Wednesday, March 05, 2008

கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?



(நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட 'தமிழ்மொழி இலக்கணச் சிப்பம்' தொடர்பாக எழுந்த கண்டனங்களின் வரிசையில் நான் எழுதிய கட்டுரை. இக்கட்டுரை 9-3-2008இல் மலேசிய நண்பன் நாளேட்டில் வெளிவந்தது)


அண்மையில் நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களம் வெளியிட்ட தமிழ் இலக்கணச் சிப்பம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியதன் தொடர்பில் என்னுடைய கருத்துகளை இதன்வழி எழுதுகிறேன். இந்தச் சிக்கல் பற்றி மலேசிய நண்பன் (10.2.2008) விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. பின்னர் 12.2.2008இல் தலையங்கமும் தீட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, தலையங்கம் எழுதிய பாதாசன் அவர்களைச் சாடியும் தமிழ் இலக்கணச் சிப்பத்தை அதரித்தும் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.

இப்படி ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் கண்டித்து எழுதிக் கொண்டிருப்பதை விடுத்து, தமிழ்மொழியின் அமைப்பு யாது? தமிழில் கிரந்தமும் சமற்கிருதமும் எப்படி கலந்தது? வடமொழியின் துணை தமிழுக்குக் தேவையா? கிரந்தம் இல்லாமல் தமிழ் இயங்குமா? தமிழ் தன்னுடைய தூயநிலையிலே வாழ்ந்துவிட முடியுமா? என்பன போன்றவற்றை ஆய்ந்து தெளிந்தால் நூற்றாண்டுச் சிக்கலான இதற்கு நல்ல தீர்வு பிறக்கும் என்பது என்னுடைய கருத்து.


தமிழின் கட்டமைப்பு
தமிழ்மொழி மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட மொழி. உயிர், மெய் என அடிப்படை ஒலிகளாக 30 எழுத்துகளையும் ஓர் ஆய்த எழுத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட செம்மொழி தமிழ். தொல்காப்பியக் காலம் தொட்டு இந்தக் கட்டமைப்புக் குலைந்துபோகாமல் இருப்பதால்தான் தமிழ் இன்றளவும் தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது.

உலகின் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒலிகள் ஏறக்குறைய 25 மட்டுமே. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையான ஒலித்தொகுதி உண்டு. அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு ஒலிகள் உள்ளன. ஒரு மொழியில் உள்ள ஒலிகளை வேறொரு மொழியில் எழுதும்போது அதே ஒலிக்குறிப்போடு எழுத முடியும் என்பது இயலாத ஒன்று. பிறமொழிச் சொல்லுக்கு மிக நெருக்கமான ஒலியைக் கொண்டுதான் மற்றொரு மொழியில் எழுத வேண்டும். அல்லது மொழியாக்கம் செய்து எழுத வேண்டும். இந்த விதி எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.


இந்த உண்மையை உணர்ந்ததன் பயனாகத்தான் 3000 ஆண்டுக்கு முன்பே தொல்காப்பியர் வடவெழுத்தையும் சொற்களையும் விலக்கவேண்டும் என்றார். அவருக்கு முன்னர் தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தனித்தமிழே விளங்கியது. பிறகுதான் பிராகிருதம் சமற்கிருதம் முதலிய வடமொழிகள் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடுருவின. கி.பி3ஆம் நூற்றாண்டு தொடங்கி 6ஆம் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய நானூறு(400) தமிழுக்கு இருண்ட காலம் எனலாம். களப்பிரர், பல்லவர், மராட்டியர், மொகலாயர் முதலான அன்னியரின் ஆட்சியில் தமிழ் சின்னபின்னமாகிப் போனது. அதேபோல், தமிழரிடையே சனாதனம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் செல்வாக்குப் பெற்றதாலும் தமிழில் பிறமொழிக் கலப்புகள் பெருகின.


