Thursday, October 02, 2008

அண்ணல் காந்தியடிகள் தமிழ்ப்பற்று

இன்று 2.10.2008 அண்ணல் காந்தியடிகளின் 139ஆம் பிறந்த நாள். அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகண்ட, உலகின் முதல் மாமனிதரான அண்ணலின் நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.

*************************************************


இவ்வுலகில் கோடானுகோடி ஆத்மாக்கள் இருக்க ஒரே ஒருவர் மட்டுமே 'மகாத்துமா' என போற்றப்படுகிறார். அவர்தான் இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும், 'அகிம்சை' எனப்படும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பிய அமைதிப் போராளி மகாத்மா காந்தி அவர்கள். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு காந்தி. இவர் 2.10.1869 அன்று இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

மகாத்மா காந்தி என்றாலே அவருடைய அறவழிப் போராட்டமும், 'அகிம்சையும்', அமைதிப் போரும், எளிமையும், இரக்க குணமும்தான் எல்லாருடைய கண்முன்னால் நிலழாடும். இத்தனை உயர்பண்புகளும் காந்தியிடம் உருவாகுவதற்குப் பல காரணியங்கள் இருக்கலாம். அவற்றுள் மிக முக்கியமாகத் தமிழும், திருக்குறளும், தமிழ்நாடும் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் நம்மில் பலருக்கு பெரும் வியப்பாக இருக்கலாம்.

காந்தி உருசிய நாட்டு அறிஞர் 'லியோ டால்சுடாய்' மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒருமுறை 'லியோ டால்சுடாய்' எழுதிய ஒரு கட்டுரையில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து 'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறட்பாவைப் பற்றி எழுதியிருந்தார்.

லியோ டால்சுடாய் மேற்கோள் காட்டிய குறட்பா காந்தியின் உள்ளத்தைத் தொட்டு, அவர் ஆன்மா(ஆத்மா)வில் கலந்தது. மிக உயர்வான கருத்தைச் சொல்லும் இப்படி ஒரு நூல் இந்தியாவில் உள்ளது என்பதை அறியாமல் இருந்த காந்தி மிகவும் வருந்தினார். திருக்குறள் நூலை எப்படியாவது படித்துவிட விரும்பினார். பெரும் முயற்சி மேற்கொண்டு திருக்குறளைத் தேடினார். திருக்குறள் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரு அறநூல் என்பதை கண்டறிந்தார்.

ஆனால், தமிழ் தெரியாத காந்தி திருக்குறளைப் படிக்க முடியாமல் மொழிப்பெயர்ப்பு நூல்களைப் படித்து திருக்குறள் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படிக்க வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். அதனால், தமிழ்மொழியைப் படித்தார்.

"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" என்று இதனை அவரே பதிவு செய்திருக்கிறார்.

கோட்டு சூட்டுடன் இருந்த காந்தியை வெள்ளாடைத் துறவிபோல மாற்றிய பெருமையும் தாய்த் தமிகழத்திற்கே உரியதாகும். அந்த வரலாற்று நிகழ்வு 1921இல் மதுரையில் நடந்தது. அரை நிருவாணமாகவும் கிழிந்த ஆடைகளுடனும் தன் இந்திய நாட்டு உடன்பிறப்புகள் இருப்பதைப் பார்த்த காந்தியின் மனம் தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரை நிருவாண கோலத்திற்கு மாறியது.

மேலும், தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள் தொடர்பாகக் காந்தி செய்துள்ள பணிகளும் எழுதியுள்ள குறிப்புகளும் சில:-

1.தமிழை நன்றாகக் கற்றுக்கொண்ட காந்தி 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பெரியோர்களைப் பற்றி இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

2.தமிழைக் கற்பதிலும், தமிழ்ப் பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தி தம் துணைவியார் கசுதூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார்.

3.தமது மூன்றாவது மகனான தேவதாசுக்கு இலட்சுமி என்ற தமிழ்பெண்ணை மணமுடித்து வைத்தார்.

