Sunday, January 03, 2010

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்:- துணை முதல்வர்


இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.

“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.


ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.

“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப் போவதில்லை

தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.


“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.

கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இது போன்ற மாநாடு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?”, என்று அவர் வினவினார்.

“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்”, என்றாரவர்.

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.


மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

Friday, January 01, 2010

2010இல் தமிழ் எழுத்தைச் சீரழிக்க முயற்சியா?


தலைப்பைப் பார்த்ததும் பலருக்கும் பகீரென்று ஆகியிருக்கும். இப்படி ஒரு செய்தியை மின்னஞ்சல் வழியாக அறிய நேர்ந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு குறித்து உலகத் தமிழ் அறிஞர்களிடையே பலவகைப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அதன் பின்னணியில் நிழலாடுகின்ற அரசியலைப் பற்றியெல்லாம் இங்கு நான் எழுத வரவில்லை.

ஆனால், இந்த மாநாட்டில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த மின்மடல்கள் தற்போது உலா வந்துகொண்டிருக்கின்றன. அப்படியான மின்மடல்கள் சில எனக்கும் வந்திருந்தன.



தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி அதிகாரப்படியான அறிவிப்பு செய்யவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுவதாக அந்த மின்மடல்கள் தெரிவிக்கின்றன.

தமிழுக்கு நல்லது செய்வது போல நயவஞ்சகமாகத் தமிழ்மொழியின் எழுத்துகளில் சீரமைப்பு செய்து தமிழை மெல்ல சீரழிப்பதற்குச் சிலர் தீவிரமாக செயல்படுவதாக எனக்கு வந்த மின்மடல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

தமிழுக்கு எதிராக முளைக்கின்ற எந்தவொரு கீழறுப்புச் செயலையும் முறித்துப்போட்டுத் தமிழைத் தமிழாக வாழவைக்கும் பொறுப்பும் கடப்பட்டும் தமிழக அறிஞர்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத கடமையுணர்வும் காப்புணர்வும் உலகத் தமிழர்களுக்கும் இருக்கிறது.

எனவே, தமிழைத் தற்காக்கவும் மீட்டெடுக்கவும் உலகமெங்குமுள்ள தமிழ் அறிஞர்களும் பற்றாளர்களும் உணர்வாளர்களும் ஏன் ஓட்டுமொத்தத் தமிழர்களுமே அணிதிரண்டு குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த உணர்வின் உந்துதலினால், எனக்கு வந்த ஒரு மின்மடலை இங்கே எல்லாருடைய பார்வைக்காகவும் சிந்தனைக்காகவும் வெளியிடுகின்றேன்.

"நெருப்பில்லாமல் புகையாது" என்பதால் இந்த விடயம் குறித்து பதிவிட துணிந்தேன். இதன் தொடர்பிலான செய்தி அறிந்தவர்கள் மேலதிக தகவல்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படவுள்ள சீர்த்திருத்தங்கள் பற்றிய விவரங்கள் கிழே இணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைதியாகப் படித்துப் பார்த்து உடனே செயல்படுமாறு தமிழுறவு தந்த உரிமையில் கேட்டுக்கொள்கிறேன். -(சுப.ந)

**************************
அன்புடையீர்,வணக்கம்.

இது ஒரு அவசர மடல்.

தமிழ் அறிஞர்களாக நம்பப்படும் சிலர், தமிழ் எழுத்துக்களில் இகர-ஈகார-உகர-ஊகார உயிர்மெய் வரிசைகளில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் சீர்திருத்தம் என்ற பெயரில் படுகொலை செய்ய பலகாலமும் முயன்று வந்திருக்கின்றனர்.

நானும் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மடற்குழுக்களில் வாளாவிருந்து விட்டேன்.

அவர்கள் கருணாநிதியின் ஆட்சி காலத்திற்குள் அவரை வசப்படுத்தி எப்படியும் செய்து விட முனைந்து வருகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பன்னாட்டு அறிஞர்களின் ஆதரவையும் நரித்தனமாகப் பெற்று வருகிறார்கள்.

சிங்கப்பூர் அறிஞர்கள் ஆதரவு நல்கி விட்டார்கள். தமிழக அறிஞர்களுக்கு முதுகில் இருப்பது எலும்பல்ல - நீளமான புல்; ஆதாலால் செந்நாப்புலவன் எல்லாரும் வாயைத் திறந்து அவர்களின் நலனைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஆகவே, பன்னாடு தழுவிய எதிர்ப்புக் குரல் இதற்கு எழுப்பப் பட வேண்டும். தற்போது செம்மொழி நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு திரட்டி தீர்மானம் போட முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து பலர் மறுப்புக் கட்டுரைகள் படைக்கிறார்கள். இந்தப் புதிய எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் தனி அடையாளத்தை அழித்துவிடும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது.

