Saturday, November 19, 2011

ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்




2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1191 மாணவர்கள் அனைத்து ஏழு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று (7ஏ) சாதனை படைத்துள்ளனர். யுபிஎசார் வரலாற்றிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 7ஏ தேர்ச்சி விகிதம் ஆயிரத்தை தாண்டியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னணியில் பலர் இருக்கலாம்; பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வேறு யாரையும் விட; வேறு எந்தக் காரணத்தையும் விட இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமானவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்தாம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ஆசிரியர்களின் அயராத உழைப்பும் ஈகமும் ஒன்றுசேர்ந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் மிகையன்று.
 
ஆசிரியர்களை அடுத்து பெற்றோர்களின் பங்களிப்பும் அக்கறையும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையன்று. ஏனெனில், குழந்தை பிறந்தது முதற்கொண்டு அக்குழந்தை ஆறாம் ஆண்டில் யுபிஎசார் தேர்வு எழுதுகின்ற வரையில் உடனிருந்து கவனித்து வளர்த்தெடுத்து வழிகாட்டியவர்கள் பெற்றோர்களே ஆவர்.

ஆனால், ஆசிரியர்களின் உழைப்பை மறுதளிக்கும் வகையிலும், பெற்றோரின் கவனிப்பை ஏளனப்படுத்தும் வகையிலும் நாளிதழ்களில் சில செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதாவது, சில கல்வி நிறுவனங்களும் தனிக்கற்கை (Tuition) வகுப்புகளும் முண்டியடித்துக் கொண்டு இந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுகின்றன. தங்கள் நிறுவனத்தில் அல்லது வகுப்பில் படித்த இத்தனை மாணவர்கள் 7ஏ எடுத்தார்கள்; அத்தனை மாணவர்கள் 5ஏ எடுத்தார்கள் என்றெல்லாம் செய்தி போட்டு (மலிவு)விளம்பரம் தேடுகிறார்கள்.

  • முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையில், 6 ஆண்டுகள் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றல் கற்பித்தை முறையாக நடத்தியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பயிற்சிகளைக் கொடுத்தும், அவற்றைத் திருத்தியும், பிழைதிருத்தம் செய்ய வலியுறுத்தியும், வீட்டுப் பாடங்கள் கொடுத்தும் மாணவர்களின் ஆற்றலை வளர்த்தெடுத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் குறைதீர் நடவடிக்கை, திடப்படுத்தும் நடவடிக்கை, வளப்படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு வழிகளில் கற்றல் கற்பித்தலைச் செய்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் நேரம் காலம் பாராமல் கூடுதல் வகுப்பு, சிறப்பு வகுப்பு, விடுமுறை கால வகுப்பு என நடத்தி மாணவர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பல்வேறு தேர்வுகளை நடத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முறையாகக் கவனித்து முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகளாக மாணவர்களின் உடனிருந்து அரவணைத்து அவர்கள் துவண்டு விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தி, தன்னம்பிக்கை ஊட்டி, ஊக்கப்படுத்தியவர்கள்   ஆசிரியர்கள்.
  • ஆறாம் ஆண்டில் மாணவர்களுக்குப் பல வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தி, தேர்வு அணுகுமுறைகளைக் கற்பித்து, வினாக்களுக்கு விடையெழுதும் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டியவர்கள் ஆசிரியர்கள்.
  • யுபிஎசார் தேர்வு நாட்களில் தேர்வு மண்டப வாசலில் நின்று மாணவர்களின் தோள்களில் தட்டிக்கொடுத்து, ஊக்கமூட்டி வழியனுப்பி வைத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புகள், சமுதாயம் ஆகிய தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையில் அயராமல் அல்லும் பகலும் உழைத்தவர்கள் ஆசிரியர்கள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் மறுதளிக்கும் வகையில்; இருட்டடிப்புச் செய்யும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் ஆசிரியர்களின் உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

