மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி |
அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,
எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி
பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டார். பாரதியாரின் சரவடியாகிய அவருடைய
வருகை மாநாட்டிற்கே கலை கட்டியது; மெருகு கூட்டியது
என்றுதான் சொல்ல வேண்டும்.
பாரதியின் பாடலைப் படித்தும் இன்புற்றும் உணர்வு பெற்றும்
இருக்கின்ற ஆசிரியர்கள்; வகுப்பறையில் பாரதியின் பாடல்களை அழகழகாகக்
கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இந்த மாநாட்டில் நிரஞ்சன் பாரதியை நேரில் கண்டதும்
மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர். அவருடைய வருகையும் உரையும் வந்தவர்கள்
அனைவருக்கும் புதிய உந்துதலை ஏற்படுத்தியது என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.
வே.இளஞ்செழியன் நிரஞ்சன் பாரதிக்குச் சிறப்பு செய்கிறார் |
நிரஞ்சன் பாரதியோடு பேசவும், கைகுலுக்கவும், தாமி எடுக்கவும் பேராளர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே இருப்பதைக்
காண முடிந்தது. நிறைவு விழாவில் உணர்வுகளைத் தொடுகின்ற வகையில் தமிழ்க்கல்வி
பற்றியும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்று பற்றியும் அழகாகப் பேசினார்
நிரஞ்சன்.
உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியத்
தமிழர்கள் உள்ளத்தில் தமிழ் என்னும் தீ கொளுந்துவிட்டு எறிவதாகக் குறிப்பிட்ட
பொழுதும்; “தாய் தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்து போகும் நிலைமையைப்
பார்க்கும் பொழுது மனம் சோர்ந்து போனாலும் மலேசியத் தமிழர்களைப் பார்க்கும் பொழுது
தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று புதிய நம்பிக்கை உண்டாகிறது” என்று
சொன்ன பொழுதும் மாநாட்டு அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
சுப.நற்குணன், முத்து நெடுமாறன், நிரஞ்சன் பாரதி |
மலேசியத் தமிழர்களுக்காக நிரஞ்சன் பாரதி ஓயாத கரவொலிகளுக்கு
நடுவில் ஓர் அழகிய கவிதை வாசித்தார்.
லோ லோ லோ
என்று பேசுவோர் பலர் இருக்க
லா லா லா
என்று இசை ததும்ப
பேசுபவர்கள் நீங்கள்;
ஆதலால் உங்களுக்கு
என் வணக்கம் லா
நான் தான் உங்கள்
நிரஞ்சன் லா;
கடாரமே
கடலில் சொலிக்கும் ஆரமே
இராஜேந்திர சோழனின் கண்ணே
தமிழ் பேசும் அழகான பெண்ணே
கீழே குனிந்து கையால் அணைத்து
மனதால் முத்தமிடுகிறேன் உன்னை
ஏற்றுக்கொள்வாய் என்னை;
தாய்த் தமிழகத்தில்
தாய்மொழி தாய்மொழி என்று
தம்பட்டம் அடித்தாலும் அது எங்கள்
வாய்மொழியாக வருவதில்லை;
அப்படியே வந்தாலும் அது
ஆனந்தம் தருவதில்லை;
நாங்கள் “டிஃபன் சாப்டாச்சா” என்கிறோம்
நீங்கள் “பசியாறியாச்சா” என்கிறீர்கள்
தூக்கத்தில் எழுப்பினாலும்
தமிழ்ப் பேசுகிறீர்கள் நீங்கள்
தமிழைத் தூங்க வைத்துவிட்டு
உலவுகிறோம் நாங்கள்;
எதையும் விடாமல்
தமிழ்ப்படுத்தி விடுகிறீர்கள் நீங்கள்;
எப்போதும் விடாமல்
தமிழைப் படுத்துகிறோம் நாங்கள்;
தமிழ் எங்களுக்கு வார்த்தை
தமிழ் உங்களுக்கு வாழ்க்கை;
தாயகத்தில் தமிழ் தளர்கிறதே
என்னும்போது சற்றே வற்றிப்போகிறேன் – எனினும்
அயலகத்தில் தமிழ் வளர்வதைக் கண்டு
என்னைத் தேற்றிக் கொள்கிறேன் நான்
பலநூறு வருடம் முன்னம்
பலநூறு மைல் தாண்டி
பிழைப்பின் பொருட்டு
மலாயம் வந்தீர்கள்;
கூடவே தமிழையும்
கொணர்ந்து வந்தீர்கள்;
கடல்தாண்டி வந்தாலும்
கடலுக்குள் மூழ்காமல்
உங்களுக்குள் மூழ்கியது தமிழ்;
இங்கு வந்து
ரப்பர் மரங்களை
வெட்டியதாலோ என்னவோ
இழுத்து இழுத்து தமிழைத்
தழைக்க வைத்திருக்கிறீர்கள்;
ரப்பர் மரத்தில் வழியும் பால்
உங்கள் மனதிலும் வழிய
அன்பால் பண்பால்
நினைப்பால் முனைப்பால்
துடிப்பால் உழைப்பால்
ஆண்பால் பெண்பால்
என அனைவரும்
தமிழை நிலைக்கச் செய்தீருக்கிறீர்கள்;
கார்கள் செல்ல மட்டுமா
சாலை போட்டீர்கள்
கல்வி பயிலவும் அல்லவா
சாலை போட்டீர்கள்;
உங்களை உளமாற
வணங்கி மகிழ்கிறேன்
உங்களையே உந்து சக்தியாக
உளத்தில் வரித்துக் கொள்கிறேன்;
இந்த மாநாட்டில்
கன்னித்தமிழையும் கணிப்பொறியையும்
முயங்க வைத்தீர்கள்
முயங்குவதை நேரில் காட்டி
மயங்க வைத்தீர்கள்
எனக்குள் சோர்ந்து
கிடந்த ஏதோ ஒன்றை
இயங்க வைத்தீர்கள்;
இணைப்பு நிசமாக்கம் மூலம்
இலக்கியம் கற்கலாம் என்றீர்கள்
அசைவுருவாக்கம் மூலம்
இலக்கணம் பயிலலாம் என்றீர்கள்;
இதையெல்லாம் கேட்டுக் கேட்டுக்
குதூகளித்தேன் - தமிழ்மேல்
மீண்டும் காதலில் விழுந்தேன்
தன் மாணாக்கனைச்
சேயாகக் கருதி
தாயாக மாறும்
ஆசிரியைகள் பார்த்து
ஆசிரியம் என்னும்
புத்தறம் தோன்றக் கண்டேன்;
உங்களிடம் கொளுந்துவிட்டு எறிகிறது
தமிழ் என்னும் நெருப்பு – அதனை
என் கண்களால் ஒற்றிக்கொள்கிறேன்
அந்த நெருப்பெடுத்து என் மனதைப்
பற்றிக் கொள்கிறேன் – அந்நெருப்பைத்
தாய்த் தமிழகத்திற்கு அணையாமல்
அணைத்துச் செல்வதே என் பொறுப்பு;
அந்த நெருப்பால்
அங்குத் தமிழுக்கு
ஒளியூட்டுவதே உங்களுக்கு
நான் செய்யும் சிறப்பு..!
@சுப.நற்குணன்