தமிழில் வடமொழி கலந்தது எப்போது?
வடமொழி பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய கி.பி.12ஆம் நூற்றாண்டில் தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதும் 'மணிப்பிரவாள நடை' உருவானது. அப்போதுதான், வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதுவதற்குப் புதிதாக சில வரிவடிங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக, தமிழ் எழுத்துகளின் அமைப்பிலேயும், இரு தமிழ் எழுத்துகளை ஒன்றாக இணைத்தும் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வடமொழிச் சொற்களை பெரிய அளவில் புகுத்தித் தமிழை முடக்க விரும்பிய சிலர் செய்த அயராத முயற்சியின் விளைவாக 'மணிப்பிரவாள நடை' பெரும் செல்வாக்குப் பெற்று வளர்ந்தது. சமற்கிருதச் சொற்களும் கிரந்த எழுத்துகளும் தமிழை இருபுறமும் நெருக்கி ஒடுக்கி வைத்தன.


இவ்வாறு தமிழில் கிரந்தமும், சமற்கிருதமும் இன்னும் பிற மொழிகளும் கலந்துபோனதால் தமிழ் தன்நிலைகெட்டுப் போனது. 12ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு நிகழ்ந்த கேட்டினை அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் முன் அறிவிப்புச் செய்துவிட்டார்.
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
அதாவது வடசொல் கலக்க நேர்ந்தால் அதற்கு ஒரு வரையறை செய்துகொண்டு எழுதவேண்டும் எனத் தொல்காப்பியர் வலியுறுத்தினார். தொல்காப்பியர் பிறமொழி சொல்லையோ, ஒலியையோ அல்லது எழுத்தையோ தமிழில் கலக்கலாம் என ஒருபோதும் சொல்லவே இல்லை. தொல்காபியர் கூறிய இலக்கணத்தைக் கடைபிடித்திருந்தாலே போதும், தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் தமிழ் வடிவத்திலும் தமிழ் ஒலிநயத்துடனும் இருந்திருக்கும். ஆனால், தமிழின் தனித்தன்மையும் தூய்வடிவமும் பேணப்படாமல் போனதால் தமிழுக்குள் கணக்கிலடங்காமல் பிறமொழிச் சொற்கள் புகுந்துகொண்டன.


வடமொழிக் கலப்பால் விளைந்த கேடுகள்
இதன் விளைவுகள் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டன. வடமொழி பெருவாரியாகக் கலந்ததால் தமிழானது கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல்வேறு மொழிகளாகச் சிதைந்து போனது. தமிழராக இருந்தவர்கள் பல்வேறு இனத்தவராக மாறிப்போனது மட்டுமன்று பகைவராகியும் போயினர். அதனினும் கொடுமை என்னவெனில், தமிழிலிருந்து பிரிந்த மொழிகளின் இலக்கிய வரலாறுகளை எழுதும்போது அவை தமிழுக்கும் முந்தியவை எனக் காட்டுவதுதான்.


வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் பரந்து விரிந்து இருந்த தமிழ்நாட்டு எல்லை சுருங்கிப்போனதும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்துபோனதும் மொழிக்கலப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அடுத்து, தமிழில் இருந்த பல்லாயிரக்கணக்கான சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன. தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளில் குடியேறியத் தமிழர்கள் தமிழின் அடையாளத்தை இழந்து வேற்று இனதாராகி விட்டனர். பீசித் தீவு, மொரிசியசு, இந்தோனீசியா முதலான நாடுகளில் குடியேறிய தமிழர்கள் இன்று தமிழராக இல்லை. நம் மலேசியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறிய மலாக்கா செட்டிகள் இன்று தமிழராக இல்லை. மொழியில் ஏற்படும் கலப்பினால் தமிழுக்கும் தமிழர்க்கும் நேர்ந்துள்ள கொடுமைகள் இப்படி பற்பல உள்ளன.


நல்லதமிழ்ப் பணியில் நல்லறிஞர்கள்
இந்த வரலாறுகளைச் சிறிதும் கவனிக்காமல் தமிழ்மொழியை வளர்ப்பதற்கு தமிழ் முன்னோர்கள் கிரந்தத்தையும் சமற்கிருதத்தையும் பிற ஒலிகளையும் மொழிகளையும் தமிழுக்குள் நுழைத்தனர் என்பது வடிக்கட்டிய பொய்யுரையாகும். தமிழின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பிறமொழி கலப்புகள் எந்த விதத்திலும் துணைநில்லா. தமிழ் தமிழாக இருப்பதே சாலச் சிறந்தது என்பதை உணர்ந்துதான் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகளார், திரு.வி.க, அறிஞர் அண்ணா, பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தனித்தமிழ் என்ற பெயரில் நல்லதமிழை வளர்த்தனர். அவர்களின் அடியொற்றி இன்றும் தமிழகத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியேயும் நல்லதமிழை முன்னெடுக்கும் பணிகள் முனைப்பாக நடைபெற்று வருகின்றன.


