிடுங்கிய‌தை திரும்ப‌ த‌ந்துள்ள‌ன‌ர். அதுவும் குறைபாடோடு. சிறும்பான்மை இன‌த்த‌வ‌ரை ஏமாற்றுவ‌தும் ஏய்ப்ப‌தும் அர‌சுக்கும் அமைச்சுக்கும் அதிகாரிக‌ளுக்கும் வாடிக்கையாகி விட்ட‌து. அதை விட‌ கேவ‌ல‌ம் இதுவ‌ரை த‌மிழ் க‌ல்வி துறையை சேர்ந்த‌ அதிகாரிக‌ள், த‌லைமை ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் இதுவ‌ரை வாயே திற‌‌க்க‌வில்லை(ஒரு சில‌ரை த‌விர‌). த‌ன் இன‌த்தின் கோவ‌ன‌த்தை பிடுங்கினாலும் ப‌ர‌வாயில்லை ஆனால் த‌ன் வ‌யிறு நிறைந்தால் போதும் என்ற‌ எண்ண‌ம். மான‌ங் கெட்ட‌ பிழைப்பு.

அறவேந்தன் said...

வணக்கம், ஐயா.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்கிற சோதனைகளுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா?
இவ்வளவு காலம் போராடியதற்குத் தக்கதொரு பலன் கிடைத்ததென்றிருந்தோம்.
மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
தமிழ்க் கல்வி சம்பந்தமான பிரச்ச‌னைகளுக்குரிய தீர்வை எடுக்கும் உரிமையைக் கல்வித் துறை சார்ந்தவர்களிடமும், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்களிடம் விட்டு விட வேண்டும்.
முக்கியமாக, இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே அக்கறையுடன் செயல்பட்ட, செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய 12 பாட மீட்புக் குழுவினர், தமிழ் எங்கள் உயிர் குழுவினர் அவர்களுக்கு நமது நன்றிகள் பல.
இப்பிரச்சனைக்கு இன்னும் அறுதியான, இறுதியான, உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.
கிடைக்கும் வரை நாம் அதே வேகத்தோடு போராட வேண்டும்.
இல்லையேல், அடுத்த தலைமுறை நம்மைப் பழிக்கும்.
உங்களின் அயராத தமிழ்ப் பணிக்கு என் பணிவான நன்றிகள்.
நீங்கள் தொடர்ந்து அதே முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.
நன்றி, ஐயா.
‍‍‍‍கு. கோ. தர்மராஜன்,
ரவாங்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கு.கோ.தர்மராஜன்,

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே அக்கறையுடன் செயல்பட்ட, செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய 12 பாட மீட்புக் குழுவினர், தமிழ் எங்கள் உயிர் குழுவினர் அவர்களுக்கு நமது நன்றிகள் பல.//

தொடக்கத்திலிருந்து போராடும் 'தமிழ்க் காப்பகம்' அன்பர்களை விட்டுவிட்டீர்களே.

நல்ல கருத்துகளை எழுதி ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

எப்போதும் அரசையோ மற்றவர்களையோ நொந்து எந்தப் பயனும் இல்லை.

நமது மக்களுக்கு ஏமாறாமல் இருக்கும் வழிகளை கொஞ்சம் சொல்லிக் கொடுப்போம்; வழி சொல்பவர்களை ஆதரிப்போம்.

//அதை விட‌ கேவ‌ல‌ம் இதுவ‌ரை த‌மிழ் க‌ல்வி துறையை சேர்ந்த‌ அதிகாரிக‌ள், த‌லைமை ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் இதுவ‌ரை வாயே திற‌‌க்க‌வில்லை(ஒரு சில‌ரை த‌விர‌).//

அரசு அதிகாரிகள் பொன்விலங்கு பூட்டப்பட்டவர்கள் போல. அவர்களிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது; கூடாது.

ஆயினும், இந்த விடயத்தில் சத்தமே இல்லாமல் யுத்தம் நடத்தியிருக்கும் அன்பர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன். அவர்களுக்கு கரங்கூப்பி நன்றியும் சொல்கிறேன்.

"இவ்வளவு பேசும் நீங்கள், இதற்கு என்ன செய்தீர்கள்?" என்று கேட்கவும் எனக்குத் துணிவில்லை. காரணம், உங்களின் எழுத்துகளில் உங்கள் உணர்வை பலமுறை பார்த்துள்ளேன்.

கண்டிப்பாக, ஏதாவது செய்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். குறைந்த அளவு உங்களுக்கு வந்த குறுஞ்செய்தியையாவது 10 பேருக்கு அனுப்பி இருப்பீர்கள். என்னைப் பொருத்தவரையில் அந்த 'அணில்' முயற்சியும் போற்றத்தக்கதே.

இப்படி, தங்களால் முடிந்ததைச் செய்தவர்கள் நாட்டில் ஏராளம் இருப்பார்கள்.

அப்படித்தான், அரசு ஊழியர்களும். நேரடியாக இல்லாவிட்டாலும் அந்த நல்லோர்கள் மறைமுகமாக இதற்கு பெரும் துணை செய்திருப்பார்கள்.

இம்மாதிரியான சூழலில் நமக்குள்ளேயே குறைசொல்லிக் கொண்டும் அடித்துக்கொண்டும் அரசியல் 'பல்டிகள்' பண்ணி ஆற்றலை வீணடிக்காமல், பொது எதிரியை நோக்கி பலத்தைக் குவிப்போம்.

Unknown said...

உங்கள் அருந்தமிழ் முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்.

Blog Widget by LinkWithin