எனவே, தாங்களும் தங்கள் நாடு, மாநிலம் சார்பில் ஒரு எதிர்ப்புக் கட்டுரையைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி தனக்காக நடத்தும் செம்மொழி மாநாட்டில் எப்படி கலந்து கொள்வது என்று யானறிந்த பல தமிழாளர்கள் கருத்து கொண்டு பங்கு பற்றத் தயங்குகிறார்கள். எனக்கும் அவ்வச்சம் நீங்க நாள்களாயின.

ஆதலின், இவ்வளவு காலத்தாழ்வான அஞ்சல். நடப்பது ஒரு தமிழ் மாநாடு. அது எனது பணத்தில் 6 கோடி தமிழ் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. என் வரிப்பணத்திலேயே என் இனத்தைப் படுகொலை செய்ய எல்லா உதவியையும் அரசாங்கங்கள் செய்தது போல, என் வரிப்பணத்திலேயே என் மொழியையும் படுகொலை செய்ய வலிமையான முயற்சிகள் நடக்கின்றன.

யார் நடத்துகிறார்கள் என்பதனைப் பார்க்க இதுவல்ல நேரம். களத்தில் இறங்கி கருத்துக்களோடு மோதி அவர்களின் எண்ணங்களை முறித்துப் போடவேண்டும்.

நண்பர்களே, http://www.ulakathamizhchemmozhi.org/ என்ற இந்தத் தளத்தில் கட்டுரையாளராக, எழுத்துச் சீர்திருத்த மறுப்புக் கட்டுரையாளராக ஒரு பதிவினை இட்டு வையுங்கள்.

தற்போதைக்குச் செய்ய வேண்டியது இதுதான். 31-சனவரிக்குள் தங்கள் கருத்துக்களைக் கூட்டி சுருக்கம் அனுப்புங்கள். 31-மார்ச்சு வரை இறுதிக் கட்டுரையை அனுப்ப காலம் இருக்கிறது.

கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் மொழிப்படுகொலைக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை ஓர்ந்து பார்த்து தாங்களோ, தங்களின் சங்கத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது தாங்கள் அறிந்த சிந்தனையாளர் அல்லது அறிஞருக்கு இதனைச் சொல்லி கட்டுரை படைக்கச் சொல்லி அவர்களை மாநாட்டில் பங்கு பற்ற வையுங்கள்.

(தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மாபெரும் சீரழிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி முழு விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கவும்.)

(சீர்த்திருத்தம் செய்யப்பட்ட புதிய தமிழ் எழுத்துகளின் மாதிரி)

1)தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


2)தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)

3)தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


***************************
தமிழா ஒன்றுபடு - தமிழால் ஒன்றுபடு - தமிழுக்காக ஒன்றுபடு

Thursday, December 31, 2009

புத்தாண்டுச் சிந்தனை:- பேசியே கெட்டவன் தமிழன்டா..!



“தமிழன் பேசிப் பேசியே கெட்டான்”

“பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்”

“தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”

"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”

இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.

இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா?

இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.

இதனையே புத்தாண்டுச் சிந்தனையாகத் திருத்தமிழ் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அப்படிப் பேச முடியாதவர்கள், பேசுபவர்கள் பேசுவதையாவது கேட்டு வைப்போம். இங்கே ஒரு தமிழ்க் குழந்தை ‘தமிழ்’ பேசுகிறது.. கேட்டு வைப்போம் வாருங்கள்..!!



"அனைவருக்கும் 2010 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்து"

Wednesday, December 30, 2009

தமிழ்க் குழந்தை தமிழ்ப்பள்ளிதான் செல்ல வேண்டுமா?


மலேசியாவில், 2010க்கான கல்வியாண்டு எதிர்வரும் சனவரி 3ஆம் 4ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது; பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆயிரக்கணக்கில் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். கடந்த காலங்களைப் போலவே, அடுத்த ஆண்டிலும்(2010) தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், முதலாம் ஆண்டுக்கான பதிவுக் கணக்கைப் பார்க்கும்போது, நமக்கு சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. 90% மலாய்க் குழந்தைகள் தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 95% சீனக் குழந்தைகள் சீனப் பள்ளிகளில் பதிவு செய்கின்றனர். ஆனால், தமிழர்(இந்தியர்)களில் வெறும் 55% குழந்தைகள் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதற்காகச் செல்லுகின்றனர்.