ஆறாம் ஆண்டில் மட்டும் சில மாதங்களுக்கு வகுப்புகளை நடத்திவிட்டு, கல்வி விரதம், கல்வி புரட்சி என்றெல்லாம் படம் காட்டிவிட்டு மாணவர்களின் வெற்றிக்கும் தேர்ச்சிக்கும் தாங்களே முழுக் காரணம் என உரிமை கொண்டாடுவதும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாகச் செய்திகள் போடுவதும் விளம்பரம் போடுவதும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்கின்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பயின்ற தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி செய்தியில் எதுவும் குறிப்பிடுவதே இல்லை. மாறாக, ஏதோ அந்த நிறுவனத்திலேயே மாணவர்கள் படித்து தேர்வு எழுதியதைப் போன்ற தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, இவர்களின் செய்தியிலும் விளம்பரத்திலும் 5ஏ பெற்ற தேசியப் பள்ளி மாணவர்கள் பற்றியும் கொட்டை எழுத்துகளில் போட்டுக்கொள்கிறார்கள். இதனால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கின்ற பெற்றோர்களின் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக, தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டுப் பதிவு குறைந்து போகலாம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் தனியார் கல்வி நிறுவங்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. நமது தமிழ் நாளிதழ்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறான செய்திகளால் காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகின்ற விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் செயல்படுகின்றனர். ஆகவே, தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துவரும் நமது தமிழ் நாளிதழ்கள் இதுபோன்ற செய்திகளைத் தவிர்ப்பது நல்லது.

தனியார் கல்வி நிறுவனகளும், தனிக்கற்கை வகுப்புகளும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பில் குளிர்காய்வதை உடனடியாக நிறுத்திகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஈகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஈட்டத்தைத் தேடிக்கொள்ளும் தன்னலப் போக்கைக் கைவிட வேண்டும். இயலுமானால், அவர்கள் தங்கள் பங்களிப்பை சமுதாய உணர்வோடு செய்ய முன்வர வேண்டும். இங்குச் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை என நினைக்காமல், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, சமுதாய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என பொறுப்புணர்வுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  • பி.கு:- இந்தச் செய்தி மலேசியாவில் வெளிவரும் மூன்று நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

@சுப.நற்குணன்

Friday, November 18, 2011

இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)




4.0   இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்

இணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)  மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2)  ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
    தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
   வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4)  எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
   நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
   எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5)  மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6)  தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
   உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
   வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
    கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12)  குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
    நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது. 
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
   மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
    கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
    கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
    வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
    (update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
    செய்துகொள்ளவும் முடிகிறது. 


5.0   முடிவுரை

மொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.  

மேற்கோள்கள்

குழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.

ரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,
தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

நக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு
கண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

இளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்
கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,
பென்சில்வேனியா.

பெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.
தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr. Seetha Lakshmi. (2011). Facebook and Tamil Language in Singapore's Teacher
Education . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr.Sajap Maswan. (1998). Kelebihan Penggunaan Internet dan Laman Web dalam
Pengajaran dan Pembelajaran. Institut Perguruan Tuanku Bainun. Pulau
Pinang, Malaysia.

Collins,B. (1996). The Internet As An Educational Innovation: Lesson From
Experience With Computer Implementation. Educational Technology, 36 (6),
pg. 21- 30

@சுப.நற்குணன்

Thursday, November 17, 2011

மலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்

மலேசியாவின் தமிழறிஞர்.. தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்.. தமிழியல் பட்டயக் கல்வியை மலேசியாவில் அறிமுகப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழியல் கல்விப் பட்டதாரிகளை உருவாக்கியவர்.. தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார் (M.Lit) அவர்கள், 16.11.2011இல் இயற்கை எய்தினார். 
 
  • மலேசியாவில் தமிழைத் தமிழாகச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவர். 
    விளம்பரமே இல்லாமல் அமைதியாகத் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய பெருந்தகை.  
    திருக்குறள் நெறியில் வாழ்ந்து, இளையோர் மனங்களில் குறளியச் சிந்தனைகளை விதைத்து அரும்பணி ஆற்றியவர். 
    தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கிய தமிழ்த் தொண்டர்.
    தமிழில் பிறமொழி கலப்பதை எதிர்த்து, தமிழ் தூய்மையாக இருக்க காலமெல்லாம் பாடாற்றிய கொள்கை மறவர்.
    தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நல்லறிஞர்; நற்றமிழர்!
    தமிழ் ஆசிரியர்களையும், இல்லத்தரசிகளையும், பணி ஓய்வு பெற்றவர்களையும் தமிழியல் பட்டக் கல்வி பயிலச் செய்து பட்டதாரிகளாக்கி பெருமைபடச் செய்த பண்பாளர்; நற்றமிழ்ச் சிந்தனையாளர்.     
     அன்னாரின் மறைவு நற்றமிழர்க்குப் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற இறைமையை இறைஞ்சுவோம்!
    @சுப.நற்குணன்
Blog Widget by LinkWithin