Tuesday, May 12, 2009

பிறந்த இனத்தின் உரிமையில் தமிழக உடன்பிறப்புகளிடம் ஒரு வேண்டுகோள்


நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.


வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று?

கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது. சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது!!!


ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது. வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.


பேரன்புமிக்க தமிழக உறவுகளே!

உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.


எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ.


எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மனிதச்சங்கிலிகள், உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.


உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரசு தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.


அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே!


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.


தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள். தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள்.


உலகமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரசு அரசுதான். காங்கிரசின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.


இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.


தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.


மீண்டுமொருமுறை காங்கிரசு அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.


தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரசிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!


இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.


ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற உணர்வில் வாக்களியுங்கள்.


தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.


முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!


தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் வெல்லாது. வெல்லவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!


ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரசு கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!


புலம்பெயர் நாட்டிலிருந்து,
ஓர் ஈழத்தமிழன்,
[பருத்தியன்]


2 comments:

Subha said...

உருக்கமாய் இருக்கிறது ஐயா!

THANGAMANI said...

துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக்காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும்கொடுமை' என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

Blog Widget by LinkWithin