மீதமுள்ள 45% தமிழ்க் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் மற்ற பள்ளிகளுக்குச் செல்லுகின்றனர். வேற்றுமொழிப் பள்ளிகளில் சேருகின்ற தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகவே இருக்கின்றது.

*இதற்கான காரணங்கள் என்ன?
*நம்மவர்கள் மற்ற பள்ளிகளைத் தேடி ஓடுவது ஏன்?
*பெற்றோர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிப்பதற்கு காரணம் யாது?
*படித்த பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே ஏன்?
*பணக்காரத் தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை வெறுக்கிறார்களே எதனால்?


இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகளின் நிருவாகம் – ஆசிரியர்கள் – கட்டட வசதி – கற்றல் கற்பித்தல் தரம் – பாடத் துணைப் பொருள்கள் திறம் எனப் பல கோணங்களில் குற்றங்களும் குறைபாடுகளும் அடுக்கிச் சொல்லப்படுகின்றன.

இத்தனையையும் கடந்து மேலேபோய், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா? என கேள்வி கேட்கும் பேரறிவு கொண்ட தமிழர்(இந்தியர்)களும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் ஆராய்வதை விடுத்து, இதனைவிட முக்கியமான விடயங்களைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அதாவது, இப்போது தமிழ்ப்பள்ளியில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து நாற்பத்து இரண்டாயிரம் (142,000) மாணவர்கள் படிக்கிறார்கள். ஏற்கனவே சொன்னது போல இது வெறும் 55% மட்டுமே. மீதமுள்ள 45% மாணவர்கள் அதாவது ஏறத்தாழ 108,000 மாணவர்கள் தேசியப் பள்ளி அல்லது சீனப்பள்ளிகளில் பயில்கின்றனர்.

இப்போதைய நிலையில் 142,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சூழலில்,

1) நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன.

2)523 துறைத் தலைவர்கள் (தலைமையாசிரியர்) பொறுப்பு நம்மவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

3) ஏறக்குறைய 8,600 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படியாக பல நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். நாம் நினைத்தால்.. மனது வைத்தால்.. ஒரே நாளில் இப்படிப்பட்ட நன்மைகளைப் பல மடங்காக ஆக்கிக்காட்ட முடியும்.

எப்படி என்கிறீர்களா?

மற்ற பள்ளிகளில் படிக்கும் 108,000 தமிழ் அல்லது இந்திய மாணவர்களும் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாறினால் நிலைமை என்னவாகும். சற்றே கற்பனை செய்து பார்க்கையில் மூக்கின்மீது விரலை வைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நம்மால் ஏற்படுத்த முடியும்.

மொழிப் பாதுகாப்பு, கலை, பண்பாட்டு, இலக்கிய, சமய நீடுநிலவல் (Survival), இனமீட்சி முதலான அடிப்படைகளைக் கடந்து பொருளியல் நிலையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சில இதோ:-

1)தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 250,000 க்கு உயரும்.

2)8,600 ஆசிரியர்கள் என்ற நிலைமை 16,000 க்கு உயரும். அத்தனை வேலை வாய்ப்பும் நம்மவர்களுக்கே கிடைக்கும்.

3)புதிய தமிழ்ப்பள்ளிகள் நாடெங்கிலும் உருவாகும். இதனால், துறைத் தலைவர்கள் பொறுப்பும் அதிகரிக்கும். நம்மவர்கள் இன்னும் அதிகமானோர் தலைமையாசிரியர் பதவிகளுக்கு வரலாம்.

4) தமிழ்ப்பள்ளிகளுக்கு உரிய தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

5) தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிக் கழக தமிழ் விரிவுரையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

6) பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிறைய உருவாகும்.

7)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடநூல்கள் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பெருகும். அந்நிறுவங்கள் வழியாகப் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

8)பயிற்சி நூல்கள் அணியப்படுத்தும் நிறுவனங்கள் / வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.

9)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடத் துணைப்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் உருவாகும்; நிபுணர்கள் உருவாகுவார்கள்.

10)தமிழ்ப்பள்ளிகளில் போட்டிச் சூழல் இயல்பாகவே உருவாகி, கல்வித்தரம் பன்மடங்கு அதிகரிக்கும்.

11)தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்படுத்தி சிறப்புக் கல்வி நிலையங்கள் / கல்விச் சேவை நடுவங்கள் உருவாக்கம் பெறும்.

12)தமிழ்ப்பள்ளிகளை முன்படுத்திய பல தொழில் வாய்ப்புகளும் வணிக வாய்ப்புகளும் பொருளியல் வளர்ச்சிகளும் உண்டாகும்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு சொல்லப்படாத பல முன்னேற்றங்கள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.


