Tuesday, January 15, 2008

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி 1)

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி"
- என்பது புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரின் அரும்பாடலாகும்.

இந்தப் பாடல் கூறும் கருத்து யாதெனில், "முற்காலத்தில் பேரோசையுடன் ஆர்ப்பரித்து எழுந்த மாபெரும் வெள்ளம் இவ்வுலகத்தையே மூழ்கடித்தது. அவ்வெள்ளம் நீங்கியபோது முதலில் மலை தோன்றியது. அதனைத் தொடர்ந்து, அதன் கீழ்ப்பகுதியான மண் தோன்றுவதற்கு முன்பதாக இருந்த காலக்கட்டத்தில் தோன்றி, வீரம் மிகுந்து விளங்கிய குடி எம்முடைய குடியினர். அக்காலக்கட்டத்தில் பிற குடியினர் எவரும் தோன்றியிருக்கவில்லை. இத்தகைய சிறப்புப்பெற்ற எமது குடியினர் பொய்மையை நீக்கி புகழ்பெற்று, நாளுக்கு நாள் சிறப்படைவதில் வியப்பு என்ன இருக்கிறது?" என்பதாகும்.

இந்தப் பாடலில் தமிழரின் தொன்மையும் வரலாறும் வீரமும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றோடு, கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், தமிழர் வாழ்ந்த மூன்று திணைகள் அதாவது நிலப்பகுதிகள் சுட்டப்படுகின்றன. 'கல்தோன்றி' என்பது குறிஞ்சி நிலம் தோன்றியதையும், 'மண்தோன்றா' என்பது மருதநிலம் இன்னும் தோன்றாததையும் குறிக்கின்றன. 'கல்தோன்றி மண்தோன்றா' என்பதற்கு இடையில் மறைமுகமாக முல்லைநிலத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். முல்லை காடும் காடுசார்ந்த நிலமுமாகும். மருதமானது நாடும் நாடுசார்ந்த நிலமுமாகும். இந்த மூன்று நிலப்பரப்புகளோடு கடலும் கடல்சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலமும், வறட்சியான பாலை நிலமும் சேர்ந்த ஐந்து நிலப்பகுதிகளைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்திணை என்று குறிப்பிடுகின்றன.

மனித நாகரிகம் தொடங்கியது குறிஞ்சி நிலத்தில்தான். குறிஞ்சிநில மாந்தன் காட்டு விலங்குகளை வேட்டையாடியும், தீக்கல்லால் எழுப்பப்பட்ட தீயில் இறைச்சியைச் சுட்டு உண்டும் குகைகளில் வாழ்ந்து வந்தான். முல்லை நிலத்தில், காடுகளில் விளைந்த காய், கனி, கிழங்குகளை உண்டும், மலைகளில் ஓடிய அருவிநீரைப் பருகியும் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். நாளடைவில் குழுவாக, கூட்டமாக, குலமாக வாழவும் உணவுகளைச் சேமித்துவைத்தும், விலங்குகளைப் பழக்கி பயணம் போகவும் கற்றுக்கொண்டான். அதன் பிறகு, மருத நிலத்தில் குடியேறி நிலையான குடியிருப்புகளை அமைந்துக்கொண்டு ஆடுமாடுகளை வளர்த்தும், பயிர்தொழில் செய்தும் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர். இங்குதான் பழந்தமிழர் தம் வாழ்வியல் நெறிகள், பண்பாடுகள், கலைகள், விழாக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் உருவாக்கி வளர்த்துக்கொண்டனர். இந்தப் பழங்காலம் முதற்கொண்டு தமிழ் மக்கள் கொண்டாடிவரும் பண்பாட்டுப் பெருவிழாதான் பொங்கல் திருநாள். மருத நில மக்களின் மன வளர்ச்சியின் எச்சமாகவும் பண்பாட்டு உணர்ச்சியின் உச்சமாகவும் பொங்கல் விழா விளங்குகிறது. முற்றிலும் இயற்கையோடு இயைந்த விழாவாகப் பழந்தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடியுள்ளனர். இதுதான் வாழ்வு, இதுதான் நாகரிகம், இதுதான் பண்பாடு என ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வாழத்தொடங்கிய காலத்திலேயே, அன்புணர்ச்சிக்கும் அறிவாண்மைக்கும் பொருத்தமான ஓர் விழாவைத் தமிழர்கள் கொண்டாடியிருப்பது நம்மை வியக்கவைக்கிறது.

உயிர்கள் வாழ வேண்டுமானால் உணவு தேவை. அன்றைய காலத்தில் உணவுக்காக மக்கள் பயிர்த்தொழிலையே நம்பியிருந்தனர். இன்றும்கூட பயிர்த்தொழிலே உலகநாடுகளின் உயிர்த்தொழிலாக இருக்கின்றது. ஆயிரம் தொழில்கள் தோன்றினாலும் பயிர்த்தொழிலால் மட்டுமே உலகம் நிலைக்க முடியும். அதனால்தான், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்று திருவள்ளுவர் தொடங்கி 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மாபாவலன் பாரதி வரையில் பயிர்த்தொழிலை ஏற்றிப் போற்றியுள்ளனர்.

இந்தப், பயிர்த்தொழில் செழிக்கவேண்டுமானால் நீர் வளமும் நில வளமும் வேண்டும். இவை இரண்டும் வேண்டுமானால் மழை பொழிய வேண்டும். மழை பொழிவதற்கு நீர் நிலைகளிலிருந்து நீரையெடுத்து ஆவியாக்கக் கதிரவனின் துணை வேண்டும். மேலும், தாவர வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கதிரவனின் ஒளி வேண்டும். மாந்தனுக்கு இயற்கையான மருத்துவ பாதுகாப்பையும் சூரிய ஒளி தருகிறது. இயற்கையின் இத்தனை கூறுகளையும் உணர்ந்திருந்த அன்றையத் தமிழர்கள் ஏற்படுத்திய பண்டிகையாகப் பொங்கல் நன்நாள் விளங்குகிறது. இயற்கையோடு இயைந்த தமிழர் தம் வாழ்வை நினைத்துப் பார்க்கையில் இன்றையத் தமிழர்களான நமக்குப் பெருமையாக இருக்கிறது. (பகுதி 2 பார்க்க..)

No comments:

Blog Widget by LinkWithin