Tuesday, February 21, 2012

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்


பிப்பிரவரி 21-ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாள் என யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுத் தொடங்க இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்த மொழிக்குரியவர்களும் தங்களின் தனித்தன்மையையும் தனி அடையாளத்தையும் பேணிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் 'தாய்மொழி நாள்' உருவாக்கப்பட்டது.

அனைத்துலகத் தாய்மொழி நாளாகப் 'பிப்பிரவரி 21'-ஐ தெரிவு செய்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. 1952-இல் இந்த நாளில் அன்றைய கிழக்குப் பாக்கிசுதான் (இன்றைய வங்காளதேசம்) தலைநகரமாக இருந்த டாக்காவில் மொழிப் போராட்டம் வெடித்தது. வங்காள மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் உயர்க்கல்வி மாணவர்கள் 4 பேர் சூடுபட்டு இறக்க நேரிட்டத்து. தாய்மொழிக்காக உயிர்நீத்த அந்த மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகம் முழுவதும் நினைவுக் கூரப்படுகிறது. 

இந்த அனைத்துலகத் தாய்மொழி  நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும். உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்ட்டும். 

இல்லையேல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப்போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை  வரலாற்றில்  கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்;  பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம்.  இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட  தமிழ்மொழி   இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்..  தமிழ் மக்கள் வீட்டில்..  தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டடும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
-சுப.நற்குணன்

Saturday, January 14, 2012

பொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043

திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2043
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து.
 
 
தமிழ் தமிழாக வாழட்டும்;
தமிழர் தமிழராக வாழ்வோம்;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.

அன்புடன்:- சுப.நற்குணன்
 
பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டுச்  சிறப்புக் கட்டுரைகள்:-
 
 
  

Saturday, December 31, 2011

மலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043

நாள்காட்டி தோற்றம்

 தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது.

மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.

2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. 

 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 



நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.
இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.

இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.

  • நாள்காட்டி விலை: RM5.00 (ஐந்து ரிங்கிட்) மட்டுமே.
  • தொடர்புக்கு: தமிழியல் ஆய்வுக் களம் - Persatuan Pengajian Kesusasteraan Tamil, No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.
  • கைப்பேசி: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) , சுப.நற்குணன் (6017-4643941)
  • மின்னஞ்சல்: vellumtamil@gmail.com
  @சுப.நற்குணன், மலேசியா

Tuesday, December 27, 2011

மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை

திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர்; மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி; தமிழர் வாழ்விற்கு அடிப்படை; உலகத் தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை. உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இஃது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மாநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணிவெள்ளையனார் அவர்களே.

திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திருக்குறள் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த இரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.

தமிழ்நெஞ்சர் அரசேந்திரன்
மின்னல் பண்பலை வானொலியில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.
ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்குத் தெரிய வாய்ப்புண்டு. 

ஒரு வாழ்த்து அட்டையின் விலை RM1.50  மட்டுமே.

தொடர்புக்கு :- 
திருமதி மல்லிகா 016-6129554,
இரா. திருமாவளவன் 016-3262479,
அரசேந்திரன் 019-3243253.
நன்றி:- மலேசியாஇன்று

Friday, December 09, 2011

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ நூல் வெளியீடு



மலேசிய இதழியல் துறையில் அண்மையக் காலமாக முத்திரைப் பதித்திருக்கின்ற கட்டுரைத் தொடர் ஒன்றனைச் சொல்ல வேண்டுமானால்,  தாராளமாக ஆ.திருவேங்கடம் எழுதிவரும்  ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடரைச் சொல்லலாம்.

மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் இந்தக் கட்டுரைத் தொடர் ஓராண்டையும் தாண்டி வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கிறது.

இதனைவிட பெரிய வெற்றி என்னவெனில், தமிழ் நாளிதழ் வரலாற்றிலேயே ஆய்வின் அடிப்படையிலும், புள்ளி விவரத்தின் அடிப்படையிலும், துல்லியமான தரவுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட மிகச் சிறப்பான ஆய்வுத் தொடர் என இந்தக் கட்டுரைக்குப் புகழாரம் சூட்டலாம்.

மக்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்படவும், அறிவார்ந்த முறையில் ஆராய்ந்து பார்க்கவும் மிகச் சிறந்த களமாக இந்தக் கட்டுரைத் தொடர் அமைந்து வருகின்றது.