அந்த அளவுக்கு, நமது சமுதாயம் மாற்றம் காண்பதற்கும் ஏற்றம் பெருவதற்கும் நாமே முனைந்து சிலவற்றைச் செய்துகாட்ட முடியும்; சாதித்துக் காட்ட முடியும்.

மலேசிய நாட்டில் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் விரிந்தே இருக்கிறது. நம்மவர்கள் மிகவும் கூர்மையாகச் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால், நமது சமுதாயத்தின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இதற்கெல்லாம் அடிப்படையில் தேவையானது நம்முடைய சிந்தனை மாற்றம்தான்.
தமிழையும் – தமிழ்ப்பள்ளியையும் – தமிழ்க்கல்வியையும் மூலதனமாக்கி முழுமூச்சுடன் முயன்று போராடினால் நம்மால் கண்டிப்பாக வானை முட்டும் அளவுக்கு முன்னேற முடியும்.

அதற்காக, நம்மவர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அது வேறொன்றுமல்ல...

தமிழ்க் குழந்தைகள் கண்டிப்பாகத்
தமிழ்ப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

Monday, December 28, 2009

திருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்காட்டி


இன்னும் சில நாட்களில் 2010 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது ஆங்கிலப் புத்தாண்டு; உலகமே பின்பற்றும் பொதுவான ஆண்டு என்பது எல்லாரும் அறிந்தது. 2010 சனவரித் திங்கள் 14ஆம் நாளில் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2041 ஆகும்.

ஆங்கிலத்தையும் ஆங்கிலப் புத்தாண்டையும் முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியா திருநாட்டில் நான்காவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிக்கொடிகட்டி வெளிவருகின்றது.

ஏற்கனவே, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளை மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.


நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் கண்ட தமிழ் எண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டு இந்த நாள்காட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்களுக்கு நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.


இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீளக்கட்டிடும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக் கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, திங்கள், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


தொடர்புக்கும் மேல் விளக்கத்திற்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)

Monday, December 21, 2009

2010க்கான பட்டப் படிப்புப் பதிவு நடக்கிறது


2010 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) பயில்வதற்கு இப்போது விண்ணப்பம் செய்யலாம். இணையம் வழியாக நேர்வலை விண்ணப்பம் (Pendaftaran Online) செய்யும் சேவை தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, 2009இல் எசுபிஎம்(SPM) தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் இப்போதே விண்ணப்பம் செய்யலாம்.

இதனைப் பற்றிய மேல் விவரங்களைத் தொடர்ந்து தருகின்றேன். நமது மாணவர்களுக்கு இது பயனாக இருக்குமென நம்புகிறேன்.

எசுபிஎம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியைக் கொண்டிருக்கும் மாணவர்கள் 2010ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதிவு நடவடிக்கை இரண்டு கட்டங்களாக (Fasa) நடைபெறும். மாணவர்கள் இவ்விரு கட்டங்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

முதலாவது கட்டம் (Fasa I):- விண்ணப்பப் பதிவு

1.2009, 2008, 2007 ஆகிய ஆண்டுகளில் எசுபிஎம் எழுதிய மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டியதில்லை.

2.பதிவு செய்ய, மாணவர்கள்
http://upu.mohe.gov.my என்னும் உயர்க்கல்வி அமைச்சின் அகப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

3.மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டை எண், கடவுச்சொல் (Kata Laluan) ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் வகையைச் (Kategori Permohonan) சரியாகக் குறிப்பிடவும்.

4.அதில் கேட்கப்படும் விவரங்களைத் தவறு இல்லாமல் நிறைவு செய்ய வேண்டும்.

5.மாணவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி விவரங்கள், புறப்பாட நடவடிக்கை விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

6.இந்த முதற்கட்டப் பதிவைச் செய்வதற்கான இறுதி நாள் 30-12-2009

இரண்டாம் கட்டம் (Fasa II):- விண்ணப்ப உறுதி

1.இந்தப் பதிவு 2-2-2010இல் திறக்கப்படும். இதற்கும் நேர்வலை (Online) வழியாக பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு செய்வதற்குத் தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டும். விலை RM10.60.

2.ஏற்கனவே, முதற்கட்டப் பதிவில் பயன்படுத்திய அதே அ.அட்டை எண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

3.கேட்கப்படும் விவரங்களைச் சரியாக நிறைவு செய்து சரிபார்க்கவும். நிறைவு செய்த படிவத்தை அனுப்பிய பிறகு, தவறுகள் இருப்பின் 3 முறை மட்டுமே பிழைத்திருத்தம் செய்ய முடியும்.