தனித்தமிழ் என்பது தனியொரு மொழியன்று. எந்தவொரு மொழிக்கலப்பும் இல்லாமல் முழுவதும் தமிழ் எழுத்துகளும் தமிழ்ச் சொற்களும் கொண்டு தமிழ் இலக்கண மரபுக்குள் எழுதுவதே தனித்தமிழாகும். ஆனால், இந்தத் தனித்தமிழ் ஏதோ புலவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் மட்டுமே உரியது; புரிந்துகொள்ள கடினமானது; கரடு முரடானது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, படித்த மேதைகளும் பேராசிரியர்களும் புழுகி வருகின்றனர். தமிழில் எதுவெல்லாம் இவர்களுக்குப் புரிகிறதோ அது தமிழாம் புரியாவிட்டால் உடனே தனித்தமிழ் என்றும் பண்டிதத் தமிழ் என்றும் கூறி தானும் மருண்டு பிறரையும் மருட்டி வருகின்றனர்.


பிறமொழி துணையின்றித் தமிழ் வளருமா?
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் பேரளவில் நீக்கப்பட்டுவிட்டன. தமிழைத் தூயதமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகின்றது. மனநிறைவளிக்கும் வகையில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது. நல்லதமிழ் வளர்ச்சியில் சில செய்தி இதழ்கள், நூலாசிரியர்கள், மக்கள் தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்கள், கணினித் துறையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.


தமிழகத்தில் தமிழறிஞர் மணவை முஸ்தாப்பா உருவாக்கியுள்ள 6 இலக்க(இலட்சம்) தமிழ்க் கலைச்சொற்கள் நல்லதமிழாக உள்ளன. சொல்லாய்வு அறிஞர் ப.அருளி தலைமையில் 135 அறிவியல் துறைகளுக்காக உருவாகியுள்ள அருங்கலைச்சொல் பேரகரமுதலி பிறமொழிக் கலப்பின்றி வெளிவந்துள்ளது. தமிழ்க் கணினி இணைய வல்லுநர்கள் வியத்தகு வகையில் புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர். தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் நாம் பயன்படுத்தும் தமிழ் மிகக் தூய்மையாக உள்ளது. அன்னிய மொழி கலக்காமல் தமிழ் வெற்றிபெற்று வருவதற்கு இப்படிப்பட்ட ஆக்கப்பணிகள் பலவற்றைச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.


தமிழ் தமிழாக இருக்க பிறமொழி எழுத்துகளையும் சொற்களையும் அறவே நீக்கிவிட வேண்டும். பிறமொழிச் சொல்லைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டு நேர்ந்தாலோ அல்லது மொழிபெயர்க்க இயலாமல் போனாலோ தமிழ் மரபுக்கு ஏற்ப திரித்து எழுத வேண்டும். சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளை எழுத நேர்ந்தால் முதலெழுத்து மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக, வலிந்து பிறமொழிச் சொற்களைத் திணிக்கக் கூடாது. இவ்வாறு சில எளிய வழிகளைப் பேணிவந்தால் தமிழ் தமிழாகவே இருக்கும்.


  • முடிந்த முடிபு
    மற்றைய மொழிகளைப் போல் தமிழ் பயனீட்டாளர் மொழியன்று. பயனீட்டாளர் மொழிதான் பிறமொழிகளிலிருந்து கடன்பெற்று பிழைக்க வேண்டும். ஆனால், தமிழோ உற்பத்தி மொழி. எந்தச் சூழலிலும் புதுப்புது சொற்களைப் புனைவதற்கு ஏற்ற மொழி. எனவே, கிரந்தம், சமற்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாளம் மட்டுமல்ல ஆங்கிலம் முதலான வேறு எந்தவொரு மொழியின் தயவும் துணையும் தமிழுக்குத் தேவையே இல்லை. தமிழ் தமிழாக இருப்பதற்கு தமிழர்கள் தமிழராக இருந்து உரிய பணிகளை முன்னெடுப்பதே முக்கியம்.
  • எழுத்து:- சுப.நற்குணன்,பாகான் செராய், பேரா.