மலேசிய தமிழ்ச் சமூகம் தொடர்பான அரசியல், பொருளியல், கல்வி, அடிப்படை உரிமை, தமிழ்ப்பள்ளி, பண்பாடு, சமயம், தொழில்நுட்பம் எனப் பலதரப்பட்ட கோணங்களில் இந்தக் கட்டுரை பல உண்மைகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்திக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.

இந்த அருமையான கட்டுரைத் தொடரைப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில், தன்னார்வ அடிப்படையில் அரும்பாடுபட்டு எழுதிவருபவர் ஆ.திருவேங்கடம். ஒவ்வொரு தொடரையும் எழுதுவதற்கு அவர் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பார்; எப்படியெல்லாம் மெனக்கெட்டிருப்பார் என்பதை இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்துவரும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் வெறுமனே ஓர் எழுத்துப் படைப்பாக இல்லாமல், சமுதாயத்தின் சிக்கல்களை முன்னெடுத்து அதற்கான சிந்தனைக் களத்தையும் தீர்வுக்கான வழிதடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சான்றுக்கு, பினாங்கு கம்போங் புவா பாலா சிக்கல், எசுபிஎம் தேர்வு 10+2 பாடச் சிக்கல், பள்ளி மேலாளர் வாரிய அமைப்பு, தமிழ்க்கல்விச் சிக்கல், கல்விக் கடனுதவி வாய்ப்புகள் முதலான அடிப்படையான சிக்கல்களை இந்தத் தொடரில் விரிவாக எழுதி அரும்பணி செய்திருக்கிறார் கட்டுரையாசிரியர் ஆ.திருவேங்கடம்.

பெரும்பாலும் இவருடைய கட்டுரையைப் படித்துவிட்டு பல முறை தொலைப்பேசியுள்ளேன். மணிக்கணக்கில் விவாதம் நடத்தியுள்ளேன். அப்பொழுதெல்லாம் தம்முடைய கருத்துகளையும் வாதங்களையும் அழுத்தமாக முன்வைப்பார். நாம் சொல்லும் கருத்துகளுக்கும் செவிகொடுத்து உள்வாங்கிக்கொள்வார். பிறருடடய கருத்துகளுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளும் சிறந்த பண்பு இருப்பதால்தான், இவருடைய கட்டுரைகள் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைக்கும் வலுவோடு மிளிர்கின்றன.  எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமலும் மலிவு விளம்பரத்திற்கு ஆளாகமலும், சமுதாய நலனை மட்டுமே முன்படுத்தி, சரியான வழித்தடத்தில் தம் எழுத்துப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர் இவர்.

இந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் நூல்வடிவம் பெற்று வெளிவர வேண்டும்; ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இதுவொரு மேற்கோள் ஆவணமாக இடம்பெற வேண்டும் என்பது அவருடைய ஆயிரக்கணக்கான வாசகர்களுடைய கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்தது. அதற்குச் செவிசாய்த்து, அதனை நூலாகத் தொகுத்து வெளியிடவிருக்கிறார் ஆ.திருவேங்கடம்.

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.

 
      நூலின் அடக்க விலை: RM30.00 (முப்பது வெள்ளி மட்டும்)

      தொடர்புக்கு:- ஆ.திருவேங்கடம் 017-6470906

நமது சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் மணியான ஆய்வாளராக விளங்கும் ஆ.திருவேங்கடம் அவர்களின் சமுதாய பற்றுக்கும் தன்னலம் கருதா பணிக்கும் மதிப்பளித்து இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென ‘திருத்தமிழ்’ வழியாகக் கேட்டுக்கொள்கிறேன்.

@சுப.நற்குணன், மலேசியா.

 

Saturday, November 26, 2011

மலேசியாவில் தமிழ்க்காப்பு மாநாடு



தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் மலேசியத் தமிழர்களின் முக முகாமையான அடையாளங்களாகும். இவற்றில், தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கே பேரிழப்பாக அமைந்துவிடும். தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் தாழ்ந்து போகுமானால், தமிழ்மொழியின் நிலையும் கவலைக்கிடமாகிப் போகும். தமிழ்மொழிப் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய தமிழர்கள், சிறிதும் அக்கறையின்றிப் பொறுப்பற்ற நிலையில் இருந்தால் காலப்போக்கில் நமது தமிழ்மொழி தானே அழிய நேரிடும். எனவே, தாய்மொழியைப் பேணிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

பல்வேறு வகைகளில் தாய்மொழிப் பாதுகாப்பினை நாம் உறுதிசெய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப் பொறுப்பினை உணர மறுப்பது தமிழ்மொழிக்குத் தீங்கு விளைவிக்கும். இதனைக் கவனத்தில் கொண்டு சற்று விழிப்புடன் செயல்பட தமிழுணர்வாளர்களை மலேசியத் தமிழ்க் காப்பகம் கேட்டுக்கொள்கின்றது.