4.இதற்குரிய இறுதி நாள்:- B, C, D ஆகிய பிரிவுகளுக்கு 30-3-2010. பிரிவு A மட்டும் எசு.பி.எம் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள்.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-

1.கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் கவனமுடன் படித்துப் பார்க்கவும்.

2.உங்கள் தகுதிக்கு ஏற்ற படிப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கவும்.

3.தவறான படிப்புக்கும் பல்கலைக்கழகத்தித்கும் விண்ணப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ளவும்.

4.முதற்கட்டப் பதிவு, பொருளகக் கடவுச்சொல் வாங்குதல், இரண்டாம் கட்டப் பதிவு ஆகியவற்றைச் செய்வதற்குக் கடைசி நேரம் வரை காத்திராமல் உடனுக்குடன் செயல்படவும்.

5.இதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே உயர்க்கல்வி அமைச்சுக்குத் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி:-03-88835802 அகப்பக்கம்:- http://upu.mohe.gov.my/

Thursday, December 17, 2009

தமிழ் இயக்கங்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளா?



எசுபிஎம் எனப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு தொடர்பாக நிலவிவரும் நெருக்கடி இன்னமும் முற்றிலுமாக ஓய்ந்தபாடில்லை. இந்த நெருக்கடியிலிருந்து தமிழை மீட்கவும் இலக்கியத்தைக் காக்கவும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்கள் போராடி வருகின்றன.

குறிப்பாக, எசுபிஎம் 12 பாட மீட்புக் குழுவினர் என தங்களை அடையாளப்படுத்தி இருக்கும் ஆ.திருவேங்கடம் தலைமையிலான குழுதான் இந்தப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவில், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் அறவாரியம், சிவநெறி வாழ்க்கை மன்றம், வள்ளலார் நற்பணி மன்றம், மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல இயக்கங்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு தமிழுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. தவிர, சு.வை.லிங்கம் தலைமையிலான தமிழ்க் காப்பகமும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுக்கும் பணியில் தொடக்கத்திலிருந்தே குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றது.

இதற்கிடையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பையும் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சிக்கல் தொடர்பாகக் கருத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீட்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்; அவர்கள் ஏற்பாட்டில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் கலந்துகொண்டுள்ளனர்.


இப்படி, பல தரப்பினரும் ஒன்றுகூடி ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் சமயத்தில், “தமிழுக்காகப் போராடும் இவர்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர்” என்ற ஒரு குற்றச்சாட்டைச் சிலர் முன்வைத்துள்ளனர். அதனை உறுதிபடுத்துவதற்குச் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை:-

1.இந்திய சமுதாயம் தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது. அதற்காக சில நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை எதிர்க்கும்படி சில அரசு சார்பற்ற இயக்கங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.

2.இந்திய சமுதாயத்தில் சிறு சிறு குழுக்கள் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் என்று காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகின்றன.

3.இந்த இயக்கங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி செய்கின்றன.

4.இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

5.இந்த இயக்கங்கள் கருத்தரங்குகளை நடத்தவும், விடுதிகளில் (ஓட்டல்) கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும் எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

6.இந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலர் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பதவிகளில் கூட இருக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பு மக்களைச் சார்ந்தது. ஏனெனில். நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு இடையில் அரங்கேறும் அரசியல் போட்டா போட்டிகளும் நுண்ணரசியல் விளையாட்டுகளும் மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் இப்போது விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதும்; மொழி இன நலனுக்காகப் போராடுவதும்; கட்சி, கொள்கைகளை மறந்து பொதுநலத்துக்காக ஒன்றுபடுவதும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நிகரானது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

அரசாங்கத்தின் ஒரு கொள்கையானது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிர்மறையான விளைவுகளை நீண்ட காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதால், அதனை எதிர்த்து நிற்பதும்; மாற்றுக் கருத்து கூறுவதும்; மாற்றத்தைக் கோருவதும் மக்களாட்சிக்கு மாண்பினை அளிக்குமே தவிர ஒருபோதும் மருட்டலாகாது.

ஆகவே, தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் போராடும் தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகளும் மக்களாட்சி நடைமுறையில் இயல்பானவைதாம். அதேவேளையில், மொழியினநல அடிப்படையில் பார்க்கும்போது இவர்களின் போராட்டம் பெரிதும் போற்றுதலுக்கு உரியது.

அந்த வகையில், தமிழ் இயக்கங்களின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மையானவை; நம்பகத்தன்மை கொண்டவை; நியாயமானவை; நன்மையானவை என்பதைப் பொதுமக்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.

Blog Widget by LinkWithin