4.திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, "திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.

5.ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளைத் தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தார். அதோடு, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.

6.அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த வழிபாடுகளிலும் பூசைகளிலும் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

7.சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.

8.மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா.


9.தமிழகத்தில் திலகருக்கு இணையாக நாட்டுபற்று உணர்வை; எழுச்சியை உருவாக்கிய வ.உ.சிதம்பரனார் பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவியிருக்கிறார்.

10.தென்ஆப்பிரிக்கச் சத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும், கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

11.தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராகக் காந்தி 1896ல் தமிழகத்தில் பரப்புரை செய்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்து கொள்ளாத இனத்தினர்" என்று பேசியுள்ளார்.


12.தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள். அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்குப் புகழ்கிடைத்தது என்று எழுதியுள்ளார்.

13.காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' இதழ் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்!

14.காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்குத் தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்!

15.காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் வெளியாகியது இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான்!

16.காந்தியடிகள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அகிலமெல்லாம் சுற்றி, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!

அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்.

11 comments:

Anonymous said...

இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களுக்கு,

"அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழுக்கும்" இத்துணை உறவா...? என்னை வியக்க வைக்கும் அதே வேளையில் மெய்சிலிர்க்கவும் வைக்கிறதய்யா உங்கள் கட்டுரை...!!

காந்தியடிகளின் தமிழ்ப்பற்று எவ்வாறெல்லாம் பயணிக்கப்பட்டிருக்கிறது என்பதனை தங்கள் கட்டுரை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியுள்ளது.

தங்களுக்கு என் நன்றியும் பாராட்டும்.

அன்புடன்,
தங்களின் திருத்தமிழ்த் தோழன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங்கு, சிலாங்கூர்.

VIKNESHWARAN ADAKKALAM said...

அருமையான வாசிப்பு, நன்றி ஐயா.

உலக மாந்தர்கள் 100 பேர் என்ற ஆங்கில புத்தகத்தில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. இதற்கான விளக்கத்தை ஆசிரியர் கூறுகையில் காந்தியின் கொள்கைகள் அவர் வாழ்ந்த சமயத்தில் மட்டுமே இருந்ததாகவும் அவர் இறப்பிற்குப் பின் அவை பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
அதே போல் மகாத்மாவின் அகிம்சா வழி சிந்தனைக்கும் அவர் சாதனைகளுக்கும் நோபல் பரிசு கிடைத்ததாகவும் நினைவில்லை...

அருள் said...

வணக்கம்!
கட்டுரை மிக அருமை....
அண்ணல் காந்தி அடிகளுக்கும் தமிழுக்கும் தொடர்புள்ள பல செய்திகளை உங்கள் இப்பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.........

//////////
அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்.
//////////
பல மேதைகள், பேரறிஞர்கள் உணர்ந்த தமிழின் அருமையை நம் தமிழரும் உணர வேண்டும் என்பதே எமது விருப்பமும்......
உங்கள் திருத்தமிழ் தொண்டு மேன்மேலும்ம் சிறக்க வாழ்த்துக்கள்.........
நன்றி!!!

வேளராசி said...

பதிவைப் படித்து மனம் நெகிழ்ந்தேன்,நிறைந்தேன்.நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சந்திரன்,

உங்கள் மறுமொழியில் உங்கள் உள்ளத்து உணர்வினை உணர்த்தேன். மிக்க நன்றி நண்பரே!

*****

திருத்தமிழ் அன்பர் விக்னேஷ்,

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய அண்ணல் காந்தி இன்றும் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பதே அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய விருதல்லவா?

உலகம் முழுவதும் காந்தி படிக்கப்படுகிறார். பெருமைதானே!

****

திருத்தமிழ் அன்பர் அருள்,

எனது வலைப்பதிவில் தாங்கள் எழுதியுள்ள மறுமொழிக்கு நன்றி மொழிகின்றேன்.

தொடர்ந்து வருக! நல்ல கருத்துகளைப் பரிமாறுக!

புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருக்கிறீர்கள் என கருதுகிறேன். நல்ல படைப்புகளை வழங்குங்கள்.

*****

திருத்தமிழ் அன்பர் வேளரசி,

முதன்முறையாகத் திருத்தமிழுக்கு வந்துள்ள தங்களை வரவேற்கிறேன். வருகை தொடரட்டும்!

காந்தியே உள்ளத்தை நெகிழவைக்கும் ஒருவர்தானே!

அப்படிப்பட்ட காந்தி நமது தமிழைப் போற்றியுள்ள வரலாற்றைப் படிக்கும்போது, அவர் மீதுள்ள நமது அன்பும் மதிப்பும் பன்மடங்கு கூடுகிறது.

வள்ளுவனாரின் குறளை வாழ்க்கையாகவே கடைபிடித்துள்ள காந்தியின் வழியை நமது தமிழர்கள் பின்பற்ற வேண்டும்!

திருக்குறள் தமிழரின் மறைநூலாக; வாழ்வியல் வழிகாட்டியாக ஆகவேண்டும்.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான பதிப்பு. மிக்க நன்றி.

"அரிச்சந்திர மயான கண்டம்" எனும் நாடகத்தைப் பார்த்தபின்புதான், நானும் மன்னன் அரிச்சந்திரன் போல் இனி என் வாழ்வில் பொய் சொல்லவேமாட்டேன் எனும் சபதத்தையும் காந்தி எடுத்தார்.
இதையும் உங்கள் பதிவிலே இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்திற்கும் தக்க ஆதாரங்களையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

- உழவன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் உழவன்,

தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மொழிகின்றேன்.

கீழ்க்காணும் நூல்களில் காந்தியைப் பற்றிய அரிய செய்திகளைக் காணலாம்.

1.மகாத்மா காந்தி வாழ்க்கை,
2.தமிழ்நாட்டில் காந்தி,
3.விடுதலைப்போரில் தமிழகம்,
4.விடுதலை வேள்வியில் தமிழகம்

காந்தியைப் பற்றி சொல்லப்படாத செய்திகள் நிறைய உண்டு.

சொல்லக்கூடாத செய்திகளும் உண்டு.

தங்களின் 'தமிழோடு'வலைப்பதிவைப்படித்துள்ளேன். நல்ல படைப்புகளை வழங்கியுள்ளீர்கள்.

தொடர்ந்து வருக! மறுமொழி தருக!

தாய்மொழி said...

திரு.ச.ப.நற்குணன் அவர்களே தங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் நட்சிறப்பு மென் மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். நன்றி. தங்களின் ஒவ்வொரு இடுகைகளும் மிக சிறப்பு.

வெண்காட்டான் said...

பகத்சிங்கின் சாவிற்கும் நாள்குறித்ததும் இந்த காந்திதான். வழமை பேல அன்றும் காந்தியிடம் ஏமாந்து தம்மை இன்றுவரை அடிமையாக வாழ்வதும் தமிழர்கள் தான். காந்தி தமிழில் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதைப்போல அனைத்து பொழியில் வந்ததைப் படித்தால் அவர் எப்படி ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்று அறிந்துகொள்ளலாம்.

Jayabarathan said...

அன்புமிக்க நண்பர் சுப. நற்குணன்,


தமிழ் மொழிக்கு இத்துணை அளவு உயர்ந்த பணி செய்துள்ள காந்திஜியைப் பற்றிப் பலருக்கும் அறிமுகப் படுத்தியதற்கு என் நன்றிகள் பல.

காந்திஜிக்கு "மகாத்மா" என்று அடைமொழி முதன்முதல் அளித்தவர் நோபெல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் என்பது நான் அறிந்தது.

காந்தியாரைப் பற்றி என் கட்டுரை:
http://jayabarathan.wordpress.com/death-of-mahatma-gandhi/

http://jayabarathan.wordpress.com/

அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஐயா சி.ஜெயபாரதன் அவர்களே,

தங்களை இங்குக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

Blog Widget by LinkWithin