இதன் தொடர்பாக, மலேசியாவில் தமிழ்மொழியின் நலனைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக மலேசியாவில் ‘தமிழ்க்காப்பு மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் ஏற்பாட்டில் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வியல் துறையின் ஆதரவுடன் இந்த மாநாடு நடக்கவுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு:-

      நாள்  :- 11-12-2011 (ஞாயிறு)
      நேரம் :- காலை மணி 9:00 - மாலை மணி 6:00
      இடம்  :- விரிவுரை அரங்கம் ஏ, மலாயாப் பல்கலைக்கழகம்

இம்மாநாட்டில் நான்கு ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன. 

அவற்றின் விவரம்:-

1)தமிழ்ப்பாட நூல்களில் காணப்படும் குறைகளும் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளும்.

2)தமிழ் ஒலி ஒளிபரப்பு மின்னூடகங்கள், இதழியல் துறை ஆகியவற்றில் தமிழ்மொழியின் தரம்


3)தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்

4) மலேசியாவில் தமிழ்மொழியின் பயன்பாடும் எதிர்காலமும்

இந்த மாநாட்டில் பங்குபெற பேராளர் கட்டணம் RM20.00 (இருபது ரிங்கிட் மட்டும்) செலுத்த வேண்டும். பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, உணவு, காலை மாலை தேநீர் ஆகியவை வழங்கப்படும். பேராளர்கள் விரைந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழிப் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் முழுமயாகக் கொண்டு நடைபெறும் தமிழ்க்காப்பு மாநாட்டில், தமிழ் மொழி, இனம் சார்ந்த சமூக இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், கல்விக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தமிழ்க்கல்வி அதிகாரிகள், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழியல் துறை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், தமிழ்ப்பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ்மொழி மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு வழங்க வேண்டும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மாநாடு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு:- 
சு.வை.லிங்கம் (019-6011569) /  முனைவர் சு.குமரன் (012-3123753) / இரெ.சு.முத்தையா (012-7649991)

@சுப.நற்குணன், மலேசியா

Wednesday, November 23, 2011

மதுரை இளங்குமரனார் மலேசியா வருகை



#தம்முடைய ஓருடலில் தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெரியார்..

#திருக்குறள் தவச்சாலை நிறுவி வள்ளுவர் காட்டிய வழியே வையக வழி எனத் தமிழ் வாழ்வியலைப் போற்றிப் பரப்பும் பேரறிஞர்..

#தமிழைத் தமிழாக மீட்கவும் காக்கவும் வாழ்நாளையே ஒப்புக்கொடுத்து, இதுவரை 390க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதியிருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர்..

#தமிழியல் கரணங்கள்(சடங்கு) வழியாகவும் தெய்வத் திருமறையாம் திருக்குறளின் சான்றாகவும் இதுவரை 4000க்கும் மேற்பட்ட தமிழ்த்திருமணங்களை நடத்தி வைத்த தமிழ் அந்தணர்..

#ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய குண்டலகேசியை மீட்டெழுதி உயிர்கொடுத்த அரும்பெறல் சான்றாளர்..

#அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் 52 கூட்டமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்..

செந்தமிழ் அந்தணர் ஐயா மதுரை இளங்குமரனார் மலேசியா வந்துள்ளார். ஐயா அவர்களின் தாள்பணிந்து வணங்கி மலேசியத் தமிழுணர்வாளர்கள் சார்பில் வருக வருகவென வரவேற்பு மொழிகின்றேன்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பள்ளிக்கூடமே இல்லாத தம்முடைய சொந்த ஊரான வாழவந்தான் புரத்தில் தாமே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை தங்கள் ஊர்களில் ஏற்பாடு செய்ய விரும்பும் தமிழன்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்த்திரு அருள்முனைவர்     : 017-3314541
தமிழ்த்திரு மாரியப்பனார்      : 012-3662286


தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், மலேசியா.


Blog Widget by LinkWithin