4 comments:

Anonymous said...

வணக்கம்.தங்களின் கட்டுரையை படிதேன்,மிக தெள்ளத் தெளிவான விளக்கம்.வாழ்துக்கள்.இப்பொழுதாவது அந்த (அறிவிளிகளுக்கு) புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இனி அவர்கள்(அறிவிளிகள்) எதையும் ஆய்ந்து பேசட்டும்,எழுதட்டும்.இல்லையேல்.....வீணாகிவிடுவார்கள்.
அன்புடன்:ஆதிரையன்,செலாமா,பேரா.

Anonymous said...

வணக்கம்! வாழ்க!
திருத்தமிழ் வலைப்பதிவில் வருகின்ற தங்களின் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பாயனுள்ளவையாக இருக்கின்றன. நன்றி.

குறிப்பாக, கிரந்த எழுத்து தொடர்பாக தங்களின் இந்தக் கட்டுரை மிக மிக நன்று. கிரந்த எழுத்துகள் தமிழில் எங்ஙனம் ஊடுறுவின என்பதை வரலாற்றுப் பின்னணியோடு அறிய முடிந்தது.

மேலும், கிரந்த எழுத்தினால் தமிழுக்கு நன்மையும் எதுவும் கிடையாது என்பதையும் தமிழ் செழித்து வாழ்வதற்கு கிரந்தம் ஒருபோதும் தேவையில்லை என்பதையும் சிறப்புடன் ஆதாரத்தோடு விளக்கி உள்ளீர்கள்.

இப்படி அறிவுப்பூர்வமாக வாதங்களை முன்வைக்கும் கட்டுரைகளும் சிந்தனைகளும் நம் நாட்டில் அதிகமாக வரவேண்டும். வீணான காழ்ப்புணர்சியோடு விவாதம் செய்துகொள்வதை நிறுத்தி இப்படிப்பட்ட நியாயமான முறையில் விவாதிக்கும் கலாச்சாரத்தைக் கற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கிரந்தம் வேண்டும் என்பவர்கள் முன்வைக்கும் வாதங்கள் அடிப்படையே இல்லாதவை. ஏதோ ஒருவகையான மூடத்தனமும் சமய ஈடுபாடுமே அவர்களின் வாதத்திற்கு காரணமாக உள்ளதே தவிர, அறிவுப் போர்வமாகவோ அல்லது மொழிநலன் அடிப்படைகளோ எதுவுமே இல்லை.

மற்றைய மொழிக்காரர்கள் பின்பற்றும் வழிமுறைகளைத் தமிழிலும் செய்து மொழியில் கலப்பு செய்வது தவறான செயல் எபதை சில 'அறிவுக் குருடர்கள்' புரிந்துகொண்டால் மிகவும் நல்லது.

தங்களிடமிருந்து இன்னும் அதிகமான செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன்.
பாராட்டுகள்.

நன்றி வணக்கம். வாழ்க.!

அன்புடன்,
தமிழ் மானமுள்ள தமிழாசிரியன்
இளையவேல்,
சிரம்பான், நெகிரி செம்பிலான்.

Anonymous said...

தங்களின் கிரந்த எழுத்து பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கிரந்த எழுத்து பற்றி இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை. மிக்க நன்றி.

அன்புள்ள,
ஔவை
ஆசிரியர் பயிற்றகம்
குவாலா லீப்பிசு
(குவாலா லீப்பிஸ் என்று கிரந்தம் கலந்து இனி எழுத மாட்டேன்)

R.Shanmugham said...

Forgive me for using English..
Kirandha ezhutthukkalai nangu aaraaindhu paarthaal avai thirindhu pona Thamizh ezhuthukkalaaga thaan irukkum.. How can we write Jeorge and Collins in Thamizh if we dont have a letter to pronounce them in tamil?. I suggest you read an article by Selva in Wikipedia Tamil.. I hope his sugggestions could help write foreign words in Tamil without using Kirandha letters..
Shanmugham.
Salem.

Blog Widget by LinkWithin