Tuesday, January 15, 2008

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி2)

பொங்கல் விழாவில் சூரியனுக்குத் தனி இடம் தரப்பட்டு வழிபடப்படுகின்றது. உலகின் ஆதி சோதியாக விளங்கும் சூரியனைத் தமிழ் மக்கள் இறைமை உணர்வோடு போற்றினார்கள் என்பதற்கான நேரடியான சான்றைப் பொங்கல் விழாவில் காணமுடிகிறது. தமிழன் முதன் முதலில் ஞாயிறை(ஒளியை)தான் வணங்கியிருக்கிறான். ஞாயிறு எழுந்தால்தான் உலகில் எல்லாவகை இயக்கமும் செயலும் நடைபெறும். உலகின் நல்வாழ்வுக்குச் சூரியன் ஆதாரமாக இருப்பதால்தான், தை முதல் நாள் சூரியப் பொங்கல் என்று கொண்டாடப்பெறுகிறது. உலக இயக்கத்திற்கு மூலமாக இருக்கும் சூரியனுக்கு வணக்கஞ்செய்வதும் நன்றிசொல்வதும் தமிழரின் உயரிய பண்பாட்டின் அடையாளங்களாகும்.

சூரியனுக்கு அடுத்து பொங்கல் திருநாளில் சிறப்புப்பெறுவது உழவுத் தொழிலுக்கு இன்றியமையாது விளங்கும் மாடுதான். வயலில் ஏர் இழுப்பது, பரம்பு அடிப்பது, அறுவடை காலத்தில் சூடடிப்பது, களத்து நெல்லை களஞ்சியத்தில் சேர்ப்பது ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வது மாடுதான். அதோடு, பாலையும் நெய்யையும் உணவாகக் கொடுத்து உடலை வளர்ப்பதும் மாடுதான். மாட்டுப் பொங்கலன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொட்டிட்டு, மாலையிட்டு, பொங்கலிட்டு வணக்கம் செய்வது தமிழரின் உயிரிரக்கப் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஐந்தறிவு உயிர்களையும் தமிழர்கள் உயர்வாக மதித்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு இதனைவிட வேறு அடையாளம் வேண்டுமோ?

தைமாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்றும் கன்னிப் பொங்கல் என்றும் வழங்கப்படுகிறது. இந்நாளில், ஒருவரை ஒருவர் கண்டும், உற்றார் உறவினர் வீடுகளுக்குச் சென்றும் கண்டு, கேட்டு, உண்டு, கலந்துரையாடி கொண்டாடுவர். கன்னிப் பெண்கள் ஒன்றாகக்கூடி பொங்கலிட்டு கடவுள் வழிபாடு செய்வர். இளைஞர்கள் தங்களின் வீரத்தை வெளிக்காட்ட காளைகளை விரட்டிப் பிடிப்பர். இதனைச் சல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைப்பது வழக்கம். மொத்தத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து மனமகிழ்வை ஏற்படுத்தும் ஒற்றுமை விழாவாகப் பொங்கல் பெருநாள் இருந்துள்ளது. அதோடு, தமிழர்களின் வீர மரபைப் பேணிக்காக்கும் விழாவாகவும் இருந்துள்ளது.

உடல் உழைப்புக்கும் உழவுத் தொழிலுக்கும், அந்த உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் மதிப்பளித்து நன்றிசெலுத்தும் உயர்ந்த நெறியைத் தம்முள்ளே கொண்டுள்ள இந்தப் பொங்கல் விழா, மதம் கடந்த நிலையில்தான் அன்றைய நாளில் கொண்டாடப்பட்டது. எனவேதான், பொங்கல் பண்பாடு சார்ந்த விழா எனப்படுகிறது. பொங்கல் விழா எந்தவொரு மதம் சார்ந்ததோ அல்லது சமயம் சார்ந்ததோ அன்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர், அவர் எந்தச் சமயம் சார்ந்தவராக இருந்தாலும் பொங்கலைக் கொண்டாடலாம். ஆகவே, பொங்கல் மதங்களைக் கடந்து மாந்த நேயத்தை முன்படுத்தும் முத்தமிழ் விழா என்பது அறியவேண்டிய ஒன்றாகும். பழந்தமிழரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மாந்த நேயப் பண்பாட்டைப் பொங்கல் விழாவிலும் தெள்ளென காணமுடிகிறது.

பொங்கல் திருநாள் தைத்திங்கள் முதல்நாளில் வருவதால், தை முதல்நாளே தமிழாண்டுப் பிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், தை முதல் நாளில்தான் சூரியன் தட்சிணாயத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயணத்துக்கு அதாவது வடதிசைக்கு மாறுகிறது. மேலும், தமிழர்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனிக் காலம் எனப்படும். தமிழர் இளவேனில் காலத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். இந்த இளவேனிற் காலமும் தைத்திங்களில்தான் தொடங்குகிறது. தைப்பிறப்பே தமிழாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை முதலான தமிழ் இலக்கியங்களில் உள்ளன. இதிலிருந்து, தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே வானியல் கலையிலும் கணக்கியல் கலையிலும் தெளிவுபெற்றிருந்தனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான், 1921ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் பல்வேறு சமயங்களையும் சேர்ந்த ஐந்நூறு தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தைமுதல் நாளில் திருவள்ளுவர் பெயரில் தமிழுக்குத் தொடராண்டைத் தொடங்கினர்.

மொத்தத்தில், உழைப்பை மதித்தல், உழவுத் தொழிலுக்கு மதிப்பளித்தல், நன்றியுணர்வு, மாந்த நேயம், ஆன்ம நேயம் முதலான தமிழரின் உச்சமான பண்பாட்டு நெறிகளைப் பொங்கல் விழா வெளிப்படுத்திக் காட்டுகிறது. தமிழர்கள் வீர மரபுவழித் தோன்றல்கள் என்பதையும் பொங்கல் விழா விளக்குகிறது. அது மட்டுமல்லாமல், தமிழர் இயற்கை அறிவு, அறிவியல் நுட்பம், வானியல் கலை, கணக்கியல் முதலானவற்றில் பழங்காலத்திலேயே ஆழ்ந்த அறிவும் தெளிவும் பெற்றிருந்தனர் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்துகிறது. ஆக, மதம் கடந்த பெருநாளாகவும், பண்பாட்டு நெறிகளைப் பேணும் பண்பாட்டு விழாவாகவும், தமிழரின் ஒற்றுமையுணர்வை வளர்க்கும் பழம்பெரும் தமிழ்விழாவாகவும் சிறப்புப் பெற்றுள்ள பொங்கல் திருநாளைத் தமிழர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; அதன் உண்மைப் பொருளறிந்து போற்ற வேண்டும். (முற்றும்)

1 comment:

பாரதிய நவீன இளவரசன் said...

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

Blog Widget by LinkWithin