Monday, June 22, 2009

"நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம்" என்றால் என்ன? தெரிய வேண்டிய தெளிவுகள்.அண்மையக் காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவதாகும். பரபரப்பாக பேசப்படும் இவ்விடயம் பலருக்கும் தெரியாத ஒன்றாக - பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? இதனைப் பற்றிய தெளிவினை வழங்கும் கட்டுரை இது.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரசியன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும்.

காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும்.

இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை இட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது.

அத்துடன் திபெத்திய பீட பூமியை சீன அரசானது ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகின்றன. அதன் விவரம் பின்வரும் அட்டவணையில்:-

நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்:-

1.அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்

2.தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுத்துக் கொள்ளுதல்

3.தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாத்தல்

4.ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புதல்

5.அரசியல் நிலையில் அல்லது அரசதந்திர நிலலயில் நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்

6.தேசிய அடையாள அட்டை வழங்குதல்

7.ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குதல்

8.தேர்தல்களை நடத்துதல்

முதலான செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:-

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன்:-

1.பல வெளிநாடுகளில் தமது அரசின் அதிகாரப்படியான தூதுவர்களை நியமிக்க முடியும்.

2.வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.

3.குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும்.

4.பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள எமது சமுதாயத்தினை சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் பலப்படுத்துவதற்கும், எமது தாய்மண்ணில் சுதந்திரத் தமிழீழ அரசுரிமையைப் பெறுவதற்கும், உலகச் சவால்களை அனைத்துலக நிலையில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு பல திறமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.


நாடு கடந்த அரசாங்கத்திற்கு பாதகம் வருமா?

ஆம். நாடு கடந்த அரசாங்கமானது செவ்வனே செயல்பட ஒரு நாட்டின் தஞ்சம் அல்லது அங்கிகாரம் தேவை. தஞ்சம் தரும் வெளி நாடு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இதன் அதிகாரம் இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆகவே, மிகவும் பொறுமையுடனும், ஆழ்ந்த அறிவு மற்றும் அரசியல் மதிநுட்பம் கொண்டு கையாளப்படவேண்டிய விடயம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்த பின்னரும் வெளிநாடுகள் தாம் விரும்பும் பட்சத்திலேயே இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது ஏற்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு வெளிநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியன?

ஈழத்தில் ஒரு இன அழிப்பு நடவடிக்கை நடந்து முடிந்துள்ள போதும் அதற்காக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தது தவிர வேறொரு தீர்வையும் பேசவில்லை. ஆகவே, உலக நாடுகள் ஈழச் சிக்கலை இனங்கண்டு, தலையிட்டு, தமிழீழத்தை அங்கீகரித்தால் அன்றி அங்கு அமைதி என்பதையே காணமுடியாது. ஆனால் உலக நாடுகள் தாமாகவே வந்து இதில் தலையிடக்கூடிய நிலை உள்ளதாகத் தெரியவில்லை.

எனவே இப்போதைய உலகத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றால் முதலில் ஈழ மக்கள் இப்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று உருவாகுவதற்கும் தனித்துவம், கௌரவம், ஆசைகள், வாழ்வு என்பவற்றைப் பாதுகாப்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டும்.

உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையின் தனித்துவத்தை(இறையாண்மை) ஏற்றுக் கொள்ளும்படி கொழும்பு பல முரட்டு வழிகளைப் பின்பற்றும், இந்தியாவும் சில வேறு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும், ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ ஆட்சி முறையால் இவற்றை உடைத்தெறிய வேண்டும்.

அனைத்துலக அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக புலிகள் இயக்கம் இருந்த போதும் அதன் உலகளாவிய உட்கட்டமைப்பு மிகவும் வலுவான ஒன்று. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையாகவும் எழுச்சியுணர்வு உள்ளவர்களாகவும் கட்டிக்காத்து வந்தது புலிகள் இயக்கமே ஆகும். வெளிநாடுகளில் நிறுவப்பட்ட நிருவாக, நிதி அமைப்புகள் யாவும் முழுமையான - முறையான இயக்கத்திலேயே இப்போதும் உள்ளன.

எனவே, தற்போது உள்நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வேறுபாடின்றி மக்களுக்காகச் செயற்படவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தஞ்சம் கொடுக்க ஒரு உலக நாடு தேவை என்பதை விட மிக அவசியமாக இப்போது தேவைப்படுவது உலகம் முழுதும் வாழும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் ஆற்றல் மிகுந்த ஆதரவே யாகும்.

1 comment:

மு.வேலன் said...

அறிந்தேன், தெளிந்தேன். நன்றி.

Blog Widget by LinkWithin